Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 31 டிசம்பர், 2012

வேலை மற்றும் சம்பளம் வாங்குவதற்காக மட்டும், இளைஞர்கள், கல்வியை பயன்படுத்தாமல், மனித சமூகத்திற்கு சேவை செய்யவும் பயன்படுத்த வேண்டும் :ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி

"நல்ல வேலை மற்றும் சம்பளம் வாங்குவதற்காக மட்டும், இளைஞர்கள், கல்வியை பயன்படுத்தாமல், மனித சமூகத்திற்கு சேவை செய்யவும் பயன்படுத்த வேண்டும்,'' என, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி யோசனை தெரிவித்துள்ளார்.

மும்பை பல்கலை கழகத்தில் நிகழ்ந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அவர் கூறியதாவது: தற்போதெல்லாம், இளைஞர்கள், பாரம்பரிய கலாசாரம் மற்றும் மேற்கத்திய கலாசாரத்திற்கு இடையே சிக்கித் தவிக்கின்றனர். எந்தப் பக்கம் சாய்வது என்ற குழப்பத்தில் உள்ளனர்.

இந்த தருணத்தில், மகாத்மா காந்தி, நமக்கு போதித்த அறிவுரைகள், பல சந்தேகங்களுக்கு தீர்வை தரும். நல்ல வேலையை பெற்று விட வேண்டும் அல்லது நல்ல வருமானத்தை ஈட்ட வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டும், கல்வியை பயன்படுத்தாமல், நாட்டிற்கும், மனிதர்களுக்கும் சேவை செய்யவும் பயன்படுத்த வேண்டும். மனிதத் தன்மையுடன் நடந்து கொள்ளும் பண்பை வளர்க்க வேண்டும். மனிதாபிமான உணர்வு, இளைஞர்களிடையே அதிகரித்தால், சமூகத்தில் நிலவும் பல பிரிவினைகள் மற்றும் முரண்பாடுகள் முடிவுக்கு வந்து விடும். இவ்வாறு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறினார்.

ஆசிரியர் கல்வி பாடத்திட்டத்தில் மறுஆய்வு தேவை


 நாடு முழுவதும் ஆசிரியர் கல்வி பாடத் திட்டத்தில் மறுஆய்வு தேவை என்று தேசிய திறந்தநிலைப் பள்ளிக் கல்வி நிறுவனத்தின் தலைவர் சிதான்சு எஸ்.ஜெனா கூறினார்.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் மூன்றாவது பட்ட மளிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. 2010-11 மற்றும் 2011-12ம் கல்வியாண்டுகளில் பயின்ற ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 481 மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. விழாவுக்குத் தலைமையேற்ற ஆளுநர் கே.ரோசய்யா, சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்குப் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.

விழாவில் சிதான்சு எஸ்.ஜெனா ஆற்றிய உரை: மாணவர்களை நல்ல குடிமக்களாக மாற்றுவதற்கு நெறி சார்ந்த கல்வி மிகவும் அவசியம். மனித உரிமைகள், நல்லிணக்கமாக வாழ்வது, அமைதியை விரும்புவது, ஜனநாயக மரபுகள், பிறருக்காக உதவுவது ஆகிய பண்புகளை மாணவர்களிடம் ஆசிரியர்கள் ஏற்படுத்த வேண்டும்.

அதற்கேற்ற வகையில், ஆசிரியர் கல்வியில் உரிய மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். இப்போதைய கல்விமுறை தேர்வு, வேலைவாய்ப்பு போன்றவற்றிடம் முழுமையாக சரணடைந்துள்ளது. மனித பண்புகளுக்கோ, மற்றவர்களை மதிப்பதற்கோ கல்வி முறை முக்கியத்துவம் வழங்குவதில்லை.

நம்மைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பாக முழுமையான புரிதலையோ, அறிவையோ இன்றைய கல்வி முறை வழங்கவில்லை. மாணவர்களிடம் போட்டி மனப்பான்மையைத்தான் கல்வி நிறுவனங்கள் வளர்க்கின்றன. இணைந்து செயல்படுவது என்ற பண்பு மாணவர்களிடம் மறைந்து வருகிறது.

மாணவர்கள் பல சாதனைகளைப் புரிந்தாலும் அவர்களிடம் மனிதநேயம் குறைந்து வருகிறது. எனவே, மனித மதிப்பீடுகள், நெறிசார்ந்த கல்வியைப் பாடத்திட்டத்தில் சேர்ப்பது மிகுந்த அவசியமாகிறது. இயற்கையை ரசிக்கவும், மனித உறவுகளை மதிக்கவும், கலைகளைப் படைக்கவும், பிறருக்காக இரங்கும் மனப்பான்மையையும் மாணவர்களிடம் வளர்க்கும் வகையில் ஆசிரியர் கல்வி இருக்க வேண்டும்.

கல்வி சார்ந்த சில குறிப்புகளையோ, ஆய்வுகளையோ மட்டும் ஆசிரியர்களுக்கு பயிற்சியாக வழங்காமல் உலகமயமாக்கல், அமைதி, ஊடகம், கலாசாரம், ஜனநாயகம் குறித்து ஆசிரியர்களுக்கு அவ்வப்போது பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு ஆசிரியரும் மாணவர் ஒவ்வொருவரிடத்திலும் உள்ள தனித்தன்மையை அறிந்து அதனை ஊக்குவிக்க வேண்டும். கற்பித்தலுக்கான புதிய வழிமுறைகளையும், சூழல்களையும் ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும் என்றார் சிதான்சு எஸ்.ஜெனா.

நம் சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கும் பேராபத்துக்களை உணர்ந்து சமுதாயம் ஒன்றுபட வேண்டும்: சமுதாயப் போர்வாள் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி.


இந்திய யூனியன்முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் கூட்ட தீர்மான விளக்க பொதுக் கூட் டம் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடைபெற் றது.

இக் கூட்டத்தில் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., பேசியதாவது-

இந் நகரில் அவ்வப்போது ஏற்படுகிற சிறுசிறு சிராய்ப்புக் களை சமாளித்து ஒற்றுமைப் படுத்தி முன்மாதிரியான ஊர் காயல்பட்டினம் என்பதை பறைசாற்ற வேண்டும். இந் நகரில் பிளவையும், பிரச்சினை களையும் ஏற்படுத்த எந்த சக்திக்கும் இடமளிக்கக் கூடாது. இந் நகரின் ஐக்கி யத்தை சமுதாய ஒற்றுமையை பலப்படுத்த தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மேற் கொள்ளும் முயற்சிகளுக்கு அனைவரும் ஒருமுகமாக ஆதரவு தர வேண்டும்.

DCW  இரசாயன ஆலையால் காயல்பட்டினத்தின் சுற்று வட்டார பகுதிகளில் ஏற்பட்டுள்ள சுற்றுப்புறச் சூழல் மாசுபட்டுள்ளதும் இங்கு ஏராளமானோர் புற்று நோய் உள்ளிட்ட பாதிப்புகளில் அவதிப் படுவதும் அனைத்து தரப்பி னரின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டு இந் நகரின் இளைஞர்கள் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியுள் ளனர். மத்திய அரசின் நேரடி கவனத்திற்கு இப் பிரச்சி னையை கொண்டு சென்று உரிய நடவடிக்கைக்கு முயற்சி மேற்கொண்டுள்ளோம். அந்தப் பணி வெற்றி பெறும் வரை முஸ்லிம் லீகின் இந்த நாடாளு மன்ற உறுப்பினர் ஓய மாட்டான் என்பதை இங்கே உறுதியுடன் அறியத் தருகிறேன்.

இந்த மேடையில் இருக்கும் என்னிடம் பார்வையாளர் பகுதியில் இருந்து துண்டுச் சீட்டுகள் எழுதி தரப்பட்டன. அதிலேகூட பாஸ்போர்ட் விண்ணப்பித்தால் காவல் துறையினர் விசாரணை என்ற பெயரால் அலைக் கழிக்கி றார்கள். அதிகம் பணம் கேட்கி றார்கள், பெண்களை காவல் நிலையத்திற்கு வரவழைத்து அதிக நேரம் இருக்கச் செய்கி றார்கள் என குறிப்பிட்டிருந் தனர். காவல் துறையினரின் இந்த செயல் ஏற்கத்தக்கதல்ல. இது நிறுத்தப்பட வில்லை எனில் உரிய இடத்தில் உரிய நடவடிக்கைக்கு முயற்சிப் பேன் என எச்சரிக்க கடமைப் பட்டுள்ளேன் .

செந்தூர் விரைவு ரயிலை தினசரி இயக்க வேண்டும் என்றீர்கள். அதற்காக பலமுறை முயற்சி மேற்கொண்டு செய்து கொடுத்ததும், அதன் நேரத்தை மாற்ற வேண்டும் என்பதை மாற்றித் தந்ததும் இந்திய யூனியன்முஸ்லிம் லீக் பேரியக் கம். திருச்செந்தூரிலிருந்து சென்னை வந்து செல்லும் நேரத்தை குறைக்கவும் உரிய நடவடிக்கை எடுப்போம்.

எந்தப் பிரச்சினை என்றாலும் எந்த இடத்தில் எப்போது எப்படி தட்ட வேண்டுமோ அந்த வகையில் முயற்சித்து காரிய மாற்றுபவர்கள் முஸ்லிம் லீகர்கள். சிலரை நடுரோட்டிற்கு அழைத்து வந்து கோஷம் போட வைத்து காலையில் கைதாகி மாலையில் விடுவிக்கப்படும் நாடகங்களை முஸ்லிம் லீக் ஒருபோதும் அரங்கேற்றுவ தில்லை. உணர்ச்சிகளை தூண்டிவிட்டு அதில் குளிர் காய வைக்கும் கலையை முஸ்லிம் லீக் தலைவர்கள் எங்களுக்கு கற்றுத் தரவில்லை.

இந்திய யூனியன்முஸ்லிம் லீக் வலிமை எங்கேயிருக் கிறதோ அங்கே சமுதாய ஒற்றுமை - மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு சிறப்பாக இருக்கும். முஸ்லிம் லீக் வலிமை எங்கேயிருக்கிறதோ அங்கே மதநல்லிணக்கம் தடைபடாமல் இருக்கும். முஸ்லிம் லீக் எங்கே வலிமையுடன் இருக்கிறதோ அங்கே நமது உரிமைகள் நிலை நாட்டப்படும்.

இந்திய யூனியன்முஸ்லிம் லீகின் தேசிய கவுன்சில் கோழிக்கோட்டில் கூடியபோது சிறப்பு வாய்ந்த பல முடிவுகளை அறிவித்தோம். இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள `ஏணி’ சின்னமே இனி முஸ்லிம் லீக் சின்னமாக இருக்கும்.

தேசிய கவுன்சில் தீர்மானம்
தேசிய கவுன்சில் கூட்டம் நிறைவேற்றிய தீர்மானங்களில் ஒன்று பல்லாண்டுகளாக சிறையில் வாடும் முஸ்லிம் களைப் பற்றியது. தமிழ்நாட்டில் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விஷயங்களை அரசின் கவனத் திற்கு உரிய முறையில் முஸ்லிம் லீக் கொண்டு செல்கிறது. யாருடைய தூண்டுதல்களால் தாங்கள் இளமை வாழ்வை இழந்தார்களோ அவர்கள் எல்லாம் கைவிட்டு விட்ட நிலையில் அந்த இளைஞர் களின் விடுதலைக்காக பணிகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செய்து வருகிறது.

சிறுவனாக சிறைக்கு சென்று இளமையையே தொலைத்து விட்ட அபுதாகிர் கொடி நோயால் தாக்கப்பட்டு சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் என ஒவ்வொன்றாக பாதிக் கப்பட்டு இப்போது கண்களும் பார்வையிழந்து விட்டன. நடை பிணமாகி விட்ட அந்த சகோ தரன் சிகிச்சை பெறுவதற்காக 9 முறை பரோல் விடுப்பு பெற்றுக் கொடுத்தது இந்திய யூனியன் முஸ்லிம் லீக். நம் தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் அவர்கள் ஏற்பாட்டில் இது நடைபெற்றது.

இப்போது நடை பிணமாகி விட்ட அந்த சகோதரரை மீண்டும் பரோலில் விடு முறைக்கு விண்ணப்பித்தால் அரசு அதை தர மறுக்கிறது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்திலேயே விண் ணப்பித்து நீதிமன்றமும் ஒரு முறையல்ல, இரண்டு முறை உத்தரவிட்டும் அதை செயல்படுத்த அரசு மறுக்கிறது.

மனரீதியாக பாதிக்கப்பட்ட சமுதாயம்
கோவை மருத்துவமனை யில் உயிருக்குப் போராடும் அபுதாகிரை பார்க்கச் சென்றி ருந்தேன். எலும்புக்கூட்டில் துணியை போட்டு போர்த்தியது போன்று படுக்கையில் கிடத்தப் பட்டிருந்தார். நாங்கள் சென்ற போது வெளியில் இருந்த அவரது உறவினர்கள் மண்ணை தூக்கி வாரி இறைத்து யார் யார் பேச்சையோ நம்பி தன் வாழ் வையே தொலைத்து விட்டானே என பதுவா செய்தனர். பின்னர் அபூதாகிர் விடுதலைக் காக பாடுபடும் எங்களுக்காக மடியேந்தி துஆ கேட்டனர். அந்த அளவிற்கு மனரீதியாக கோவை சிறைவாசிகளின் குடும்பத்தார் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று தமிழகத்தில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்க குஜராத் முதல்வர் நரேந்திரமோடி பதவி ஏற்பு விழாவிற்கு முதல்வர் ஜெய லலிதா செல்கிறார். அமெரிக்கா போன்ற நாடுகளால் விசா மறுக்கப்படும் அளவிற்கு சர்வதேச சமூகத்தால் வெறுக் கப்படும் வகையில் அவமான கரமான கலவரத்துக்கு காரண மாக இருந்தவர் நரேந்திரமோடி. அப்படிப்பட்ட மோடியிடம் நட்பு பாராட்டுகிறார்.

குஜராத்தில் முஸ்லிம்களை அழிக்க மோடி துணை போனார் என்றால் ஆந்திராவில் இஸ்லா மிய கலாச்சார சின்னத்தை அழிக்க அம் மாநில அரசு துணை போகிறது. 420 ஆண்டு பாரம்பரியமிக்க ஹைதராபாத் சார்மினாரில் 1642 முதல் 1960 வரை எந்த சிலையுமில்லை. 1960-ல் சிலை வைக்கப்பட்டு அதை காரணம் காட்டி இன்று பெரிய கோவிலாக எழுப்புகி றார்கள். இதை `தி ஹிந்து’ நாளிதழ் படம் பிடித்துக் காட்டி அம்பலப்படுத்தியுள்ளது. அப்படியானால் 1951-ல் உருவாக்கப்பட்ட சட்டம் என்னா யிற்று? இதை நாடாளுமன் றத்தில் கேட்டு முழங்கினோம்.

