Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 27 ஜூலை, 2013

பொள்ளாச்சியில் கீரை விலையை கேட்டு மக்கள் அதிர்ச்சி

அனைவரும் விரும்பி சாப்பிடும் கீரையின் விலை அதிகரித்துள்ளதால் மக்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். கீரைகளில் பல சத்துகள் இருப்பதால் அன்றாட உணவில் இது நிச்சயம் இடம் பிடிக்கிறது. முருங்கை கீரை, வல்லாரை கீரை, சிறு கீரை, பாலாக்கீரை, சுக்கிட்டி கீரை, பொன்னாங்கன்னி கீரை, வெந்தய கீரை, தண்டங்கீரை, அகத்தி கீரை, உள்ளிட்டவை மார்க்கெட்டில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பகுதிக்கு உடுமலை, செஞ்சேரிமலை மற்றும் கேரள பகுதிகளில் இருந்து கீரை விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

பொள்ளாச்சி சுற்றுப்புற பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கடைகளிலும், ரோடுகளிலும், தள்ளு வண்டிகளிலும் கீரை விற்பனை செய்து வருகின்றனர்.இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன் வெறும் ரூ.3-7 வரை ஒரு கட்டு கீரை விற்பனை செய்யப்பட்டிருந்தது. ஆனால், தற்போது கீரையின் விலை இரு மடங்கு அதிகரித்துள்ளது. ஒரு கட்டு கீரை ரூ.10-15 வரை விற்பனை செய்யப்படுகிறது. விலையை கேட்டவுடன் மக்கள் ஓட்டம் பிடிக்கும் நிலையுள்ளது.

இதுகுறித்து வியாபாரி ரவீந்திரன் கூறியதாவது:பொள்ளாச்சி சுற்றுப்புற பகுதிக்கு உடுமலை, கேரளப்பகுதியில் இருந்து கீரை வரத்துள்ளது. கடந்தாண்டை ஒப்பிடும் போது இந்தாண்டு விலை இரு மடங்காக அதிகரித்துள்ளது. சில கீரைகளுக்கு தட்டுப்பாடு இருக்கும் போது ரூ.20க்கும் விற்பனை செய்வதுண்டு.வாடிக்கையாளர்களால் இதை ஏற்று கொள்ள முடியவில்லை. விலையை கேட்டு விட்டு திரும்பி செல்கின்றனர். இதற்கு காரணம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பஸ் கட்டணம் அதிகரிப்பு ஆகும். கொள்முதல் விலை அதிகரித்துள்ளதால் மக்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலையுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

நடப்பாண்டில் 50,000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு: ப. சிதம்பரம்

மானாமதுரையில் இந்தியன் வங்கியின் 2110வது கிளையை மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர்,"நாட்டில் 80 லட்சம் சுயஉதவி குழுக்களுக்கு 86 கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் கல்வி கடனாக 50 ஆயிரம் கோடி ரூபாய் 25 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணையின் விலை பேரலுக்கு 108 டாலராக உயர்ந்து விட்டது. 100 டாலருக்குள் இருந்தால் மட்டுமே பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும், கச்சா எண்ணை இறக்குமதியும் 70 சதவிகிதமாக உயர்ந்து விட்டது. 

பொருளாதார வளர்ச்சியில் மற்ற நாடுகள் பின்தங்கியுள்ள நிலையில் இந்தியா சீனாவிற்கு அடுத்தபடியாக தொடர்நது 2வது இடத்தில் உள்ளது. 9 சதவிகிதமாக இருந்த வளர்ச்சி 5 ஆக உள்ளது அடுத்தாண்டிற்குள் 6 சதவிகிதமாக உயரும் என நம்புகிறேன் என்று குறிப்பிட்ட அவர் அதனைத் தொடர்ந்து மிளகானூர் கிராமத்தில் ஓரியண்டல் வங்கியின் 2010 வது கிளையை திறந்து வைத்து..," நடப்பாண்டில் 8,000 வங்கி கிளைகள் துவங்கப்படவுள்ளன. இதனால் 50,000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்"  என உறுதிப்படக் கூறினார்.