Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 8 மே, 2014

பொறியியல் படிப்புகளும் அதற்கான வேலைவாய்ப்புகளும்

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களில் 30-க்கும் மேற்பட்ட பொறியியல் படிப்புகள் உள்ளன. எந்தப் படிப்புகளையும் தேர்வு செய்வதற்கு முன்னதாக அந்தப் படிப்புகள் குறித்த விவரங்களை மாணவர்கள் அறிந்துகொள்வது அவசியம்.
மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் சில என்ஜினீயரிங் படிப்புகள் குறித்த சிறிய அறிமுகம் .......

   

எலெக்ட்ரானிக்ஸ் & கம்யூனிக்கேஷன்ஸ்
என்ஜினீயரிங் படிக்க விரும்பும் பெரும்பாலான மாணவர்களின் முதல் விருப்பம், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன்ஸ். இந்தப் பாடப்பிரிவை எடுத்துப் படிப்பதால் எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிக்கேஷன்ஸ் துறைகளில் மட்டுமல்லாமல் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் தங்களது முத்திரையைப் பதிக்கலாம் என்பதால், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன்ஸ் பாடப்பிரிவை எடுத்துப் படித்து தங்களது வேலைவாய்ப்புத் தளத்தை விரிவுபடுத்திக் கொள்ளவே பல மாணவர்கள் விரும்புகிறார்கள். எனவே, எந்தப் பொறியியல் கல்லூரியாக இருந்தாலும் இப்படிப்பில் சேருவதில்தான் மாணவர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கிறது என்பது வெளிப்படை. எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரான் டிவைசஸ், சிப் டிசைன், சாஃப்ட்வேர் புரோகிராமிங், டிஜிட்டல் சிக்னல் புராசசிங், கம்ப்யூட்டர் கம்யூனிக்கேஷன், டிரான்ஸ்மிஷன் லைன்ஸ், நெட் ஒர்க்கிங், ஆப்டிக்கல் கம்யூனிக்கேஷன், கம்யூனிக்கேஷன் என்ஜினீயரிங், மைக்ரோ புராசசர், மைக்ரோவேவ் என்ஜினீயரிங்...இப்படி பல்வேறு பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன. இந்தப் படிப்பை முடித்துவிட்டு எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிக்கேஷன் தொழில் நிறுவனங்களில் வேலைக்குச் சேரும் மாணவர்களைவிட, கம்ப்யூட்டர் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைப் பணிகளில் சேரும் மாணவர்களே அதிகம்.

    மெக்கானிக்கல்
பொறியியல் பாடப்பிரிவுகளில் முக்கியமான துறை இது. அண்மைக்காலமாக இந்தப் படிப்பில் சேர பல மாணவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் இயந்திர  சாதனங்கள், பொருள் உற்பத்தி முறைகள், பொறியியல் வடிவமைப்பு, கம்ப்யூட்டர் பயன்பாடு போன்றவற்றை உள்ளடக்கியது இப்பாடப்பிரிவு. படிப்புக் காலம் மற்ற பொறியியல் படிப்புகளைப் போல 4 ஆண்டுகள்தான். மெக்கானிக்கல் என்ஜினீயரிங் சாண்ட்விச் படிப்புக்கு மட்டும் ஓராண்டு கூடுதலாக (5 ஆண்டுகள்) படிக்க வேண்டும்.
இந்த ஓராண்டில் மாணவர்கள் தொழிற்சாலைகளில் நேர்முகப் பயிற்சி பெறுவார்கள். இதனால், சாண்ட்விச் படிப்பு படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு சாத்தியங்கள் அதிகம். மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு அரசுத் துறை நிறுவனங்களில் மட்டுமல்லாமல், தனியார் துறை நிறுவனங்களிலும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை கிடைக்கிறது.

    கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங்

இது கம்ப்யூட்டர் யுகம். இந்த மகத்தான கண்டுபிடிப்பு மனித வாழ்வின் சகல அம்சங்களிலும் ஊடுருவி தனது முக்கியத்துவத்தை ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறது. எனவே, கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங் படிப்புக்கு இவ்வளவு மவுசு இருப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. படித்து முடித்த திறமையாளர்களுக்கு உடனடி வேலை, கை நிறைய ஊதியம் என்றால் யாருக்குத்தான் இனிக்காது. எனவேதான், இத்துறையை நோக்கி புற்றீசல் போல மாணவர்கள் படையெடுக்கத் தொடங்கினார்கள். தகவல் தொழில்நுட்பத் துறையின் பிரமாண்டமான வளர்ச்சி இத்துறையில் படிக்கும் மாணவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. கம்ப்யூட்டர் ஹார்டுவேர், புரோகிராமிங் மொழிகள், வடிவமைப்பு, கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங், கம்ப்யூட்டர் வரைவியல், கம்ப்யூட்டர் பொறியியல், டிஜிட்டல் சிஸ்டம்ஸ் போன்ற கம்ப்யூட்டர் துறைக்குத் தேவையான முக்கியப் பாடங்கள் இந்த மாணவர்களுக்குக் கற்றுத் தரப்படுகின்றன. அதாவது கம்ப்யூட்டர் வடிவமைப்பு, உருவாக்கம், செயல்பாடுகள் ஆகிய துறைகளில் கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தொழில்துறை மந்தநிலை போன்ற தாற்காலிகப் பிரச்சினைகள் வந்து போனாலும்கூட, இந்தப் படிப்பைப் படித்த திறமையான மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி(IT)
கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங்கிற்கும் ஐ.டி. என்று அழைக்கப்படும் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி படிப்புக்கும் இடையே அதிக வித்தியாசங்கள் இல்லை. கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் துறையின் உடன் பிறப்பு இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி. கம்ப்யூட்டர் தகவல் தொடர்பான தொழில்நுட்பங்களும் பயன்பாட்டுக்கு ஏற்ப அந்தத் தொழில்நுட்பங்களைக் கையாளுவது குறித்தும் உள்ள படிப்புதான் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி. பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களின் முக்கிய விருப்பப் படிப்புகளில் இதுவும் ஒன்று. இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி படித்த திறமையான மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக்குப் பஞ்சமில்லை!

    எலெக்ட்ரிக்கல் & எலெக்ட்ரானிக்ஸ் 
எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், மின் உற்பத்தி அமைப்புகள், மின் ஆற்றல் பகிர்வு உள்பட எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் தொடர்பான பாடப்பிரிவுகளைக் கொண்டது இப்படிப்பு. எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு  மின் துறை மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்கும். இப்படிப்பைப் படித்துவிட்டு, தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்களில் வேலைக்குச் சேரும் மாணவர்களும் இருக்கிறார்கள்.

    சிவில் என்ஜினீயரிங்
பொறியியல் துறையின் முன்னோடிப் படிப்பு சிவில் என்ஜினீயரிங். கட்டடங்கள், சாலைகள், கால்வாய்கள், அணைகள், பாலங்கள், நீர்த்தேக்கங்கள், வடிகால்கள், துறைமுகங்கள், விமானத் தளங்கள், ரயில் போக்குவரத்து வசதிகள் போன்றவற்றை உருவாக்குவதில் சிவில் என்ஜினீயர்களின் பங்கு முக்கியமானது.
பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டியது இருப்பதால், சிவில் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கான தேவை என்பது தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும். நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித்துறை, ரயில்வே துறை என்று பெரும்பாலும் அரசுப் பணிகளையே சிவில் என்ஜினீயர்கள் நம்பி இருக்க வேண்டியதிருந்தது. இப்போது திறமையான சிவில் என்ஜினீயர்களுக்கு தனியார் கட்டுமானத் தொழில் நிறுவனங்களிலும் நல்ல ஊதியத்தில் வேலை கிடைத்து வருகிறது.

    மெகட்ரானிக்ஸ்
காலத்திற்கேற்ற வகையில் உருவாகி வரும் புதிய பொறியியல் படிப்புகளில் ஒன்று மெகட்ரானிக்ஸ். மெக்கானிக்கல் என்ஜினீயரிங் துறையில் எலெக்ட்ரானிக்ஸ் துறையின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து,  மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டிங் ஆகிய துறைகளின் இணைவுதான் மெகட்ரானிக்ஸ். உற்பத்தித் தொழில்நிறுவனங்கள் மற்றும் ஆட்டோமொபைல் தொழில்நிறுவனங்களில் மட்டுமல்லாமல், தகவல் தொழில்நுட்பத் துறையிலும் இப்படிப்பு படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. 