ஆகவே, இன்று நம் சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கும் பேராபத்துக்களை உணர்ந்து சமுதாயம் ஒன்றுபட வேண்டும். இவ்வாறு எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. பேசினார்.

ஞாயிறு, 30 டிசம்பர், 2012

பனிமூட்டத்தால் உறைந்தது ‘ஏழைகளின் ஊட்டி’ ஏற்காடு


குளிர்கால மலர்க்கண்காட்சியை அதிகரிக்க வேண்டும் எனவும், ஏற்காட்டில் இதுபோன்ற ஜில்..ஜில்.. சீசனை அனுபவித்ததில்லை என சென்னையை சேர்ந்த இளம்பெண் தெரிவித்தார்.

படகு சவாரிக்கு அனுமதி இல்லை
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நேற்று ஒருநாள் மட்டும் 2–ம் பருவமாக குளிர்கால மலர்க்கண்காட்சி மற்றும் கலைவிழா நடத்தப்பட்டது. சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க செய்யும் வகையில் நடத்தப்பட்ட மலர்க்கண்காட்சிக்கு சென்னையில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

நேற்றைய தினம் ஏற்காடு பனிமூட்டத்தால் திண்டாடியது என்றே கூறலாம். எதிரே 10 அடி தூரத்திற்கு மேல் உள்ள நபர்களை அடையாளம் கண்டு கொள்ளாதபடி பனிமூட்டமும், மேககூட்டமும் ரோட்டில் பரவி இருந்தது. லேக் எனப்படும் ஏரியில் சுற்றுலா பயணிகள் படகுசவாரி செய்ய முடியாத வகையில் ஏரி முழுவதும் பனிமூட்டம் பரவி வியாபித்து இருந்தது. இதனால் படகு சவாரி செய்வதற்கு பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. இதுபோல ஏற்காடு பஸ் நிலையம், அண்ணா பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஜா கார்டன் பகோடா பாயின்ட், சேர்வராயன் கோவில், பொட்டனிக்கல் கார்டன் ஆகிய இடங்களிலும் பனிமூட்டமாக காணப்பட்டது.

வாகனங்கள் முகப்பு விளக்கு
ஏற்காடு அடிவாரத்தில் இருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் 15–வது கொண்டை ஊசி வளைவில் இருந்து 20–வது கொண்டை ஊசி வளைவு வரை வாகனங்கள் செல்ல முடியாத வகையில் பனிமூட்டம் இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டப்படி சென்றதை காணமுடிந்தது.

குடும்பத்துடன் சுற்றுலா சென்றவர்கள் பனிமூட்டத்தால் வாவ்... என்ன ஒரு சீசன் எனக்கூறி உறைந்து போயினர். சிறுவர், சிறுமிகள் முன் எச்சரிக்கையாக சுவெட்டர் அணிந்து வராததால் அவர்கள் வாய் குளிரில் டக்..டக்கென ‘தந்தி‘ அடிக்க தொடங்கின.

மின்சாரம் இல்லாத வீடுகளில் ஒளியேற்றும் கல்லூரி மாணவர்கள்


"ஊதாரித்தனமாக செலவு செய்பவர்கள்" என, சிலரால் வசைபாடப்படும் கல்லூரி மாணவர்கள், தங்களின், "பாக்கெட் மணி"யை சேமித்து, 4,000 வீடுகளில் வெளிச்சத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

மும்பையில் உள்ள, எச்.ஆர்., கல்லூரி மாணவர்கள், ஐந்து பேர், இரண்டாண்டுகளுக்கு முன், சுற்றுலா சென்ற போது, மும்பை புறநகர் பகுதியில் ஒரு கிராமத்தை கண்டனர். தலைநகர் மும்பையில் இருந்து, 150 கி.மீ.,யில் இருந்த அந்த கிராமத்தில், மின் வசதி அறவே கிடையாது. மொபைல் போனை, சார்ஜ் செய்வதற்கு கூட, 10 கி.மீ., சென்று, மின்சாரம் உள்ள இடத்தில், சார்ஜ் செய்ய வேண்டி இருந்தது.

அந்த கிராமத்தில் தங்கி, அந்த மக்கள் படும்பாட்டை அறிந்த மாணவர்கள், மிகுந்த மனவேதனை அடைந்தனர். பகலில் மட்டுமே பள்ளி குழந்தைகளால் படிக்க முடியும்; இரவில் படிக்கவே முடியாது. இதை கண்ட மாணவர்கள், மேலும் வருந்தினர்.
மாணவர்கள் தங்களின், "பாக்கெட் மணி"யை சேர்த்து, அந்த கிராமத்திற்கு, சூரிய ஒளி மின்சாரம் வழங்க முடிவு செய்தனர். இந்த உன்னத முயற்சிக்கு, பிற மாணவர்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக, கொஞ்சம் வித்தியாசமான நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இரவு நேரத்தில், கல்லூரி ஹாஸ்டலில், திடீரென மின்சாரத்தை துண்டித்தனர். மின்சாரம் இல்லாததால், மாணவர்கள் தவித்து, சத்தம் போட்டு ரகளை செய்யவும், மீண்டும் மின்சாரத்தை வழங்கினர். ரகளை செய்தவர்கள் மத்தியில் பேசிய மாணவர் ஒருவர், "10 நிமிட நேரம், மின்சாரம் இல்லாததற்கே இப்படி சத்தம் போடுகிறீர்களே, ஆண்டாண்டு காலமாக மின்சாரம் இல்லாமல் எத்தனையோ கிராமங்கள், அந்த கிராமங்களில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் அவதிப்படுவதை பற்றி ஏன் கவலைப்படுவதில்லை..." என, கேட்டார்.

மனம் வருந்திய மாணவர்கள், ஒவ்வொருவரும், தலா, 10 ரூபாய் கொடுத்து, சேர்ந்த பணத்தை கொண்டு, மற்றொரு கிராமத்திற்கு, சோலார் விளக்குகள் ஏற்பாடு செய்யப்பட்டன. ஒரு சோலார் விளக்கிற்கு, 4,000 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை, 106 கிராமங்களில், 4,000 சோலார் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

மகாராஷ்டிரா மட்டுமின்றி, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், கர்நாடகா மாநிலங்களிலும், மும்பை, எச்.ஆர்., கல்லூரி மாணவர்கள், சோலார் விளக்குகளை பொருத்தி, புரட்சி ஏற்படுத்தி வருகின்றனர்.

"புராஜெக்ட் சிராக்" என, பெயரிடப்பட்டுள்ள இந்த மாணவர் அமைப்பில், மும்பை நகர கல்லூரிகளின் பெரும்பாலான மாணவர்கள், உறுப்பினர்களாக மாறி வருகின்றனர். நல்ல நோக்கத்திற்காக பாடுபடும் மாணவர்களுக்கு, பல நிறுவனங்களும் பணம் கொடுத்து உதவுகின்றன.

கிடைக்கும் பணத்தை கொண்டு, மின்சார வசதி இல்லாத கிராமங்கள், வீடுகளுக்கு சோலார் மின் விளக்கு வசதிகள் செய்து கொடுக்கின்றனர்.

இளைய தலைமுறையினரை மழுங்கடிக்கும் இணையதளங்கள்


"இணையதள தொழில்நுட்ப வசதி காரணமாக, இன்றைய இளைய தலைமுறையினரின் மூளை, மழுங்கடிக்கப்படுகிறது. எந்த ஒரு விஷயத்தையும், அறிந்து கொள்வதற்கு, அவர்களின் கைகள், "கூகுளை" தான், நாடுகின்றன. இதனால், இன்றைய தலைமுறையினர், சிந்திக்கும் ஆற்றல் அற்றவர்களாக மாறி வருகின்றனர்," என, பிரபல பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர், கூறியுள்ளார்.

பிரபல பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர், டிரேவர் பெய்லீஸ். பேட்டரி, மின்சாரம் இல்லாமல், கைகளால் சுற்றி ரேடியோவை இயக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தவர். "டெய்லி மெயில்" என்ற ஆங்கில பத்திரிகைக்கு, அவர் அளித்துள்ள பேட்டி:

இன்றைய இளைய தலைமுறையினரின் போக்கு, எனக்கு மிகவும் கவலை அளிக்கிறது. எந்த ஒரு விஷயத்தையும், இணையதளம் மூலமாகவே, அறிய முயற்சிக்கின்றனர். "இது எப்படி சாத்தியம்; அது என்ன; இதை எப்படி செய்யலாம்" என்பது போன்ற, பல்வேறு கேள்விகளுக்கு, இன்றைய இளைஞர்கள், உடனடியாக, "கூகுள்" இணையதளத்தை தான், நாடுகின்றனர்.

ஒரு விஷயத்தை எப்படி செய்யலாம் என்பது பற்றி, அவர்கள் சிந்திப்பதும் இல்லை; கற்பனை செய்து பார்ப்பதும் இல்லை. இதனால், அவர்களின் மூளை, மழுங்கடிக்கப்பட்டு வறட்சியாகி வருகிறது. அனுபவ ரீதியாகவோ, செயல்முறை சார்ந்தோ, எந்த விஷயத்தையும் அவர்கள் செய்வது இல்லை.

இணையதளங்களால், தாங்களாக, சொந்தமாக எதையும் செய்ய முடியாதவர்களாக மாறி வருகின்றனர். இது, அபாயகரமான போக்கு. இணையதளங்கள், மொபைல் போன், கம்ப்யூட்டர் ஆகியவற்றின் உதவி இல்லாமல், அவர்களால் எதையும் செய்ய முடிவது இல்லை. முழுக்க முழுக்க, அவர்கள், இவற்றை சார்ந்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அவற்றுக்கு அடிமையாகி வருகின்றனர்.

எனவே, பள்ளிகளில், குழந்தைகளுக்கான, கற்பித்தல் முறையில் மாற்றம் வேண்டும். குறிப்பாக, செயல்வழி கற்றல் நடைமுறைகளை அமல்படுத்த வேண்டும். சில மாதிரி பொருட்களை கொடுத்து, "ஒரு பாலத்தை, எப்படி கட்டுவது; இந்த கட்டடத்தை எப்படி வடிவமைப்பது" என, குழந்தைகளை செய்யும்படி கூற வேண்டும்.

எதிர்கால தலைமுறை, ஆரோக்கியமான, ஆற்றல் உள்ள தலைமுறையாக வளர்வதற்கு, இது தான் சிறந்த தீர்வாக அமையும்.இவ்வாறு, டிரேவர் பெய்லீஸ் கூறினார்.

சனி, 29 டிசம்பர், 2012

நடந்தால் சுறுசுறுப்பு விர்ர் கொழுப்பு போயே போச்சு


பல லட்சம் செலவில் உடற்பயிற்சி சாதனங்கள் எல்லாம் வாங்கத் தேவையில்லை. சிறிது தூரம் நடந்தாலே போதும். ஆரோக்கியமான உடலமைப்பை தந்துவிடும். நடைப்பயிற்சி என்பது இயற்கையானது மட்டுமல்ல, பிற உடற்பயிற்சியை விட எளிதானதும், செலவில்லாததும் ஆகும்.

இதய நாளங்களுக்கு உரிய வேலை கொடுத்து தேவையான உந்து சக்தியை ஏற்படுத்தி இதயத்தில் உள்ள கொழுப்பை வெளியேற்ற நடைப்பயிற்சி உதவுவது எல்லோருக்கும் தெரிந்திருக்காது. நமது உடலில் மிகப்பெரிய தசை காலில்தான் உள்ளது. நடைப்பயிற்சியானது அந்த தசைகளை வலுவுள்ளதாகவும் உறுதியானதாகவும் ஆக்குகிறது.

சாதாரணமான நேரங்களில் கை தசைகளுக்கு வேலை இருக்காது. ஆனால் நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது நம்மை அறியாமல் கைகளை அசைப்பதால் கை தசைகளும் முறுக்கேறுகின்றன. உடலில் வீணாக சேர்ந்துள்ள கொழுப்புகளை கரைக்கிறது.

நடைப்பயிற்சி செய்வதால் நுரையீரல் சுறுசுறுப்படைகிறது. ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. மூளையின் சக்தியை அதிகரிக்கிறது. நிம்மதியான உறக்கத்தை கொடுக்கிறது. இதயநோயுடன் உயர் ரத்த அழுத்தம், இரண்டாம் தர நீரிழிவு நோய், பித்தகற்கள், ஆஸ்டியோ போரோசிஸ் பாதித்த நோயாளிகளுக்கு நடைப்பயிற்சி மிகவும் நல்லது.

வயதானவர்களுக்கு ஏரோபிக்ஸ், சைக்கிளிங், ஓட்டப்பயிற்சி ஆகியவை உகந்ததல்ல. ஆனால் அனைத்து வயதினருக்கும் நடைப்பயிற்சி ஏற்றது. நடைப்பயிற்சியே மனிதனுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது என்றால் அது பொய்யில்லை.

வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவுக்கு 40 பேர் பலி


வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில், கடும் பனி பொழிவு காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடும் குளிரை தாங்க முடியாமல் பலியானோர் எண்ணிக்கை, 40 ஆக உயர்ந்துள்ளது.இதில், உ.பி., மாநிலத்தில் கடும் பனி காரணமாக, 30 பேர் பலியாகியுள்ளனர். ஆக்ராவில் தொடர்ந்து அதிக குளிர் நிலவுகிறது. இங்கு, குறைந்த பட்ச வெப்பநிலை, 2.6 டிகிரி செல்சியசுக்கும் கீழே இருந்தது. மாநிலத்தில், பெரும்பாலான பகுதிகளில், அதிக பட்ச வெப்ப நிலை, 8 முதல், 10 டிகிரி செல்சியசுக்கும் கீழ் இருந்தது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், கடும் குளிர் நிலவியது. நேற்று முன்தினம் மாலை, பனிபொழிவு அதிகமாக இருந்தது. அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பெரும்பாலான பகுதிகளில், கடும் பனி மூட்டம் காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கடந்த சில நாட்களாக, பனி மூட்டத்தால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்ட, டில்லி, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், நேற்று விமான போக்குவரத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இரண்டு நாட்களாக, நிலவும் மிதமான பனிமூட்டம், விமான சேவையை பாதிக்கவில்லை.நேற்று முன்தினம் இரவு, பனி மூட்டம் இருந்தது. ஆனால், காலையில் விமான சேவையில் பாதிப்பு ஏற்படவில்லை.

பள்ளி வளர்ச்சி திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில் தாமதம்


அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ், ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில், ஆண்டுதோறும் வளர்ச்சிப் பணிகளாக, கூடுதல் வகுப்பறை கட்டடம், கழிப்பறை வசதி, சுற்றுச்சுவர் கட்டப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை மாதங்களில், இத்திட்டத்திற்கு அனுமதி கிடைத்து, அந்த கல்வியாண்டிற்குள் திட்டம் நிறைவேற்றப்படும். கிராமக் கல்விக்குழு, தலைமையாசிரியர் இணைந்து இத்திட்டத்தை நிறைவேற்றுவர்.

