Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 17 நவம்பர், 2012

கடையநல்லூர் பகுதியில் மீண்டும் காய்ச்சலால் மக்கள் பாதிப்பு


கடையநல்லூர் பகுதிகளில் வேகமாக பரவி வரும் காய்ச்சலால் அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

கடையநல்லூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன் சிக்கன்குனியா, டெங்குகாய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்டனர். பின்னர் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. இந்நிலையில் தற்போது இப்பகுதியில் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடையநல்லூர், சொக்கம்பட்டி, இடைகால், ஊர்மேலழகியான், அச்சன்புதூர், வடகரை உள்ளிட்ட பகுதிகளில் காய்ச்சல் பாதித்து ஏராளமானோர் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரி, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் சொக்கம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காய்ச்சல் பாதித்து சுமார் 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று சென்றதாக ஆஸ்பத்திரி வட்டாரத்தில் கூறப்படுகிறது. காய்ச்சல் பாதித்தவர்கள் உடல்வலி, கை, கால் மூட்டு வலி போன்றவைகளால் அவதிப்பட்டு வருவதாக தெரிவித்தனர். வடகிழக்கு பருவமழை ஒரு சில தினங்கள் மட்டும் பெய்துவிட்டதால் ஏற்பட்ட சூழ்நிலை மாற்றம் தான் காய்ச்சலுக்கு காரணமாக தெரிவிக்கப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் கடையநல்லூர் நகராட்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் பொதுமக்களின் தூக்கத்தினை கெடுக்கும் வகையில் நடமாடும் கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வேகமாக பரவி வரும் காய்ச்சலால் கடையநல்லூர் மற்றும் சுற்றுப்பகுதி மக்கள் பெரும் அவதியும், பீதியும் அடைந்துள்ளனர்.

ஒரு ஆசிரியையை காதலிப்பதில் இரு ஆசிரியர்களிடையில் மோதல்


திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த அத்திமாஞ்சேரிபேட்டை சுந்தரேசனார் நகரில் உள்ள, ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார் அம்சா, 40. இதே பள்ளியில், மதிவாணன், சங்கர், ஜானகி ஆகியோர் ஆசிரியர்களாக பணிபுரிந்தனர்.தலைமை ஆசிரியையு டன், ஆசிரியர்களான மதிவாணன், சங்கர் ஆகியோர், நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், கடந்த வாரம், பள்ளி வளாகத்தில், மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர் இருவரும், தகாத வார்த்தைகளால் பேசியதோடு, ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.இதை வேடிக்கை பார்த்த மாணவர்கள், அவர்களது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறினர். இதையடுத்து, கடந்த புதன் அன்று, மாணவர்களின் பெற்றோர்,பள்ளியை முற்றுகையிட்டனர்.

தகவல் அறிந்த பொதட்டூர்பேட்டை போலீசார் மற்றும் உதவி துவக்கக் கல்வி அலுவலர் கண்ணய்யா ஆகியோர், பெற்றோரிடம் பேச்சு வார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.விசாரணையில், நடந்த சம்பவம் உண்மை என, தெரிந்ததை அடுத்து, தலைமை ஆசிரியை அம்சா, மேல் நெடுங்கல் துவக்கப் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.ஆசிரியர் மதிவாணன், வெளியகரம் துவக்கப் பள்ளி, சங்கர், ராமசமுத்திரம் துவக்கப் பள்ளி, ஆசிரியை ஜானகி, நொச்சலி துவக்கப் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

பிச்சை எடுப்பதில் மோதல், ஒரு பிச்சைக்காரர் கொலை!


பிச்சை எடுப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். கொலை செய்த மற்றொரு பிச்சைக்காரை, போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், ப.வேலூர் அருகே உள்ள செய்யாம்பாளையத்தை சேர்ந்தவர் நல்லையன், 65. அவர், அப்பகுதியில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார். அவரைப் போலவே, மற்றொரு நபரும், அப்பகுதியில் பிச்சை எடுத்து வந்துள்ளார்.

