Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 2 மார்ச், 2013

முறையான பயன்பாட்டுச் சான்று இல்லாததால் எம்.பி. தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதி ரூ. 3,003.5 கோடி நிறுத்திவைப்பு


மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை கேள்வியொன்றுக்கு எழுத்துமூலம் அளித்த பதிலில் மத்திய திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் ஸ்ரீகாந்த்குமார் ஜேனா கூறியது: 2013-ஆம் ஆண்டு மார்ச் இறுதிவரையிலான எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியில் ரூ. 3,003.5 கோடி மதிப்பிலான நிதி வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

இத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகள் தொடர்பாக அளிக்கப்பட வேண்டிய பயன்பாட்டுச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாத காரணத்தால் நிதி வழங்குதல் நிறுத்தப்பட்டுள்ளது என்றார்.

எம்.பி. தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒரு எம்.பி. தமது தொகுதியில் ஏதேனும் ஒரு திட்டத்தைப் பரிந்துரை செய்யலாம். அதனை செயல்படுத்துவது அந்த தொகுதி உட்பட்ட மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்பாகும்.

ஒரு மக்களவைத் தொகுதி உறுப்பினர் தமது தொகுதியில் ஆண்டுக்கு ரூ.5 கோடி வரையிலான மேம்பாட்டுத் திட்டம் எதையேனும் மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை செய்யலாம். மாநிலங்களவை உறுப்பினரைப் பொருத்தவரை, அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலத்தின் ஒன்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்குப் பரிந்துரை செய்ய இயலும்.

மாநிலங்களவை, மக்களவைக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர் ஒருவர் நாட்டின் எந்தப் பகுதியிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் அவருக்கு விருப்பமான மேம்பாட்டுத் திட்டம் ஒன்றை பரிந்துரை செய்யலாம்.

 மேம்பாட்டுத் திட்ட நிறைவேற்றம் குறித்து பயன்பாட்டுச் சான்றிதழை அந்த உறுப்பினர் வழங்க வேண்டும். ஒரு பணி குறித்துப் பயன்பாட்டுச் சான்று வழங்கப்படாவிட்டால் பின்னர் அந்த உறுப்பினர் அடுத்துப் பரிந்துரைக்கும் வேறு திட்டங்களுக்கு நிதி வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்படும்.

நீலகிரி அணைகளில் தண்ணீரின் அளவு குறைகிறது : மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்


நீலகிரியில், மின்சாரம் உற்பத்தி செய்ய பயன்படும் முக்கிய அணைகளில், தண்ணீரின் அளவு குறைந்து வருவதால், மின் உற்பத்திக்கு சிக்கல் ஏற்படும் அபாயம் உருவாகி வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள, 13 மின் நிலையங்கள் மூலம், தினமும், 833 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்தாண்டு, போதுமான மழை பெய்யாத நிலையில், தென்மேற்கு
மற்றும் வடகிழக்கு பருவமழையும் பொய்த்தது. இதனால், மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும், அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு உள்ளிட்ட முக்கிய அணைகளில், தண்ணீர் அளவு வெகுவாக குறைந்து காணப்படுகிறது.

மழை இல்லையே! : இந்த அணைகளை நம்பியுள்ள, குந்தா, கெத்தை, பரளி, பில்லூர் உள்ளிட்ட மின் நிலையங்களில், தினமும், 515 மெகா வாட் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது.

தற்போது, அணைகளில், தண்ணீரின் அளவு குறைந்து கொண்டே வருவதால், மின் உற்பத்தியின் அளவும் குறைந்துள்ளது. அதே போல், பைக்காரா மின் உற்பத்தி திட்டத்தின் கீழ் உள்ள முக்கிய அணைகளிலும், தண்ணீர் அளவு குறைந்து வருகிறது. இதனால், அங்கும் மின்சாரம் உற்பத்தி செய்வதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ""மழை இல்லாததால், அணைகளில், தண்ணீர் அளவு வெகுவாக குறைந்து, மின் உற்பத்தியில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. அணைகளில் உள்ள தண்ணீரின் அளவு, இன்னும் ஓரிரு வாரத்திற்கு மட்டுமே தாங்கும். வரும் நாட்களில் மழை பெய்தால் தான், தடைஇல்லாமல் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்'' என்றார்.

