Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 9 மார்ச், 2013

நெல்லை மாவட்டத்தில் விடிய விடிய மழை: ஒரே நாளில் சேர்வலாறு அணை 10 அடி உயர்ந்தது, நீரில் மிதக்கும் நெல் பயிர்


திருநெல்வேலி மாவட்டத்தில் விடிய விடிய மழை பெய்தது. புதன்கிழமை பகலிலும் மழை நீடித்ததால் அறுவடை பருவத்தில் உள்ள நெல்பயிர்கள் நீரில் மிதக்கின்றன. இதனால் நெல் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. பாபநாசம், சேர்வலாறு, கடனாநதி உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
 வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் 2- வது நாளாக மழை பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. புதன்கிழமை பகலிலும் மழை நீடித்தது.

 ஒரே நாளில் 10 அடி உயர்ந்தது: மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்புப் பகுதியில் பெய்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1834.51 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 274 கனஅடியும், கடனாநதி அணைக்கு விநாடிக்கு 340 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 68 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.

 பாபநாசம் அணையின் நீர்மட்டம் 2.55 அடி உயர்ந்து 44.50 அடியாக இருந்தது. சேர்வலாறு அணை 10 அடி உயர்ந்து 64.96 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 80.60 அடியாக இருந்தது. கடனாநதி அணையின் நீர்மட்டம் 7.40 அடி உயர்ந்து 54.50 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 5.50 அடி உயர்ந்து 38.00 அடியாகவும் இருந்தது.

 நீரில் மிதக்கும் நெல் பயிர்: அம்பாசமுத்திரம் வட்டத்தில் கன்னடியன் கால்வாய், வடக்கு மற்றும் தெற்கு கோடைமேலழகியான் கால்வாய், நதியுன்னி கால்வாய் பாசனத்தில் அம்பை, விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சேரன்மகாதேவி, பத்தமடை, முக்கூடல், கடையம் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அறுவடை முடிந்து விட்டன. தாமதமாக நடவு செய்த இடங்களில் இன்னும் ஒரு சில தினங்களில் அறுவடை செய்யும் பருவத்தில் உள்ளது. இந்த சூழலில் மழை பெய்து வருவதால் நெல்பயிர்கள் நீரில் மிதக்கின்றன. விவசாயிகள் வயலில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 தொடர்ந்து மழை நீடித்தால் நெல் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு, விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும் என அவர்கள் கவலை தெரிவித்தனர்.
 இந்நிலையில் தொடர் மழை காரணமாக மாலையில் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் அதிகரித்தது. இதையடுத்து அணைகள் மூடப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக