Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

போலீஸ் ஸ்டேஷன்களில் காத்திருப்பதை தவிர்க்க ஆன்லைனில் புகாரை அனுப்பி வைக்கும் வசதி

சட்டம் ஒழுங்கு பிரச்னைகளில் பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, அதிகாரிகளுக்காக காத்திருக்காமல்,ஆன்-லைனில் புகாரை அனுப்பி ரசீது, எப்.ஐ.ஆர்., பெற்றுக்கொள்ளும் புதிய திட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய அளவில் அனைத்து மாநிலங்களையும் ஒருங்கிணைத்து ஆன்லைனில் குற்றவாளிகள் பற்றிய தகவலை தெரிந்து கொள்வதற்கான நவீன தொழில் நுட்பம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டது. தமிழகம் உட்பட நான்கு மாநிலங்கள் முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு கம்ப்யூட்டரை இயக்குவது தொடர்பான சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. தமிழகத்தில் திருவள்ளூர், அரியலூர், சிவகங்கை, கோவை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், சேலத்தில் இத்திட்டத்தின் அனைத்து சிறப்பு அம்சங்களும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.


அமல்: திருச்சி மற்றும் திண்டுக்கல்லில் நேற்று முதல் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டிருந்த அனைத்து எப்.ஐ.ஆர்., குற்றவாளிகள் தொடர்பான விபரங்கள், அவர்களின் கைரேகை, கண்விழி பார்வை போன்ற அனைத்து தகவல்களும் ஆன்லைனில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.


சிறப்பு பயிற்சி: மாவட்டத்தில் உள்ள 42 போலீஸ் ஸ்டேஷன்களில் புதிதாக பதிவு செய்யப்படும் எப்.ஐ.ஆர்.,கள். இனி கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதற்கான ரசீது, நகல் போன்றவை வழங்கப்படும். ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் 3 போலீசாருக்கு இதற்கான சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.


ஆன்லைன் பதிவேற்றங்களை கண்காணிக்கவும், போலீஸ் ஸ்டேஷன்களின் பதிவுகளை பார்வையிட்டு தேவையான ஆலோசனைகளை வழங்கவும் தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சட்டம் ஒழுங்கு பிரச்னைகளில் பாதிக்கப்படுபவர்கள் தங்கள் வீடுகளில் அமர்ந்தவாறு ஆன்லைனில் புகாரை சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களுக்கு அனுப்பி வைக்கலாம். பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர்.,கள், கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் குற்றபத்திரிக்கை, சாட்சிகள் தொடர்பான விசாரணை அனைத்தையும் இணையதளத்தில் பார்க்கலாம். வழக்கு தொடர்பான போலீசாரின் புலன் விசாரணை தொடர்பான தகவல்கள், இந்த இணையதளத்தில் இடம்பெறாது. இத்திட்டத்தை, ஜெயச்சந்திரன் எஸ்.பி.,நேற்று துவக்கி வைத்தார். நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
""பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து அதிக அளவில் புகார்கள் பெறுவதற்கான வாய்ப்பு இந்த திட்டத்தின்மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குற்றவாளிகளை விரைவாக அடையாளம் கண்டுபிடிப்பது, காணாமல் போனவர்கள் குறித்து எளிதில் தகவல்களை பெறுவது போன்ற நன்மைகள் இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும்,''என்றார்.

வியாழன், 29 ஆகஸ்ட், 2013

பள்ளி மூடப்பட்டதால் சம்பளமின்றித் தவித்த ஆசிரியருக்கு நிலுவை சம்பளம் முழுவதையும் வழங்கிட உயர் நீதிமன்றம் உத்தரவு

பணியாற்றிய பள்ளி மூடப்பட்டதால் வேறு பள்ளியில் பணி அமர்த்தப்படாமலும், சம்பளம் கிடைக்காமலும் தவித்த ஆசிரியருக்கு நிலுவை சம்பளம் முழுவதையும் வழங்கிட வேண்டும் என்று உத்தரவிட்டதன் மூலம் சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு உதவிக் கரம் நீட்டியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், கீழ்ஆசாரிப்பள்ளம் செயின்ட் மேரீஸ் தொடக்கப் பள்ளியில் 1.8.2005 அன்று சூசை மகேஷ் என்பவர் இடைநிலை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அந்தப் பள்ளி மூடப்பட்டதால், செண்பகராமன்புட்டன்துறையில் செயின்ட் ஆண்டனிஸ் பள்ளியில் அவரை மறு பணியமர்த்துமாறு 9.3.2013 அன்று கன்னியாகுமரி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார். எனினும் பள்ளியில் காலியிடம் இல்லை எனக் கூறி அவரை அங்கு பணியமர்த்த பள்ளி நிர்வாகம் மறுத்து விட்டது.

