Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 9 மார்ச், 2013

நெல்லை மாவட்டத்தில் விடிய விடிய மழை: ஒரே நாளில் சேர்வலாறு அணை 10 அடி உயர்ந்தது, நீரில் மிதக்கும் நெல் பயிர்


திருநெல்வேலி மாவட்டத்தில் விடிய விடிய மழை பெய்தது. புதன்கிழமை பகலிலும் மழை நீடித்ததால் அறுவடை பருவத்தில் உள்ள நெல்பயிர்கள் நீரில் மிதக்கின்றன. இதனால் நெல் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. பாபநாசம், சேர்வலாறு, கடனாநதி உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
 வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் 2- வது நாளாக மழை பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. புதன்கிழமை பகலிலும் மழை நீடித்தது.

 ஒரே நாளில் 10 அடி உயர்ந்தது: மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்புப் பகுதியில் பெய்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1834.51 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 274 கனஅடியும், கடனாநதி அணைக்கு விநாடிக்கு 340 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 68 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.

 பாபநாசம் அணையின் நீர்மட்டம் 2.55 அடி உயர்ந்து 44.50 அடியாக இருந்தது. சேர்வலாறு அணை 10 அடி உயர்ந்து 64.96 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 80.60 அடியாக இருந்தது. கடனாநதி அணையின் நீர்மட்டம் 7.40 அடி உயர்ந்து 54.50 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 5.50 அடி உயர்ந்து 38.00 அடியாகவும் இருந்தது.

 நீரில் மிதக்கும் நெல் பயிர்: அம்பாசமுத்திரம் வட்டத்தில் கன்னடியன் கால்வாய், வடக்கு மற்றும் தெற்கு கோடைமேலழகியான் கால்வாய், நதியுன்னி கால்வாய் பாசனத்தில் அம்பை, விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சேரன்மகாதேவி, பத்தமடை, முக்கூடல், கடையம் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அறுவடை முடிந்து விட்டன. தாமதமாக நடவு செய்த இடங்களில் இன்னும் ஒரு சில தினங்களில் அறுவடை செய்யும் பருவத்தில் உள்ளது. இந்த சூழலில் மழை பெய்து வருவதால் நெல்பயிர்கள் நீரில் மிதக்கின்றன. விவசாயிகள் வயலில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 தொடர்ந்து மழை நீடித்தால் நெல் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு, விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும் என அவர்கள் கவலை தெரிவித்தனர்.
 இந்நிலையில் தொடர் மழை காரணமாக மாலையில் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் அதிகரித்தது. இதையடுத்து அணைகள் மூடப்பட்டன.

தனியாக பயணம் செய்யும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் "ரேடியோ டாக்சி"


டில்லியில், கடந்த ஆண்டு, மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரத்தில் கொல்லப்பட்ட பிறகு, பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது; அதே அளவிற்கு, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் கூடியுள்ளன.

இரவு நேரத்தில், தனியாக, வாடகை காரில் பயணம் செய்யும் பெண்கள், பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த வாகனங்களையே பயன்படுத்துகின்றனர்.அந்த வகையில், "ரேடியோ டாக்சி' என்ற தனியார், டாக்சி சேவை நிறுவனம், வேலை பார்க்கும் பெண்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது.கிளம்பிய நேரத்திலிருந்து, குறிப்பிட்ட சில நிமிடங்களுக்கு ஒரு முறை, டாக்சியிலிருந்து தானாக, எஸ்.எம்.எஸ்., செய்தி, டாக்சி சேவை நிறுவனம் மற்றும் பெண் வேலை பார்க்கும் நிறுவனத்திற்கு சென்று கொண்டே இருக்கும்.அந்த செய்திகளில், "இப்போது டாக்சி, இந்த இடத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது, இங்கே நின்று கொண்டிருக்கிறது, இன்னும் சில நிமிடங்களில் இறக்குமிடத்தை அடைந்து விடும்' என்பன போன்ற செய்திகள், தானாக அனுப்பப்பட்டு கொண்டே இருக்கும். இதை, டாக்சி டிரைவரோ அல்லது வேறு நபர்களோ மாற்ற முடியாது.இந்த வசதி, அந்த டாக்சியில் பயணம் செய்யும் பெண்களுக்கு பாதுகாப்பு உணர்வை வழங்குவதுடன், அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தில் இருந்தபடியே, டாக்சி செல்லுமிடம் கண்காணிக்கப்படுவதால், நள்ளிரவு நேரத்திலும், ரேடியோ டாக்சி சேவை பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.