இந்த கல்வியாண்டில் திட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு, பல மாதங்களாகியும், நிதி அனுமதி கிடைக்கவில்லை. இனிமேல், அனுமதி கிடைத்தாலும், இந்த கல்வியாண்டிற்குள் இத்திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட வாய்ப்பில்லை.
கால தாமதத்தால், திட்ட மதிப்பீட்டு தொகை அதிகரிப்பதாலும், திட்டப்பணிகளை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்படும். இதனால், மாநிலம் முழுவதும் இத்திட்டம் கிடப்பில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

தனியார் வேலை வாய்ப்பு நிறுவனத்தில் சோதனை

பல்வேறு மாநிலங்களில் இருந்து வீட்டு வேலைக்காக அழைத்து வரப்பட்ட 84 பேரை போலீசார் மீட்டனர். அவர்களில் 64 பேர் மைனர்கள் என்பது தெரியவந்துள்ளது. ஜார்கண்ட் போலீசார் நேற்று முன்தினம் டெல் லிக்கு வந்தனர். அங்குள்ள கிராமங்களில் இருந்து சட்டவிரோதமாக சிறுவர், சிறுமிகளை வீட்டு வேலைக்காக டெல்லிக்கு கடத்தி வந்துள்ளதாகவும், அவர் களை மீட்பதற்காக வந்துள்ளதாகவும் டெல்லி போலீசுக்கு தெரிவித்தனர்.

இதையடுத்து டெல்லி மற்றும் ஜார்கண்ட் போலீசார், சக்திவாகிணி தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் உதவியுடன், டெல்லியில் உள்ள தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்களின் விவரங் களை சேகரித்தனர். அப்போது 24 தனியார் வேலை வாய்ப்பு நிறுவனங்களின் விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் 7 தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு வேலைக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட 84 பேரை மீட்டனர். அவர்களில் 64 பேர் மைனர்கள் என்று தெரியவந்தது. மீட்கப்பட்டவர்களில் 54 பேர் பெண்கள். மீட்கப்பட்ட 84 பேரும், ஜார்கண்ட், மேற்கு வங்கம், சட்டீஸ்கர், ஒடிசா மற்றும் அசாமில் இருந்து வீட்டு வேலைக்காக அழைத்து வரப்பட்டவர்கள். இதுதொடர்பாக 7 பேரை பிடித்து, பல்வேறு மாநிலங்களில் இருந்து எப்படி ஆட்களை வேலைக்கு அழைத்து வருகிறார்கள் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த நடவடிக்கை மற்ற தனியார் வேலை வாய்ப்பு நிறுவனங்களிலும் தொடர்ந்து நடக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

வியாழன், 27 டிசம்பர், 2012

வெளிநாட்டில் மருத்துவ பட்டபடிப்பு படித்த இந்தியர்கள் 10,000 பேர் பாதிப்பு


வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் அமீர் ஜகான் கூறியதாவது: வெளிநாடுகளில், இளநிலை மருத்துவப் பட்டம் பெறும் இந்தியர்களை, இந்தியாவில் மருத்துவம் செய்ய அனுமதிக்க, 2002ம் ஆண்டு முதல், தகுதி தேர்வு முறை நடைமுறையில் உள்ளது.

இந்திய மருத்துவ கவுன்சிலின் அனுமதியின்றி, அதன் வரையறைக்குள் வராத, வெளிநாட்டு மருத்துவ கல்லூரிகளில், பட்டம் பெறுவோரை அடையாளம் காண, இத்தேர்வு கொண்டு வரப்பட்டது.

இதனால், எம்.சி.ஐ., அனுமதியுடன், முறையாக, வெளிநாட்டில் மருத்துவ பட்டம் பெற்ற, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ பட்டதாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நிலவும், மருத்துவர்கள் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, தகுதி தேர்வு முறையை ரத்து செய்து, எம்.சி.ஐ., அனுமதியுடன், வெளிநாடுகளில் மருத்துவப் பட்டம் பெற்றவர்களுக்கு, நேரடியாக மருத்துவம் செய்ய, அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அமீர் ஜகான் கூறினார்.

உச்சத்தை தொட்ட வெங்காயம் விலை உயர்வு

டில்லியில் வெங்காயத்தின் விலை மீண்டும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.20 முதல் 25 ஆக உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தை விட 60 முதல் 80 சதவீதம் வரை தற்போது உயர்ந்துள்ளது.

வெங்காயத்தின் மொத்த விற்பனை விலை உயர்ந்ததால் சில்லறை விலையும் உயர்ந்துள்ளது மக்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது. நடப்பு ஆண்டின் பிப்ரவரி முதல் டிசம்பர் மாதம் வரை வெங்காயத்தின் விலை 50 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

இதே நிலை நாடு முழுவதும் நிலவி வருகிறது. டிசம்பர் மாதத்தில் ஒரு குவிண்டால் வெங்காயத்தின் விலை ரூ.1211 ஆக உள்ளது. இது கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ரூ.650 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. சென்னையில் ஒரு குவிண்டால் வெங்காயம் ரூ.2000 ஆக உள்ளது. வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதால் இந்த விலை ஏற்றம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஓராண்டாகியும் திறக்கப்படாத அரசு பள்ளி கட்டடம்: ரூ.2 கோடி வீண்


எண்ணூர் - கத்திவாக்கம் நெடுஞ்சாலையில், கத்திவாக்கம் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில், 6ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வகுப்பு வரை, 2,000 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.

எண்ணூர், கத்திவாக்கம் சுற்று வட்டாரத்தில், நடுநிலை பள்ளியில் படிப்பை முடிப்போர், கத்திவாக்கம் மேல்நிலைப் பள்ளியில் தான் சேர வேண்டும். இந்த பள்ளியை விட்டால் வேறு வழியில்லை. இந்த பள்ளியில், மாணவ, மாணவியரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிப்பதால், இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது.

இதை கருத்தில் கொண்டு, நபார்டு வங்கி நிதி உதவியோடு, 19 வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம், கழிவறைகள், குடிநீர் வசதி மற்றும் பள்ளிக்கு சுற்றுச்சுவர் ஆகியவை கட்ட, 2008 - 2009ம் ஆண்டு, இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

பொதுப்பணித்துறை மேற்பார்வையில், இந்த பணிகள் நடந்தன. மாணவ, மாணவியருக்கு தனித் தனியாக வகுப்புகள் நடத்த போதிய இடம் இல்லை என, பள்ளி நிர்வாகம், பொதுப்பணி துறையிடம் வற்புறுத்தியது. இதனால், பள்ளி கட்டடத்தை விரைந்து கட்டி, பள்ளி நிர்வாகத்திடம், 2011, டிசம்பர் மாதத்தில், பொதுப்பணி துறை ஒப்படைத்தது.

ஆனால், சுற்றுச்சுவர் மற்றும் கழிவறைகள் கட்டப்படவில்லை. புதிய பள்ளி கட்டடத்தை, கல்வி அமைச்சர் திறந்து வைப்பார் என, பொன்னேரி கல்வி மாவட்ட அதிகாரிகள் கூறியதால், பள்ளி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டது. இதனால், புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டடம் பயன்படுத்தப்படாமல், பாழடைந்து வருகிறது.

சுற்றுச்சுவர் இல்லாததால், புதிய கட்டடத்தில் உள்ள குடிநீர் குழாய் இணைப்புகள், ஜன்னல் கதவுகளை, சமூக விரோதிகள் உடைத்து நாசப்படுத்தி உள்ளனர். இதே நிலை தொடர்ந்தால், புதிய கட்டடம் யாருக்கும் பயன்படாமல், பாழடைந்த கட்டடமாக மாறிவிடும் என, பெற்றோர் - ஆசிரியர் கழக நிர்வாகிகள் வருந்துகின்றனர்.

இதுகுறித்து, பொதுப்பணி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிய கட்டடம், பள்ளி நிர்வாகத்திடம் ஓராண்டுக்கு முன் ஒப்படைக்கப்பட்டு விட்டது. மாணவ, மாணவியருக்கு என, தனித்தனி கழிவறை மற்றும் பள்ளி சுற்றுச்சுவர் கட்டாமல், ஒப்பந்தாரர் மாயமாகி விட்டார்.

ஒப்பந்தாரரை நீக்கிவிட்டு, புதிதாக 22 லட்சம் ரூபாய்க்கு, வரும் ஜனவரி இரண்டாவது வாரம், மறு ஒப்பந்தம் கோரப்படுகிறது.
புதிய ஒப்பந்ததாரர், கழிவறைகள் மற்றும் சுற்றுச்சுவரை கட்டி கொடுத்து விடுவார். எனவே, எங்களால் எந்த தாமதமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

புதன், 26 டிசம்பர், 2012

சமூகத்தை ஒருங்கிணைப்பதே நம் தலையாயப்பணி, ஒன்றுபட்டு பணியாற்றி தமிழக முஸ்லிம் சமூகத்தை தலைநிமிரச் செய்வோம் : காயல் மஹபூப்


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில செய லாளரும், மணிச்சுடர் நாளேடு செய்தி ஆசிரியருமான காயல் மகபூபுக்கு ஹாங்காங் காயிதெ மில்லத் பேரவை சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஹாங்காங் ஷிம்ஷாஷி பூங்காவில் 22-12-2012 இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மூத்த பிரமுகர் அப்துல் வதூத் தலைமை தாங்கினார். இர்ஷாத் அலி இறைமறை ஓதினார்.

ஹாங்காங் காயிதெ மில்லத் பேரவை அமைப்பாளர் வி.எம்.டி. முஹம்மது ஹஸன் வரவேற்புரை யாற்றினார். காயல் மகபூபை வரவேற்று இந்திய முஸ்லிம் சங்க முன்னாள் தலைவர் பாக்கர் உரையாற்றினார்.

மணிச்சுடர் நாளிதழ் வெள்ளிவிழா சிறப்பு மலரை கீழக்கரை ஹஸன் பாக்கர் வழங்க காயல்பட்டினம் ஹசன் மரைக்கார் பெற்றுக் கொண் டார். மணிச்சுடர் நாளிதழை நீடூர் அப்துல் ரஹ்மான் வழங்க காயல்பட்டினம் இன்ஜினியர் முஸ்தபாவும், பிறைமேடை இதழை உவைஸ் வழங்க வி.எம்.எம். தம்பியும், டைம்ஸ் ஆப் லீக் இதழை கதீபும் மொகு தூம் வெளியிட புகாரி அப்துல் ரவூப் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் காயல் மகபூப் பேசியதாவது-

இந்த கடுமையான குளிரில் திறந்த வெளியில் தரையில் அமர்ந்து நிகழ்ச்சியில் நீங்கள் பங்கு கொண்டுள்ளது மெய் சிலிர்க்க வைத்துள்ளது. இந்த வரவேற்பு என்னைப் போன்றோ ரின் பொது நலப் பணிகளுக்கு நீங்கள் தரும் அங்கீகாரம்.

கடல் கடந்து எந்த நாட்டில் வாழ்ந்தாலும் தாயகத்தை மறக்க மாட்டோம்; சமூகத்திற்கு பணி செய்வோம்; சொந்த ஊர் வளர்ச்சிக்கு துணை புரிவோம் என்ற உறுதியுடன் பணியாற்று வது பெருமைக்குரியது.

இன்று மூத்தவர்கள் மட்டு மல்ல, இளைய தலைமுறையி னர் பொதுநல சேவையில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. அவர்களிடத்தில் அறிவும், ஆற்றலும் நிரம்ப உள்ளது. இணைய தளத்தின் மூலம் நட்பு வட்டாரத்தையும், தங்கள் பணிகளையும் மிகச் சிறப்பாக ஒருங்கிணைக்க முடிகிறது.

ஒன்றில் மட்டும் நீங்கள் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும். ஆன்மீகம், அறிவியல் என நீங்கள் எந்த கொள்கையில் இருந்தாலும் ஊர், சமுதாயம் என்று வரு கின்ற போது ஒன்றுபட்டு நிற்க வேண்டும். அந்த ஒற்றுமையில் தான் நம் சமூகத்தின் மரி யாதை, கண்ணியம் அனைத் தும் இருக்கிறது. எந்தச் சூழ் நிலையிலும் அதை விட்டுக் கொடுக்கக்கூடாது.

வாழும் நம்மவருக்கிடையில் பிளவுகளும், பிரச்சினைகளும் உருவாகிக் கொண்டேயிருக்கு மானால் அது சமூகத்தின் முன்னேற்றத்தை தடைபடுத் தும்.

இன்று வெளிநாடுகளில் படித்துப் பட்டம் பெற்றவர்கள் நல்ல வேலைவாய்ப்புகளில் இருக்கின்றனர். அவர்களின் அறிவு கூர் தீட்டப்பட்டு, சமூகப் பணிக்கு பயன்படுத்தப்பட வேண்டும்.

ஹாங்காங் நாட்டில் தமிழக முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கில் வாழ்கிறார்கள். குறிப்பாக காயல்பட்டினம், கீழக்கரை, நீடூர், கூத்தாநல்லூர் போன்ற ஊர்க் காரர்கள் இவர்கள்.

தமிழகத்தின் பிரபலமான இந்த ஊர்களில் கூட அவசியம் கவனத்துடன் செய்ய வேண்டிய வைகளை கோட்டை விட்டு விடுகிறோம். சாதிவாரி கணக்கெடுப்பு நடந்தது. அதில் நாம் அதிக ஆர்வம் காட்டவில்லை. இதனால்தான் நமது எண் ணிக்கை குறைகிறது. பிறகு இடஒதுக்கீட்டிற்காக சதவீதம் எப்படி உயர்த்திக் கேட்க முடி யும்?

தேசிய அடையாள அட்டை இன்று மிக மிக அவசியமாகும். வருங்காலத்தில் அனைத்திற் குமே இதுதான் ஆதாரமாக இருக்கப் போகிறது. நம்மில் எத்தனை பேர் விண்ணப்பித் துள்ளோம்? எண்ணிப் பாருங் கள்.

சச்சார் குழு பரிந்துரை அடிப்படையில் எவ்வளவோ மானிய உதவிகள், குறிப்பாக கல்விக்காக மத்திய அரசு தருகிறது. நம் பிள்ளைகளில் எத்தனை சதவீதம் இதனை பயன்படுத்துகின்றனர். மதர ஸாக்களின் கல்வியை மேம் படுத்த பல நூறு கோடி ரூபாய் களை ஒதுக்கினால் நம்மவர்கள் விண்ணப்பிப்பதற்கு கூட முன் வருவதில்லை.

குடும்ப அட்டைகளில் நமது பெயரை சரியான உச்சரிப்பில் பதிவு செய்யக்கூட நாம் அக்கறை காட்டுவதில்லை. பெயரில் என்ன இருக்கிறது என அலட்சியமாக இருந்து விடு கிறார்கள். தேவைப்படும் போது அங்கலாய்க்கிறார்கள். அப்படி சங்கடப்பட்டவர்களில் நானும் ஒருவன். இதுபோன்ற விஷயங்களில் எல்லா ஊர்கள்தோறும் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தினால் அது சமூகத்திற்கு பயனளிக் கும். இன்று கேரள முஸ்லிம் கள் இந்திய அளவில் பொருளாதார, கல்வி - வேலைவாய்ப்பில் முதலிடம் வகிக்கிறார்கள். ஆனால் அவர்களை விட அதிக எண்ணிக்கையில் உள்ள மேற்கு வங்க முஸ்லிம்கள் தாழ்ந்த நிலையில் உள்ளனர். அஸ்ஸாம் அதைவிட பரிதா பம். ஏன் இந்த நிலை? என்று பரிசீலிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.

