Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 23 நவம்பர், 2012

கிராமப்புற மேம்பாடு தொடர்பான டிப்ளமோ படிப்பு


 கிராமப்புற மேம்பாட்டிற்கான தேசிய கல்வி நிறுவனம், கிராமப்புற மேம்பாட்டு மேலாண்மைத் துறையில், தனது 6வது 1 வருட முழுநேர ரெசிடென்ஷியல் முதுநிலை டிப்ளமோ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

PGDRDM என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த டிப்ளமோ படிப்பு, வரும் 2013-14ம் கல்வியாண்டில் வழங்கப்படவுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இதற்கான அகில இந்திய நுழைவுத்தேர்வு 2013ம் ஆண்டு, பிப்ரவரி 10ம் தேதி நடைபெறும். 2013, ஆகஸ்ட் மாதம் தொடங்கும் இந்தப் படிப்பு, 2014ம் ஆண்டு ஜுலை மாதம் நிறைவடையும்.

விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் இறுதி தேதி  ஜனவரி 11, 2013. அதேசமயம், ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள், அந்தமான்-நிகோபர் மற்றும் லட்சத்தீவுகளை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கும் கடைசித் தேதி 2013, ஜனவரி 18ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பிக்கும் முறை, கட்டணம் மற்றும் இதர விபரங்களை அறிய www.nird.org.in/pgdrdm என்ற வலைத்தளம் செல்க.

எளிதான வெளிநாட்டுக் கல்வி! (சிங்கப்பூர்)


இந்தியாவிலிருந்து சில மணி நேரங்களில் அடைந்துவிடக்கூடிய ஒரு இடமான சிங்கப்பூர், பலவித காரணங்களுக்காக இந்திய மாணவர்களைக் கவரும் இடமாக உள்ளது.

QS போன்ற சர்வதேச அளவிலான சர்வேக்களில், உலகளவில் சிறந்த பல்கலைகளில், முதல் 20 இடங்களுக்குள் சிங்கப்பூர் பல்கலைகள் வருகின்றன. ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்திற்கு, சிங்கப்பூர் பல்கலைகள் பெயர்பெற்று விளங்குகின்றன.

சர்வதேச மாணவர்களின் பாதுகாப்பிற்கு சிறப்பான உத்தரவாதம் கிடைக்கும் இந்நாட்டில், பல நாடுகளை ஒப்பிடும்போது, கல்விக் கட்டணமும் குறைவே. அதேசமயம், தரமான கல்வியும் உண்டு. வெளிநாடு சென்று படிக்க விரும்பும் ஒருவர், அமெரிக்கா அல்லது பிரிட்டன் நாடுகளுக்கு செல்வதற்கு ஆகும் பயண செலவை விட, சிங்கப்பூர் செல்வதற்கு ஆகும் செலவு மிக மிக குறைவு.

சர்வதேச அறிவுக் கூடல்
சிங்கப்பூரில், INSEAD, SP Jain Centre of Management and SIM university போன்ற வெளிநாட்டுப் பல்கலைகளின் செயற்கைக்கோள் வளாகங்களும் உண்டு. வலுவான சர்வதேச தொடர்பை இந்நாடு பெற்றுள்ளதால், உலகளவிலான பல பல்கலைகளின் ஒருங்கிணைப்பை பெற முடிகிறது. Massachusetts institute of technology, US and Zhejiang university(China), MIT, Washington university, Carnegie Mellon university, Yale Stanford போன்ற பல பல்கலைகளுடன் ஒத்துழைப்புகள் உள்ளன.

