Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 22 ஜனவரி, 2014

ஏழரைகளுக்கு எதிர் கேள்வி, தரை தட்டிய கப்பல் என்றால் இரண்டரை பக்க விமர்சனம் எதற்கு? --மறைநேசன்

‘தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்’ என்ற அமைப்பின் தலைமையகத் திலிருந்து வெளிவரும் ‘உணர்வு’ வார பத்திரிகையின்ஜனவரி 17-23, 2013 இதழின் 6,7,8 பக்கங் களில் ‘தரை தட்டிய பிறைக்கப்பல் கரை சேராது’ என்ற தலைப்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பற்றியும், திருச்சியில் 28.12.2013 அன்று நடைபெற்ற அதன் மாநாடு குறித்தும் கடுமையான சொற்களால் விமர்சித்திருப்பதோடு, இதன் தேசிய பொதுச்செயலாளரும் தமிழ்நாடு மாநில தலைவருமான முனீருல்மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களை தரக்குறைவாக எழுதி விஷமத்தனமான படங்களையும் வெளியிட் டுள்ளார்கள்.

இத்தகைய அவதூறுகளால் முஸ்லிம் லீக் எந்த ஒரு பாதிப்பையும் அடைந்து விடப்போவதில்லை. காரணம் இந்த வரலாற்றுப் பேரியக்கத்தைப் பற்றி சமுதாயம் மிக நன்றாகஅறிந்து வைத்திருக்கிறது அதனால் தான் இதை சமுதாயப் பேரியக்கம் என்றே அழைக்கிறது.

ஆயினும் சமுதாயத்தின் கட்டமைப்பைவிட்டு விலகி நிற்கின்ற அந்த இயக்க இஞைர்கள் தெரிந்து கொள்ளட்டும் என்பதற்காக அக்கட்டுரையின் விஷமத்தனங்களுக்கு பதில் சொல்ல ஒரு பக்கத்தை வீணாக்குகிறோம் - வாசகர்கள் மன்னிக்க வேண்டுகிறோம்.

" மஹல்லா ஜமாஅத்’’ என்றால் என்ன?

1906 டிசம்பர் 30 -ல் ஆரம்பிக்கப்பட்ட அகில இந்திய முஸ்லிம் லீக், ‘முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாத்தல்; முஸ்லிம்களின் கோரிக்கைகளை அரசுக்கு எடுத்துரைத்து வெற்றி காணச் செய்தல்; முஸ்லிம்களுக்கும் பிற சமய மக்களுக்குமிடையில் நட்புறவு வளர்த்தல்; அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி நிவர்த்திக்க செய்தல்’ என்பதை பிரதான நோக்கங்களாக அறிவித்தது.

இந்திய விடுதலைக்குப் பின் 1948 மார்ச் 10 அன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என இதனை மலரச் செய்த போது, ‘தேசிய ஒருமைப்பாடு, சமய நல்லிணக்கம், சிறுபான்மையினர், தனித்தன்மைகளை காத்தல்’ என்பதை தனது லட்சியங்களாக அறிவித்தது.

கலாச்சார தனித்தன்மை என்பது நமது மார்க்கம்- மார்க்க அடிப்படையிலான பழக்க வழக்கங்கள் - காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் சமுதாய நடைமுறைகள் என்பனவே. மஹல்லா ஜமாஅத் என்பது அரபகத்தில் இருந்து வந்த வழிகாட்டலில் உருவானதே! அந்த கபீலா வழிகாட்டல் அடிப்படையில் தான் குடும்பம், குலம், கோத்திரம், என்றாகி பள்ளிவாசலை மையமாகக் கொண்டு மஹல்லா, முஹல்லம், ஜமாஅத்துகள் என உருவாயின. இந்த மஹல்லா ஜமாஅத்கள் இணைந்தது தான் முஸ்லிம் சமுதாயம் என்பது. மஹல்லா ஜமாஅத் அடிப்படையை தெரியாதவர்களும், சமுதாய ஒற்றுமையின் அவசியத்தை புரியாதவர்களும் தான் அதனை விமர்சிப்பார்கள்.

ஆங்கிலேயர் ஆட்சியின் போது முஸ்லிம்களுக்கு உரிமைகள் பெற்றுக் கொடுப்பதே முஸ்லிம் லீகின் லட்சியமாக இருந்தது அதன் மூலம் கிடைத்ததுதான் இடஒதுக்கீடு, விகிதாச்சார பிரதிநிதித்துவம்.

இந்திய சுதந்திரத்திற்குப்பின் கிடைத்த உரிமைகள் எல்லாம் பறிக்கப்பட்டதோடு முஸ்லிம்களின் வாழ்வுரிமையும் கேள்விக் குறியாக்கப்பட்ட நிலையில் - முஸ்லிம் சமுதாயம், முஸ்லிம் சமுதாய தனித்தன்மைகளை காப்பதும், முஸ்லிம்களுக்கும் சகோதர சமுதாயங்களுக்குமுள்ள இடைவெளியை அகற்றவதும் முஸ்லிம் லீகின் பிரதான பணிகளாக அமைந்தன.