    ஆட்டோமொபைல் என்ஜினீயரிங்
ஒரு காலத்தில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் துறையின் ஒரு பகுதியாக இருந்த ஆட்டோமொபைல் என்ஜினீயரிங் தற்போது தனித் துறையாக வளர்ந்து விட்டது. வாகன அமைப்பு உருவாக்கம், பராமரிப்பு உள்ளிட்ட ஆட்டோமொபைல் தொடர்பான பல்வேறு தொழில்நுட்பங்கள் இப்படிப்பைப் படிக்கும் மாணவர்களுக்குக் கற்றுத் தரப்படுகின்றன. நேர்முகப் பயிற்சிக்கும் இப்படிப்பில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. போக்குவரத்துக் கழகங்கள், ஆட்டோமொபைல்  உற்பத்தி நிறுவனங்களிலும் ஆட்டோமொபைல் ஆய்வு நிறுவனங்களிலும்  வேலை வாய்ப்புகள் உள்ளன. இந்திய ஆட்டோமொபைல் துறை வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதால், இத்துறையில் படித்த பொறியாளர்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.

    ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங்
விமானங்களை வடிவமைப்பதிலும் உருவாக்குவதிலும் அதனைப் பராமரிப்பதிலும் ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங் படித்த பொறியாளர்களின் பங்கு முக்கியமானது. செயற்கைக்கோள், ஏவுகணை, ராக்கெட் என இப்பாடப்பிரிவின் எல்லைகள் விரிவடைந்து வருகின்றன. அரசு மற்றும் தனியார் விமான நிறுவனங்கள், விமான வடிவமைப்பு நிறுவனங்கள், விண்வெளி ஆய்வுத்துறை, பாதுகாப்புத்துறை போன்ற பல்வேறு துறைகளில் ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு உண்டு. தகவல் தொழில்நுட்பத் துறையிலும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

    பயோ டெக்னாலஜி
இந்த நூற்றாண்டில் தகவல் தொழில்நுட்பத்துறைக்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் முக்கியத்துறை பயோ டெக்னாலஜி. விவசாயம், மருந்துப் பொருள்கள், பதனீட்டு உணவுகள், ஜவுளித்துறை...இப்படி இதன் பயன்பாடு விரிந்து வருகிறது. எனவே, இதுகுறித்த படிப்புகள் உலகெங்கிலும் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. பயோ டெக்னாலஜி படித்த மாணவர்களுக்கு பார்மாசூட்டிக்கல் நிறுவனங்கள், வேளாண் தயாரிப்பு நிறுவனங்கள், கால்நடை மருத்துவ அறிவியல் நிறுவனங்கள், உணவு பதனீட்டு நிறுவனங்கள், ஜவுளித்துறை, அமைப்புகள், பயோ எரிபொருள் உற்பத்தி நிறுவனங்கள், பயோ டெக் ஆய்வு  நிறுவனங்கள் போன்றவற்றில் வேலைவாய்ப்பு கிடைக்கும். சமீபகாலமாக விப்ரோ, டி.சி.எஸ். இன்போசிஸ் போன்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்கூட பி.டெக். பயோ டெக்னாலஜி மாணவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்கின்றன.

    இன்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங்
இது தொழில் யுகம். ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்ற நிலைமை ஏற்படக்கூடாது என்பதற்காக தற்காலத் தொழில்துறையினரின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் மாணவர்களைத் தயார் செய்வதற்காக இன்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங் போன்ற பிரத்யேகப் பட்டப்படிப்புகள் தேவைப்படுகின்றன. தொழிற் சாலைகளில் உள்ள இயந்திரங்களையும் பணிபுரியும் மனிதர்களையும் பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்குவது எப்படி என்று கற்றுத்தரும் படிப்பு இன்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங். மெக்கானிக்கல் என்ஜினீயரிங் துறையைப் போன்றதே இன்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங் துறை என்றாலும், தொழிற்சாலைகளில் உருவாகும் பொருட்களின் உற்பத்தி முறைகள், அதற்குப் பயன்படும் சாதனங்கள், அவற்றை ஆராய்ந்து தெரிவு செய்யும் வழிகள், மேலாண்மை நெறிகள், கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டுச் சாதனங்கள் போன்றவை இன்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங்கில் கற்றுத் தரப்படுகின்றன. அரசுத் துறை, தனியார் துறை தொழிற்சாலைகளிலும் கன்ஸல்டன்சி நிறுவனங்களிலும் இப்படிப்பைப் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும்.

    எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமெண்டேஷன்
எலெக்ட்ரானிக்ஸ் தொடர்பான படிப்புகளுடன் மின்னணு தொழில் நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் சாதனங்களைப் பற்றிய படிப்புதான் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமெண்டேஷன். எலெக்ட்ரானிக்ஸ் தொடர்பான சாதனங்களைத் தேவைக்கு ஏற்ப மாற்றி அமைப்பதையும்,  அவற்றின் செயலாக்கத்தைக் கட்டுப்படுத்துவது குறித்தும் இப்படிப்பு மாணவர்களுக்குக் கற்றுத் தரப்படும். தொழில் நிறுவனங்கள், மின் நிலையங்கள், உரம் மற்றும் இரும்பு, ரசாயன ஆலைகளில் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமெண்டேஷன் படித்த மாணவர்களுக்கு வேலை கிடைக்கும்.

    கெமிக்கல் என்ஜினீயரிங்
கெமிக்கல் என்ஜினீயரிங் தவிர்க்க முடியாத முக்கியத் துறை. உரம், பெட்ரோலியப் பொருட்கள், சிமெண்ட், மருந்துகள், பெயிண்டுகள், செயற்கை நூலிழைகள் உள்ளிட்டவற்றைத் தயாரிக்கத் தேவையான இயந்திரங்களை வடிவமைப்பது, தொழில்நுட்பங்களை உருவாக்குவது உள்ளிட்டவை இப்படிப்பின் முக்கிய அம்சங்கள். மாசுக் கட்டுப்பாட்டுத் துறையிலும் இப்படிப்பைப் படிக்கும் மாணவர்களுக்கு அறிமுகம் இருக்கும். நாட்டிலேயே முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமான காரைக்குடியில் உள்ள மத்திய மின்வேதியியல் ஆய்வுக் கழகத்தில் (செக்ரி) கெமிக்கல் அண்ட் எலெக்ட்ரோ கெமிக்கல் என்ஜினீயரிங் படிப்பைப் படிக்கலாம். பெட்ரோலிய, எரிவாயு சுத்திகரிப்பு நிறுவனங்கள், உர நிறுவனங்கள், பார்மாசூட்டிக்கல்ஸ், உரத் தொழிற்சாலைகள், ரப்பர் அண்ட் பிளாஸ்டிக் தொழில் நிறுவனங்கள், பெயிண்ட் மற்றும் காகித உற்பத்தி நிறுவனங்கள், ஃபுட் புராசசிங் நிறுவனங்கள், ரசாயன ஆலைகள் போன்றவற்றில் கெமிக்கல் என்ஜினீயரிங் தொடர்பான படிப்புகளைப் படிக்கும் மாணவர்களுக்கு வேலை கிடைக்கும். அத்துடன் விண்வெளி, அணுசக்தி, பாதுகாப்புத் துறைகளிலும் வேலை வாய்ப்புகள் உண்டு.

    மெரைன் என்ஜினீயரிங்
பயணிகளுக்கான கப்பல்கள், சரக்குகளை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் ஆகியவற்றின் இயக்கம் குறித்த பல்வேறு பயிற்சிகளை உள்ளடக்கியது இப்படிப்பு. கப்பலில் மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சார்ந்த பல்வேறு சாதனங்களை இயக்கவும் பழுதுபார்க்கவும் கற்றுத் தரப்படும். இப்பாடப்பிரிவு மாணவர்களுக்கு கப்பலில் நேர்முகப் பயிற்சியும் அளிக்கப்படும். இப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு, போதிய  உடல் தகுதியும், உரிய பார்வைத் திறனும் இருக்க வேண்டும்.

    மெட்டலர்ஜிக்கல் என்ஜினீயரிங்
பல்வே உலோகத்தாதுக்களிலிருந்து உலோகங்களைப் பிரித்தெடுத்தல், செம்மைப் படுத்துதல், உலோகங்களைக் கலந்து உலோகக் கலவைகளை உருவாக்குதல், வடித்தெடுத்தல் உள்பட உலோகவியல் பொறியியல் தொடர்பான பல்வேறு தொழில்நுட்பங்கள் இப்படிப்பில் கற்றுத் தரப்படும். அரசுப் பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகள், ஆய்வுக்கூடங்கள் ஆகியவற்றில் இப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும்.

    என்விரான்மெண்டல் என்ஜீனீயரிங்
உலகமெங்கும் சுற்றுச்சூழல் குறித்த விஷயங்கள் முக்கியத்துவம் பெற்று வரும் காலம் இது. எனவே, என்விரான்மெண்டல் என்ஜினீயரிங் எனப்படும் சுற்றுச்சூழல் பொறியியல் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளது. சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுத்து, இயற்கை வளத்தைப் பேணுவதற்கான வழிமுறைகளையும் தொழில்நுட்பங்களையும் கற்றுத் தரும் படிப்பு இது. காற்று மாசுபடுதலைத் தடுத்தல், தொழிற்சாலை சுகாதாரம், கதிர்வீச்சுப் பாதுகாப்பு, நச்சுக் கழிவு மேலாண்மை, நச்சுப் பொருட்கள் கட்டுப்பாடு, கழிவு நீர் மேலாண்மை, திடக் கழிவுப் பொருள் அகற்றம், பொது சுகாதாரம், நில மற்றும் நீர் மேலாண்மை குறித்து இந்தப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு கற்றுத் தரப்படுகிறது. இந்தப் படிப்பை முடித்த மாணவர்களுக்கு மாசுக் கட்டுப்பாட்டு அமைப்புகளிலும் அரசு சாரா அமைப்புகளிலும் வேலைவாய்ப்பு கிடைக்கும். அத்துடன் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளராகலாம்.

    அக்ரிகல்ச்சர் அண்ட் இரிகேஷன் என்ஜினீயரிங்
விவசாய உற்பத்தி சார்ந்த பல்வேறு பிரச்சினைகளுக்கு தொழில்நுட்ப முறையில் தீர்வு காண உதவுவது இந்தப் படிப்பு. விவசாயப் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க பொறியியல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி என்னென்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இந்தப் படிப்பு கற்றுத் தருகிறது. களப்பணி செய்யத் தயாராக இருப்பவர்கள் இந்தப் படிப்பைத் தேர்வு செய்யலாம். வேளாண்மைத் துறையிலும் வேளாண் தொழில்நுட்பத் துறையிலும் ஆர்வமிக்க மாணவர்களுக்கு ஏற்ற படிப்பு இது. அரசுத் துறை நிறுவனங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் இந்தப் படிப்பைப் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கிறது. தோட்டக் கலை பண்ணைகள், கூட்டுறவு சங்கங்கள், வேளாண் கருவிகள் தயாரிப்பு நிறுவனங்கள், உரம் மற்றும் நீர்ப்பாசனக் கருவிகள் தயாரிப்பு நிறுவனங்கள், சர்க்கரை ஆலைகள் போன்ற இடங்களிலும் வேலை கிடைக்கும்.

    பயோ மெடிக்கல் என்ஜினீயரிங்
பொறியியலும் மருத்துவமும் சேர்ந்த படிப்பு இது. மருத்துவக் கருவிகளின் வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் கருவிகளின் இயக்கத்திற்குத் தகுந்தபடி மென் பொருள் உருவாக்கம் போன்ற பல்வேறு துறைகளில் பயோ மெடிக்கல் என்ஜினீயரிங் படித்தவர்களின் பங்கு முக்கியமானது. செயற்கை முறையில் இயங்கும் வகையில் உடல் பாகங்களை உருவாக்குவதிலும் பயோ மெடிக்கல் என்ஜினீயரிங் படித்தவர்களின் பங்கு இருக்கும். கிளினிக்கல் என்ஜினீயரிங், திசுக்கள் மற்றும் மரபு வழி பொறியியல், மெடிக்கல் இமேஜிங், மறுவாழ்வு பொறியியல், உடல் கூறு முறைகள், பயோ மெக்கானிக்ஸ், பயோ மெட்டீரியல்ஸ் போன்ற பல்வேறு பாடப்பிரிவுகள் இந்தப் படிப்பைப் படிக்கும் மாணவர்களுக்குக் கற்றுத் தரப்படுகின்றன. மருத்துவ மனைகளில் கருவிகளைத் தேர்வு செய்து பயன்படுத்தவும் அதை, தொடர்ந்து பராமரிக்கவும் பயோ மெடிக்கல் என்ஜினீயரிங் படித்தவர்கள் தேவைப்படுகிறார்கள். இந்தப் படிப்பைப் படித்தவர்களுக்கு மருத்துவமனைகளிலும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களிலும் மருத்துவக் கருவிகள் தயாரிப்பு நிறுவனங்களிலும் வேலை கிடைக்கும்.