மக்கள் தொகையில் 25 சதவீதம் உள்ள கேரள முஸ்லிம் கள் சாதனைபடைக்கிறார்கள். தமிழ்நாட்டில் 6 சதவீதம் மட்டுமே உள்ள முஸ்லிம்கள் 60 பிரிவாக சிதைந்து கிடக்கிறார்கள். எனவே, சமூகத்தை ஒருங் கிணைப்பதே இன்றைய தலையாய பணி. அந்தப் பணி யில் அக்கறை காட்டுங்கள்.

இவ்வாறு காயல் மகபூப் குறிப்பிட்டார்.

கடையநல்லூர் தாலுகா அமைப்பு ஆரம்பகட்ட பணிகள் வருவாய்த்துறை தீவிரம்

கடையநல்லூரை தலைமையிடமாக கொண்ட தாலுகா அமைவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே கடந்த பட்ஜெட் கூட்டத்தின்போதே இதற்கான அறிவிப்பு வெளிவரும் என பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் இருந்து வந்தனர். தற்போது அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

சென்னையில் நடந்த கலெக்டர்கள் மாநாட்டில் நெல்லை மாவட்ட கலெக்டர் சமய மூர்த்தி பேசுகையில் : - கடையநல்லூரை தலைமையிடமாக கொண்ட தாலுகா அலுவலகம் அமைக்க அரசு முன்வரவேண்டுமென கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கலெக்டர்கள் மாநாட்டில் தெரிவித்த மாவட்ட கலெக்டரின் பரிந்துரையின் பேரில் தற்போது அதற்கான நடவடிக்கையை வருவாய்த்துறையினர் தீவிரமாக மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது கடையநல்லூரை பொறுத்தவரை தென்காசி தாலுகாவில் இடம்பெற்றுள்ளது. கடையநல்லூர் பிர்கா, சேர்ந்தமரம் பிர்கா மற்றும் சிவகிரி தாலுகாவில் உள்ள நகராட்சி ஆகியனவற்றை ஒன்றிணைத்து கடையநல்லூர் தாலுகாவில் இடம் பெறும் வகையில் பஞ்.,கள் பிர்கா வாரியாக தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.தற்போது கடையநல்லூர் தாலுகா அமையும்போது அதற்கான எல்கை எந்த பகுதியில் இருக்க வேண்டுமென்பது தொடர்பான வரைபடங்கள் வருவாய்த்துறை மூலம் அளவிடப்பட்டு வருகிறது. மேலும் கடையநல்லூர் தாலுகாவில் இடம்பெறக்கூடிய பஞ்.,கள், டவுன் பஞ்.,கள், நகராட்சிகள் போன்றவை குறித்த பட்டியல்கள் தொடர்பான கருத்துருக்களும் கோரப்பட்டு வருகின்றன.இதனை தொடர்ந்து கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் கடையநல்லூர் தாலுகா அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்த்த நிலையில் நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் அதற்கான அறிவிப்பு இருக்குமென்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தாலுகா அலுவலகம் எந்த இடத்தில் அமையக்கூடும் என்பது தொடர்பான சர்வே நம்பர்களையும் வருவாய்த்துறை மூலம் தமிழக அரசு கேட்டுக் கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

ஆசிரியர் பற்றாக்குறை: பள்ளிகளில் தொழிற்கல்வி பிரிவுகள் மூடல்


தொழில் கல்வி பாடப் பிரிவுகளில் ஓய்வுபெற்ற ஆசிரியர்களின், 1,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாததால், மேல்நிலைப் பள்ளிகளில், தொழில் கல்வி பாடப் பிரிவுகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசின், மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ், 1978ம் ஆண்டு, தொழில் கல்வி பாடப்பிரிவு துவங்கப்பட்டது. மாணவர்களின் தொழில்திறன் மேம்பாட்டிற்கு, பிளஸ்1, பிளஸ் 2 வகுப்புகளில் வர்த்தகம், விவசாயம், பொறியியல் உள்ளிட்ட, ஆறு பிரிவுகளின் கீழ், மின் மோட்டார் பழுது பார்த்தல், கணக்கு தணிக்கை பயிற்சி உள்ளிட்ட, 66 பாடப்பிரிவுகள் செயல்பட்டு வந்தது.

இப்பிரிவுகளில் படித்து, உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு, 4 சதவீதம் பொறியியல் கல்லூரிகளிலும், 10 சதவீதம் பட்டயப் பிரிவுகளிலும், கலை கல்லூரிகளில், 25 சதவீதமும் இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. பாடப்பிரிவுகள் துவங்கப்பட்ட போது, அகடமிக் பிரிவுகளை ஒப்பிடும் போது, தொழில்கல்வி பிரிவுகளில், 3:1 என்ற அடிப்படையில், மாணவர்கள் சேர்க்கை இருந்தது. தற்போது, 8:1 என்ற அளவிற்கு, மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

ஓய்வுபெறும் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதே, இந்நிலைக்கு முக்கிய காரணம். கடந்த, 1978 முதல் 1990 வரை தொழில் கல்வி பாடப்பிரிவு ஆசிரியர்கள், 5,300 பேர் நியமனம் செய்யப்பட்டனர். தற்போது, 1,000 ஆசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். இந்த பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. சில பள்ளிகளில், இப்பணியிடங்களில் பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில், மிகவும் சொற்ப சம்பளத்திற்கு, ஆசிரியர்களை நியமித்து உள்ளனர்.

பல பள்ளிகளில், ஆசிரியர்கள் நியமிக்காமல், மாணவர்கள் சேர்க்கை இல்லை என்ற தவறான காரணங்கள் கூறி, பள்ளிகளில், இத்துறை மூடப்பட்டு வருகிறது. இதுகுறித்து, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழில் கல்வி ஆசிரியர்கள் சங்க மாநில பொது செயலர் நல்லப்பன் கூறியதாவது:

கடந்த, 2007 ம் ஆண்டு முதல் ஆசிரியர் பணி நியமனம் செய்யவும், ஓய்வுபெற்ற ஆசிரியர்களின், காலி பணியிடங்களை நிரப்பவும், எவ்வித நடவடிக்கையும், அரசு மேற்கொள்ளவில்லை. மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் பள்ளிகளில், இப்பிரிவுகள் துவக்கப்படுவதும் கிடையாது.

மத்திய அரசு, கடந்த முறை தொழிற்கல்வி மேம்பாட்டுக்காக, 100 கோடி நிதி ஒதுக்கியது. இந்த நிதி, எப்படி பயன்படுத்தப்பட்டது என்பது புரியவில்லை. தொழில் கல்வி ஆசிரியர்களுக்கு, பல பாகுபாடுகள் காட்டப்படுகின்றன. பணி மூப்பு, தகுதிக்கு ஏற்ப, பிற ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் எவ்வித பதவி உயர்வும், எங்களுக்கு இல்லை என்பது, வேதனைக்குரியது.

மேலும், 27 ஆண்டுகள் பணிபுரிந்தும், நடைமுறை சிக்கல் என்ற பெயரில், 400 ஆசிரியர்கள் ஓய்வூதியம், பிற உதவிகள் ஏதும் இன்றி, ஓய்வு பெற்று உள்ளனர். இதுபோன்று, தொழில் கல்வி பாடப்பிரிவில் பாகுபாடு காட்டுவது சரியல்ல. இதற்கு, அரசு, உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

பள்ளி பாட புத்தகங்கள் சிடி முறையில் மாற்றத் திட்டம்


 தமிழகத்தில், அடுத்த கல்வியாண்டில், பாட புத்தகங்களை சிடி வடிவில் கொண்டு வருவதற்கான, முயற்சியில், கல்வி துறையினர் இறங்கியுள்ளனர். இதற்காக, பள்ளிகள்தோறும், 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான, பாடத்தினை இ-கன்டன்ட் என்ற மின்னனு பாடப்பொருள் தயாரிக்க போட்டிகள் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம், ஆசிரியர்களுக்கு, கம்ப்யூட்டர் பயிற்சி வழங்கப்பட்டு, பள்ளிகளுக்கு லேப்-டாப் வழங்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப முறையின் கீழ், "வெர்ஷன் 2020" இலக்கை அடைய, அடுத்த கல்வியாண்டில், கம்ப்யூட்டர் வழியாக, பாடம் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்காக, பாடங்களை சிடி வடிவில் தொகுத்து, முதல் கட்டமாக, பள்ளிகளுக்கு வழங்கப்படும். சிடிக்கள் மூலம், ஆசிரியர்கள் பாடம் நடத்துவர். இதை தொடர்ந்து, புத்தகங்களுக்கு பதில், மாணவர்களுக்கு சிடியாக வழங்கப்படும். தற்போது, மாவட்டம் வாரியாக,6 முதல், 8 வகுப்பு பாடம் தொடர்பாக, மின்னணு பாடப்பொருள் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் கம்ப்யூட்டர் ஆர்வம் உள்ளவர்கள், 6 முதல், 8ம் வகுப்பு பாடங்களில், ஏதேனும், ஒரு பாடப்பகுதியை தேர்ந்தெடுத்து, 3டி வீடியோ முறையில், எளிமையாக புரியும் வகையில், தமிழில் விளக்க பயிற்சியுடன் வழங்கவேண்டும். இப்போட்டியில், பங்கேற்போர், வரும், ஜனவரி 18ம் தேதிக்குள், அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலகத்திற்கு, முழுவிபரத்தை அனுப்ப வேண்டும் என, தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரி, ஒருவர் கூறியதாவது: முதல் கட்டமாக, 6 முதல், 8ம் வகுப்பு வரையிலான பாடங்களை தேர்வு செய்து, அதில், கடினமான பாடங்களை, எளிதில் மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில், கம்ப்யூட்டர் மூலம் நடத்துவதற்காக, சிடி தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம்.

இதற்காக, பாடங்கள் குறித்து, "கிராபிக்ஸ், அனிமேஷன்" போன்று பாடங்களை உருவாக்கி, மாணவர்களுக்கு, எளிதில் புரியும் வகையில், சிடி தயாரிக்கும் போட்டி நடத்த உள்ளோம். தொடர்ந்து மாநில அளவில், புத்தகங்கள் சிடி வடிவில் வெளியிடப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

செவ்வாய், 25 டிசம்பர், 2012

குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள்... தொலைக்காட்சிகளுக்கு கிடுக்கிப்பிடி


"குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளில், வயதுக்கு வந்தோரின் நடவடிக்கைகளை பிரதிபலிக்கும் வகையில், குழந்தைகள் நடனம் ஆடுவது, பாட்டு பாடுவது போன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்பக் கூடாது" என, தொலைக்காட்சி சேனல்களுக்கு, ஒளிபரப்பு குறை தீர்வு கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

தொலைக்காட்சி சேனல்களில், நெடுந்தொடர்கள் என்ற பெயரில் கலாசார சீர்கேடு; ரியாலிட்டி ஷோ என்ற பெயரில், பங்கேற்பவர்களை வேதனைப்படுத்துவது என, விமர்சனங்கள் எழுந்து கொண்டு இருக்கின்றன. பொழுதுபோக்கு சேனல்களில், குழந்தைகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், குழந்தைகளின் வயதுக்கு மீறிய நடவடிக்கைகளில், ஈடுபடுவது போல் காட்சிகள் வருவது கவலையளிக்கிறது.

வயதுக்கு வந்தோரின் நடவடிக்கைகளை பிரதிபலிக்கும் வகையில், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்டு, காதல் பாட்டுக்கு நடனம் ஆடுவது, பாட்டுப் பாடுவது போன்றவற்றில் பங்கேற்கச் செய்கின்றனர். பெரியவர்களுக்குரிய பாடலையும், நடனத்தையும் அதே போன்றே குழந்தைகள் பாடுவதும், ஆடுவதும் கவலையளிக்கிறது.

இதுபோன்ற நிகழ்ச்சிகள் சேனல்களில் வருவதைத் தடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள், பெண்கள் அமைப்பு சார்பில், மத்திய அரசுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற புகார்களை களைவதற்காகவும், சேனல்களில் என்ன மாதிரியான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பலாம் என்பதற்கான ஆலோசனை வழங்குவதற்காகவும், ஒளிபரப்பு தொடர்பான குறைகள் தீர்வு கவுன்சில் அமைக்கப்பட்டது.

அனைத்து சேனல்கள் உறுப்பினர்களாக உள்ள, இந்திய ஒளிபரப்பு அறக்கட்டளையின் சார்பில் அமைக்கப்பட்டது தான் இந்த கவுன்சில். இந்த கவுன்சில், அனைத்து பொழுதுபோக்கு சேனல்களுக்கும் விடுத்துள்ள வேண்டுகோளில் கூறியிருப்பதாவது:

குழந்தைகள் தொடர்பான நிகழ்ச்சிகளில், குறிப்பாக, 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், வயதுக்கு மீறிய செயல்களில், குழந்தைகள் பங்கேற்பதைத் தவிர்க்க வேண்டும். வயதுக்கு வந்தோர் சம்பந்தப்பட்ட பாடல், ஆடல் காட்சிகளை போல், பிரதிபலிக்கும் வகையில் குழந்தைகள் பங்கேற்பதைத் தவிர்க்க வேண்டும்.

காதல் பாடல், குத்துப் பாட்டு போன்றவற்றில் குழந்தைகள் ஆடுவதையோ, பாடுவதையோ அனுமதிக்கக் கூடாது. பெரியவர்களை போன்று, குழந்தைகள் உடைகளை அணிவது, ஒப்பனை செய்வதைத் தவிர்க்க வேண்டும். வயது வந்தோர் மட்டுமே பங்கேற்கக் கூடிய நிகழ்ச்சிகளில், 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பங்கேற்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மன பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய மற்றும் அவர்களின் தன்னம்பிக்கைக்கு ஊறு விளைவிக்கக் கூடிய ரியாலிட்டி ஷோக்களில், குழந்தைகள் பங்கேற்பதைத் தவிர்க்க வேண்டும். நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் குழந்தைகளின் படிப்புக்கு எவ்விதத்திலும் பாதிப்பு ஏற்படாத வகையில், நிகழ்ச்சிகளின் தயாரிப்புகளை வைத்துக்கொள்ள வேண்டும்.

குறிப்பாக அவர்களின் மன நலம், உடல் நலம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு, தொலைக்காட்சி சேனல்களுக்கு, கவுன்சில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழகத்தில் பருவ மழை பொய்த்ததால் கடும் பாதிப்பு கருகிய பயிர்களுடன் விவசாயிகள் கண்ணீர்


பருவ மழை பொய்த்ததால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கருகிய பயிர்களுடன் நெல்லையில் விவசாயிகள் குவிந்தனர்.