மஹல்லா ஜமாஅத்களில் நடத்தப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) பிறந்த தின விழாக்கள் இதற்கு பெரிதும் பயன்பட்டன. திராவிட இயக்கம் மீலாது விழா மேடைகளால் வளர்ந்தது என்பதும், அதற்கு முன்பு உருவான நீதிக்கட்சியின் வகுப்புவாரி பிரதிநிதித்துவ கொள்கைக்கு வழிகாட்டியது முஸ்லிம் லீக் என்பதும் வரலாற்று உண்மைகள்.

முஸ்லிம் லீக் தலைவர்களின் மகத்தான தியாகத்தால் கிடைத்த நன்மைகள் தான் இறந்தவர்களை அடக்கம் செய்யும் உரிமை, ஊருக்கு உள்ளே கபரஸ்தான்களை காப்பாற்றியது, வக்ஃப் சொத்துக்களை வட்டியிலிருந்து பாதுகாத்தது போன்றவை என்பதும், மதமாற்ற தடைசட்டம், மதப்பிரச்சாரம் செய்வதற்கு லைசன்ஸ், கட்டாய குடும்ப கட்டுப்பாடு, அரசியலமைப்பு சட்டப்படி வாழாதவர்களுக்கு அபராதம் என கொண்டு வரப்பட்ட சட்டங்களை தடுத்து நொறுக்கியதும் முஸ்லிம் லீக் தலைவர்களின் மகத்தான தியாகத்தால் தான் என்பதும் இளைய தலைமுறைக்கு தெரியாத விஷயங்கள்.

ஆக முஸ்லிம்களின் நலன் காத்தல் என்பது முஸ்லிம் லீகின் உயர் மூச்சு. இதைப்பற்றியே சிந்திக்கின்ற இந்த பேரியக்கம், தனது எண்ணங்களையும் செயல் திட்டங்களையும் சமுதாயத்திடம் கொண்டு சேர்க்க மஹல்லா ஜமாஅத்களை பயன்படுத்துகிறது.

திருச்சி மாநாடு யாருக்கு எதிரானது ?

`உணர்வு’ உளறியிருப்பதை போல் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் திருச்சி மாநாடு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற ஒரு அமைப்பிற்கோ அல்லது வேறு எந்த ஒரு அமைப்பிற்கும் எதிராகவோ நடத்தப்பட்டதல்ல.

முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு தந்த யாரை இவர்கள் விமர்சிக்கின்றார்களோ அந்த கலைஞர் கருணாநிதி தமிழக முதல்வராக முதன்முறையாக பொறுப்பேற்ற போது தான் பிற்பட்டோர் நலக்குழுவை அமைத்தார். அந்த குழு 26.11.1970 -ல் அளித்த பரிந்துரையின் அடிப்படையில்தான் தமிழக முஸ்லிம்கள் பிற்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றனர். அந்த 1970 கால கட்டத்தில் சமூக விழிப்புணர்வை உண்டாக்க மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டன. திருச்சி மாநகரில் முதன்முதலில் கூட்டப்பட்ட வழிகாட்டுதலின் அடிப்படையில் தான் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மஹல்லா ஐக்கிய ஜமாஅத், மஹல்லா ஜமாஅத் கூட்டமைப்பு, முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத்கள் உருவாயின.

ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த போது பஞ்சாயத் ராஜ் சட்டம் கொண்டு வந்தார். இதன் மூலம் மஹல்லா ஜமாஅத் அமைப்புக்கு எத்தகைய பாதகமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக 1989 ஆகஸ்ட் 19, 20 தேதிகளில் மதுரை தமுக்கம் மைதானத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் ஷரீஅத் பஞ்சாயத்து கருத்தரங்கு நடத்தப்பட்டது. ஒவ்வொரு மஹல்லா ஜமாஅத்திற்கும் சட்டதிட்டங்கள் உருவாக்க வேண்டும்; எல்லை வரையறுக்கப்பட வேண்டும்; பைத்துல்மால் உருவாக்கப்பட வேண்டும்; ஷரீஅத் பஞ்சாயத் அமைக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது இந்த மாநாட்டில் தான்.

அப்போது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தோ அல்லது அவர்களின் தாய் அமைப்பான தமுமுகவோ கருவில் மட்டுமல்ல - கனவில் கூட உருவாகியிருக்கவில்லை.

மதுரை மாநாட்டை தொடந்து மஹல்லா ஜமாஅத்தை முன்வைத்து பல்வேறு நிகழ்வுகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்தியது.

சென்னையில் 1-2-2009 அன்று நடைபெற்ற மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு உலமாக்கள், உமராக்கள் மாநாட்டின் மூலம் தான் உலமாக்கள் பணியாளர் நல வாரியம் கிடைத்தது. 2010 டிசம்பர் 11 சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாட்டில் முன்மாதிரி மஹல்லா ஜமாஅத்கள் 10 தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கி கவுரவிக்கப் பட்டன.