படிப்புகள் மற்றும் செலவினங்கள்
இந்திய மாணவர்கள் பொதுவாக, பொறியியல், மேலாண்மை, ஐடி மற்றும் சுற்றுலாத் தொடர்பான படிப்புகளை மேற்கொள்ள சிங்கப்பூர் வருகின்றனர். இளநிலைப் படிப்புகளுக்கு, வருடத்திற்கு, சராசரியாக, 25,000 முதல் 30,000 சிங்கப்பூர் டாலர்கள் வரை செலவாகின்றன. அதேசமயம், தகுதிவாய்ந்த(Meritorious) மாணவர்களுக்கு, வருடத்திற்கு 11,000 சிங்கப்பூர் டாலர்கள் வரை உதவித்தொகை கிடைக்கிறது.

தோராயமாக, ஒரு மாதத்திற்கான தங்குமிட செலவினம் 700 முதல் 900 சிங்கப்பூர் டாலர் வரை செலவாகிறது. இளநிலைப் பட்டப் படிப்புகள் 3 வருடங்களும், முதுநிலைப் படிப்புகள் 2 வருடங்களும் கொண்டவை. அதேசமயம், இரட்டைப் பட்டப் படிப்புகள், 4 முதல் 5 வருடங்கள் வரை ஆகும்.

உதவித் தொகைகள்
National university of Singapore(NUS), Nanyang technological university(NTU), Management university(SMU) போன்ற சிங்கப்பூர் பல்கலைகள், வெளிநாட்டு மாணவர்களுக்கான உதவித்தொகை திட்டங்களை வழங்குகின்றன.

விசா விதிமுறைகள்
பல்கலையிடமிருந்து அனுமதி பெற்ற பிறகு, மாணவர் அனுமதி சீட்டிற்காக(Student pass), Immigration and Check points Authority -ஐ அணுகவும்.

உங்களின் விண்ணப்பம் ஏற்கப்பட்டவுடன், ஏற்பு(acceptance) விண்ணப்பம் மற்றும் மாணவர் அனுமதி சீட்டு விண்ணப்பம் ஆகியவற்றை நிறைவுசெய்து, அவற்றை பல்கலையில் திருப்பி ஒப்படைக்க வேண்டும்.

உங்களின் ஏற்பு விண்ணப்பம் மற்றும் மாணவர் அனுமதி சீட்டு விண்ணப்பம் ஆகியவை ஏற்கப்பட்ட பின்னர், சம்பந்தப்பட்ட பல்கலையானது, சிங்கப்பூர் குடியேற்ற மற்றும் சோதனை அத்தாரிடியிடமிருந்து(ICA), மாணவர் அனுமதி சீட்டிற்கு விண்ணப்பிக்கும்.

அந்த அனுமதியை ICA -இடமிருந்து பெற்ற பின்னர், அதற்கான கடிதத்தை, அந்தப் பல்கலை அல்லது கல்வி நிறுவனம், உங்களுக்கு அனுப்பும்.

கலை-அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள்!


மாநில திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 20 ஆயிரம் கல்லூரி மாணவர்களுக்கு, மென் திறன்கள் மற்றும் வேலை வாய்ப்புத் திறன்கள் தொடர்பாக பயிற்சியளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும், மூன்றாமாண்டு மாணவர்களுக்கு, மொத்தம் 235 மணி நேரங்கள் பயிற்சியளிப்பது இத்திட்டத்தின் நோக்கம். இதன்மூலம், கல்லூரி படிப்பை முடித்து வெளிவரும் மாணவர்கள், ஐ.டி, ஐ.டி.இ.எஸ், சில்லறை வர்த்தகம் மற்றும் விருந்தோம்பல் துறைகளில் பணிவாய்ப்புகள் பெறுவது எளிதாக்கப்படும்.

தகவல் தொடர்பு திறன்கள், ஆங்கில உச்சரிப்பு மற்றும் இலக்கணம், வாடிக்கையாளர் சேவை திறன்கள், பி.சி அப்ளிகேஷன்ஸ், சட்டச்சு திறன்கள், நேர்முகத் தேர்வுக்கு தயாராதல் போன்ற அம்சங்கள் இப்பயிற்சி திட்டத்தில் அடங்கும். இவைத்தவிர, ஐ.டி.இ.எஸ், சில்லறை வர்த்தகம் மற்றும் விருந்தோம்பல் போன்ற குறிப்பிட்ட துறைகளுக்கு தேவையான திறன் வளர்ப்பு பயிற்சிகளிலும் கவனம் செலுத்தப்படும்.