வழக்கமாக, இருவரும், நல்லூரில் உள்ள கடையின் முன் படுத்து உறங்குவது வழக்கம். கடந்த, 14ம் தேதி இரவு வழக்கமாக உறங்கும் இடத்துக்கு வந்துள்ளனர். அப்போது இருவரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த நல்லையன், மற்றொரு பிச்சைக்காரரை அடித்து உதைத்துள்ளார். அதில் பலத்த காயமடைந்த பிச்சைக்காரர், திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், நல்லையனை கைது செய்து விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில், உயிரிழந்த நபர் யார், அவர் பெயர் என்ன என்பது உள்ளிட்ட விவரம் எதுவும் தெரியவில்லை. மேலும், நல்லையன் செல்லும் இடத்திற்கு, சம்மந்தப்பட்ட நபரும் சென்று பிச்சை எடுத்து வந்துள்ளார். அதனால், இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, சம்மந்தப்பட்ட நபர் கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவந்துள்ளது.

திருப்பூரில் பனியன் உற்பத்தி பாதிக்கப்படுமா .............?


கடும் மின்வெட்டு காரணமாக வேலை வாய்ப்பு குறைந்து, வருவாய் பாதிக்கப்பட்ட தொழி லாளர்கள் தீபாவளி வரை தாக்குப்பிடித்தனர். போனஸ் வாங்கியதும், பண்டிகையை கொண் டாட சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். அவர்கள் மீண்டும் பணிக்கு திரும்புவார் களா, மாட்டார்களா என பனியன் கம்பெனி உரிமையாளர்களும், விசைத்தறியாளர்களும் கலக்கம் அடைந் துள்ளனர். ஏற்றுமதி ஆர்டர்களை முடித்துக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள ஏற்றுமதியாளர்கள், தொழிலாளர்களின் சொந்த ஊர்களுக்கு பஸ் அனுப்பி, அழைத்து வர ஏற்பாடு செய்துள்ளனர்.

திருப்பூரில் பனியன் தொழிலிலும், அதை சார்ந்த பிற தொழில் பிரிவுகளிலும், வெளிமாவட்ட மக்களே பிரதான தொழிலாளர்களாக உள்ளனர். நகரிலேயே குடும்பத்துடன் குடியேறியிருந்தாலும், பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகை காலங்களில், குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். திடீரென கணிசமான அளவு தொழிலாளர்கள் வெளியேறுவதால், பனியன் உற்பத்தி முடங்குகிறது. உள்ளூர் தொழிலாளர்கள் வழக்கம்போல் வேலைக்குச் சென்றாலும், வழக்கமான அளவு உற்பத்தி நடப்பதில்லை.

தற்போது, குறித்த நேரத்தில் ஆர்டரை முடித்து அனுப்ப வேண்டிய கட்டாயம், ஏற்றுமதி பனியன் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதற்காக, தொழிலாளர்களை வரவழைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருந்தாலும், மின்வெட்டு காரணமாக வேலைவாய்ப்பு குறைந்து, வருமானம் பாதியாக குறைந்துள்ளதால், தொழி லாளர்கள் திரும்பி வருவார்களா என்ற அச்சம் பனியன் உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

பனியன் நிறுவன உரிமையாளர்கள் கூறுகையில்,"தீபாவளிக்கு சென்றவர்களில், 90 சதவீதம் பேர், நாளை (18ம்தேதி) இரவுக்குள் திருப்பூர் திரும்புவர். சிலர், பொங்கல் பண்டிகை வரை, அங்கேயே தங்கியிருப்பர். ஏற்றுமதி நிறுவனங் களுக்கு, தொழிலாளர்கள் தேவைப்படுவதால், அவர்கள், சொந்த ஊர் செல்ல கம்பெனி மூலமாக பஸ் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. அதேபோல், பஸ்களை அனுப்பி வைத்து, தொழிலாளர்களை திருப்பூர் அழைத்து வர முடிவு செய்யப்பட்டுள்ளது,' என்றனர்.