திருச்சி மாநாட்டை மட்டும் எதிர்ப்பதேன்..?

இதேபோன்றுதான் 2013 டிசம்பர் 28 சனிக்கிழமை திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாட்டை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்தியது.

பள்ளிவாசல் கபரஸ்தான், பிறப்பு -இறப்பு, திருமணப்பதிவேடு பராமரிப்பு, மத்ரஸா, பள்ளிக்கூடம், பைத்துல்மால், ஷரீஅத் பஞ்சாயத், பெண்கள் உதவும் சங்கம், கல்வி வழிகாட்டல், மருத்துவ முகாம், ஏழைக்குமர் உதவி, மாணவர் கல்வி உதவி போன்றவற்றில் முன்மாதிரியாக செயல்படும் மஹல்லா ஜமாஅத்கள் 15 தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. சமுதாயத்துக்கும் அரசுக்கும் கோரிக்கை விடுத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் என்ன குறை? கண்டுவிட்டது உணர்வு?

திருச்சி மாநாட்டை மட்டும் """"தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்"" விமர்சிக்க காரணம்......? இருக்கிறது! இதற்கு முன்பு நடத்தப்பட்ட மாநாடுகளில் தோழமை கட்சிகளின் தலைவர்கள், பிற சமய அறிஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வந்த கூட்டம் அவர்களுக்காக வந்ததே என பரப்புரை செய்தனர்.
இப்போது திருச்சி மாநாடு `அக்மார்க்’ முஸ்லிம் லீக் முத்திரையோடு துவக்கம் முதல் இறுதிவரை முஸ்லிம் லீகினர் மட்டுமே. திருச்சியில் திரண்ட பெரும் கூட்டத்தை சமுதாயமே வியந்து பார்த்தது - அனைவருமே பாராட்டி மகிழ்ந்தனர்.

இளம்பிறை எழுச்சிப் பேரணியில் அணிவகுத்த இளைஞர்கள், மாணவர்களை பார்த்து எங்கிருந்து வந்தது இந்த அபாபில் பறவைகள்? என ஆச்சரியப்பட்டனர். இது டிஎன்டிஜேவிற்கு பொறுக்கவில்லை.

முஸ்லிம் மாணவர் பேரவை மாநாடு

2013 அக்டோபர் 5 சென்னையில் நடைபெற்ற முஸ்லிம் மாணவர் பேரவை மாநாட்டின் வெற்றியை பொறுக்க முடியாமல் உணர்வு அன்று """"குரைத்தது"" அதில் கலந்து கொண்ட இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய பொருளாளர் கேரள அமைச்சர் பி.கே.குஞ்ஞாலிகுட்டி மீது பாய்ந்து பிராண்டியது. பிறைமேடையில் அதற்கு பதிலடி கொடுக்கப்பட்டது.

உணர்வு பாய்ந்ததற்கு காரணம்......
""முஸ்லிம்கள் நிரப்ப வேண்டியது சிறைச்சாலைகளை அல்ல; கல்விச் சாலைகள்; மதரஸாக்கள்; தொழிற்சாலைகள்; அரசு அலுவலகங்கள்"" என அம்மாநாட்டில் மாணவர்கள் எழுப்பிய முழக்கத்தால்தான்.

மாணவர்கள் இந்த முழக்கத்தை ஓங்கி ஒலித்தார்கள். இப்போது இருக்கும் இட ஒதுக்கீடு வாய்ப்பை நாம் முழுமையாக பயன்படுத்த முடியவில்லை. காரணம்..... படித்தவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்யாமை. வாய்ப்பு தேடி வெளிநாடுகளுக்கு செல்லும் நிலைமை; கல்வியில் இடை நிற்றல்; பெண்களுக்கு உயர்கல்வி இல்லாமை.

இந்தச் சூழ்நிலையில் படித்து பட்டம்பெற்று அரசு வேலை வாய்ப்புக்கு காத்துக் கொண்டிருக்கும் இளைஞர்களையும், படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களையும் போராட்டக் களங்களுக்கு அழைத்து சிறையில் தள்ளினால் - அல்லது காலையில் கைது செய்து மாலையில் விடுதலை செய்தாலும் முதல் தகவல் அறிக்கையில் இவர்கள் பெயர் பதிவாகிவிட்டால் இவர்களின் எதிர்காலமும் அரசு வேலை கனவும் இருண்டு பாழாகிவிடும்.

எனவேதான், விழித்துக் கொண்ட இளைஞர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்கிறார்கள். இந்த பரப்புரைக்கு பிறகுதான் த.த.ஜ.வின் சிறைநிரப்பும் போராட்டம் சிறை செல்லும் போராட்டமாக மாறியது.

