Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

இந்திய முஸ்லிம்களே! நமது தனித்தன்மையை காக்க தயாராகுங்கள் ! ------- பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன்

சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜனாபா பத்ரு சயீது அவர்கள் ஒரு பொது நல வழக்குத் தொடுத்திருக்கிறார் என்பதும், அதில் அவர் காஜிகளுக்கு மார்க்க ரீதியாக சான்றிதழ் வழங்குவதற்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்றும், தலாக் என்னும் விவாகரத்து செய்வது, கோர்ட் மூலம் தான் நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார் என்பதும் எல்லோரும் அறிந்திருக்கும் விஷயமாகும்.

ஜனபா பத்ரு சயீது அவர்களைப் பின்பற்றி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஜனாபா சுல்தானா ரிஸ்வானா பானு (வயது 29) ஒரு பொது நல வழக்கை தொடுத்திருக்கிறார்.

தலாக் என்னும் மணமுறிவு ஏற்பட்டுள்ளதற்கு காஜிகள் சான்றிதழ் தருவதற்குத் தடை விதிக்கக்கோரியும் மனுவில் கூறியி ருக்கிறார்.

இந்திய முஸ்லிம் பெண்களின் கணவர்கள் தன்னிச்சையாக தலாக் சொல்லி விடுகிறார்கள். மனைவிகளுக்கு தெரியாமலேயே தலாக் கொடுக்கிறார்கள். இத்தகைய பாதகமான ஆண்களின் போக்குகளை காஜிகள் தலாக் சான்றிதழ் அளித்து ஊக்கு விக்கிறார்கள்.

காஜிகளுக்குஇவ்வாறு தலாக் பற்றிய சான்றிதழ் கொடுப்பதற்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்றும் அந்த மாது, தனது வழக்கில் கூறியிருக்கிறார். இதனை டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற ஆங்கில நாளிதழ்கள்  செய்தி பிரசுரித்துள்ளன.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுபோன்ற வழக்கு தொடரப் பட்டுள்ளதால், மதுரை கிளை, இந்த வழக்கையும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இன்றைய (24.9.13) தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் ஷரீயத் கோர்ட்டுகளை எதிர்த்து போடப்பட்டுள்ள பொது நல வழக்கை உச்சநீதிமன்றம் மீண்டும் விசாரணைக்கு எடுத்திருக்கிறது என்னும் செய்தி வெளியாகியிருக்கிறது. அதில் பிரசுரமாகியுள்ள செய்தியின் விவரமாவது:

நான்கு மாதங்களுக்கு முன்பு (ஓய்வு பெற்ற) உச்சநீதிபதி அல்தமஸ் கபீர் தலைமையிலான பெஞ்சின் முன்பு ஷரீயத் கோர்ட்டுகள் பத்வாகள் அளித்து வருவதன் மூலம் தேசத்தில் உள்ள நீதித்துறைக்கு பகரமானதொரு நீதித்துறையாக ஷரீஅத் கோர்ட்டுகள் இருக்கின்றன. ஆகவே, அவற்றைத் தடை செய்ய வேண்டும் என்று பொது நல வழக்கு தொடுக்கப்பட்டது. அதை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அந்த வழக்கைத் தொடுத்திருந்த வக்கீல் விஸ்வலோசன் மதன், நீதிபதி சி.கே.பிரசாத் தலைமையிலான பெஞ்சின் முன்பு, செப்,11 ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கு மீண்டும் விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று கோரி இருந்தார். இந்த வழக்கு மே மாதம் 10 ம் தேதி விசாரணைக்கு வந்த போது, தனது தாயார் உடல்நலமில்லாமல் ஆகிவிட்டபடியால் தான் ஆஜராக முடியவில்லை என்று கூறி தனது வழக்கை ஏற்கும்படி கோரினார்.

அட்வகேட் மதன், தனது வாதத்தின் போது ஷரீஅத் கோர்ட் டுகள், தேசத்தில் உள்ள கோர்ட்டுகளுக்கு சமமான பகரமான கோர்ட்டுகள் போல் செயல்படுகின்றன. முஸ்லிம்களின் சமூக, மத விவகாரங்கள் பற்றி தீர்ப்புகள் கூறுகின்றன. இது, இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரானதாகும் என்று கூறினார்.

மத்திய அரகின் சார்பில், அட்வகேட் மதன் கூறிய வாதங்க ளுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. ஷரீஅத் கோர்ட்டுகள் பற்றிய மத்திய அரசின் அணுகுமுறைகளை வெளிப்படுத்தும் படி இந்த வழக்கின் மூலம் கட்டாயப்படுத்துவதாக இருக்கிறது என்று கூறி வழக்கை விசாரணைக்கு ஏற்கக் கூடாது என்று மத்திய அரசின் சார் பில் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டுள்ள நீதிபதி சி.கே.பிரசாத் தலைமையிலான உச்சநீதிமன்ற பெஞ்சு, வழக்கை மீண்டும் விசார ணைக்கு ஏற்று, வரும் நவ.11 ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தி ருக்கிறது.

இந்தச் செய்திதான் ஆங்கில நாளிதழில் இன்றைக்கு வெளிவந்திருக்கிறது.

சமுதாய மக்களுக்கு ஓர் எச்சரிக்கை! 

 இந்திய முஸ்லிம்கள், தங்களை முஸ்லிம்கள் என்று அடையாளப்படுத்துவதற்கு உரிய ஆதாரமும் அத்தாட்சியும் அவர்கள் பின்பற்றி வரும் ஷரீஅத் சட்டத்தின் குடும்பச் சட்டப் பகுதி மட்டும் தான்.

அந்த குடும்பச் சட்டத்தில் கூட ஷரீஅத் படி நடக்கும் வழி அடைக் கப்படுமானால், முஸ்லிம்கள் என்று பெயர் மட்டும் இருக்கும் ஆனால் உண்மையில் முஸ்லிம்களாக இருக்க முடியாது.

தேசம் முழுவதிலும் ஷரீஅத் சட்டத்திற்கு எதிரான அரசியல் ரீதியாகவும், நீதிமன்றத்தின் மூலமும், சட்டமன்றத்தின் மூலமும், பாராளுமன்றத்தின் மூலமும் வருவதற்கான சூழ்நிலைகள் இப்பொ ழுது பெருகி வருகின்றன.

இந்தச் சூழ்நிலையில், இந்திய முஸ்லிம் சமுதாயம் தன்னை ஒருமுகப்படுத்தி, தனது மார்க்கத் தனித் தன்மையை நிலைநிறுத்தியாக வேண்டும். இதற்கு எந்தத்தியாகமும் ஒரு பொருட்டாகாது.