Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 7 பிப்ரவரி, 2013

வறட்சியால் தென்காசி அருகே கால்நடைகளுக்கு தீவனமாகி வரும் நெற் பயிர்கள்


நெல்லை மாவட்டத்தின் மேற்கு பகுதியான பாவூர்சத்திரம், தென்காசி, ஆயிரப்பேரி, பழையக் குற்றாலம், குற்றாலம், ஐந்தருவி, இலஞ்சி, பாட்டப்பத்து, குன்னக்குடி, பண்பொழி, வடகரை, புளியரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயமே பிரதான தொழிலாக அங்கம் வகிக்கிறது.
இப்பகுதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியாக இருப்பதால் எப்போதும் நீர்வரத்து அதிகரித்து காணப்படும். மேலும் கார், பிசானம் என இருபோகம் நெல் பயிரும், அறுவடைக்கு பின் நிலக்கடலை, உளுந்து பயிர்களும் பயிரிடப்பட்டு மூன்று போகம் விளையும் விளை நிலங்களாக இருந்தன.

கடந்த ஆண்டுகளில் இப்பகுதியில் சுமார் 20 ஆயிரம் எக்டேர் நிலப்பரப்பில் நெல் பயிர் நடவு செய்யப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு 754.39 மி.மீ மழை பெய்துள்ளது. இது இயல்பான மழை அளவை விட 7 சதவீதம் குறைவானதாகும். கடந்த மாதம் இயல்பான மழையளவு 50.2 மி.மீ ஆகும். ஆனால் 2.மி.மீ மழையே பெய்துள்ளது. இது 96 சதவீதம் குறைவான மழையாகும்.

நடப்பாண்டில் தென்காசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 1500 எக்டேர் நிலப்பரப்பில் நெற்பயிர் நடவு செய்யப்பட்டது. ஆனால் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழையும் பொய்த்து விட்டதால் ஆறு, ஏரி, குளம், கிணறு போன்றவற்றில் தண்ணீரின்றி நெல் பயிர்களுக்கு உரிய முறையில் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் போனது.

இதனால் கழிவு நீரோடைகளிலிருந்து கால்வாய் மூலம் கழிவுநீர் தோண்டி விடப்பட்டு பயிர்களை காப்பாற்றும் முயற்சியிலும் ஈடுபட்டனர். அதுவும் பலனளிக்கவில்லை.
நெல் பயிர்கள் அறுவடை செய்ய இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் பங்குனி, சித்திரை அக்னி நட்சத்திரம் நாளில் வெயிலின் ஆதிக்கம் அதிகரிக்கும் நிலையில் போதிய தண்ணீரின்றி கடும் வறட்சியின் காரணமாக பல ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட நெல் பயிர்கள் கருகி தீவு போன்று காணப்படுகிறது.

கருகிய பயிர்களை கால்நடைகளுக்கு தீவனமாய் பயன்படுத்தும் நிலையில் விவசாய பணிகளுக்கு தண்ணீரின்றி விவசாயிகள் கண்ணீர் வடிக்கும் சூழ்நிலை நிலவிவருகிறது.

பறக்கும் படை பணிகளை புறக்கணிப்போம்... முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு


தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் 1ம் தேதி பிளஸ் 2 தேர்வுகள் ஆரம்பமாகிறது. இதனையொட்டி பிராக்டிக்கல் தேர்வுகள் கடந்த 4ம் தேதி ஆரம்பமாகி தொடர்ந்து நடக்கிறது. வரும் 18ம் தேதிக்குள் பிராக்டிக்கல் தேர்வுகளை முடிக்க கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிளஸ் 2 பொது தேர்வில் தேர்வு மையங்களில் தேர்வுகளை கண்காணிக்கவும், முறைகேடுகளை தடுக்கவும் பல்வேறு பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

பறக்கும் படையில் குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு ஒவ்வொரு நாளும் உழைப்பூதியமாக 100 ரூபாய் வழங்கப்படும். ஒவ்வொரு உறுப்பினரும் குறைந்தது 10 நாட்கள் முதல் 12 நாட்கள் வரை இப்பணியில் ஈடுபட்டனர். இதில் நெல்லை கல்வி மாவட்டத்தில் அனைத்து தேர்வு மையங்களிலும் கண்காணிக்க நியமிக்கப்பட்டிருந்த பறக்கும் படையினருக்கு இதுவரை உழைப்பூதியம் வழங்கப்படவில்லை. இதுசம்பந்தமாக தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த சூழ்நிலையில் வரும் பிளஸ் 2 தேர்வுக்கு முன்பாக பறக்கும் படையினருக்கு உழைப்பூதியம் வழங்க வேண்டும். இல்லையெனில் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வுக்கு பறக்கும் படை பணிகளை புறக்கணிக்க முதுகலை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதுசம்பந்தமாக நெல்லையில் நேற்று முதன்மை கல்வி அலுவலர் காதர் சுல்தானை சந்தித்து, தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் மனோகரன், மாவட்ட துணைத் தலைவர் ஜோஸ்வா கிறிஸ்டோபர், நெல்லை கல்வி மாவட்ட தலைவர் ஆசீர் சார்லஸ் நீல் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.

பள்ளி ஆசிரியர்களின் திறன் : மன்மோகன் சிங் கவலை


 "நம் நாட்டில், ஆசிரியர்களின் கல்வி போதிக்கும் திறன், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இல்லை. கல்வித் துறையில் உள்ள, முக்கிய பிரச்னைகளுக்கு, உடனடியாக தீர்வு காண வேண்டும்," என பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின், பொன் விழா கொண்டாட்ட விழாவில், பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:பள்ளி படிப்பை, பாதியிலேயே கைவிடுவோரின் எண்ணிக்கையை குறைக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனாலும், பள்ளி படிப்பை, பாதியில் கைவிடுவோரின் எண்ணிக்கை, அதிகமாகவே உள்ளது. இது, மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது.

நாட்டின் குடிமகன்கள், தரமான கல்வி கற்றால் மட்டுமே, நாடு, வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்பதை, அரசு உணர்ந்துள்ளது. ஐ.மு., கூட்டணி அரசு, பதவிக்கு வந்ததிலிருந்து, கல்வித் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இத் துறையில், அதிகமான முதலீடு செய்யப்படுகிறது.

சமுதாயத்தின் அடித்தட்டில் உள்ளவர்களும், தரமான கல்வி கற்க வேண்டும். தரமான கல்வி கற்பதற்கு, அவர்களுக்கு, போதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும். நம் நாட்டில், ஆசிரியர்களின் கல்வி கற்பிக்கும் திறன், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இல்லை.

கல்வித் துறையில், இது போன்ற பல்வேறு பிரச்னைகள் உள்ளன. இதற்கு, உடனடியாக தீர்வு காண வேண்டும். தரமான கல்வியை அளிப்பதில், கேந்திரிய வித்யாலயா சிறப்பாக செயல்படுகிறது. இந்த பள்ளிகளில், தங்களுக்கு அருகில் உள்ள, மற்ற பள்ளிகளுக்கு, முன் மாதிரியாக செயல்பட வேண்டும்.இவ்வாறு, மன்மோகன் சிங் பேசினார்.