முஸ்லிம் மாணவர் பேரவை மாநாடு நடைபெற்று இரண்டே மாத இடைவெளியில் திருச்சியில் மாபெரும் மாநாடு. இந்த மாநாடு எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதற்கு உணர்வு விமர்சனமே சாட்சி.

சமுதாய ஒற்றுமை பாவச்செயலா?
மக்களை ஈர்க்க அரசை எதிர்க்காமல் எங்களை எதிர்த்து மாநாடு நடத்தலாமா என த.த.ஜ கேட்கிறது.

அவர்களை எதிர்த்தோம் என்பதற்கு காரணமாக திருச்சி மாநாட்டின் முதல் தீர்மானத்தை அப்படியே வெளியிட்டுள்ளது -இதற்காக உணர்வுக்கு நன்றி கூறலாம். திருச்சி மாநாட்டில் சமுதாயத் தீர்மானங்களாக

1. சமுதாய ஒற்றுமை காப்போம் 2. மஹல்லா ஜமாஅத் வலிமை சேர்ப்போம் 3. பராமரிக்க முடியாமல் இருக்கும் பள்ளிவாசல் பராமரிப்புக்கு உதவி நிதியம் தொடங்குவோம் 4. தமிழக அரசாணை `1 அ’ படிவ அடிப்படையில் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரி திருமண பதிவேடு தயாரிப்போம். 5. ஊர்கள்தோறும் மீலாது விழா நடத்துவோம் 6. சிறப்பு திருமண பதிவு சட்டம் (1954) கீழ் இஸ்லா மிய திருமணங்களை பதிவு செய்யாதீர் என சமுதாயத்திடம் எடுத் துரைப்போம் 7. காஜிகள், நாயிப் காஜிகள் என்ற பள்ளிவாசல் இமாம் களுக்கு சட்ட அங்கீகாரம் பெற்றுக் கொடுப்போம். 8. பள்ளிவாசல் பணிகளில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்போம் 9. இமாம்களுக்கு தகுதியான ஊதியம் வழங்குவோம் என்று ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் முதல் தீர்மானமே தங்களுக்கு எதிரானது என்கிறது உணர்வு.

`சமுதாய ஒற்றுமை காப்போம்’ என்பது பாவச் செயலா?

ரமளான், ஹஜ்ஜுப் பெருநாள், தலை நோன்பு, ஸஹர், இஃப்தார் நேரங்களில் சர்ச்சைகளை ஏற்படுத்தாமல் ஒன்றுபட்டு செயல்படுவோம் என வேண்டுவது ஹராமான காரியமா? சமுதாயத்தில் பிளவுகள் ஏற்பட எவரும் காரணமாக இருக்க வேண்டாம் என வலியுறுத்துவது சமுதாய துரோகமா?

உணர்வின் விமர்சனத்தில் ஒரு உண்மை புரிந்து விட்டது.

சமுதாய ஒற்றுமை என்பது தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்திற்கு கூடாது. ஆகவேதான் அதை வலியுறுத்த வேண்டாம் என்கிறது.

மீதி 8 தீர்மானங்களில் `மீலாது விழா நடத்துவோம்’ என்பதை மட்டும்தான் த.த.ஜ. தங்கள் கொள்கைப்படி எதிர்க்க முடியும் - அதையும் இப்போது மாற்றி விட்டார்கள். ரபிய்யுல் அவ்வலில் நபிகளாரின் புகழ் பேசுவது கூடாது - ஆங்கில மாதத்தில் நடத்தினால் கூடும் என்பதே அவர்களின் புதிய ஏற்பாடு

திருச்சி மாநாட்டில் அரசியல் தீர்மானங்களாக,

1. நாடாளுமன்ற தேர்தலில் தமிழக கட்சிகளுக்கு வேண்டுகோள் 2. மதவெறி சக்திகளை வீழ்த்த வாக்காளர்களுக்கு வேண்டுகோள் 3. பூரண மதுவிலக்கு 4. பொதுசிவில் சட்டத்தை கூறும் அரசியல் சட்ட 44-வது பிரிவை நீக்க வலியுறுத்தல் 5. மிஸ்ரா கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த 6. தமிழகத்தில 3.5 சதவீத இடஒதுக்கீட்டை உயர்த்த 7. இஸ்லாமாக மதம் மாறியோருக்கு பிற்பட்ட வகுப்பு சான்று 8. இந்தியாவில் இஸ்லாமிய வங்கி 9. பள்ளிவாசல் சான்றை ஏற்று பாஸ்போர்ட் 10. காஜி சட்டத்தில் திருத்தம் 11. ஓரின சேர்க்கைக்கு அங்கீகாரம் கூடாது 12. துணை வேந்தர் பதவிக்கு முஸ்லிம்கள் 13. நீதிபதிகளாக முஸ்லிம்கள் 14. திருச்சி ரயில்வே மேம்பாலம் 15. தோல், சாயப்பட்டறைகளுக்கு இழப்பீடு 16. ஆயுள் சிறைவாசிகள் விடுதலை 17. முஸ்லிம்களுக்கு இலவச கல்வி 18. நதிநீர் இணைப்பு என 18 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இதில் எந்த தீர்மானம் சமுதாயத்திற்கு எதிரானது? எது மக்களை ஈர்க்காதது?