விசைத்தறி நிலை:பல்லடம் பகுதியில் 35 ஆயிரம் விசைத்தறிகள் உள்ளன. விசைத்தறி மற்றும் அதன் சார்பு தொழில்களில் 35 ஆயிரம் பேர் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இதில், 20 ஆயிரம் பேர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, தர்மபுரி உள்ளிட்ட வெளிமாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள். பல்லடம் பகுதியில் ஆறு மாதத்துக்கு மேலாக, தினமும் 14 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.

இதன் காரணமாக, விசைத்தறி உரிமையாளர்கள், விசைத்தறிகளை சீராக இயக்க முடியாமல் தவித்து வருகின்றனர். வசதி படைத்த 30 சதவீத விசைத்தறியாளர்கள், ஜெனரேட்டர் உதவியுடன் இயக்கி வருகின்றனர். மின்வெட்டு காரணமாக தொழிலாளர்களின் கூலி முன்பை விட பாதிக்கு பாதி குறைந்து விட்டது. கூலி குறைவால் அன்றாட தேவையை கூட முழுமையாக நிறைவு செய்ய முடியாமல் தவிக்கும் நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டனர்.

தீபாவளிக்கு இரண்டு மாதத்துக்கு முன்பே 10 சதவீத தொழிலாளர்கள் வேலையை உதறிவிட்டு சொந்த ஊருக்கு நிரந்தரமாக சென்று விட்டனர். மீதமுள்ள தொழிலாளர்கள், போனஸ் வாங்குவதற்காக மிகவும் சிரமப்பட்டு தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்பு வரை வேலை பார்த்து வந்தனர். பண்டிகைக்கு முந்தைய நாள் 10 சதவீத போனஸ் வழங்கப்பட்டது. அதைப்பெற்ற தொழிலாளர்கள் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட சென்று விட்டனர். மின்வெட்டு காரணமாக, வேலை பாதிப்பு, கூலி குறைந்துள்ளதால் தொழிலாளர்கள் மீண்டும் வருவார்களா, மாட்டார் களா என்ற சந்தேகம் விசைத்தறியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

விசைத்தறியாளர்கள் கூறுகையில், "மின்வெட்டு காரணமாக துணி உற்பத்தி 60 சதவீதம் அளவுக்கு குறைந்து விட்டது. துணி உற்பத்தி குறைவால் தொழிலாளர்களின் கூலியும் பாதி அளவுக்கு குறைந்துள்ளது. அக்கூலியை கொண்டு தொழிலாளர்கள் குடும்பம் நடத்துவது மிகவும் சிரமம் என்பது எங்களுக்கு தெரியும். துணி உற்பத்தி குறைவால், எங்களால் அவர்களை திருப்திப்படுத்தும் அளவுக்கு கூலி வழங்க இயலவில்லை.

பண்டிகைக்கு சொந்த ஊருக்கு சென்ற வெளிமாவட்ட தொழிலாளர்களில் 50 சதவீதத்தினராவது மீண்டும் வேலைக்கு வருவார்களா என்பதே சந்தேகமாக உள்ளது. மின்வெட்டு பிரச்னை எப்போது தீரும் என்பதே தெரியவில்லை,' என வருத்தத்துடன் தெரிவித்தனர்.

காலியாகும் வீடுகள்:கடந்த ஆறு மாதமாக, தினமும் 14 முதல் 16 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது. தொழில்கள் கடும் நசிவை நோக்கிச் செல்லத் துவங்கியுள்ளன. தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு குறைந்து, கூலி 50 சதவீதம் குறைந்து விட்டது. அடிப்படை தேவையை சமாளிக்க முடியாமல் தொழிலாளர்கள் தவிக்கின்றனர்.

சொந்த ஊரில் குறைவாக கூலி கிடைத்தாலும், வீட்டு வாடகை குறைவு, உற்றார், உறவினர்கள் அருகில் இருப்பதால், விசேஷங்களுக்கு விடுமுறை எடுக்காமல் வேலைக்கு செல்ல முடியும். போக்குவரத்து செலவின்மை போன்ற காரணங்களால், பல்லடம் பகுதியை சேர்ந்த தொழிலாளர்களில் 10 சதவீதத்தினர், வாடகை வீட்டை காலி செய்து சொந்த ஊருக்கு செல்லத்துவங்கியுள்ளனர்.