    பிரிண்டிங் டெக்னாலஜி
பல்வேறு வகையான அச்சிடும் முறைகள், நவீன அச்சுத்துறையில் கம்ப்யூட்டரின் பங்கு, மேலாண்மை போன்ற பல்வேறு அம்சங்கள் பிரிண்டிங் டெக்னாலஜி பட்டப் படிப்பில் கற்றுத் தரப்படுகின்றன. புத்தக வெளியீட்டு நிறுவனங்கள், பேக்கேஜ் பிரிண்டிங் பிரிவுகள், அச்சக இயந்திரத் தயாரிப்பு நிறுவனங்கள், அரசு அச்சகங்கள், இ-பப்ளிஷிங் நிறுவனங்கள் போன்ற இடங்களில் இப்படிப்பைப் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும்.

    லெதர் டெக்னாலஜி
தோல் பதனிடுதல், காலணிகள் மற்றும் தோலாடைகள் உள்ளிட்ட தோல் பொருள்களை உற்பத்தி செய்தல், அதற்கு பயன்படும் சாதனங்களை இயக்குதல் உள்ளிட்ட தோல் தொழில்நுட்பம் தொடர்பான பல்வேறு தொழில்நுட்பங்கள் கற்றுத் தரப்படுகின்றன. தோல் பதனீட்டுக் கூடங்கள், தோல் பதனீட்டுக்குத் தேவையான ரசாயனப் பொருள்களைத் தயாரிக்கும் ஆலைகள், தோல் ஆய்வு நிலையங்கள், தோல் தொழில் பொருள் உற்பத்தி நிறுவனங்கள் போன்ற இடங்களில் இப்படிப்புகளைப் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும். தோல் உற்பத்தித் துறையில் முக்கிய நாடாக விளங்கும் நமது நாட்டின் தோல் பொருள் ஏற்றுமதியில் தமிழ்நாட்டிலிருந்து மட்டும் 60 சதவீதம் ஏற்றுமதியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை, ஆம்பூர், வாணியம்பாடி, ராணிப்பேட்டை, திண்டுக்கல் போன்ற நகரங்கள் தோல் பதனீட்டுத் தொழிலிலும், தோல் உற்பத்தித் தொழிலிலும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகத் திகழுகின்றன. எனவே, இந்தப் படிப்பைப் படித்த மாணவர்களுக்கு வேலை கிடைப்பதில் பிரச்சினை இல்லை.

    டெக்ஸ்டைல் டெக்னாலஜி
துணி உற்பத்தித் தொழில்நுட்பங்களுடன் அதில் பயன்படுத்தப்படும் சாதனங்கள், பராமரிப்பு, நிர்வாகம் உள்ளிட்ட விஷயங்களைக் கற்றுத் தரும் படிப்புதான் டெக்ஸ்டைல் டெக்னாலஜி. நூல் தயாரிப்பு, நூல்களை வெண்மையாக்குதல், மிளிர வைத்தல், ஆடை உருவாக்கம், சாயம் போடுதல், செயற்கை இழைகளைத் தயாரித்தல் உள்ளிட்ட ஜவுளித் தொழில்நுட்பங்கள் டெக்ஸ்டைல் டெக்னாலஜி மாணவர்களுக்குக் கற்றுத் தரப்படுகின்றன. அத்துடன் டெக்ஸ்டைல் துறையில் கம்ப்யூட்டரின் பயன்பாடு குறித்த தொழில்நுட்பங்களும் கற்றுத் தரப்படுகின்றன. டையிங், ஃபினிஷிங், டெக்னிக்கல் சர்வீசஸ், ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட், குவாலிட்டி கண்ட்ரோல், புராடக்ட் டெவலப்மெண்ட் என டெக்ஸ்டைல் தொழில் நிறுவனங்களில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும். ரிலையன்ஸ், பாம்பே டையிங், நேஷனல் டெக்ஸ்டைல் கார்ப்பரேஷன், ஸ்ரீராம் பைபர்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் டெக்ஸ்டைல் டெக்னாலஜி மாணவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்கின்றன.