இப்படி மாநாடு நடந்தி தீர்மானம் போட்டால் தமிழகத்தில் முஸ்லிம் லீக் எப்போதோ சமாதியாகி விட்டது என உணர்வு எழுதுகிறது.

சமாதியாகி விட்டதால்தான் உடைப்பதற்கு த.த.ஜ. கடப்பாரை தூக்குகிறதா? - இறைநேசர்களின் கப்ருகளை உடைத்ததுபோல் உடைப்பதற்கு! சமாதியானவர்களை கண்டு கொள்வது த.த.ஜ.விற்கு ஹராமாயிற்றே. இதில் மட்டும் என்ன விதிவிலக்கு?

ஏகத்துவம் இவர்களின் ஏகபோக சொத்தா?
தவ்ஹீது ஜமாஅத் என பெயர் வைத்து விட்டால் ஏகத்துவம் இவர்களின் ஏகபோக சொத்தா?

அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டு அவனது தூதரை பின்பற்றும் ஒவ்வொருவருமே ஏகத்துவவாதிகள்தான்!

ஆனால், அல்லாஹ்வை விவாதப் பொருளாக்கி அவனுக்கு உருவமுண்டா, இல்லையா என்ற தெருச்சண்டை வரையில் சர்ச்சைக்குள்ளாக்கிய இவர்கள் ஏகத்துவவாதிகள் என சொல்லப்படுவதற்கே அருகதை யற்றவர்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை சாதாரண போஸ்ட்மேன் என்றதிலிருந்து - சத்திய ஸஹாபா பெருமக்களை `அண்ணன் எப்போ சாவான் - திண்ணை எப்போ காலியாகும்’ என காத்திருந்த வர்கள் என்று அவமானப்படுத்திய இவர்கள் மார்க்கம் பேசுவதற்கே தகுதியற்றவர்கள்.

பாரம்பரிய பள்ளிவாசலுக்கு அருகிலேயே வீட்டை வாடகைக்கு பிடித்து அதை தனிபள்ளியாக்கி போட்டி ஜமாஅத் ஏற்படுத்துகிறீர் களே என கேட்டால், அவர்கள் செய்யவில்லையா - இவர்கள் செய்யவில்லையா என கேட்கிறார்கள். த.த.ஜ.வை போல வேறு எவர்களாலும் சமுதாயத்திற்கு இவ்வளவு பெரிய சோதனைகள் ஏற்பட்டதில்லை.

எப்போதுமே தொப்பி அணிந்து கொண்டு, தொழும்போது மட்டும் தூக்கி எறிவது - ஜமாஅத்தின்போது முன்வரிசையில் நின்று கொண்டு இமாம் துஆ ஓதும்போது வெளிநடப்புச் செய்வது - ஜமாஅத் தொழுகையில் வேண்டுமென்றே தாமதமாக வந்து ஜமாஅத் முடிந்த மறுநிமிடமே போட்டி ஜமாஅத் வைப்பது போன்ற செய்கைகள் அதிகரித்தது. விரலை நீட்டவா - ஆட்டவா என்ற தகராறில் விரல்கள் ஒடிந்தன. பிறை பார்த்து நோன்புபிடித்த காலம் மாறி போலீஸ் குவிக்கப் பட்டதைப் பார்த்து இன்று தான் நோன்பு என அறிந்து கொள்ளும் துர்பாக்கியம் ஏற்பட்டது. இந்த இழிநிலைகளுக்குப் பிறகுதான் பள்ளிவாசல் நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்தன.

பள்ளிவாசலில் தொழ வருகின்றவர்களை தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை உண்மைதான். ஆனால், தாங்கள் நினைப்பதை சாதிக்க ஜமாஅத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதையும், இமாம்களை புரோகிதர்கள் என்றும், தாதாக்கள் என்றும் விமர்சிப்பதும், அவர்களை தாக்குவதும், முத்தவல்லியை சுட்டுக் கொலை செய்வதும் எந்த நிர்வாகத்தால்தான் பொறுத்துக்கொள்ள முடியும்.

புற்றீசல்கள் போல் இயக்கம் பெருக யார் காரணம்?
``த.த.ஜ.வை எதிர்த்தால் பணக்காரர்கள் வாரி வழங்குவார்கள்; முஸ்லிம் மக்களின் ஆதரவு கிடைக்கும் என்ற குருட்டு நம்பிக்கையில் முஸ்லிம் லீக் எதிர்ப்பதாக உணர்வு உளறியிருக்கிறது. இவர்களை ஆதரித்தோ, எதிர்த்தோ எந்தக் காலத்திலும் முஸ்லிம் லீக் அரசியல் நடத்தியதில்லை. தமிழகத்தில் இத்தனை இயக்கங் கள் உருவாக முஸ்லிம் லீக் காரணமாம் - முழு யானையை முக்காலிக்குள் மறைக்கப் பார்க்கிறது `உணர்வு’.