நெல்லையில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் திருவேங்கடம் புதுப்பட்டி பகுதி விவசாயிகள் பலர் கருகிய நெற் பயிர்களுடன் முற்றுகையிட்டனர். தொடர்ந்து அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
எங்கள் பகுதி விவசாயிகள் மானாவாரி விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலத்தில் மக்கா சோளம், பருப்பு வகைகள் உட்பட பல்வேறு பயிர்கள் பயிரிடப்பட்டிருந்தது. பருவ மழை பொய்த்ததால் பயிர்கள் வாடி கருகி விட்டன.

வயல்களில் இரண்டு முறை விதை விதைத்தும் பயிராகி மகசூல் வருவதற்கு முன்பே பயிர்கள் அனைத்தும் கருகி விட்டன. ஒரு ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு விட்டது. இதனால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்ளுக்கு அரசின் வறட்சி நிவாரண நிதியை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டில்லியில் பாசிச சக்திகளின் பின்னணியில் நடைபெற்ற போராட்டத்தில் காயமுற்ற போலீஸ் சுபாஷ் தோமர் மரணம்


புதுடெல்லியில் கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்டதற்கு எதிராக என்ற போர்வையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் காயம் அடைந்த போலீசார் மரணம் அடைந்தார்.

கடந்த 16ந் தேதி அன்று டெல்லியில் ஓடும் பஸ்சில் 6 பேர் கும்பலால் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட மருத்துவ மாணவி, உயிருக்கு ஆபத்தான நிலையில் டெல்லி சப்தர்ஜங் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு என்ற போர்வையில் பாசிச சக்திகளின் பின்னணியில் டெல்லியில் இது தொடர்பாக தொடர்ந்து  பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடந்தது .

புதுடெல்லியில்,   இந்தியா கேட் பகுதியில் போராட்டக்காரர்கள் பேரணி நடத்தினர். அப்போது போராட்டக்காரர்கள், போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அப்போது கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வெடித்தும்  போராட்ட குழுவினரை விரட்ட முயன்றனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் இரு தரப்பிலும் பலர் காயம் அடைந்தனர்.

இதில் சுபாஷ் தோமர் என்ற காவலரும் பலத்த காயம் அடைந்தார். உடனே அவர் மீட்கப்பட்டு டெல்லியில் உள்ள மனோகர் லோகியா என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். மேலும், உணர்வு திரும்பாத நிலையில் உள்ள காவலரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இன்று காலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுபாஷ் தோமர் சிகிச்சை பலனின்றி பலியானார்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போராட்டத்தில் போலீசார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் விபரம் வீடியோ ஆதாரங்கள் மூலம் பெறப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், போலீசாரை காயப்படுத்தியவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

இவரது மரணம் குறித்து மறைந்த போலீஸ்காரர் மகன் தீபக் கூறுகையில்: என்து தந்தை பொறுப்பானவர். இவர் மாணவர்களின் அமைதியை தான் நிலைநாட்ட முயற்சித்தார், ஆனால் அவர் மீது கொடும் தாக்குதல் நடத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார். இவர் மரணத்திற்கு, போராட்டக்காரர்களே முழுப்பொறுப்பு. இத்துடன் இவரை போலீசாரை தவிர யாரும் வந்து ஆறுதல் கூற வரவில்லை. இது மிகவும் கவலையளித்தது. எனது தந்தையை திருப்பி தாருங்கள் என்றார் கண்ணீருடன்.

திங்கள், 24 டிசம்பர், 2012

பள்ளி வகுப்பறையிலேயே மாணவர்களுக்கு பல் சிகிச்சை


வகுப்பறைகளுக்கே சென்று அரசு பள்ளி மாணவர்களுக்கு பல் நோய் சிகிச்சை அளிக்க, சுகாதாரத்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதே இடத்தில் சிகிச்சை அளிக்கின்றனர். முடியாத பட்சத்தில், அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் 3 முதல் 8ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பல் தொடர்பான நோய்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க, அரசு உத்தரவிட்டுள்ளது.ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆரம்ப சுகாதாரத்துறை இணை இயக்குனர்கள் தலைமையில் டாக்டர், நர்சுகள் அடங்கிய குழுவினர், ஒவ்வொரு அரசு பள்ளியின் வகுப்பறைகளுக்கு செல்ல வேண்டும்.

குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி,பரிசோதிக்க வேண்டும். பல் ஓட்டை, சொத்தை பல் உட்பட பிரச்னைகளை கண்டறிந்து, அதே இடத்தில் சிகிச்சை அளிக்கின்றனர். முடியாத பட்சத்தில், அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைப்பர்.

சிவகங்கை சுகாதார பணிகள் துணை இயக்குனர் அகல்யா கூறுகையில், "அரசின் இந்த புதிய சிகிச்சை முறையால் மாணவர்களின் பல் நோய் சரி செய்யப்படும். பற்களை சுத்தமாக வைத்துக் கொள்வது பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறோம். பெற்றோர்களும் தங்களது குழந்தைகளின் பற்களை சுத்தமாக வைப்பதற்கு அறிவுரை கூற வேண்டும்' என்றார்.

மதவாத சக்தியான ஜெயலலிதாவிடமிருந்து எந்த நன்மையும் சமுதாயத்திற்கு விளையப்போவதில்லை -- பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன்


நேற்று (23/12/2012)  லால்பேட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழகத் தலைவர் பேராசிரியர் .கே.எம்.காதிர் மொஹிதீன் நிருபர்களிடம் கூறும்போது ,

இன்று இளம்பெண்கள் கற்பழிகப்படுவது அதிகரித்துள்ளது வேதனையளிக்கிறது,கற்பழிப்புக்கு தூக்கு தண்டனை என்று மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தால் அதை நாங்கள் முதலில் வரவேற்போம். கற்பழிப்புக்குரிய இஸ்லாமிய தண்டனையை நாங்கள் சொன்னபோது அதை காட்டுமிராண்டித் தனம் என்று சொன்னார்கள் பலர்.ஆனால் இன்று கற்பழிப்பவனுக்கு மரண தண்டனை தர வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்துவதை பார்க்கும் போது நாங்கள் சொன்ன கருத்துக்கு வலிமை கிடைத்திருப்பதாகவே கருதுகிறோம்.

டெல்லியில் இடிக்கப்பட்ட பள்ளிவாசல் மீண்டும் கட்டப்படும் என்று அறிவித்த டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் போன்று ,இடிக்கப்பட்ட பாபர் மஸ்ஜிதை,இடிப்பதற்கு காரணமான அத்வானி,முரளி மனோகர் ஜோஷி போன்றவர்கள்  கட்டித்தர முன் வர வேண்டும் .

மேலும்,உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் கோவை சிறைவாசி அபுதாகிரை நீதிமன்ற உத்தரவு வந்தபின்பும் பரோலில் விட மறுக்கும் தமிழக அரசை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வன்மையாக கண்டிக்கிறது .

மதவாத சக்தியான ஜெயலலிதாவிடம் இருந்து எந்த நன்மையும் சமுதாயத்திற்கு விளையப்போவதில்லை என்பதை அடிக்கடி கூறி வருகிறோம்.ஆனால் சிலர் அதை மறைக்க முயல்வதை வேடிக்கையாகவே கருதுகிறேன்.

காவேரி தண்ணீர் பிரச்சனைக்கு இரு மாநில முதல்வர்கள் மக்களின் நலன் கருதி பேசினால் தான் நல்ல முடிவு கிடைக்கும் என்றும் கூறினார்.


தகுதி தேர்வை கைவிட வலியுறுத்தி 27ம் தேதி ஆசிரியர்கள் பேரணி


தமிழ்நாடு பதிவுமூப்பு பட்டதாரி ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம், சேலத்தில் நேற்று நடந்தது. இதில்மாநிலத் தலைவர் ரத்தினக்குமார் சிறப்புரை ஆற்றினார்.

கூட்ட முடிவில் அவர் கூறியதாவது:தமிழகத்தில், கடந்த 2010ம் ஆண்டு வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் 26 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. அதில், 16 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுவிட்டனர். மீதமுள்ள 8 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதற்குள், தமிழக அரசு திடீரென்று தகுதித்தேர்வு அடிப்படையில்தான் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்தது.

அரசாணை 169, 170, 175 ஆகியவற்றின்படி, தகுதித்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு முன் சான்றிதழ் சரி பார்ப்பு நடத்தி முடிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு இத்தேர்வு பொருந்தாது என தெளிவாக கூறப்பட்டு உள்ளது. ஆனால், அரசு இந்த அரசாணைகளை அமல்படுத்தாமல் உள்ளது.டிஆர்பி, தகுதித்தேர்வு மூலம் நியமிக்கப்படும் இளம் ஆசிரியர்களால் அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க முடியாது.

2001 முதல் 2007ம் ஆண்டு வரை டிஆர்பி நடத்திய போட்டித் தேர்வு மூலம் ஏராளமான இளம் ஆசிரியர்கள் நேரடியாக நியமிக்கப்பட்டனர். அதனால், தகுதித்தேர்வு மூலம் பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதை அரசு உடனடியாக கைவிட வேண்டும். மீண்டும் பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர் நியமனங்களில் 69 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. இது கண்டனத்துக் குரியது. கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 27ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் பேரணி நடத்தப்படுகிறது. 5 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

தமிழகத்தில் 7-ம்வகுப்பு மாணவி கற்பழித்து கொலை : டெல்லியில் கூப்பாடு போடுவோருக்கு இந்த ஏழை சிறுமியின் கொலை ஒரு பொருட்டாக தெரியவில்லை ?


தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள கிளாக்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்து பெருமாள். இவரது மகள் பேச்சியம்மாள். இவருக்கும் கருங்குளத்தை சேர்ந்த சவுந்தர் ராஜன் என்பவருக்கும் பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு கணவன்-மனைவி இருவரும் கருங்குளத்தில் வசித்துவந்தனர்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சவுந்தர்ராஜன் திடீரென இறந்துவிட்டார்.அதன்பிறகு பேச்சியம்மாள் தனது 2மகள்களுடன் கிளாக்குளத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். மூத்த மகள் புனிதா (வயது13), நாசரேத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தாள். இளையமகள் மற்றொரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்துவருகிறாள்.

மாணவி புனிதா தினமும் பள்ளிக்கு ரெயிலில் சென்று வந்தாள். இதற்காக கிளாக்குளத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தாதன்குளம் ரெயில் நிலையத்திற்கு நடந்து சென்று, பின்பு அங்கிருந்து திருச்செந்தூர் பயணிகள் ரெயிலில் தனது தோழிகள் சிலருடன் நாசரேத் செல்வார். அதேபோல் மாலையில் திருச்செந்தூரில் இருந்து நெல்லை வரும் ரெயிலில் நாசரேத்தில் இருந்து தாதன்குளத்திற்கு வந்து, அங்கிருந்து நடந்து வீட்டிற்கு வருவாள்.

நேற்று(20-ந்தேதி) காலை வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்டு சென்ற மாணவி புனிதா மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் அவளை அவளது தாய் பேச்சியம்மாள் மற்றும் தாத்தா முத்துபெருமாள் ஆகியோர் பலஇடங்களில் தேடினர். ஆனால் அவளைப்பற்றி எந்த தகவலும் தெரியவில்லை. இதனைத்தொடர்ந்து அவர்கள், புனிதாவுடன் தாதன்குளம் ரெயில்நிலையத்தில் இருந்து பள்ளிக்கு உடன்செல்லும் அவளது தோழிகளிடம் சென்று விசாரித்தனர்.

அப்போது நேற்று காலை புனிதா, பள்ளிக்கு வராதது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், செய்துங்கநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று புனிதா மாயமானது குறித்து புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாணவி மாயமானது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் தாதன்குளம் ரெயில் நிலையத்திற்கு அருகே முள்செடிகள் அடர்ந்து வளர்ந்திருந்த பகுதியில் ஒரு சிறுமி பிணமாக கிடப்பதை இன்று காலை அவ்வழியாக சென்ற சிலர் பார்த்தனர். அவர்கள் இதுபற்றி செய்துங்க நல்லூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு செய்துங்கநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி, சப்-இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் விரைந்து சென்று பிணமாக கிடந்த சிறுமி பிணத்தை கைப்பற்றி விசாரித்தனர்.

அப்போது அந்த சிறுமி பள்ளிக்கு சென்றபோது மாயமான புனிதா என்பது தெரியவந்தது. மாணவி புனிதாவின் வாய் மற்றும் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்திருந்தது. ஆடை அவிழ்ந்தநிலையில் கிடந்தது. சுடிதார் துப்பட்டாவால் கழுத்து இறுக்கப்பட்டிருந்தது. மாணவி புனிதா உடல், அவர் வழக்கமாக நடந்துசெல்லும் காட்டுப்பகுதி நடைப்பாதைக்கு தென்புறம் முள்செடிகள் இருந்தபகுதியில் கிடந்தது.

ஆகவே அவளை காமவெறி பிடித்த மர்ம நபர்கள்சிலர், நடைபாதை உள்ள பகுதியில் இருந்து ஆள்நடமாட்டம் இல்லாத தென்பகுதிக்கு தண்டவாளத்தை கடந்து தூக்கிச்சென்று மறைவிடத்தில் வைத்து கொடூரமாக கற்பழித்து விட்டு, சுடிதார் துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளது தெரியவந்தது.

புனிதாக கொலை செய்யப்பட்டு கிடப்பது குறித்து அவரது தாய் பேச்சியம்மாளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவரும் மற்றும் குடும்பத்தினரும் சம்பவ இடத்திற்கு வந்து மாணவி உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் இத்தகவலை அறிந்ததும் கிளாக்குளம் மற்றும் தாதன்குளத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் சம்பவ இடத்தில் திரண்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மனாபபிள்ளை தலைமையில் கூடுதல் போலீசார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். பள்ளி மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்டது குறித்து தகவலறிந்த தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் சம்பவஇடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

எஸ்.பி. விசாரணை நடத்தியதை தொடர்ந்து மாணவி புனிதாவின் உடல் அங்கிருந்து மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாணவியை கொடூரமாக கற்பழித்து கொன்றவர்கள் யார்? என்பது தெரியவில்லை. ஆகவே சம்பவ இடத்திற்கு மோப்பநாயும், தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். மோப்பநாய் சம்பவ இடத்திலிருந்து முள்ளுக்காட்டு வழியாக சிறிது தூரம் ஓடிவிட்டு நின்றது.

ஆகவே கொலையாளிகள் அந்த வழியாகத்தான் தப்பித்திருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர்.   ஆகையால் அப்பகுதியை சேர்ந்தவர்களிடம் நேற்று காலை முதல் மதியம் வரை யாரேனும் சந்தேகப்படும் வகையில் வந்து சென்றார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் சம்பவம் நடந்த பகுதியில் வழக்கமாக ஏதாவது கும்பல் நடமாட்டம்  இருக்குமா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். அதனடிப்படையில் கொலையாளிகள்குறித்து துப்புதுலக்கும் நடவடிக் கையில் போலீசார் தீவிர மாக ஈடுபட்டுள்ளனர்.

