Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 18 ஏப்ரல், 2013

மதுரை அரசு மருத்துவமனையில் தாகம் தணிக்க தண்ணீரின்றி நோயாளிகள் தவிப்பு

மதுரை அரசு மருத்துவமனையில் குடிநீர் பற்றாக்குறையால், நோயாளிகளும், உறவினர்களும் தண்ணீரை தேடி அலைகின்றனர். இதன்காரணமாக, தண்ணீர் விற்பனை அதிகரித்துள்ளது.தினமும் பத்தாயிரம் பேர் வந்து செல்லும் மருத்துவமனையில், இரண்டு இடங்களில் தான் குடிநீர் வசதி உள்ளது. அதில், ஒன்று பழுதடைந்துள்ளது. மகப்பேறு இடத்தில் உள்ள குடிநீர் குழாய், உட்பகுதியில் இருப்பதால் பிற வார்டு நோயாளிகளுக்கு தெரிவதில்லை. அடிக்கும் வெயிலில் ஒரு நாளைக்கு கண்டிப்பாக மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒரு சொட்டு தண்ணீருக்கு, நோயாளிகள் வெளியே உள்ள தண்ணீரைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது.இதை பயன்படுத்திக் கொண்ட தனிநபர்கள், டிரைசைக்கிளில் "மினரல் வாட்டர்' என்ற பெயரில், ஒரு லிட்டர் ரூ.3, இரண்டு லிட்டர் ரூ.5க்கு தண்ணீரை விற்கின்றனர். "இது சுத்தமான குடிநீரா' என தெரியவில்லை. சுகாதாரமில்லாத தண்ணீரை குடிப்பதால் வயிற்றுப் போக்கு, டைபாய்டு காய்ச்சல் வரும் அபாயம் உள்ளது. உடல்நலமின்றி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், சுகாதாரமில்லாத தண்ணீரை குடித்தால் நிலைமை என்னவாகும்? அடிப்படை தேவையான தண்ணீர் வசதியை கூட நிறைவேற்றாவிட்டால், சிகிச்சை அளித்து என்ன பயன்? இதுகுறித்து பலமுறை தெரிவித்தும், மருத்துவமனை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தண்ணீரின்றி நோயாளிகள் மயங்கி விழுமுன், நடவடிக்கை எடுக்க வேண்டும் .

மாணவர்கள் சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் படிக்கவேண்டும் : அலாவுதீன் ஐ.ஏ.எஸ்.


பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி ஆண்டு விழா  நடந்தது. கல்லூரி தாளாளர் த.இ.செ.பத்ஹூர் ரப்பானி தலைமை தாங்கினார். ஆட்சிக்குழு உறுப்பினர்கள் கே.ஏ.மீரான் மைதீன், எம்.கே.எம்.முகமது நாசர், வாவு செய்யது அப்துல் ரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் முகமது சாதிக் வரவேற்று பேசினார்.

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அலாவுதீன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கல்லூரி விழா மலரை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

சேவை செய்யும் வாய்ப்பு
நான் ஐ.ஏ.எஸ். பணியை நெல்லையில் உதவி கலெக்டராக இருந்து தொடங்கினேன். ஐ.ஏ.எஸ்.தேர்வில் தேசிய அளவில் 6–வது இடம் பெற்றேன். அலாவுதீன் கையில் இருந்த அற்புத விளக்கு ஐ.ஏ.எஸ். தேர்வு தான். இந்த பணி எனக்கு மக்களுக்கு நேரடியாக சேவை செய்யும் வாய்ப்பை அளித்தது. இந்த கல்லூரி 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை உருவாக்கி உள்ளது.

நான் ஐ.ஏ.எஸ். தேர்வுக்காக டெல்லி சென்ற போது அங்குள்ள அதிகாரிகள், நீங்கள் அற்புத விளக்கை தேய்க்கிறீர்கள், பூதம் வருகிறது, அப்போது என்ன 3 வரம் கேட்பீர்கள்? என்று கேட்டனர். அதற்கு நான் உலக அமைதி, இந்திய முன்னேற்றம், முன்றாவதாக எனக்கு ஐ.ஏ.எஸ். வெற்றி ஆகியவற்றை கேட்பேன் என்று கூறினேன். அப்போது எனது பதிலை கேட்டு என்னை தேர்ந்தெடுத்தனர்.

சாதிக்க முடியும்

பல்கலைக்கழக தேர்வுக்கும், ஐ.ஏ.எஸ். தேர்வுக்கும் வித்தியாசம் உண்டு. பல்கலைக்கழக தேர்வில் 40 சதவீதம் தேர்ச்சி பெற்றால் போதும். ஆனால் ஐ.ஏ.எஸ் தேர்வில் நமக்கு அடுத்து வரும் போட்டியாளரை விட திறமையில் நாம் முன் நிற்க வேண்டும். அப்போது தான் நம்மால் வெற்றி பெற முடியும்.

இன்றைய மாணவ – மாணவிகளிடம் பல ஆற்றல்கள், திறமைகள் மறைந்து கிடக்கின்றன. அவற்றை வெளிக்கொண்டு வந்தால் தான் உங்களால் சாதிக்க முடியும். நூலகத்தை எல்லோரும் நன்றாக பயன்படுத்த வேண்டும். மாணவர்கள் பாடத்திற்கு அப்பால் நிறைய படிக்க வேண்டும். சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்ற எண்ணத்துடன் படிக்க வேண்டும். நம் தேசத்தின் வளர்ச்சியே நம் வளர்ச்சி, இதை நாம் உணர வேண்டுமானால் நம் தேசத்தின் வளர்ச்சி பற்றிய சமூக அரசியல், பொருளாதார வரலாறு ஆகியவற்றை நாம் ஆழமாக படிக்க வேண்டும். எல்லோரும் இணைந்து செயல்பட்டால் பெரிய இலக்கையும் நம்மால் அடைய முடியும் என்பதை கோவை செம்மொழி மாநாடு நடத்தியபோது உணர்ந்தேன்.

பெண்கள் கல்வியில் சிறந்து விளங்கி ஆட்சிப்பணிக்கு வந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.இவ்வாறு அலாவுதீன் கூறினார்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பதிவாளர், தேர்வாணையர் மற்றும் நிதி அலுவலர்கள் பதவிகள் காலியாக உள்ளன. அந்த பணி இடங்களில் நிரந்தர ஊழியர்களை நியமிக்க வேண்டும். பட்ட மேற்படிப்பு முடித்தவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 2 வருடாந்திர ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும்.

காலமுறை அடிப்படையிலான பதவி உயர்வு ஆணை வழங்கியவர்களுக்கு நிலுவை தொகையை வழங்க வேண்டும். காலாவதியான நிலையில் உள்ள 2 பஸ்களையும் மாற்றிவிட்டு புதிய பஸ்கள் வாங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக அலுவலர்கள் நேற்று பல்கலைக்கழகம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தொடர் போராட்டம்
ஆர்ப்பாட்டத்துக்கு பல்கலைக்கழக அனைத்து அலுவலர்கள் சங்க தலைவர் அன்பால் மோசக் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ஜெயசீலன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தரும் வரை ஒரு வார காலத்துக்கு காலை மாலை 2 வேளையும் பல்கலைக்கழகம் முன்பு தொடர் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்.

கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபடுவோம். மேலும் உள்ளிருப்பு போராட்டம், உண்ணாவிரதம் ஆகிய தொடர் போராட்டங்களையும் நடத்த உள்ளோம் என்றார்.

இதில் துணைத்தலைவர் சுரேஷ், துணை செயலாளர்கள் சங்கர மகாலிங்கம், அய்யம் பெருமாள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

காற்று இல்லாமலே காற்றாலையை இயக்கி மின்சாரம்: வாலிபர் சாதனை


காற்று இல்லாமலே, காற்றாலையை இயக்கி மின்சாரம் தயாரித்து செயல் வடிவம் காட்டியுள்ளார், பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள கிராமத்து வாலிபர்.

சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி விஸ்வநாதன், 38. பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள இவர், காற்றாலையை, காற்று இல்லாமல் இயக்க முடியும் என்பதை, கண்டுபிடித்துள்ளார்.

இதற்கான முயற்சியில், மூன்று ஆண்டுகளாக ஈடுபட்ட அவர் கூறியதாவது: சேலம் மாவட்டம், மேச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு வரை படித்தேன். குடும்ப சூழ்நிலை காரணமாக, மேலும் படிக்க முடியாமல், விசைத்தறி தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். காற்றாலையை, காற்று இல்லாமலே இயக்க முடியும் என, கண்டுபிடித்துள்ளேன். காற்று வீசும் காலத்தில் மட்டுமே, காற்றாலையில் இருந்து, மின்சாரம் பெற முடியும்; மற்ற காலங்களில் காற்றாலையில் உள்ள இறக்கைகள் சுற்றாது.

தற்போது, காற்றாலையில், மூன்று இறக்கைகள் உள்ளது. என்னுடைய தொழில்நுட்பப்படி, காற்றாலையில் நான்கு இறக்கைகள் பொருத்த வேண்டும். மேலும், கீழும் உள்ள இரண்டு இறக்கையின் நடுவில், ஹீலியம் வாயுவை நிரப்ப வேண்டும். காற்றாலையின், இரு பக்கமும் உள்ள, இரண்டு இறக்கைகளின் அளவு ஒரே சீராக இருக்கும்படி வைத்துக் கொள்ள வேண்டும். ஹீலியம் வாயு நிரப்பப்பட்டுள்ள ஒரு இறக்கையில் இருந்து, கீழுள்ள இறக்கைக்கு வாயு செலுத்தப்படும் போது, எடை தாங்காமல், கீழுள்ள இறக்கை மேல் நோக்கி தள்ளப்படும்.

இதனால், இறக்கைகள் ஒன்றன் பின் ஒன்றாக சுழலத்தொடங்கும். ஹீலியம் வாயு, தானியங்கி சென்சார் மூலம், இரண்டு இறக்கைகளிலும் மாறி மாறி செலுத்தப்படுவதால், இறக்கைகள் தொடர்ந்து சுழன்று கொண்டே இருக்கும். இதனால் காற்று இல்லாமலும், மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.

நான் கண்டுபிடித்த தொழில் நுட்பத்தை, சென்னை, கிண்டியில் உள்ள மத்திய அரசின் காப்புரிமை நிறுவனத்தில், வரை படங்களின் மூலமும், எழுதியும் காண்பித்தேன். என் கண்டுபிடிப்புக்கு, மத்திய அரசு காப்புரிமை கொடுத்துள்ளது. ஓராண்டுக்குள், நான் அவர்களுக்கு செய்முறை பயிற்சி அளித்து காட்ட வேண்டும் என்பதால், ஜலகண்டாபுரத்தை சேர்ந்த செந்தில்குமார், மேச்சேரியை சேர்ந்த ஜெயவேல், சேலம், கருப்பூரை சேர்ந்த ராஜசேகர், குமாரபாளையத்தை சேர்ந்த சிவராஜ் ஆகியோரின் உதவியுடன், என் சக்திக்கு தகுந்தவாறு காற்றாலை அமைத்து, அதில் சிறிய அளவில் மின்சாரமும் கிடைக்க செய்துள்ளேன்.

போதிய பணவசதி இல்லாததால், ஆராய்ச்சியை தொடர தடை ஏற்பட்டுள்ளது. நான் செய்த செயல் வடிவத்தை, மத்திய அரசின் காப்புரிமை நிறுவனத்தில் ஒப்படைக்க உள்ளேன். ஐந்து பேர் சேர்ந்து பவர் விஷன் சேரிட்டபிள் டிரஸ்ட் ஆரம்பித்துள்ளோம். 99944 97959 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.