Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 3 ஜூன், 2013

மலேசிய இந்திய சமூகத்தில் அதிகரித்து வரும் விவாகரத்துகள்

மலேசியாவில் வாழும் இந்திய சமூகத்தில் விவாகரத்துகள் பெருகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வருடத்துக்கு சுமார் 5 ஆயிரம் என்ற அளவில் விவாகரத்துகள் அதிகரித்திருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இதுகுறித்து தமிழ் பெல் கிளப் மலேசியாவின் தேசிய தலைவர் எஸ்வி லிங்கம் கூறுகையில், இது போன்ற நிலை தொடர்ந்தால், சமூகத்தில் பிளேக் நோய் போல் இது பரவி, சமூகச் சிக்கலை ஏற்படுத்திவிடும் என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

மலேசிய நண்பன் பத்திரிகையில், இது குறித்து அண்மையில் வெளியான செய்தியில், மலேசிய இந்திய சமூகத்தில் தம்பதிகளுக்கு இடையேயான அன்னியோன்யம் குறைந்து, புரிந்துணர்வும் குறைந்து இடைவெளி அதிகரித்து வருவதும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போகும் மனப்பாங்கு குறைந்துள்ளதும் காரணம் என்று கூறியுள்ளது. இதனால் விவாகரத்துகள் மிக அதிகமாக ஆகிவிட்டன என்று கூறப்பட்டுள்ளது, சில வருடங்களுக்கு முன்னர் வருடத்துக்கு 200 என்ற அளவில் இருந்த விவாகரத்துகள் இப்போது 5000 என்ற அளவுக்கு உயர்ந்துவிட்டது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று என்று கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த லிங்கம், மலேசிய இந்து சங்கம் தம்பதிகளை அழைத்து அவர்களுக்கு கட்டாய வகுப்புகளை நடத்த வேண்டும், அவர்களுக்கு வழிகாட்டி, அவர்களின் கடமைகளை எடுத்துச் சொல்லி, திருமண பந்தத்தை வெற்றிகரமானதாக்க முயற்சி எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

குற்றாலத்தில் சீசன் களைகட்டியது

குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் சீசன் தொடங்கும். இந்த சீசன் ஜூலை, ஆகஸ்ட் வரை 3 மாதங்கள் வரை நீடிக்கும். சீசன் தொடங்குவதற்கான அறிகுறி மே மாத இறுதியில் தென்படும். அந்த வகையில் கடந்த 3 நாட்களாக குற்றாலம் பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது.

பகலில் வெயில் அடித்தாலும் மாலை நேரங்களில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. 3 நாட்களாக பெய்த மழையின் காரணமாக குற்றாலத்தின் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவியில் தண்ணீர் விழத்தொடங்கியுள்ளது. மெயினருவியில் ஆர்ச்சை தொட்டப்படி தண்ணீர் விழுகிறது. ஐந்தருவியின் 5 கிளைகளிலும் ஓரளவு தண்ணீர் விழுகிறது.

குற்றாலத்தில் சீசன் தொடங்கியதையடுத்து சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இருப்பினும் குறைந்த அளவு தண்ணீர் விழுவது சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவ மழை பெய்து வருவதால் இன்னும் ஓரிரு நாட்களில் குற்றாலம் மலைப்பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்கக்கூடும். இதையடுத்து அனைத்து அருவிகளிலும் தண்ணீர் அதிகரித்து சீசன் முழுவீச்சில் களை கட்ட தொடங்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு சீசன் முழுவதுமாக கைவிட்ட நிலையில் வியாபாரிகளும் பொதுமக்களும் ஏமாற்றமடைந்தனர். இந்த ஆண்டு சீசன் குறிப்பிட்ட காலத்தில் தொடங்கியுள்ளதால் முழுவதுமாக களைகட்டும் என நம்புகின்றனர்.

வெள்ளத்தில் மிதக்கும் ஐரோப்பிய நாடுகள்

மத்திய ஐரோப்பிய நாடுகளில் தற்போது பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் ஜெர்மனி, செக்குடியரசு, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆறுகள் மற்றும் ஏரிகள் நிரம்பி வழிவதால் கரைகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து நகரங்களுக்குள் வெள்ளம் புகுந்து குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது. எனவே, மக்கள் வெளியே செல்ல முடியவில்லை. பஸ் மற்றும் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.

இந்த மழை வெள்ளத்துக்கு செக்குடியரசு மற்றும் ஜெர்மனி நாடுகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. செக் குடியரசில் உள்ள விடாவா ஏரி உடைந்தது. இதனால் கரை புரண்டோடும் வெள்ளம் பிராகு நகருக்குள் நுழைந்து சூழந்துள்ளது. டிராபெனிஸ் நகரில் வீடுகள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளுக்குள் சிக்கி ஒரு பெண் பிணமாக கிடந்தார். இதுபோன்று பலர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

வெள்ளம் பாதித்த செக் குடியரசில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்பு பணியில் 200 ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் பீட்டர் நெகாஸ் தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் மழை வெள்ளம் மற்றும் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் பலியாகி உள்ளனர். இங்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, வெள்ளப்பகுதிகளில் மீட்பு பணிகளை பிரதமர் ஏஞ்சலா மெர்கல் முடுக்கி விட்டுள்ளார். மீட்பு பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.