``முஸ்லிம்கள் நான்கு மத்ஹபுகளாக பிரிந்து கிடக்கிறார்கள். அவர்களை ஒன்றிணைக்கப் போகிறோம்’’ என புறப்பட்டு இயக்கம் கண்டவர்கள் நாற்பது இயக்கங் களாக சிதறுண்டு போனார்கள்.

அவர்களின் பிளவு கொள்கை வேறுபாட்டால் அல்ல - சுயநலம், பண விவகாரம் இன்னும் ஏட்டில் எழுதமுடியாத இருட்டு விவகாரங்களால்.

பாபரி மஸ்ஜிதை கட்டப் போகிறோம் என ஆரம்பித்து வாழ்வுரிமை போராட்டங்களின் பெயரால் வாரிச்சுருட்டிய கோடிகளுக்கு கணக்கு எங்கே என்று இவர்களின் பிளவுண்ட இயக்கங்கள் ஒன்றுக்கொன்று எழுதி வெளியிட்ட விவரங்களை கண்டு இணைய தளங்களே வெட் கப்பட்டன. கணினியே கலங்கி போனது, சுனாமியே தோற்கும் அளவுக்கு அவ்வளவு வாரிச்சுருட்டல் விவகாரங்கள்.

``மூன்று பெருநாட்கள் என பிறையை மூன்றாக்கியது அறிவியல் என்ற பெயரில் சில பைத்தியங்கள் தான்’ என இப்போது உணர்வு சொல்கிறது.

ஆனால் இந்த பைத்தியத்தை தொடங்கியது - பரவச் செய்தது யார்? இவர்களில்லையா?

இவர்கள் ஏற்படுத்திய பிறை குழப்பத்தாலும், பெருநாள் குழப்பத் தாலும் எத்தனை ஆயிரம் குடும்பங்களில் பிரச்சினைகள்; மாற்று சமுதாயங்கள் இதை பார்த்து சிரிப்பாய் சிரித்தன. இப்படிப்பட்டவர்களைத்தான் நிலையும் நிறமும் மாறாதவர்கள் என்று மக்கள் நற்சான்றளித்து இவர்களை ஆதரிக்கிறார்களாம் - கொட்டை எழுத்தில் உணர்வு கொக்கரிக்கிறது. இது உண்மை யென்றால் 75 லட்சம் தமிழக முஸ்லிம்களும் - ஏன் ஏழரை கோடி தமிழக மக்களும் இவர்கள் இயக்கத்திலல்லவா சேர்ந்திருப்பார்கள்.

கொச்சைப்படுத்தப்படும் போராட்டங்கள்
போராட்டங்களையே கொச்சைப்படுத்தக்கூடிய அளவில் காலையில் கூடி கல்யாண மண்டபத்தில் விருந்துண்டு மாலையில் வெளியேறுவோர்க்கு தியாகி பட்டமாம். போராட்டத்திற்கு ``பிரியாணி’’ அறிவிப்பும் அதே உணர்விலேயே இடம் பெற்றுள்ளது.

நபிவழி என்றால் அடிவயிற்றில் கல் இரண்டை கட்டிக் கொண்டு பசித்திருக்காமல், பிடிசோற்றில் படி நெய்யை கலந்து தயாரிக்கும் பிரியாணி எதற்கு? எந்த யுத்தத்தில் நபிகளார் (ஸல்) பெண்களை களமிறக்கினார்கள்? எது நபி வழி? பெற்றோர், கணவன் அனுமதியில்லாமல் போராட்டங்களுக்கு பெண்களை அழைத்து வருவதும், காட்சிப் பொருளாக அவர்களை களம் இறக்குவதும் அவர்கள் கைதானால் அன்னியர்களிடம் அங்க அடையாளங்களை காட்டுவதும் சமுதாயத்திற்கு கண்ணியமான செயலா?

ஒரு போராட்டமென்றால் களமிறங்கி கைதாகி நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்பட்டு சிறை செல்ல வேண்டும். தங்கள் லட்சியம் நிறைவேற ஜாமீனில் வெளிவரக்கூடாது. இதைவிட்டு விட்டு, ``ஒரு திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் - போலீஸ் தடுத்தும் விடாப்பிடியாக ஜீப்பில் ஏறி, `நான் ஜெயிலுக்கு போரேன் - ஜெயிலுக்கு போரேன்’ - நானும் ரவுடி - நானும் ரவுடி - என்ற காட்சி அடிக்கடி தொலைக்காட்சியில் இடம் பெறுவதை பார்க்கும் போது இவர்கள் போராட்டம்தான் நினைவுக்கு வருகிறது.