தமிழினத் தலைவருக்கு "பச்சை" தமிழனின் கண்ணீர் கடிதம் ....!

டெசோ அமைப்பின் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு ..!

தமிழினம் தலைநிமிர்ந்து வாழ ,தள்ளாத வயதிலும் தரணி வியக்கும் வகையில் செயல்படும் உங்களை , எந்த உண்மையான தமிழனனும் குறை கூற மாட்டான் .தமிழனுக்கான உங்கள் போராட்டம் வெற்றியடைய வேண்டும் ,அதுதான் எங்கள் முழு விருப்பம் , நிச்சயம் வெற்றிகிட்டும் !

இந்த நேரத்தில் உங்கள் கவனத்திற்கு சில விசயங்களை முன்வைக்கின்றேன் .அதற்கும் நீங்கள் தீர்வு காண்பீர்கள் என்று நம்புகிறோம் .

இலங்கையில் தமிழை தாய் மொழியாக கொண்டு ,தமிழை மட்டுமே பேசத் தெரிந்த சிங்கள அரசாலும் ,விடுதலை புலிகளாலும் அடக்கி ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மக்களாக,வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம்களின் நிலையை உங்கள் கவனத்திற்கு ,எங்கள் கண்கள் கண்ணீரை சிந்துவதை கட்டுப்படுத்த முடியாத நிலையில் கொண்டுவருகிறேன் .

1990 -ஆம் ஆண்டு இலங்கையில் வட மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணத்தில் தமிழ் நாட்டைச் சேர்ந்த அதிகமான முஸ்லிம்கள் பெரிய தொழிலதிபர்களாக இருந்தார்கள். பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் ஒரு முஸ்லிம்கள் கூட இருக்கக் கூடாது என 24 மணி நேரம் அவகாசம் கொடுத்து, அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து முஸ்லிம்களையும் வீடு, வாசல், சொத்துக்களை விட்டு விரட்டியடித்தனர். அவ்வாறு அந்த இடத்தை விட்டு வெளியேறாதவர்களை பெண்கள், குழந்தைகள் என்றும் பார்க்காமல் சுட்டுக் கொன்றனர்.

விரட்டப்பட்டவர்கள் அனைவரும் கிழக்கு மாகாணத்திலும் உள்ள புத்தளம் போன்ற பகுதிகளிலும் அகதி முகாம்கள் அமைக்கப்பட்டு அகதிகளாக சொந்த நாட்டிலேயே வாழ்ந்தனர். விடுதலைப் புலிகள் கிழக்கு மாகாணம் வரை ஊடுருவிச் சென்று முஸ்லிம்கள் அதிகமாக வாழும் காத்தான்குடிக்குச் சென்றனர். அங்குள்ள பள்ளிவாசலில் சுபுஹு (விடிகாலைத்) தொழுகையில் ஈடுபட்டிருந்த குழந்தைகள், முதியவர்கள் உட்பட நூற்றுக் கணக்கானவர்களை சுட்டுக் கொன்றனர்.

அதுமட்டுமல்லாமல், கிழக்கு மாகாணத்தில் உள்ள செல்வந்தர்களைக் கடத்திச் சென்று மிரட்டி பல கோடி ரூபாய்களை அவர்களது குடும்பத்தினரிடமிருந்து பறித்தனர். பொலநறுவை என்ற ஊரிலும் உள்ள பள்ளிவாசல்களிலும் அப்பாவி மக்களை சுட்டுக் கொன்றனர்.