இப்பயிற்சி திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, அனுபவம் வாய்ந்த தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் கல்வி நிறுவனங்கள், மாநிலம் முழுவதுமுள்ள 62 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுடன் இணைந்து செயல்படும்.

இந்த தனியார் நிறுவனங்கள் சிறப்பாக செயல்படுவதற்கான ஒத்துழைப்பை, மாநில அரசின் கல்லூரி கல்வித்துறை வழங்கும். கல்லூரி இறுதியாண்டில், 6 முதல் 7 மாதங்கள் வரை நீடிக்கும் இந்த பயிற்சிகள், வாரத்திற்கு தோராயமாக 8 மணிநேரங்கள் வரை வழங்கப்படும்.

இத்தகைய பயிற்சிகள், கிராமப்புறங்களிலிருந்தும், தமிழ் வழியில் கல்விக் கற்றும் வரும் மாணவர்களுக்கு, பேருதவியாக இருந்து, அவர்களின் ஆங்கில மொழித்திறனை மேம்படுத்த உறுதுணையாக இருக்கும். பயிற்சியளிக்கும் தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு உதவிக் குழுவானது, ஐ.டி. ஐ.டி.இ.எஸ், சில்லறை வணிகம் மற்றும் விருந்தோம்பல் துறை நிறுவனங்களிடம் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு, மாணவர்களின் வேலை வாய்ப்புகளை உறுதிசெய்யும் விதமாக பணியாற்றும்.

படிப்பு மற்றும் பயிற்சிகளை முடித்த மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்கள், சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம் மற்றும் வேலூர் ஆகிய 7 இடங்களில் நடத்தப்படும். இதன்மூலம், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள மாணவர்கள் எளிதாக கலந்துகொள்ள வழியேற்படும். மாநில அரசின் இந்த புதிய திட்டத்தை, கல்வியாளர்கள் பலர் வரவேற்றுள்ளனர்.

திமுக மூத்த தலைவர் வீரபாண்டி ஆறுமுகம் மரணம்


முன்னாள் தி.மு.க., அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

சேலம் மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் மருத்துவமனையில் இன்று காலமானார். சில நாட்களுக்கு முன்பு வீரபாண்டி ஆறுமுகத்தின் உடல்நிலை பாதித்து சளித் தொல்லையால் அவர் அவதிப்பட்டார். இதனால் அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார். சேலம் அங்கம்மாள் காலனியில் குடிசைக்குத் தீ வைத்த வழக்கில் குண்டர் சட்டத்தில் வீரபாண்டி ஆறுமுகம் கைதானதும் கடந்த மாதம் வேலூர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1957ம் ஆண்டு தி.மு.க.,வில் உறுப்பினரான வீரபாண்டி ஆறுமுகம், 1957 முதல் 70 வரை பூலாவரி ஊராட்சி ஒன்றிய உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் 1970 ஊராட்சி ஒன்றிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் கடந்த 1962,67,71,89,96 மற்றும் 2006ம் ஆண்டில் சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டார். 1978 முதல் 84ம் ஆண்டு வரை சட்டமேலவை உறுப்பினராக பணியாற்றினார். கடந்த தி.மு.க., ஆட்சியில் வேளாண் துறை அமைச்சராக பணியாற்றினார்.

தி.மு.க., மூன்று நாட்கள் துக்கம்
வீரபாண்டி ஆறுமுகம் மரணமடைந்ததை தொடர்ந்து மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என தி.மு.க., அறிவித்துள்ளது. மேலும் கட்சிக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் 3 நாட்கள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.