கொலை யாளிகளை கண்டுபிடிக்க ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மணி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.  தனிப்படை போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பரபரப்பு பள்ளிக்கு சென்றமாணவி கற்பழித்து கொலை செய்யப் பட்ட சம்பவம் கிளாக்குளம், தாதன்குளம் கிராமங்களில்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 டெல்லியில் பேருந்தில் நடந்த கொடுஞ்செயலான கற்பழிப்பு சம்பந்தமாக போராட்டம் நடத்தும் ,கூப்பாடு போடும் கூட்டத்தார்களுக்கு தமிழகத்தில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட இந்த ஏழை சிறுமியின் கொலை ஒரு பொருட்டாக தெரியவில்லையோ என்று தமிழக மக்கள் பேசிக்கொள்கின்றனர் .


பேச்சுக் கலையில் வல்லவர் ஆக வேண்டுமா?


* உங்களின் பேச்சை கேட்கவிருக்கும் பார்வையாளர் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும்.

* திறன்வாய்ந்த பார்வையாளர்கள் எண்ணிக்கைப் பற்றிய ஒரு தோராயமான தகவலைப் பெறவும்.

* உங்களின் பேசு பொருள் குறித்து, பார்வையாளர்கள் கேள்வியெழுப்பி விடாமல் இருத்தல் முக்கியம்.

* பேச்சினூடே, பொருத்தமான நகைச்சுவையை இடம்பெற செய்தால், பார்வையாளர்களின் கவனத்தை கவர்வது எளிதாக இருக்கும்.

* பார்வையாளர்களின் நடவடிக்கையின் மூலமாக, நீங்கள் எந்த விதத்திலும், தொந்தரவு அடைந்துவிடக்கூடாது.

* பார்வையாளர்கள், தங்களின் சந்தேகங்களைக் கேட்கும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்க வேண்டும்.

கண்களின் வழியாக பேசுதல்:
நீங்கள் பேசுகையில், உங்களது பார்வையாளர்களின் கண்களைப் பார்த்து பேசுவது மிகவும் சிறந்தது. ஏனெனில், இதன்மூலம் அவர்கள் உங்களை ஆர்வமுடன் கவனிக்கத் தொடங்குவர்.

சைகைகள்:
உரையாற்றும்போது, கையசைவு மற்றும் தேவையான முக பாவனைகளை வழங்க வேண்டும். அப்போதுதான், உரை சிறப்படையும்.

உடல் மொழி:
வார்த்தை ஒரு விஷயத்தை விளக்குவதை விட, உடல்மொழியானது சில சமயங்களில், நன்றாக விளக்கிவிடும். பொருத்தமற்ற உடல் மொழியானது, உங்களின் உரையையே சிதறடித்துவிடும். எனவே, சரியான உடல் மொழியை வெளிப்படுத்த பழகிக் கொள்ளுங்கள்.

உங்களின் பண்பு:
பொறுமை, கண்ணியம், நேர்மறை எண்ணம், ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை போன்ற பண்புகள் உங்களின் உரையாடலில் இருப்பது மிகவும் அவசியம். அப்போதுதான், உங்களின் நன்மதிப்பு அதிகரிக்கும்.

சரியான வார்த்தைப் பிரயோகம்:
சரியான அர்த்தம் விளங்காத வார்த்தைகளைப் பிரயோகிப்பதை தவிர்க்க வேண்டும். நன்கு பரிச்சயமான வார்த்தைகளை உபயோகப்படுத்துவதன் மூலமே, உங்களின் கருத்து, எளிமையாகவும், வலுவாகவும் உரியவர்களை சென்றடையும்.

சிறப்பான உச்சரிப்பு:
வார்த்தைகளை சரியான முறையில் உச்சரிப்பது ஒரு தனிக்கலை. எங்கே அழுத்தம் கொடுக்க வேண்டும், எங்கே மிதமாக உச்சரிக்க வேண்டும் என்பதை முறையாக செய்தால், கேட்போர் கவரப்படுவர்.

வேகம்:
கேட்பவர்கள், சரியாக புரியும்படியான வேகத்தில் பேசுவது அவசியம். எங்கே, வேகத்தை லேசாக அதிகரிக்க வேண்டும் மற்றும் எங்கே, வேகத்தை லேசாக குறைக்க வேண்டும் என்பதை தெளிவாக அறிந்துகொண்டால், வெற்றி உங்களுக்கே.

சத்தம்:
உரையாற்றும்போது, எந்தளவு சத்தத்தில் பேசினால் சரியாக இருக்கும் என்பதை அறிந்திருத்தலும் முக்கியம். பேச்சுக் கலையில், தேவையான அளவு சத்தம் என்பது ஒரு முக்கியமான அம்சம்.

மேற்கூறிய காரணிகளை நீங்கள் தெளிவாக கற்றுத் தேர்ந்துவிட்டால், பேச்சுக் கலையில் நீங்கள் ஒரு வல்லவராக ஜொலிப்பீர்கள்.

தமிழகத்தில் சாதிய தாக்குதல்களை தடுக்க வேண்டும்’ பிரதமரை சந்தித்து சாதி அமைப்பின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல்


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் வன்னிஅரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–

22–12–2012 (நேற்று) அன்று பகல் 12 மணியளவில் பிரதமர் மன்மோகன்சிங்கை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நேரில் சந்தித்து பேசினார். அப்போது, அண்மை காலமாக தமிழ்நாட்டில் தருமபுரி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் தலித் மக்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள் மற்றும் படுகொலைகள் குறித்து விளக்கி கூறியதுடன், இவை தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தார். மேலும், தருமபுரி வன்முறை சம்பவம் குறித்து மத்திய புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தினார்.

அத்துடன், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டில் விதிக்கப்பட்டுள்ள கிரீமிலேயர் வருமான உச்சவரம்பை தற்போதுள்ள 4½ லட்சம் ரூபாயில் இருந்து 12 லட்சம் ரூபாயாக உயர்த்தக்கோரி மனு கொடுத்தார்.

அதற்கு பிரதமர் மன்மோகன்சிங், இவை குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் வருமான உச்சவரம்பை உயர்த்துவது குறித்துப் பரிசீலனை செய்யப்படும் என்று உறுதியளித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சனி, 22 டிசம்பர், 2012

சிறுபான்மையின மாணவ–மாணவிகள் தொழிற்கல்வி உதவித்தொகை புதுப்பிக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்


சிறுபான்மையின மாணவ, மாணவிகள் தொழிற்கல்வி உதவித்தொகை புதுப்பிக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட கலெக்டர் மகரபூஷணம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

தொழிற்கல்வி, தொழில்நுட்ப கல்வி படிப்புக்கு சிறுபான்மை மாணவ–மாணவிகள் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவிதொகை புதுப்பித்தல் ஆன்லைன் மூலம் வருகிற 31–ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மாணவர்கள் கடந்த ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற்று குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும். பெற்றோர், பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து மிகாமல் இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் கீழ் கல்வி உதவித்தொகை பெற்றிருப்பின் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை பெற தகுதி உடையவர்கள் ஆவர்.

உறுதி செய்ய வேண்டும்:
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் புதுப்பித்தல் விண்ணப்பங்களை மாணவ–மாணவிகள் கல்வி நிறுவனங்களுக்கு தவறாமல் அனுப்புதல் வேண்டும். விண்ணப்ப படிவத்தையும் உடன் படியிறக்கம் செய்து கையொப்பமிட்டு அத்துடன் கடந்த ஆண்டு தேர்வு மதிப்பெண் சான்றிதழ்கள், வருமான சான்று, வங்கி கணக்கு எண் விபரங்களுடன் கல்லூரி முதல்வர் அல்லது டீனுக்கு அனுப்ப வேண்டும்.

இந்த விண்ணப்பத்தை பரிசீலித்து ஆன்லைன் மூலமாகவும், அதன் விண்ணப்ப படிவங்கள் மேற்குறிப்பிட்ட ஆவணங்களுடன் முதல்வரின் அல்லது டீனின் கையொப்பத்துடன் சிறுபான்மை நல ஆணையர் முகவரிக்கு ஜனவரி மாதம் 10–ந்தேதிக்குள் அனுப்புதல் வேண்டும். மாணவ–மாணவிகளின் தங்களின் புதுப்பித்தல் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு சிறுபான்மையினர் நல ஆணையருக்கு கல்லூரியில் இருந்து 10.1.2013–க்குள் அனுப்பப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

பிஜேபி கூட்டணி ஆட்சியில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு: ரூ.846 கோடி இழப்பு; சிறப்பு கோர்ட்டில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்


தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் நடந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், நேற்று சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு ரூ.846 கோடியே 44 லட்சம் இழப்பு ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ரூ.846½ கோடி இழப்பு:
பா.ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில், மறைந்த பிரமோத் மகாஜன் தொலை தொடர்புத்துறை மந்திரியாக இருந்தார். அவரது பதவிக் காலத்தில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், முறைகேடுகள் நடந்ததாகவும், இதனால் மத்திய அரசுக்கு ஆயிரக் கணக்கான கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இதுகுறித்து சி.பி.ஐ. புலன் விசாரணை நடத்தியது. விசாரணையின் முடிவில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்து இருப்பதும், அதன் மூலம் மத்திய அரசுக்கு 846 கோடியே 44 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதும் தெரிய வந்தது.

குற்றப்பத்திரிகை தாக்கல்:
இதையொட்டி, தனது விசாரணையை முடித்த சி.பி.ஐ. அதிகாரிகள், நேற்று சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில், நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், பார்தி ஏர்டெல், வோடபோன், ஹட்சிசன் மேக்ஸ் மற்றும் ஸ்டெர்லிங் செல்லுலார் ஆகிய 3 தொலை தொடர்பு நிறுவனங்கள், தொலை தொடர்புத்துறை முன்னாள் செயலாளரான ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷியாமள் கோஸ் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

மந்திரி விடுவிப்பு:
முதல் தகவல் அறிக்கையில், தொலை தொடர்புத்துறை முன்னாள் துணை இயக்குனர் ஜெனரலும், பி.எஸ்.என்.எல். இயக்குனருமான ஜே.ஆர்.குப்தா குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார். ஆனால், நேற்றைய குற்றப்பத்திரிகையில் அவரது பெயர் குற்றவாளி பெயரில் இருந்து நீக்கப்பட்டு, சாட்சியாக சேர்க்கப்பட்டு உள்ளது. இவருடன் மேலும் 72 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர். மறைந்த தொலை தொடர்புத்துறை மந்திரி பிரமோத் மகாஜன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்றும் அந்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் அந்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:–

அவசரம், அவசரமாக ஒதுக்கீடு:
பிரமோத் மகாஜன் பதவிக் காலத்தில், தொலை தொடர்புத்துறை, ஆதார அலைக்கற்றை ஒதுக்கீட்டை 3 தொலை தொடர்பு நிறுவனங்களுக்கும் 4.4 மெகா ஹெட்ஸ்–ல் இருந்து 6.2 மெகா ஹெட்ஸ் ஆக உயர்த்தியது. மேலும், அவரது காலத்தில் பயனீட்டாளர்களின் அடிப்படையில் கூடுதலாகவும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு செய்யப்பட்டது. அப்போதையை தொலை தொடர்புக் கொள்கைக்கு முரணாகவும், அவசரம் அவசரமாகவும் அந்த தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு பிரமோத் மகாஜன் கூடுதலாகவும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்தார்.

இழப்பீடு ஏன்?:
தொலை தொடர்பு கமிஷன் முன்னாள் தலைவரும், தொலை தொடர்புத்துறை முன்னாள் செயலாளருமான ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷியாமள் கோஷ், மறைந்த பிரமோத் மகாஜனுடன் சேர்ந்து சதி செய்தும், தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியும், முறைகேடாகவும், தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு சலுகைகள் அளித்தார். இதனால் மத்திய அரசுக்கு ரூ.846 கோடியே 44 லட்சம் இழப்பு ஏற்பட்டது.

இவ்வாறு அந்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வழக்கு விசாரணையை அடுத்த (ஜனவரி) மாதம் 14–ந் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி ஓ.பி.சைனி, அன்று இந்த குற்றப்பத்திரிகை மீதான பரிசீலனை நடைபெறும் என்றும் உத்தரவிட்டார்.

இந்தியாவில் முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் 260 மீது பாலியல் வன்முறை குற்றச்சாட்டுகள் பதிவு


டெல்லியில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு தரப்பினரும் ஆர்ப்பாட்டம், பேரணி நடத்தி வருகின்றனர்.  பெண்கள் மீது பாலியல் வன்முறை குற்றச்சாட்டுகள் குறித்து ஜனநாயக உரிமைகள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 5 வருடங்களில், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 260 பேர் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர்கள் என் கூறியுள்ளது.  அவர்களில், 72 பேர் சுயேச்சைகள். மேலும், 26 காங்கிரஸ் கட்சியினரும், 24 பா.ஜனதாவினரும், 16 சமாஜ்வாடி கட்சியினரும், 18 பகுஜன் சமாஜ் கட்சியினரும் இதில் அடங்குவர்.

மகாராஷ்டிரா முதல் இடம்:
இந்த பட்டியலில் மகாராஷ்டிர மாநிலம் 41 பேருடன் முதல் இடம் பெறுகிறது.  அதனை தொடர்ந்து உத்தர பிரதேசத்தில் 37 பேரும், மேற்கு வங்காளத்தில் 22 பேரும் இடம் பெறுகின்றனர்.

காங்கிரஸ் கட்சி, பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறையில் ஈடுபடும் அரசியல்வாதிகளை தேர்தலில் போட்டியிட தடை விதிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேற்று கோரியிருந்தது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரேணுகா சவுத்ரி பேசுகையில், கற்பழிப்பு குற்ற-ச்சாட்டுகளில் சிக்கிய அரசியல்வாதிகளுக்கு அந்தந்த கட்சிகளே தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மற்றொரு புறம், தேர்தல் ஆணையமும் கடுமையான முறையில் இது குறித்து ஒழுங்கு முறையினை வகுக்க வேண்டும் என அவர் கூறினார்.

வெள்ளி, 21 டிசம்பர், 2012

உலகளவில் அரிசி ஏற்றுமதியில் இந்தியா முதலிடம்


நடப்பு 2012ம் ஆண்டில், சர்வதேச அரிசி ஏற்றுமதியில், இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது.நடப்பாண்டில், இதுவரையிலுமாக, இந்தியா, 90 லட்சம் டன்னுக்கும் அதிகமாக அரிசி ஏற்றுமதி செய்துள்ளது. இதன் மூலம், இதுவரை அரிசி ஏற்றுமதியில் முதலிடத்தில் இருந்த தாய்லாந்தை, பின்னுக்கு தள்ளி விட்டு முன்னேறியுள்ளது.

