Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 28 மார்ச், 2013

சமுதாயத்தை மாற்றும் சக்தி வாய்ந்த ஆயுதம் கல்வியே: கோவா கவர்னர் பரத்வீர் வாஞ்சூ


 "சர்வதேச அளவில் சமுதாயத்தை மாற்றும் அதிக சக்தி வாய்ந்த ஆயுதம் கல்வியாகும்,'' என, கோவா கவர்னர் பரத்வீர் வாஞ்சூ பேசினார்.கோவை, மதுக்கரையை அடுத்த நவக்கரையிலுள்ள ஏ.ஜே.கே., கல்லூரியின் மூன்றாவது பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. கோவா கவர்னர் பரத்வீர் வாஞ்சூ பேசியதாவது:தமிழகம் கல்வி, கலாசாரம் மற்றும் பண்பாட்டில், மிகப்பெரிய அத்தியாயம் கொண்டதாகும். பல்வேறு துறைகளிலும் திறமையானவர்களை உருவாக்குவதில், நமது நாட்டில், தமிழகம் முன்னோடியாக உள்ளது. அதுபோல, இங்குள்ள கல்வி நிறுவனங்கள், பல்வேறு மாநிலத்தவரையும் கவர்ந்துள்ளது.கல்வி என்பது அறிவுக்கான ஒரு முதலீடாகும். அதன்மூலம் சிறந்த பலன்களை அடையலாம்.

நமது நாட்டின் கல்வி முறை, குரு - சிஷ்யன் முறையை அடிப்படையாக கொண்டதாகும். இம்முறைதான், தற்போது வகுப்பறை நடைமுறையாக உள்ளது. மருத்துவம், அறிவியல் உள்பட பல்வேறு துறைகளிலும் பயில, சர்வதேச அளவில், மாணவர்கள், நம் நாட்டுக்கு வந்தனர். தொடர்ந்து ஆங்கிலேயர் காலத்தில், பாரம்பரிய முறை மாற்றம் பெற்றது. மேற்கத்திய கல்வி முறை, நம்மை ஆட்கொண்டுள்ளது.கல்வி முறைதான், ஒரு அரசின் வெற்றிக்கு காரணமாகிறது. இதற்கு, நமது நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளார். இவர், நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, விவசாயம் சார்ந்த பொருளாதார மேம்பாட்டை, தொழில்சார்ந்த பொரு ளாதார மேம்பாட்டுக்கு மாற்றம் கொண்டு வர, பாடுபட்டார். அவரது காலத்தில்தான், ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.எம்., போன்றவை கொண்டு வரப்பட்டன.சர்வதேச அளவில், சமுதாயத்தை மாற்ற, கல்வி என்பது மிகவும் சக்தி வாய்ந்த ஒரு கருவியாகும். நமது அனைத்து விதமான கல்வி முறைகள் குறித்து, ஆராய்ந்து, மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக, ஆரம்ப கல்வி முறையிலேயே, இதனை கொண்டு வரவேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.தொடர்ந்து முதுகலை மற்றும் இளங்கலையில், பல்வேறு பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு, பட்டச் சான்றிதழை வழங்கினார். பாரதியார் பல்கலை துணை வேந்தர் ஜேம்ஸ் பிச்சை பேசுகையில், ""கற்பதை என்றும் நிறுத்தக்கூடாது. தமிழக முதல்வரின் எண்ணப்பட்டி, வரும் பத்து ஆண்டுகளில், 20 சதவீதம் பேர் உயர்கல்வி கற்கும் நிலையை உருவாக்க பாடுபடவேண்டும்,'' என்றார்.முன்னதாக, கல்லூரி அறங்காவலர் லால்மோகன் வரவேற்றார். கல்லூரி செயலாளர் அஜீத்குமார் தலைமை வகித்தார்.

டுபாக்கூர் மனித உரிமை கழகங்கள் பற்றிய விபரங்கள் சேகரிப்பு : காவல்துறை நடவடிக்கை


காவல் துறை சார்பில், செயல்படும் மனித உரிமை கழகங்கள் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.தன்மானத்தை சீண்டும் வகையில், தனி மனிதனுக்கு ஏற்படும் அநீதி, கொடுமைகளை தட்டிக் கேட்டு, நீதி கிடைக்க செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டது தான் மனித உரிமை கழகங்கள். இந்நிலையில், "மனித உரிமை கழகம்' என்ற பெயரில்,  மாநிலத்தின் பல இடங்களில், ஏராளமான அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.

