Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை

அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளதால், பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம் சரியும் அபாயம் உள்ளது. வரும் கல்வியாண்டிலாவது இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என மாணவர்களும், பெற்றோரும் எதிர்பார்க்கின்றனர்.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத் தில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி பள்ளிகள் என மொத்தம் 52 உள்ளன. இப்பள்ளிகளில், முக்கிய பாடங் களுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால், அந்தந்த பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர்கள் சங்கம் உதவியுடன் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

இதுபோன்று நியமிக்கப்படும் ஆசிரியர்கள் பெரும்பாலும், இளங்கலை பட்ட படிப்பு முடித்து, முன் அனுபவம் இல்லாத ஆசிரியர்களாக உள்ளனர். இதனால், மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதில்லை. அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, கல்வித்துறை அதிகாரிகளும் முயற்சி எடுத்து வருகின்றனர். ஆனாலும், இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்காத நிலை உள்ளது.

அரசு பள்ளிகளில், மேல்நிலை பிரிவுக்கு கணிதம், இயற்பியல், வணிக கணிதம், வரலாறு உள்ளிட்ட பாடங்களுக்கான ஆசிரியர்கள் இல்லை. பொதுத்தேர்வின் போது, தற்காலிகமாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டது.

கடந்தாண்டில், ஆசிரியர்கள் பற்றாக்குறையால் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் சரிந்தது. நடப்பாண்டிலும், இதே நிலை நீடிக்கும் அபாயம் உள்ளது. வரும் கல்வியாண்டு துவங்குவதற்கு முன், முக்கிய பாடங்களுக்கு அனுபவம் மிக்க ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியம் கூறுகையில், "ஒரு சில பள்ளிகளில் ஆசிரியர்கள் பணி மாறுதல் பெற்று சென்றதாலும், பணி ஓய்வு பெற்றதாலும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி திறப்புக்கு முன் புதிய ஆசிரியர்கள் நியமிக்கும் வாய்ப்புள்ளது.

பொதுத்தேர்வின் போது, பள்ளிகளில் தற்போது இருக்கும் அனுபவம் மிக்க ஆசிரியர்களை கொண்டும் பாடம் நடத்தப்பட்டுள்ளதால், தேர்ச்சி விகிதம் பாதிக்கும் அபாயம் இருக்காது" என்றார்.

மீன்வள தொழில்நுட்பம்(Fishery Technology) : இலவச பயிற்சி


மத்திய கடல்சார் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் சார்பாக, மீன்வள தொழில்நுட்பம் பற்றி, இலவச பயிற்சி வகுப்பு நடக்க உள்ளது.

மத்திய அரசின் கடல்சார் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் சார்பாக, மாணவர்களுக்கு, கேப்டன் மற்றும் கப்பல் பொறியாளர் பணிக்கு, இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில், தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, விடுதி வசதியுடன், மாதம், 700 ரூபாய் உதவித்தொகை, வழங்கப்படுகிறது.

பயிற்சி காலம், 2 ஆண்டுகள். தற்போது காலியாக உள்ள இடங்களுக்கு, ஜூன், 22ம் தேதி, அகில இந்திய அளவில், நுழைவுத் தேர்வு நடக்க உள்ளது. இதற்கு, எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில், கணிதம் மற்றும் அறிவியலில், 40 சதவீதம் மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பங்கள், www.cifnet.gov.in என்ற இணையதள முகவரியில் பெறலாம். அடுத்த மாதம், 15 தேதிக்குள், விண்ணப்பிக்க வேண்டும். விபரங்களுக்கு, 044 - 25953769 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடற்கல்வியியல் படிப்புகள்


தமிழ்நாடு உடற்கல்வியியல் (பிசிகல் எஜூகேஷன்) மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம், எம்.பில்., எம்.எஸ்சி., போன்ற படிப்புகளுக்கு சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் விளையாட்டுத்துறைக்காக, முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்ட இப்பல்கலை சென்னை நுங்கம்பாக்கத்தில் 2005 முதல் செயல்படுகிறது.

என்ன படிப்புகள் :
* எம்.பில்., பிசிகல் எஜூகேஷன் படிப்பிற்கு சம்பந்தப்பட்ட முதுநிலை படிப்பில் 55 சதவித மதிப்பெண்களோடு தேர்ச்சி அத்துடன் இரண்டாண்டுகள் ஆசிரியாராக பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

* எம்.பில்., யோகா படிப்பிற்கு சம்பந்தப்பட்ட முதுநிலை படிப்பில், 55 மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* எம்.பில்., எக்சசைஸ் பிசியாலஜி அண்டு நியூட்ரிசியன் படிப்பிற்கு சம்பந்தப்பட்ட படிப்பில் முதுநிலை பட்டம், அத்துடன் இரண்டாண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

* எம்.பில்., பயோமெக்கானிக்ஸ் அண்டு உடலியக்கவியல் படிப்பிற்கு சம்பந்தப்பட்ட படிப்புகளில் முதுநிலை பட்டம் அத்துடன் இரண்டாண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

* எம்.பில்., அட்வான்ஸ்டு டிரெய்னிங் அண்டு கோச்சிங் படிப்பிற்கு விண்ணப்பிப்பவர்கள் சம்பந்தப்பட்ட படிப்புகளில் முதுநிலை பட்டம் அத்துடன் இரண்டாண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

* எம்.எஸ்சி., ஸ்போர்ட்ஸ் கோச்சிங் படிப்பிற்கு விண்ணப்பிப்பவர்கள் சம்பந்தப்பட்ட படிப்புகளில் இளங்கலை, டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி அத்துடன் இரண்டாண்டு அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

விருப்பமுள்ளவர்கள் படிவத்தை பல்கலையில், நேரிலோ தபாலிலே அல்லது இணையதளத்திலோ பெற்று விண்ணப்பிக்கலாம்.

கட்டணமாக ( எஸ்.சி/ எஸ்.டி.,  250, மற்றவர்  500) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  டிடி யை The  Registrar, Tamil Nadu Physical Education and Sports University என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் எடுத்து அத்துடன் கல்விச்சான்றுகளின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள் வழங்கும் கடைசி நாள் ஏப்ரல் 30.

விண்ணப்பிக்க கடைசி நாள் மே 3.

நுழைவுத்தேர்வு நாள் மே 9.

வகுப்புகள் தொடங்கும் நாள் மே 13.

விவரங்களுக்கு www.tnpesu.org