எனினும், நடப்பு வேளாண் பருவத்தில், போதிய பருவமழை இல்லாததால், நாட்டின் நெல் உற்பத்தி குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், வரும் 2013ம் ஆண்டு, தாய்லாந்து மீண்டும் அரிசி ஏற்றுமதியில் முதலிடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது என, சர்வதேச உணவு மற்றும் வேளாண் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.தடை நீக்கம்:கடந்த 2011ல், தனியார் அரிசி ஏற்றுமதி மீதான தடையை மத்திய அரசு நீக்கியது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தனியார் நிறுவனங்களும் அரிசி ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டதால், பாரம்பரிய நாடுகளுக்கு அதிக அளவில் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டது. இத்துடன், அரிசி ஏற்றுமதியாளர்கள், புதிய சந்தைகளுக்கும் வர்த்தகத்தை விரிவுபடுத்தினர்.

அதேசமயம், இந்திய ஏற்றுமதியாளர்கள், சர்வதேச சந்தை விலையை விட, குறைந்த விலைக்கு அரிசியை ஏற்றுமதி செய்தனர். இதனால், இந்தியாவின் அரிசி ஏற்றுமதி குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்துள்ளது.இந்நிலையில், தாய்லாந்து அரிசி விலை அதிகம் என்பதால், அந்நாட்டின் அரிசி ஏற்றுமதி சரிவடைந்துள்ளது. இந்த நிலை, வரும் ஆண்டு மாறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தேவை:தாய்லாந்து, சர்வதேச சந்தையில் அதன் அரிசி விலையை குறைத்துள்ளது. இதனால், வரும் ஆண்டில், உலக நாடுகளிடையே, தாய்லாந்து அரிசிக்கான தேவை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதன் விளைவாக, தாய்லாந்து, வரும் 2013ம் ஆண்டில், அரிசி ஏற்றுமதியில் மீண்டும் முதல்இடத்தை பிடிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில், பருவமழை பொழிவில் ஏற்பட்ட தாமதம், வறட்சி போன்ற இயற்கை இடர்பாடுகளால், இந்தியாவின் நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வரும் ஆண்டில், அரிசி ஏற்றுமதியில், இந்தியாவின் பங்களிப்பு குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

உணவு தானியங்கள்:எனினும், நடப்பு 2012-13ம் வேளாண் பருவத்தில் (ஜூன்-ஜூலை), இந்தியாவின் உணவு தானியங்கள் ஏற்றுமதி,1.57 கோடி டன்னாக இருக்கும். இதில், 77 லட்சம் டன் அரிசியும், 50 லட்சம் டன் கோதுமையும், 30 லட்சம் டன் மக்காச்சோளமும் அடங்கும்.கடந்த வேளாண் பருவத்தில், இந்தியாவின் கோதுமை உற்பத்தி, 9.40 கோடி டன் என்ற சாதனை அளவை எட்டியது. அதேபோன்று, நெல் விளைச்சலும், 10.04 கோடி டன்னாக உயர்ந்தது. மக்காச்சோள உற்பத்தி, 1.62 கோடி டன்னாக இருந்தது.

உணவு தானிய உற்பத்தி :உச்சத்தை எட்டிய நிலையில், மத்திய அரசு, அதிக அளவில் நெல் மற்றும் கோதுமையை கொள்முதல் செய்தது. இதனால், தனியார் ஏற்றுமதியாளர்களுக்கு, குறைந்த அளவிற்கே உணவு தானியங்கள் கிடைத்தன.இந்நிலையில், நடப்பாண்டில், மத்திய அரசு, அதன் கையிருப்பில் உள்ள உபரி உணவு தானியங்களை அதிக அளவில் விற்பனை செய்து, அறுவடையாகி வரும் புதிய உணவு தானியங்களுக்கு, கிடங்குகளில் கூடுதலாக இட வசதி அளிக்க திட்டமிட்டுள்ளது.

கோதுமை:இதன் விளைவாக, முதலில், 20 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, மேலும், 25 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்பட உள்ளது.ரபி பருவத்தில், நெல் மற்றும் கோதுமை விதைப்புக்கான பணிகள் பெரும்பாலும் முடிவடைந்து விட்டன. கோதுமை அதிகம் விளையும் பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பருவமழை குறைவாக பொழிந்துள்ளது.

எழுத்தாளர் நாஞ்சில் நாடனுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’


கனடா நாட்டில் வழங்கப்படும் 2012–ம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கனடா நாட்டில் உள்ள கனடா தமிழ் கலை இலக்கிய தோட்டம் சார்பில், ஆண்டு தோறும் தமிழ் எழுத்து துறையில் சாதனை படைத்து வருபவர்களுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது, கேடயம் மற்றும் 2,500 கனடியன் டாலர்’ ஆகியவை வழங்கி கவுரவித்து வருகிறது.

அந்த வகையில், கடந்த ஆண்டுகளில் முக்கிய எழுத்தாளர்களான சுந்தரராமசாமி, வெங்கடசாமிநாதன், ஜார்ஜ் எல்.ஹார்ட், லட்சுமி ஹோம் ஸ்ரோம், அம்பை, ஐயிராவதம் மகாதேவன், கோவை ஞானி, எஸ்.பொன்னுதுரை, எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு மூத்த தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவரும், கன்னியாகுமரி மாவட்டம், தாழக்குடியை அடுத்த வீரநாராயணமங்கலத்தை சேர்ந்த எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 6 நாவல்கள், 9 சிறுகதை தொகுப்புகள், 6 கட்டுரை தொகுப்புகள், 2 கவிதை தொகுப்புகளை எழுதி உள்ளார். இவற்றின் மூலம் நாஞ்சில் நாட்டு வட்டார மொழியை தமிழ் இலக்கிய வாசகர்களிடையே பிரபலப்படுத்தி வருகிறார்.

நாஞ்சில் நாடன் எழுதிய ‘‘சதுரங்க குதிரை’’ என்ற நாவல் 1993–ம் ஆண்டு தமிழகத்தில் சிறந்த நாவலாக தேர்வு செய்யப்பட்டது. 2008–ம் ஆண்டு கோவையில் ‘‘கண்ணதாசன் விருதும்’’, 2009–ம் ஆண்டு தமிழக அரசு ‘‘கலைமாமணி விருதும்’’ வழங்கியது. இதனை தொடர்ந்து ‘‘சூடிய பூ சூடற்க’’ என்ற சிறுகதை தொகுப்பிற்காக, மத்திய அரசு கடந்த 2010–ம் ஆண்டு ‘‘சாகித்திய அகடாமி விருது’’ வழங்கியது.

இவர் எழுதிய ‘‘தலைகீழ் விகிதங்கள்’’ என்ற நாவலை தழுவி, சினிமா டைரக்டர் தங்கர்பச்சான் ‘‘சொல்ல மறந்த கதை’’ என்ற திரைப்படத்தை எடுத்துள்ளார். இது தவிர, தற்போது ஓடிக்கொண்டிருக்கும், டைரக்டர் பாலா இயக்கிய ‘‘பரதேசி’’ திரைப்படத்திற்கும் வசனமும் எழுதி உள்ளார்.

வாழ்நாள் சாதனையாளர் விருது:

இது குறித்து நாஞ்சில் நாடன் கூறியதாவது:–

என்னுடைய எழுத்துப்பணியை கவுரவிக்கும் வகையில், கனடா தமிழ் கலை இலக்கிய தோட்டம் சார்பில், இந்த ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு என்னை தேர்வு செய்துள்ளது. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. விருது, கேடயம் மற்றும் 2,500 கனடியன் டாலர் வழங்கும் விழா 2013–ம் ஆண்டு ஜூன் 13–ந் தேதி கனடா நாட்டில் உள்ள டேரோண்டோ நகரில் நடக்கிறது. இந்த விழாவில் இதனை வழங்குகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத 7,000 பணியிடங்கள் காலி


மாநிலம் முழுவதும் உள்ள, அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர் அல்லாத, 7,000 பணியிடங்கள், காலியாக உள்ளன. இந்த விவகாரத்தில், முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு, காலி பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப, உத்தரவிட வேண்டும் என, பள்ளி நிர்வாகங்கள் எதிர்பார்க்கின்றன.

அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும், 14 வகையான இலவச திட்டங்கள், உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கும் வழங்கப்படும் நிலையில், போதிய பணியாளர்கள் இல்லாததால், நலத் திட்டங்களை நிறைவேற்றுவதில், சிக்கலான நிலை நீடித்து வருகிறது.

தமிழகத்தில், 55 ஆயிரத்து, 667 பள்ளிகள் உள்ளன. இதில், ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை ஆகிய பிரிவுகளில், 8,266 பள்ளிகள், அரசு நிதியுதவியுடன் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில், 33 லட்சம் மாணவ, மாணவியர், படிக்கின்றனர்; 95 ஆயிரம் ஆசிரியர், பணிபுரிந்து வருகின்றனர்.

அரசுப் பள்ளிகளில், ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத தட்டச்சர், இளநிலை உதவியாளர், உதவியாளர் என, பல வகையான பணியிடங்கள், உடனுக்குடன் நிரப்பப்படுகின்றன. ஆனால், உதவிபெறும் பள்ளிகளில், ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு, தமிழக அரசு ஓரளவு அக்கறை செலுத்துகிறது. ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்புவதில், சுத்தமாக கவனம் செலுத்துவதில்லை என, குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

ஒரு பள்ளியில், நான்கு, ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் இருந்தால், இரு பணியிடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. புதிய பணியிடங்களை அனுமதிக்காவிட்டாலும், ஏற்கனவே ஒதுக்கப்பட்டு, தற்போது, காலியாக உள்ள பணியிடங்களை மட்டுமாவது நிரப்ப, தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கல்வித்துறை அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத, முதன்மைக் கல்வி அலுவலர் ஒருவர் கூறியதாவது: அரசுப் பள்ளிகளில் அமல்படுத்தப்படும், அத்தனை திட்டங்களையும், உதவிபெறும் பள்ளிகளில் செயல்படுத்த வேண்டும். ஆனால், நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர் அல்லாத பணியிடங்கள், அதிகளவில், காலியாக உள்ளன.

இலவச பொருட்கள் குறித்த கணக்கு விவரங்களை பராமரித்தல், எத்தனை மாணவர்களுக்கு, பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன, இன்னும் எத்தனை பேருக்கு வழங்க வேண்டும், பொருட்களின் இருப்பு உள்ளிட்ட பல்வேறு கணக்கு பராமரிப்புகளை, ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் தான் கவனிப்பர். இந்த பணியாளர்கள் இல்லாததால், அந்தப் பணிகளில், ஆசிரியர்களை ஈடுபடுத்துகிறோம்.

இதனால், பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் வருகின்றன. மேலும், ஆசிரியர்கள், கற்பித்தல் பணிகளில் ஈடுபடுவதும், பாதிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு, ஒவ்வொரு பள்ளியிலும், காலியாக இருந்த இடங்கள், முழுமையான அளவில் நிரப்பப்படவில்லை.

அதனால், ஏற்கனவே உள்ள காலி பணியிடங்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களால் ஏற்பட்ட காலி பணியிடங்கள் என, 5,000 முதல், 7,000 பணியிடங்கள் வரை, காலியாக இருக்கின்றன. இந்த பணியிடங்களை நிரப்பாவிட்டால், நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில், வரும் கல்வியாண்டில் பெரும் சிக்கல் ஏற்படும்.

புதிய பணியிடங்களுக்கு அனுமதி வழங்காவிட்டாலும், ஏற்கனவே ஒதுக்கப்பட்ட பணியிடங்களை மட்டும் நிரப்ப, அரசு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, அந்த அதிகாரி கூறினார்.

இந்த விவகாரத்தில், முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு, காலி பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப, உத்தரவிட வேண்டும் என, பள்ளி நிர்வாகங்கள் எதிர்பார்க்கின்றன.

12-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் சிறுபான்மையினருக்கான நிதி ஒதுக்கீடு உயர்த்தப்பட வேண்டும் : எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. கோரிக்கை


டெல்லியில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக்சிங் அலுவா லியாவைச் சந்தித்த  கூட் டத்தில் வேலூர் நாடாளு மன்ற உறுப்பினரும், காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப் பாளருமான எம். அப்துல் ரஹ்மான் பேசுகையில், 12-வது ஐந்தாண்டுத் திட்டத் தில் சிறுபான்மை சமூகத்த வருக்கான மேம்பாட்டு நிதியை உயர்த்தி, திட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

கடந்த 18-12-2012 அன்று முஸ்லிம் எம்.பி.க்களின் குழு திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக்சிங் அலுவா லியாவைச் சந்தித்து கலந்துரை யாடினர். இந்தக்கூட்டம் புதுடெல்லி யோஜனா பவனில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் பேசினார்.

12-வது ஐந்தாண்டு திட்டத்தில் சிறுபான்மை சமுதா யத்தவருக்கான மேம்பாட்டு நிதியென ரூபாய் 17,323 கோடியை மாத்திரமே அரசு அறிவித்திருக்கிறது. திட்ட மதிப்பீடாகக் கணிக்கப்பட்ட ரூ.44,020 கோடி வெகுவாகக் குறைக்கப்பட்டு மூன்றில் ஒரு பகுதி மட்டுமே இத்திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது நிச்சயமாக போதாது. கல்வி உதவித் தொகை, கல்விக்கான அடிப்படை கட்ட மைப்பு வசதிகள், தொழிற் பயிற்சி, பொருளாதார உதவி கள் என பலவகையிலான திட்டங்கள் முழுமையாகவும், சிறப்பாகவும் செயல்படுத்த வேண்டுமானால் தொடக்கத் தில் வரையரை செய்யப்பட்ட தொகையான 44,030 கோடி ரூபாயை ஒதுக்கித் தர வேண் டும். சிறுபான்மையினர் நலனில் அக்கரை கொண்ட அரசு என்று சொல்வதில் அர்த்தம் இருக்க வேண்டுமானால் இந்த நிதி ஒதுக்கீடு அவசியம் என்று தமது உரையில் குறிப்பிட்டார்.

வியாழன், 20 டிசம்பர், 2012

சன்மார்க்கத்தில் வல்லவர், எவர் நெஞ்சையும் ஈர்க்கும் சொல் வல்லவர் இப்பொழுது மறைந்துவிட்டார்.----- பேராசிரியர் .கே.எம்.காதர் மொஹிதீன்


 மௌலானா எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ஹஜ்ரத் அவர்கள், சமீபகாலமாக உடல்நலம் குன்றியிருந்து இன்று (20-12-2012) அதிகாலை 2-30 மணியளவில் சென்னை தனியார் மருத்துவ மனையில் மரண முற்றார் என்னும் செய்தி நெஞ்சைப் பிழிந்தது.