ஆனாலும், இவர்கள் நடத்தும் போராட்டங்களை பற்றிய ஒரு உண்மையை உணர்வு பகிரங்கப்படுத்தியுள்ளது. ``நாங்கள் தவ்ஹீது வாதிகள் என தெரிந்தும் எங்கள் போராட்டங் களுக்கு மடை திறந்த வெள்ளமாய் படை எடுத்து வரும் கூட்டம் சுன்னத் ஜமாஅத்தினர்தான்’ என்று. இதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியது சுன்னத் ஜமாத்தினர் அல்ல - த.த.ஜ. காதலிக்கும் அ.இ.அ.தி.மு.க. தான்!

ஏனெனில் விஸ்வரூபம் திரைப்பட சர்ச்சையில் முதல்வர் ஜெயலலிதா ஒரு பேட்டியில், தவ்ஹீத் ஜமாஅத்தினர் ஏழரை லட்சம் என சொன்னார். அது இவர்களைத்தான் சொன்னதாக நினைத்து வானத்துக்கும் -பூமிக்குமாக குதித்தனர்.

`75 லட்சம் தமிழக முஸ்லிம்களில் 10 சதவீதம் தவ்ஹீத்வாதிகள். 90 சதவீத சுன்னத் ஜமாஅத்தினர். அந்த வகையில் ஏழரை என முதல்வர் சொல்லியுள்ளார். தவ்ஹீத்வாதிகள் என்றால் த.த.ஜ. மட்டும் அல்ல’ என்ற விளக்கம் ஒருபுறத்திலிருந்து வந்தது.

ஆனால், அப்போது முதல்வரோடு கரம் கோர்த்து நின்ற இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பினர் இதற்கு விளக்கம் சொல்லாமல் வாய்மூடி மௌனிகளாக இருந்துவிட்டனர்.

ஆனால், எதையும் கணக்குப் போட்டுப் பார்க்கும் அம்மையார் ஏழரை என்றதற்கு அர்த்தம் உண்டு.

சகோதர இந்து சமயத்தவர்கள் சனியை இந்த எண் சொல்லிதான் அழைப்பார்கள். சனியிலும் கேடு கெட்ட சனியாக இருந்தால் ஏழரை என சொல்லக்கூட பயந்து `ஆறே முக்காலும் அரையும் காலும்’ என்பார்கள். அதுதான்இது. அதனால்தான் தலைப்பிலேயே இதை குறிப்பிட்டோம்.

மஹல்லாவாசிகள் விவாகரத்து, சொத்து சண்டைகளுக்காக இவர்களைத் தான் நாடி வருவதாக உணர்வு சொல்கிறது. ஆம்! கட்டப்பஞ்சாயத்து நடத்துவதற்காகவே தமிழ்நாட்டில் பல இயக்கங்கள். இங்கு வரும் விவகாரங்கள் எல்லாம் இழுத்துக் கொண்டு ஓடியது அல்லது அழைத்துக் கொண்டு வந்தது.

மரத்தடி திருமணங்களுக்கும் - குடும்பத்தை கேவலப்படுத்தும் காரியங்களுக்காகவும் தானே மஹல்லா ஜமாஅத் வேண்டாம் என்கிறார்கள்.

டிசம்பர் 6 போராட்டத்துக்கு ``முத்தலாக்’’ ஏன்?:
பாபரி மஸ்ஜித் தகர்ப்பில் முஸ்லிம் லீக் வீரியம் இழந்து விட்டதாம். இந்த வீராதிவீரர்கள் சொல்கிறார்கள். 20 வருடங்களாக டிசம்பர் 6 போராட்ட களமாக்கினீர்களே என்ன ஆயிற்று. திடீரென இப்போராட்டத்திற்கு `முத்தலாக்’ கொடுத்து விட்டீர்களே ஏன்? இதற்கு மட்டும் முத்தலாக் கூடுமோ? அல்லது உண்டியல் குலுக்கியது போதுமோ? தனி மனித வழிபாடு அங்கா? இங்கா? ``அண்ணனை’’ எதிர்த்தவர்கள் மீளமுடியாத வழக்குகளில் சிக்க வைக்கப்படுவார்கள் என்பதுதான் இவர்கள் ஜனநாயகம்.

இவர்களின் தவறான வழிகாட்டல் எத்தனை பேரின் வாழ்வை தொலைத்தது. உள்ளே அனுப்பிய எவரையாவது இவர்கள் வெளியே எடுத்த வரலாறு உண்டா? இவர்கள் இயக்கம் கண்டபின் `அறுக்கப்பட்ட தாலி’கள் எத்தனை?

தரை தட்டிய பிறைக்கப்பல் கரை சேராதாம். தரை கட்டிய கப்பல் என்றால் உணர்வில் இரண்டரை பக்க விமர்சனம் எதற்கு?

