Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 5 மே, 2013

திருநெல்வேலி மாவட்டத்தில் முன்கார் பருவத்திற்காக மணிமுத்தாறு அணை திறப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் முன்கார் பருவத்திற்காக மணிமத்தாறு அணையை கலெக்டர் சமயமூர்த்தி திறந்து வைத்தார்.

முன்கார் பருவத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஜமீன்சிங்கம்பட்டி, தெற்கு பாப்பாக்குடி, வைராங்குளம், தெற்கு கல்லிடைகுறிச்சி, வைரவகுளம்,சிங்கமயம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் செய்வதற்காக மணிமுத்தாறு அணையை இன்று காலை திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் சமயமூர்த்தி திறந்து வைத்தார்.

விநாடிக்கு 30 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையில் தற்போது தண்ணீர் 82.21 அடியாக உள்ளது, ஆகையால் அணையை சுற்றியுள்ள பகுதிகளுக்கு விவசாயம் செய்வதற்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் 2756 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

தொழிலாளர் கல்வி நிலையத்தில் விண்ணப்பங்கள் விற்பனை


சென்னை காமராஜர் சாலையில், தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் உள்ளது. இது தமிழக அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. இங்கு பி.ஏ.,(தொழிலாளர் மேலாண்மை), எம்.ஏ.,(தொழிலாளர் மேலாண்மை) பட்டப்படிப்பு மற்றும் பட்டயப் படிப்புகள் நடத்தப்படுகின்றன.

பட்டப்படிப்புக்கு சென்னை பல்கலை அங்கீகாரம், பட்டயப் படிப்புக்கு, தமிழக அரசின் அனுமதி உள்ளது. பி.ஏ., சேர, பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். எம்.ஏ., மற்றும் பி.ஜி.டி.எல்.ஏ., ஓராண்டு மாலை நேர பட்டயப் படிப்பில் சேர, அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில், ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இப்படிப்புகள், தொழிலாளர் நலத் துறையில் உள்ள, தொழிலாளர் அலுவலர், தொழிலாளர் உதவி ஆய்வாளர் ஆகிய பதவிகளுக்கு, முன்னுரிமை தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. தொழிற்சாலைகளில் பணியாளர் அலுவலர், மனிதவள அலுவலர் போன்ற பணி வாய்ப்புகள் கிடைக்கும். தற்போது விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

அனைத்து படிப்புகளுக்கும் விண்ணப்பம், 200 ரூபாய். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு, 100 ரூபாய். வரும் 31ம் தேதி, விண்ணப்பிக்க கடைசி நாள்.

TET தேர்வு அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகிறது


"ஆசிரியர் தகுதி தேர்வான TET தேர்வு குறித்த அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியாகும்' என, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு ஜூலை மற்றும் அக்டோபரில் நடந்த, ஆசிரியர் தகுதி தேர்வுகள் மூலம், 22 ஆயிரத்து 500 பேர், ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இன்னும், 20 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டி உள்ளது. இதற்காக, அடுத்த, டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பை, பட்டதாரிகள் எதிர்பார்த்தபடி உள்ளனர்.

அடுத்த தேர்வை நடத்துவது குறித்து முடிவு செய்யப்பட்டு விட்டதாகவும், இது குறித்த அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியாகும் எனவும், கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டைப்போல், ஜூலையில் தேர்வு நடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, தகுதி மதிப்பெண்கள் அளவை குறைக்க வேண்டும் என, சட்டசபையில், பல்வேறு கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள், வலியுறுத்தினர். இது குறித்து, முதல்வர் பரிசீலனை செய்து, முடிவை அறிவிப்பார் என, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் தெரிவித்திருந்தார். எனவே, இது தொடர்பாக, முதல்வரின் அறிவிப்பையும், பட்டதாரிகள் எதிர்பார்த்தபடி உள்ளனர்.