1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வடக்கில் வாழ்ந்து வந்த சுமார் 78ஆயிரம் முஸ்லிம் மக்கள் வடக்குக்கு வெளியே புலிகளால் விரட்டப்பட்டனர். யாழ்ப்பாணத்துக்கு வெளியே ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் தமது வாழ்விடங்களைவிட்டு வெளியேற 48 மணிநேர அவகாசம் வழங்கப்பட்டது. யாழ் நகர முஸ்லிம்களுக்கு இரண்டே இரண்டு மணிநேரமே கால அவகாசம் வழங்கப்பட்டது.

1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முப்பதாம் திகதி யாழ் நகரப் பகுதிகளில் உறுமிக் கொண்டிருந்த புலிகளின் வாகனங்களிலிருந்த ஒலிபெருக்கிகள் அலறிக்கொண்டிருந்தன.

'யாழ் நகரத்தில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் வட மாகாணத்துக்கு வெளியே செல்ல வேண்டும். உடுத்த உடுப்புடனும் ஐந்நூறு ரூபாவுக்கு மேற்படாத பணத்துடனும் அனைத்து முஸ்லிம்களையும் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரிக்கு வருமாறு இத்தால் அறிவுறுத்தல் விடுக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறி நடப்பவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்'
இதுதான் புலிகளின் அந்த அறிவுறுத்தல்.

உஸ்மானியாக் கல்லூரியில் கூடிய அனைத்து முஸ்லிம்களும் லாரி களில் ஏற்றப்பட்டு வட மாகாணத்துக்கு வெளியே கொண்டு சென்று விடுவிக்கப்பட்டனர். 1981ஆம் ஆண்டின் குடிசன மதிப்பீட்டின்படி யாழ் நகரத்தில் மட்டும் வாழ்ந்த முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை 14இ844.

யாழ்ப்பாணம் ,முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி, ஆகிய வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் சுமார் 78ஆயிரம் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். யாழ் நகர முஸ்லிம் மக்களை இரண்டு மணித்தியால கால அவகாசத்தில் வெளியேற்றிய புலிகள்இ முப்பதாம் திகதிக்கு முன்னதாகவே வடக்கின் ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம்களை வெளியேற்றினார்கள்.

முதன் முதலாக யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 12 மைல்கள் அப்பாலுள்ள சாவகச்சேரியில் வாழ்ந்து வந்த சுமார் 1500 முஸ்லிம்கள் விரட்டப்பட்டனர். இது அக்டோபர் மாதம் 28ஆம் திகதி இடம்பெற்றது. இதன் பின்னர் கிளிநொச்சி மன்னார் என்று அனைத்து வடபுல மாவட்டங்களிலிருந்தும் விரட்டப்பட்டனர்.

வடக்கிலிருந்து முஸ்லிம் மக்களை விரட்டுவதற்கு முன்னதாகவே கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்செயல்களைப் புலிகள் கட்டவிழ்த்து விட்டிருந்தனர். 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்றாம் திகதி கிழக்கில் காத்தான்குடியிலுள்ள இரண்டு பள்ளிவாசல்களுக்குள் வைத்து 140 முஸ்லிம்களைப் புலிகள் சுட்டுக்கொன்றனர்.

அன்று ஒரு வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹுசைனியா பள்ளிவாசலுக்குள்ளும் மீரா ஜும்மாப் பள்ளிவாசலுக்குள்ளும் ஆயுதபாணிகளாகப் புகுந்த புலிகள் தொழுதுகொண்டிருந்த அப்பாவி முஸ்லிம்களைச் சுட்டுக் கொன்றனர். இத் தாக்குதலின்போது சுமார் 70 முஸ்லிம்கள் காயங்களுக்கு இலக்கானார்கள்.