என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ? --- 2014 ; பட்டு உற்பத்தி துறையில் பொறியியல் படிப்பு

சில்க்(பட்டு) தொழில்நுட்பம் என்பது, பட்டு உற்பத்தியைப் பற்றி படிப்பதாகும் மற்றும் இத்துறை டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் துறையின் கீழ் வருகிறது.

பட்டுப் புழுக்கள் மற்றும் ரசாயன பரிமாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளின் மூலமாக, பட்டு உற்பத்தி செய்யப்படுவதன் வழிமுறைகள் குறித்து இப்படிப்பு கற்றுத் தருகிறது.

பட்டு என்பது ஒரு இயற்கையான இழையாகும். உலகத்தின் பழைய இயற்கை இழைகளுள் பட்டும் ஒன்றாகும். பிற இழைகளைவிட, இதற்கான முக்கியத்துவம் கூடுதலானது. முந்தைய காலங்களில், பட்டு உற்பத்தி செய்ய, பட்டுப் புழுக்கள் மட்டுமே, ஒரே ஆதாரமாக பயன்படுத்தப்பட்டன.

ஆனால், பிற்காலங்களில், பல்வேறான தொழில்நுட்ப மற்றும் அறிவியல் வளர்ச்சிக் காரணமாக, பட்டுத் தயாரிப்பில் புதிய வழிமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் விளைவாக, செயற்கை பட்டு இழைகள் உற்பத்தியும் தொடங்கியது.

பட்டு இழைகளுக்கு அதிகரித்திருக்கும் தேவை காரணமாக, இந்திய அரசு, சில்க் டெக்னாலஜி இன்ஜினியரிங் என்ற படிப்பை தொடங்கியுள்ளது. பல கல்லூரிகளில் இப்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இப்படிப்பின் நோக்கம், எப்போதும் வளர்ந்துகொண்டிருக்கும் பட்டு சந்தையை திறமையாக நிர்வகிக்கும் வகையில் நிபுணர்களை உருவாக்குவதேயாகும்.

தகுதிதங்களின் பள்ளி மேல்நிலைப் படிப்பை, இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுடன், அங்கீகரிக்கப்பட்ட வகையில் படித்து நிறைவுசெய்துள்ள மாணவர்கள், இப்படிப்பில் சேர்வதற்கு தகுதியுடையவர்கள்.

பட்டு தொழில்நுட்பத்தின் பாடங்கள்

Fiber Science
Yarn manufacture, yarn structure and properties
Fabric manufacture and fabric structure
Textile testing Dyeing

வாய்ப்புகள்
பட்டு தொழில்நுட்பத்தில் ஒருவர் தனது பி.டெக்., படிப்பை நிறைவுசெய்த பின்னர், பணிக்கு செல்லலாம் அல்லது அதே துறையில் எம்.இ., அல்லது எம்.டெக்., படிப்புகளை மேற்கொள்ளலாம்.

இத்துறையில், பி.டெக்., முடித்த ஒரு இளநிலைப் பட்டதாரிக்கு ஏராளமான பணி வாய்ப்புகள் உள்ளன. அவை,
* கட்டுப்பாட்டு மேற்பார்வையாளர்
* தொழில்நுட்ப விற்பனை பிரதிநிதி
* மெடிக்கல் டெக்ஸ்டைல்ஸ் இன்ஜினியர்
* ஆபரேஷன்ஸ் பயிற்சி பெறுபவர்
* தொழில்நுட்ப நிபுணர்
* செயல்பாட்டு பொறியாளர்
* ஆராய்ச்சியாளர்

இத்துறையில் பணி வாய்ப்புகளை வழங்கும் சில முக்கிய நிறுவனங்கள்
மைசூர் சில்க் பேக்டரி
சில்க் மார்க்
கிராஸிம் இன்டஸ்ட்ரீஸ்
பாம்பே டையிங்
அரவிந்த் மில்ஸ் லிமிடெட்
ஜே.சி.டி. லிமிடெட்
லக்ஷ்மி மிஷின் ஒர்க்ஸ்
லக்ஷ்மி மில்.