பார்சன்ஸ் வேலியால் பாதகம் வருமா?:
 மின் உற்பத்திக்கு பயன்படும் அணைகளில், பார்சன்ஸ் வேலி அணையின் தண்ணீர், ஊட்டி குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. இந்த அணையில், தற்போது, 40 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. வரும் நாட்களில், இதில் இருந்து, மின்சார உற்பத்திக்காக தண்ணீர் எடுத்தால், ஊட்டியில் குடிநீர்தட்டுப்பாடு ஏற்படும். இன்னும் இரண்டு வாரங்களில், கோடை சீசன் துவங்கவுள்ள நிலையில், உள்ளூர் மக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் குடிநீர் வழங்கு வதில், நகராட்சி நிர்வாகம் திணற வேண்டிய நிலை ஏற்படும். இதை உணர்ந்து, "பார்சன்ஸ்வேலி அணையில், குறைந்தபட்சம், 30 அடி தண்ணீரை தொடர்ந்து இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில், மின் வாரியத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதே வேளை, தண்ணீரை எடுக்காமல் இருந்தால், மின்சார உற்பத்தி பாதிக்கும் அபாயமும் உள்ளது. மழை வந்தால் மட்டுமே இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

50 கிராம மக்களை மிரட்டி வரும் யானைக் கூட்டம்!


திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை பகுதியில் இருந்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு யானைக் கூட்டம் கீழ் பகுதிக்கு இறங்கியது. கல்வராயன் மலையடிவாரமான ரெங்கப்பனூர் கிராமத்தில் இறங்கிய யானைக்கூட்டம் பாப்பாத்தி மூலை, மூணாம் சுனை, மல்லாபுரம், பாவளம், அரசம்பட்டு, புதுப்பாளப்பட்டு, செட்டியாறு, பாச்சேரி, மட்டப்பாறை, எருத்தவாய் நத்தம், பரிகம், அக்ராபாளையம், மூங்கில்பாடி, சின்னசேலம் இந்த கிராமங்களில் ஆங்காங்கே கடந்த 15 நாட்களாக கரும்பு, வாழை, வெங்காயம், நெல் போன்ற விவசாய பொருட்களை சேதப்படுத்தியது.

    எடுத்தவாய் நத்தம் கிராமத்தில் விஜயா என்பவர் வீட்டினை இடித்தது. வாட்டர் டேங்கில் உள்ள தண்ணீரை குடித்துவிட்டு டேங்கை சேதப்படுத்தியது. மாற்றுத்திறனாளியான ஹரிதாஸ் தனது வயலை கண்காணிக்க சென்றுள்ளார். அப்போது யானைக் கூட்டம் நிற்பதை பார்த்து அலறி சத்தம் போட்டுள்ளார். பொதுமக்கள் வருவதற்குள் யானைக் கூட்டம் அவரை மிதித்து கொன்றது.

    இதையடுத்து டாக்டர் மனோகரன் தலைமையிலான மாவட்ட வன அலுவலர் ஜெயராமன், வனபாதுகாவலர் கருணைப்ரியா, ரேஞ்சர், கொளஞ்சியப்பன், சேகர் உட்பட 11 பேர் கொண்ட குழுவினர் யானைக் கூட்டத்தை பின்தொடர்ந்தனர். யானைக் கூட்டம் மக்கள் வாழும் பகுதிக்கு வந்தது ஏன் என்றும், அதனை திருப்பி காட்டுக்குள் கொண்டு சென்று விடுவதை பற்றியும் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

    கோமுகி ஆற்றைக் கடந்து பொட்டியம் என்ற கிராமத்தை நோக்கி யானைக் கூட்டம் வந்தது. பரிகம் கிராமத்தில் வசிக்கும் வசந்தி என்பவர் வீட்டை முற்றிலும் சேதப்படுத்தியது. பீரோ, கட்டில், டிவியை நொறுக்கியது. சாமிதுரை என்பவர் களத்தில் வைத்திருந்த நெல் மூட்டைகளை சேதப்படுத்தியது. மேலும் 8 பசுமாடுகள், கன்றுக்குட்டிகளை மிதித்து கொன்றது. பின்னர் அக்கராபாளையம் நோக்கி சென்றது. அங்கு பொதுமக்கள் யானைக் கூட்டத்தை உள்ளே நுழையக் கூடாது என்பதற்காக வெடி வெடித்தனர்.

    பின்னர் அந்த யானைக் கூட்டம் சின்னசேலம் நோக்கி வந்தது. அங்கும் பொதுமக்கள் வெடி வெடித்தனர். இதையடுத்து மூங்கில்பாடி நோக்கி சென்றது.

    யானையை பின் தொடர்ந்து சென்ற வனத்துறையினரிடம் நாம் விசாரித்தபோது, காட்டுக்குள் தண்ணீர் இல்லை. பசுமை இல்லை. அதனால்தான் வெளியே வருகிறது. மூத்த யானைகள் கடந்த காலங்களில் சென்ற வழியை ஞாபகப்படுத்தி தற்போது அதே பாதையில் தான் செல்கிறது. காலப்போக்கில் யானை வழிதடத்தில் நம் மக்கள் விவசாயம் செய்ய ஆரம்பித்துவிட்டனர். நாங்கள் யானையை திருப்பிக்கொண்டு போய் காடுகளில் விட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோ என்றனர்.