தங்கள் விமர்சனத்திற்கு ஆதரவாக மூன்று படங்கள்.. முட்டாள் தனமாக கேட்க வேண்டுமென்றால் இதுகுறித்து ``முபாகலாவிற்கு’’ தயாரா என்று! ஆனால் அது அவர்கள் பாணி. ஆனால், அநியாயமான குற்றச்சாட்டை நாங்கள் பலமுறை மறுத்தும் திரும்ப திரும்ப அவதூறு பரப்புவோர் பற்றி தஹஜ்ஜத் தொழுகையில் ஒரு முஸ்லிம் லீகன் கையேந்தி விட்டால் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. கோயபல்ஸ் பிரச்சாரம் போல் மீண்டும் மீண்டும் சொன்னால் சமுதாயம் நம்பி விடாது.

ஆசைகளுக்கும், ஆரவாரங்களுக்கும், ஆவேசங்களுக்கும் ஆட்படாத - அமைதியின் திருவுருவம், அடுத்தவருக்கு கேடு நினைக் காத அற்புத தலைவர் முனீருல் மில்லத்.கே.எம். காதர் மொகிதீன் இறைவனையும், இறைத்தூதரையும், இஸ்லாத்தையும் ஆய்வு செய்து அறிந்துள்ள பேராசிரியப் பெருந்தகை.

அந்த மாமனிதரை தரையிலிருந்து எழுவதை சாமியாரிடம் சரணாகதி என்பதையும், வகுப்பு கலவரத்தை தடுக்க இந்து முன்னணி கூட்டத்திற்கே நேரில் சென்ற துணிச்சல் மிக்கவரை வந்தே மாதரம் பாடச் சென்றார் என்பதும், இஸ்லாமிய கருத்துக் களை தன் சொற்பொழிவில் பரப்பி வந்த போது நடைபெற்ற நித்யானந்தா விழா புகைப்படத்தை இப்போது விஷமத்தன கருத் தோடு வெளியிடுவதையும் அல்லாஹ்வே மன்னிக்க மாட்டான்.

ஒன்றை தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்...

இயக்கங்கள் எத்தனை தோன்றினாலும் சமுதாய பேரியக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்தான்! மஹல்லா ஜமாஅத் அங்கீகாரமும், சமுதாய அரவணைப்பும் அதற்கே உண்டு. அதனால்தான் திறக்கப்படக்கூடிய பள்ளிவாசல் கள் முஸ்லிம் லீக் தலைவர்கள் இல்லாமல் திறக்கப்படுவ தில்லை; மத்ரஸா விழாக்கள் முஸ்லிம் லீக் தலைவர்களை அழைக்காமல் நடத்தப்படுவதில்லை.

27 ஆண்டு காலமாக திருக்குர்ஆன் விளக்கத்தையும், நபிகளாரின் பொன் மொழிகளையும், சமுதாய செய்திகளையும் தாங்கி வெளிவரும் சமுதாயத்தின் ஒரே நாளிதழான ``மணிச்சுடரை’’ யும் இவர்கள் விட்டு வைக்கவில்லை.

சைத்தான் வேதம் ஓதுவதைப் போல் எளிமையைப் பற்றி இவர்கள் உபதேசித்துள்ளனர். ஜனவரி 28 இவர்கள் போராட்டத்திற்கு செலவழித்துள்ள விளம்பர செலவில் மட்டும் 1 பொறியியல் கல்லூரி அல்லது 2 கலைக்கல்லூரி அல்லது 6 பள்ளிக்கூடங்கள் அல்ல 10 மத்ரஸாக்கள் அல்லது 15 ஆதரவற்றோர் இல்லங்கள் என எழுப்பியிருக்கலாம்.

அ.இ.அ.தி.முக.விடம் பெருந்தொகை பெற பெருங்கூட்டம் திரட்ட இடஒதுக்கீட்டை இவர்கள் கையில் எடுத்திருப்பது சமுதாயத்திற்கு தெரியாத ரகசியமா? முஸ்லிம் லீக் இல்லை என்றால் இடஒதுக்கீடே இல்லை

முஸ்லிம் லீக் இல்லை என்றால் இடஒதுக்கீடு என்ற ஒன்றே இல்லை. இவர்கள் இப்போது கூப்பாடு போடும் 10 சதவீத மிஸ்ரா ஆணைய பரிந்துரையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாதனைதான்! விவரமறிய காயல் மகபூப் எழுதிய, `இடஒதுக்கீடு’ நூலை படித்துப் பார்த்து தெரிந்து கொள்ளட்டும்.

இப்போதும் - எப்போதும் தெளிவாகச் சொல்கிறோம்.

மஹல்லா ஜமாஅத் கட்டுப்பாடு காப்பற்றப்பட வேண்டும்; மார்க்க விஷயங்களில் சங்கைக்குரிய உலமா பெருமக்களின் வழிகாட்டு தலைத்தான் சமுதாயம் பின்பற்ற வேண்டும். இந்த கொள்கையில் உறுதியுள்ளவர்களை மட்டும் சமுதாயம் ஆதரிக்கட்டும்.