அவரின் ஜனாஸா நல்லடக்கம் கடையநல்லூரில் 21-12-2012 காலை 9 மணிக்கு நடைபெற விருக் கிறது என்னும் தகவலும் வந்திருக்கிறது. ஹஜ்ரத் அவர்களின் மகன்களும் மருமகன்களும் உடனிருந்து பலவிதமான நல்ல சிகிச்சைகளையும் செய்து வந்தனர். அல்லாஹ்வின் நாட்டம் ஆலிம் அவர்களின் மறைவு இன்றைக்கு ஏற்படவேண்டுமென விதிக்கப்பட்டுள்ளது என்பதை முஸ்லிம்கள் உணருகிறோம்.

மௌலானா கலந்தர் மஸ்தான் ரஹ்மானி அவர்கள் உலமாகளில் ஒளிவீசும் நட்சத்திரமாகத் திகழ்ந்தவர்; குர்ஆன் ஹதீஸ் ஷரீஅத் சட்ட விளக்கங்களில் ஒளிச்சுடராக விளங்கியவர்; தஸவ்வுஃ என்னும் ஆன்மீக ஞானக்கலையில் ஒரு கலங்கரை விளக்கமாக வாழ்ந்தவர். அவரின் பெயரில் அவரின் தந்தையின் பெயரின் முதல் எழுத்து மூலம்-சையது சுலைமான் கலீபா சாஹிப் என்பதன் மூலம் அவரின் தந்தையவர்களும் ஆன்மீக வழிவாறில் ஆழ்ந்திருந்தவர் என்பதை அறியலாம். அதோடு, ‘மஸ்தான்’ என்பதும் ‘கலந்தர்’ என்பதும் சூபிஸக் கொள்கையில் ஊறிப்போனவர்களுடன் தொடர்புடையவை என்பதையும் தெரியலாம். தனது பெயரில் உள்ள சொற்களுக்கு மிகவும் பொருத்தமான வாழ்வு முறையை மேற்கொண்டு வாழ்ந்து வந்த ஹஜ்ரத் அவர்கள் நம்மை விட்டும் பிரிந்திருக்கிறார்கள்.

காயல்பட்டணம் மஹ்ழரதுல் காதிரியா அரபிக் கல்லூரி முதல்வராக முப்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து பணியாற்றி, பன்னூற்றுக் கணக்கான ‘மஹ்ழரி’களை உருவாக்கி, நாட்டிலும் அயல்நாடுகளிலும் இஸ்லாமிய சன்மார்க்கப் பிரச்சார பீரங்கிகளாக உலாவரச் செய்துள்ளார்.அண்மையில் அவரது மகனார் இல்லம் (சென்னை வேளச்சேரியில் உள்ளது) சென்று அவரின் உடல் நலம் விசாரித்து வந்தோம்.  உடல் மெலிந்திருந்தது; ஆனால், அவரின் உள்ளம் என்றும் சுறுசுறுப்பாகவே இருந்தது என்பதற்கு அப்பொழுதும் மார்க்க விளக்கம் பற்றியே பேசினார்கள். அப்பொழுது ஒரு பெருங்கூட்டம் கேரளாவில் இருந்து வந்திருந்தனர். அவர்கள் யாவரும் பேட்டா கட்டிய உலமாகளாக மட்டுமல்லாமல், காதிரியா தரீகாவிலும் சங்கைமிக்கவர்களாகவும் இருந்தார்கள். அவர்களுகு ரஹ்மானி ஹஜ்ரத் ‘ஷேய்கு’ என்னும் அந்தஸ்து உடையவராகப் போற்றப்பட்டுள்ளதை அன்றைக்கு நாங்கள் கண்டோம்.


கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ஹஜ்ரத் அவர்களைத் தமிழ்கூறும் முஸ்லிம் உலகம் எஸ்எஸ்கே ஹஜ்ரத் என்று பெருமையாக அழைத்தது. அவர் உரையாற்றாத ஊர் தமிழகத்தில் எதுவும் இருக்காது எனலாம். மீலாது விழாக்களிலும், திருக்குர் ஆன் மாநாடுகளிலும், ஷரீஅத் சட்ட கூட்டங்களிலும், மதரஸா பட்டமளிப்பு விழாக்களிலும் ஹஜ்ரத் அவர்கள் மிகச் சிறந்த ஆய்வுரைகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். அவரின் கொஞ்சும் தமிழில் பொதிகையில் பூத்த சங்கத் தமிழ் மலரின் மணம் வீசும்; மஸ்தான் பாடல், சீறாப்புராணச் செய்யுள் என்று விரவிவரும். குர்ஆன் வசனங்களுக்கு புதியதும் பொருந்தியதும் நவீன விஞ்ஞான உலகம் வியக்குமாறும் விரிவுரை செய்வார்கள்; ஹதீஸ் கலையில், இமாம் கஸ்ஸாலி போன்ற மேதைகளின் வழியில் நின்று விளக்கவுரை தருவதில் வல்லவராகத் திகழ்ந்தார்கள். கடையநல்லூர் சிராஜ் இதழ் ஆசிரியர் அப்துல்ஹை அவர்களின் அத்தியந்த தோழராக இருந்த மௌலானா அவர்கள், அமைதியின் உருவாகவும், அடக்கத்தின் வடிவமாகவும், ஆழமான ஞானக் கடலாகவும் வாழ்ந்து வந்துள்ளார்கள். அவர்களோடு உரையாடுவது மூலம், இஸ்லாமிய வரலாற்றையே நினைவுக்குக் கொண்டுவரும் நிலைமை ஏற்படும். அந்த நல்லவர், சன்மார்க்கத்தில் வல்லவர், எவர் நெஞ்சையும் ஈர்க்கும் சொல் வல்லவர் இப்பொழுது மறைந்துவிட்டார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் காயிதெ மில்லத், சிராஜுல் மில்லத் மற்றும் எல்லாத் தலைவர்களுடனும் நெருக்கமாக இருந்து இயக்கத்திற்கு தூண்டுகோலாகவும் பெருந்துணையாகவும் இருந்தார்கள். சோதனை மிகுந்த காலங்களில் சோர்வைத் துடைப்பதற்கு துணைநின்ற உலமாகளில் ஹஜ்ரத் அவர்கள் மிக முக்கியமானவர் ஆவார்.

தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்டபோது, அதன் முதல் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பொறுப்பை ஏற்றார்; பின்னர், மாநில துணைத் தலைவராகப் போற்றப்பட்டார். முஸ்லிம் லீக் மாநாடுகளில் மார்க்க ஒளியில் அரசியல் விளக்கம் தந்த அந்த வரலாற்று நிகழ்வுகள் என்றும் நினைவில் நிற்கக்கூடியவை. முஸ்லிம் லீக் வரலாற்றில் கடையநல்லூர், அன்சாரிகளைப் போன்றவர்கள் என்று காயிதெ மில்லத் சொன்னார்கள். அதன் ஒட்டுமொத்த உருவமாக இருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு உழைத்துச் சிறந்தவர். கிளியனூர் மதரஸத்துல் ரஹ்மானியா - நமது டாக்டர் ஹாஜா கே.மஜீது-இன்றைய வக்ஃபு வாரிய உறுப்பினர்-அவர்களின் தந்தை நிறுவியதாகும். இப்பொழுது டாக்டர்தான் அந்த கல்லூரியின் நிர்வாகியாக உள்ளார். இந்த மதரஸாவில் ஓதியவர்-பட்டம் பெற்றவர் ஹஜ்ரத்-அதனால்தான் அவருக்கு ‘ரஹ்மானி’ சேர்ந்திருக்கிறது. இன்றைய மாநில துணைத் தலைவர் மௌலானா தளபதி ஏ.ஷபீகுர் ரஹ்மான் ஹஜ்ரத் ஒன்றைச் சொன்னார்கள்: ரஹ்மானியா மதரஸாவில் கலந்தர் மஸ்தான் இறுதி வகுப்பில் இருந்தார்; அப்பொழுது முதல் வகுப்பில் நான் இருந்தேன். வாரந்தோறும் நடக்கும் பேச்சுப் பயிற்சி வகுப்பில் கலந்தர் மஸ்தான் அவர்களின் பேச்சுத்தான் எல்லோராலும் பாராட்டப்பெறும்; உஸ்தாதுகளே மிக உயர்வாக அவரின் சொற்பொழிவை மதிப்பார்கள் என்று சொன்னார். அத்தகைய மெத்தகு மேதை இன்று நம்மிடம் இல்லை.

தமிழக உலமாகளுக்கு கடல் கடந்த நாடுகளில் பேரும் புகழும் நிறைய உள்ளது. அதில் முதல் தரத்தைப் பெற்றிருந்தவர் மௌலானா கலந்தர் மஸ்தான் அவர்கள்.

35 முறை ஹஜ் செய்துள்ளவர்; ஹஜ்ஜின் போதும் இஸ்லாமிய விரிவுரை ஆற்றியவர். அகில இந்திய உலமாகள் சபையின் துணைத் தலைவராக இருந்தார்; கடையநல்லூர் தங்ஙள் கட்சி என்னும் தரீகாவுக்கு தலைமைப் பொறுப்பேற்றிருந்தார். இறுதிவரை மஹ்ழரத்துல் காதிரியாவின் முதல்வர் பொறுப்பிலே இருந்து, இன்று எல்லாரையும் பிரிந்து அல்லாஹ்வின் சந்நிதானம் நோக்கிப் பயணம் மேற்கொண்டுவிட்டார்.

"மௌத்துல் ஆலிம் மௌத்துல் ஆலம்-அறிஞரின் மரணம், அகிலத்தின் மரணம்’’ என்பது அரபி பழமொழி. ஆம். மனிதர்களின் மனங்களுக்கு ஞான ஒளியை வழங்கி வருபவர்கள் ஆலிம்கள்-அறிஞர்கள். அவர்களின் மறைவு அதிகரிக்கு மானால், ஞானமற்றவரின் கூட்டம் ஞாலத்தில் அதிகரித்துவிடும்-ஞானமற்றவர் பெருகும்போது ஞாய மற்றவர்கள் பெருகுவர்; அதனால் ஞாலம்-உலகம் ஞான சூன்யத்துக்கு ஆட்பட்டுவிடும் எனில், அழிவும் மரணமும் ஏற்படும் என்பது இயற்கை விதியேயாகும். 

எல்லாம் வல்ல அல்லாஹ் மௌலானா கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ஹஜ்ரத் அவர்களுக்கு உயர்ந்த உன்னத இடத்தை அளித்து சுவர்க்கப் பூங்காவில் சுகித்திருக்கச் செய்வானாக.

ஹஜ்ரத் அவர்களின் மறைவால் வாடியுள்ள அவர்தம் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும், அவரின் அன்பு மாணவச் செல்வங்களுக்கும் நமது அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவிப்போமாக. 

போடிநாயக்கனூர் அருகே ரூ.1350 கோடி செலவில் நியூட்ரினோ ஆராய்ச்சி மையம்


மதுரை மாவட்டம், போடிநாயக்கனூர் அருகே ரூ.1350 கோடி செலவில் நியூட்ரினோ ஆராய்ச்சி மையம் அமைக்கப்படவுள்ளது என்று இந்திய நியூட்ரினோ ஆராய்ச்சி (ஐ.என்.ஒ.)விஞ்ஞானி டாக்டர் சத்திய நாராயணா கூறினார்.

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நியூட்ரினோ குறித்த ஆராய்ச்சி கருத்தரங்கு வேந்தர் க.ஸ்ரீதரன் தலைமையில், துணை வேந்தர் பி.கன்னியப்பன் முன்னிலையில் இன்று நடைபெற்றது. பதிவாளர் டாக்டர் வெ.வாசுதேவன் வரவேற்றார். விஞ்ஞானி சத்திய நாராயணா கருத்துரையாற்றினார்.

அவர் பேசுகையில் கூறியதாவது: நியூட்ரினோ என்பது சூரியனுடைய கதிர்களிலிருந்து வெளிவரும் மிகவும் நுண்ணிய எல்க்ட்ரானைவிட அளவில் சிறிய அணுவாகும். இதனைக் கண்டறிந்து, அளவு முறைகள், பயன்கள் குறித்து ஆராய்ச்சி செய்ய, இந்திய நியூட்ரினோ அப்செர்வேட்டரி (I.N.O.) என்ற நிறுவனம் ஒரு மிகப் பெரிய ஆராய்ச்சி மையத்தை அமைக்கவுள்ளது. இந்த மையம் மதுரை மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே மலையைக் குடைந்து அமைக்கப்படவுள்ளது. இது மதுரை பொட்டிப்புரம் கிராமம் வரை அமையும். இத்திட்டத்திற்கு 12-வது திட்டக் குழுவில் ரூ.1350 கோடி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


உலக அளவில் பல்வேறு நாடுகள் எதிர்நோக்கும் மிகப் பெரிய திட்டமாக இது உருவாகவுள்ளது. இதில் அனைத்து பொறியியல் துறைகளின் பங்கும் ஏராளமாக உள்ளது. இந்தத் திட்டத்தை இந்திய அணுசக்தி கழகம்(D.A.E.)மற்றும் இந்திய அறிவியல் தொழில்நுட்பக் கழகம்(D.S.T.)இணைந்து உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான இடங்கள் ஒதுக்கப்பட்டுவிட்டன.

இந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் இதுவரை 26 ஆராய்ச்சிக் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும், 100 விஞ்ஞானிகளும், மும்பை டாடா அணுசக்தி நிறுவனத்துடன் இணைந்து திட்டத்தை நிறுவுவதற்கு பணி செய்து வருகிறார்கள்.

இந்தச் திட்டத்தை நிறுவுவதற்கு, இணைந்து பணியாற்றக்கூடிய வசதி வாய்ப்புகள், தொழில்நுட்பங்கள் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் உள்ளது. இங்குள்ள ஆராய்ச்சிக் கூடங்கள், கணினி வல்லுநர்கள், இயந்திரவியல் துறையினர் மூலம் புதிய இயந்திரங்களையும், கணினி மென்பொருள்களையும் ஏற்படுத்தித் தர முடியும். எனவே இத் திட்டத்தில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்திற்கு முக்கிய பங்கு தரப்படும் என்றார் அவர்.


மேலும் இந்த ஆராய்ச்சி மையத்தில் எவ்வாறு சூரியனிடமிருந்து, நியூட்ரான் சேகரிக்கப்பட்டு, மலைக் குகைக்குள் எவ்வாறு கொண்டு வரப்பட்டு, அதனை ஆராய்ச்சியில் எவ்வாறு ஈடுபடுத்துகிறார்கள் என்பது குறித்த பட விளக்கம் செய்முறை விளக்கத்துடன் காட்டப்பட்டது.

நிகழ்ச்சியில் துணை வேந்தர் பி.கன்னியப்பன் பேசுகையில் கூறியதாவது: நியூட்ரினோ ஆராச்சிக்கேற்ப புதிய பாடப் பிரிவுகள் பி.டெக்., எம்.டெக்., அளவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்படும். மாணவர்களும், பேராசிரியர்களும் இதில் ஆராய்ச்சிகளைத் தொடங்க ஐ.என்.ஓ. வழிவகுக்கும் என்றார்.