இக்கொடூரம் இடம்பெற்றுச் சரியாக ஒன்பது நாட்களுக்குப் பின்னர் மற்றொரு இரத்த வேட்டையைப் புலிகள் நடத்தினார்கள். ஏறாவூர் பிச்சிநகர் என்ற முஸ்லிம் கிராமத்துக்குள் ஆயுததாரிகளாகப் புகுந்த புலிகள் 118 முஸ்லிம் மக்களைச் சுட்டும் வெட்டியும் கொன்றனர். இந்த ஈனத்தனமான நடவடிக்கையின்போது கொல்லப்பட்டவர்களில் 51 பேர் ஆண்கள் 36 பேர் பெண்கள் 31 பேர் பிள்ளைகள். நகைகளையும் பெறுமதி வாய்ந்த பொருட்களையும் கூடப் புலிகள் கொள்ளையடித்துச் சென்றனர். மட்டக்களப்பு – பொலநறுவை வீதியில் ஏறாவூர் அமைந்துள்ளது. மட்டக்களப்பிலிருந்து ஒன்பது மைல்கள் அப்பால் ஏறாவூர் உள்ளது. பிச்சிநகர்ப் படுகொலை ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி நடைபெற்றது.

1990ஆம் ஆண்டு கிழக்கில் சுமார் ஐநூறுக்கு மேற்பட்ட முஸ்லிம்களைப் புலிகள் சுட்டுக் கொன்றனர். அந்த வருடம் ஜூலை மாதம் முப்பதாம் திகதி அக்கரைப்பற்றில் 14 முஸ்லிம்கள் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி அம்பாறை முள்ளியன்காடு என்ற கிராமத்தில் வயல்வெளியில் வேலை செய்துகொண்டிருந்த 17 முஸ்லிம் விவசாயிகளைப் புலிகள் சுட்டுக் கொன்றனர். மறுநாள் ஆறாம் திகதி அம்பாறையில் மேலும் 33 முஸ்லிம் விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 15ஆம் திகதி அம்பாறைஇ அரந்தலாவைக்கு அருகேயுள்ள முஸ்லிம் கிராமமொன்றுக்குள் புகுந்த புலிகள் ஒன்பது முஸ்லிம்களைச் சுட்டுக் கொன்றனர். இவற்றை விடவும் மேலும் பல படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

வடக்கிலிருந்து முஸ்லிம் மககள் விரட்டப்படுவதற்குச் சில மாதங்கள் முன்னதாக 35 முஸ்லிம் வர்த்தகர்களைப் புலிகள் கடத்திச் சென்றனர். கப்பம் கோரியே இந்த வடபகுதி முஸ்லிம் வர்த்தகர்கள் கடத்தப்பட்டனர்.

இவர்களில் 18 பேர் கடத்தப்பட்டுச் சில மாதங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டனர். ஏனைய 17 வர்த்தகர்களுக்கும் என்ன நடந்ததென்ற மர்மம் இன்றுவரை மூடுமந்திரமாகவே இருக்கிறது. புலிகளுக்குக் கப்பம் வழங்கிய வர்த்தகர்கள் மட்டுமே விடுவிக்கப்பட்டனர்.

வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம் மக்கள் புத்தளம் அநுராதபுரம் குருநாகல் உட்படப் பல தென்னிலங்கைப் பகுதிகளில் 150இற்கு மேற்பட்ட அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்தனர். இருபது வருடங்கள் கழிந்துவிட்ட இன்றைய நிலையில் அந்த மக்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகியுள்ளது. இன்னமும் அந்த மக்கள் தமது சொந்த வாழ்விடங்களில் முற்றுமுழுதாக மீள்குடியேற்றப்படவில்லை என்ற நிலைமை தொடரத்தான் செய்கிறது.

எனவே ,தமிழினத்தினை காப்பாற்றிட போராடும் தமிழினத் தலைவர் அவர்களே ! டாக்டர் கலைஞர் அவர்களே ! 20 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த நாட்டில் , சொத்து சுகங்களை இழந்து அகதிகளாக வாழும் லட்சக்கணகான தமிழர்களாகிய முஸ்லிம்களுக்கும் வாழ்வாதாரமும் , அவர்கள் சொந்த இடங்களில் மீழ் குடியமர்வும் கிடைத்திடவும் நீங்கள் டெசோ மூலம் போராட வேண்டும் ,அதனில் வெற்றிகாண வேண்டும் என்று கண்ணீர் சிந்த கேட்டுக் கொள்கிறேன் .

----- எஸ்.கே.எம். ஹபிபுல்லா