பல இடங்களில் உள்ள மனித உரிமை கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளை போன்று, கோஷ்டிகளாக பிரிந்து செயல்படுகின்றனர்.டுபாக்கூர் அமைப்புகள்இந்த அமைப்புகளின் நிர்வாகிகள் பலர், தங்கள் வாகனங்களில், ஒரு வி.ஐ.பி.,க்களை போன்று, வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்களை மிரட்டி கட்டப் பஞ்சாயத்து செய்வது, பணம் பறிப்பது போன்றவை இவர்களின் தொழிலாகவே உள்ளது. இந்நிலையில், "மனித உரிமை கழகம்' என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது, என்ற கோர்ட் உத்தரவை, மாநில அரசு பின்பற்ற துவங்கியுள்ளது. இதுதொடர்பாக, ஒவ்வொரு மாவட்ட காவல் துறைக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

நீலகிரி போலீஸ் ஜரூர்நீலகிரி மாவட்ட காவல் துறை, இந்த விவகாரத்தில் வேகம் காட்ட துவங்கியுள்ளது. மாவட்டத்தில் "மனித உரிமை கழகம்' என்ற பெயரில் செயல்படும் அமைப்புகள், அதன் நிர்வாகிகள், அவர்களின் செயல்பாடு, அணுகுமுறை உட்பட விவரங்களை சேகரிக்கும் பணியில், மாவட்ட காவல் துறை ஈடுபட்டுள்ளது. தவிர, அரசு அலுவலகம், காவல் நிலையங்களுக்கு, "மனித உரிமை கழகம்' என்ற பெயரில் வரும் நிர்வாகிகள் மீது, வழக்குப்பதிவு செய்யவும், மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களுக்கு, மாவட்ட காவல் துறை உத்தரவிட்டுள்ளது.காவல் துறையின் இந்த அதிரடியால், "மனித உரிமை கழகம்' என்ற பெயரில் கட்டப் பஞ்சாயத்து, மிரட்டல், பணம் பறிப்பு உட்பட செயல்களில் ஈடுபடும் "டுபாக்கூர்' நபர்கள், கலக்கத்தில் உள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் இளநிலை உதவியாளர் பணி வேலை வாய்ப்பகத்தில் பரிந்துரை பட்டியல்


சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள, 40 இளநிலை உதவியாளர் பணிக்கு, வேலை வாய்ப்பகம் மூலம் ஆட்கள் எடுக்கப்பட உள்ளனர். "பரிந்துரைப் பட்டிலை, ஏப்., 4ம் தேதிக்குள் சரிபார்த்துக் கொள்ளலாம்' என, வேலை வாய்ப்பகம் தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சியில், காலி பணியிடங்கள், புதிய பணியிடங்கள் என, 3,187 இடங்கள் நிரப்பும் பணி நடந்து வருகிறது. இதன்படி, இளநிலை உதவியாளர் பணிக்கு, 40 பேர் எடுக்கப்பட உள்ளனர். சாந்தோம் வேலை வாய்ப்பகம் மூலம், பதிவு மூப்பு பட்டிலை மாநகராட்சி கோரிஉள்ளது.

இதுகுறித்து, மாவட்ட வேலை வாய்ப்பக உதவி இயக்குனர் விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பு:இந்த பணிக்கு, ஒரு இளங்கலை பட்டப்படிப்பு பதிவு செய்திருக்க வேண்டும். பதிவு மூப்பு அடிப்படையில், பரிந்துரைக்க உள்ள உத்தேச பட்டியல், வேலை வாய்ப்பக விளம்பர பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.பிற்படுத்தப்பட்டோர், இதர வகுப்பினர் - 17.4.1984, மிக பிற்படுத்தப்பட்டோர்-24.10.1985, ஆதிதிராவிடர் பொது பிரிவு-18.2.1985, ஆதிதிராவிடர் மகளிர்-6.12.1985, அருந்ததியர் -28.8.1990 வரை பதிவு செய்துள்ளோர், உத்தே பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.கல்வி தகுதியும், பதிவு மூப்பும் உள்ள சென்னை மாவட்ட பதிவுதாரர்கள் மட்டும், ஏப்., 4ம் தேதிக்குள், சாந்தோமில் உள்ள, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், விவரங்களை சரிபார்த்து கொள்ளலாம். பணியிடங்களுக்கான இறுதி பட்டியல், ஏப்., 8ம் தேதி வெளியிடப்படும்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது