Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 31 மே, 2013

நெல்லையில் பரபரப்பு, இடைநிலை ஆசிரியர்கள் திடீர் தர்ணா போராட்டம், கவுன்சிலிங்கில் காலி பணியிடங்கள் மறைப்பு

தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரிய, ஆசிரியைகளுக்கான இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங் பாளை லயோலா கான்வென்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள் மாறுதல் கவுன்சிலிங் நடந்தது. மொத்தம் 18 காலியிடங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான இடைநிலை ஆசிரியர்கள் இக்கவுன்சிலிங்கில் பங்கேற்றனர்.
ஆனால் கவுன்சிலிங் ஆரம்பமான போது மாவட்டத்தில் 11 காலியிடங்கள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு அனைத்து தரப்பு ஆசிரிய, ஆசிரியைகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அனைத்து காலி பணியிடங்களும் காட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கவுன்சிலிங்கை ஆசிரியர்கள் புறக்கணித்தனர். தொடர்ந்து வெளியே வந்து திடீர் தர்ணா போராட்டத்தையும் நடத்தினர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் இப்பிரச்னை தொடர்பாக மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பத்மாவதி, சென்னையில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து காலை 10.30 மணிக்கு மாவட்டத்தில் 15 காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே காட்டிய காலி பணியிடங்களை விட கூடுதலாக 4 காலி பணியிடங்கள் காட்டப்பட்டன.
தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு ஆசிரிய, ஆசிரியைகள் கவுன்சிலிங்கில் பங்கேற்றனர். போராட்டத்தின் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் கவுன்சிலிங் பணிகள் பாதிக்கப்பட்டன.

இதில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் முருகேன்,ரமேஷ், சுடலைமணி, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், ஆரோக்கியராஜ், மருது, ஜான்துரைசாமி, பிரபு கட்டாரி, ரமேஷ், சார்லஸ், மோதிலால், மகேந்திரன்,, அனைத்திந்திய ஆசிரியர் பேரவை பாபு, சீனிவாசன், தமிழக ஆசிரியர் கூட்டணி சாம் மாணிக்கராஜ், தமிழ்நாடு அனைத்து இடைநிலை ஆசிரியர் சங்கம் கிப்சன் உட்பட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து ஆசிரிய சங்கத்தினர் கூறும் போது, ""மாவட்டத்தில் முழுமையாக காலி பணியிடங்கள் காட்டப்படவில்லை. போராட்டம் நடத்தியதை தொடர்ந்து கூடுதலாக சில பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன. ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் 5 காலி பணியிடங்களும் கவுன்சிலிங் மூலம் நிரப்பபடவில்லை. களக்காடு, வள்ளியூர், செட்டிகுளம், மதகனேரி, பண்டாரக்குளம் உட்பட பல காலி பணியிடங்கள் காட்டப்படவில்லை.கவுன்சிலிங்கில் அனைத்து காலி பணியிடங்களையும் தெரிவித்து நேர்மையான, நியாயமான முறையில் கவுன்சிலிங் நடத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்'' என்றனர்.
நேற்று மதியம் ஒன்றியம் விட்டு ஒன்றியம் இடமாறுதல் கவுன்சிலிங் நடந்தது. இன்று (31ம் தேதி) இடைநிலை ஆசிரியர்கள் வெளி மாவட்ட அளவிலான இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கிறது.

பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்து நெல்லை மாவட்ட மாணவிகள் சாதனை

தமிழ் நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் நெல்லை மாணவிகள், மாநிலத்தின் முதல் மூன்று இடங்களைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

நெல்லை ஸ்ரீ ஜெயேந்திரர் மெட்ரிக் பள்ளி மாணவி சோனியா, 500க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலாவதாக தேர்ச்சி பெற்றுள்ளார். இவரது தந்தை பாலமுருகன், திசையன்விளையில் சித்தா டாக்டராக உள்ளார். தாய் பபிதா தேவி, நெல்லை மருத்துவக்கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஓராண்டாக டி.வி.,யை ஒதுக்கி வைத்து விட்டு படித்ததும், பள்ளியில் தொடர்ந்து பரீட்சை எழுதியதுமே தனது வெற்றிக்கு காரணம் என்கிறார் சோனியா.

இதே போல், பழைய குற்றாலம் ஹில்டன் பள்ளி மாணவி, ஷெர்லின் பொன் ஜெபா, 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

மூன்றாவது இடத்தை நெல்லை ஸ்ரீ ஜெயேந்திரர் மெட்ரிக் பள்ளி மாணவி சுருதி பெற்றுள்ளார். இவர் பெற்ற மதிப்பெண் 496. இவரது தந்தை சத்தி எல்.ஐ.சி., அதிகாரியாக உள்ளார். தாய் லட்சுமி பிரபா, கருவூல அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். சுருதியின் தம்பி ஷ்யாமும் இந்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதியிருந்தார். அவர் 490 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கனிமொழிக்கு கொலை மிரட்டல் கடிதம்

திமுக தலைவர் கருணாநிதியின் மகள் , ராஜ்யசபா எம்.பி., கனிமொழிக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. குறிப்பிட்ட ஒரு அமைப்பு சார்பில் வந்த கடிதத்தில், பல முறை நிதியுதவி கேட்டு கடிதம் எழுதியுள்ளதாகவும், ஆனால் இதற்கு எந்தவித பதிலும் தரப்படவில்லை. எந்த நேரத்திலும் உங்களை தாக்குவோம். தங்களால் எந்த நேரத்திலும் உங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது என கூறப்பட்டுள்ளது. இந்த கடிதம் குறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.