இதனையடுத்து திருநெல்வேலி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருக்கு கன்னியாகுமரி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஒரு கடிதம் எழுதினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் எந்தப் பள்ளியிலும் சூசை மகேஷ் மறு பணியமர்த்தப்படாததால், அவரை திருநெல்வேலி மாவட்டத்தில் ஏதேனும் ஒரு பள்ளியில் பணியமர்த்தலாம் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சூசை மகேஷ் ஒரு மனுவை தாக்கல் செய்தார். பள்ளி மூடப்பட்ட 2012 ஆகஸ்ட் மாதம் முதல் எனக்கு சம்பளம் வழங்கப்படாததால் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன்.

ஆகவே நிலுவையில் உள்ள ஊதியம் முழுவதையும் எனக்கு வழங்கிடவும், கன்னியாகுமரி மாவட்டத்திலேயே ஏதேனும் ஒரு பள்ளியில் என்னை மறுபணியமர்த்திடவும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் சூசை மகேஷ் கோரியிருந்தார்.

இந்த மனு மீது நீதிபதி டி.ஹரிபரந்தாமன் விசாரணை மேற்கொண்டார். 2012 ஆகஸ்ட்முதல் மனுதாருக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை ஊதியம் முழுவதையும் கல்வித் துறையினர் வழங்கிட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலும் ஏதேனும் ஒரு பள்ளியில் அவர் மறுபணியமர்த்தப்படும்வரை மாதந்தோறும் அவருக்கான ஊதியத்தை தவறாமல் வழங்கிட வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

உயிரி தகவல் தொழில்நுட்பவியல் படிப்பு


ஹைதராபாத், ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இக்கல்வியாண்டில் முழுநேர டிப்ளமோ படிப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 வழங்கப்படும் படிப்புகள்: முதுகலை பட்டயப் படிப்பில் (கம்ப்யூட்டர் புரோக்ராமிங், பயாலாஜிக்கல் டேட்டாபேஸ், பயோ - கெமிஸ்ட்ரி) உள்ளிட்ட படிப்புகள் வழங்கப்படுகின்றன.

கல்வித்தகுதி: இப்படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் பொறியியல், மருத்துவம், கணினி உள்ளிட்ட படிப்புகளில் 50 சதவீத மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பிக்கும் மாணவர்கள் ரூ.100க்கான வரைவோலை வழங்கி படிவங்களை பெற்றுக் கொள்ளலாம். தபால் மூலம் பெற ரூ.150 கட்டணம் செலுத்த வேண்டும்.

தேர்வு முறை: மாணவர்கள் இளைநிலையில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். நுழைவுத்தேர்வு கிடையாது.

செப்டம்பர் 22 விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் விண்ணப்பிக்க தவறியவர்கள் ரூ.100 அபராத தொகை செலுத்தி  விண்ணப்பிக்கலாம். 

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

கரும்பலகை கூட இல்லாத பள்ளிகள்

ஒரு பக்கம், டேப்ளட், ஸ்மார்ட்ஸ் ஸ்கிரீன் என்று சில பள்ளிகள் செயல்பட, இன்னும் இந்தியாவில் நான்கில் ஒரு பங்கு பள்ளிகள், கரும்பலகை கூட இல்லாமல் செயல்படுகின்றன.

"சைல்டு ரிலிப் அண்டு யு" என்ற அரசு சாரா அமைப்பு, "லேர்னிங் பிளாக்ஸ்" என்ற தலைப்பில் ஆய்வு செய்து, இன்னும் இந்தியாவில் உள்ள ஆரம்ப, உயர்நிலைப் பள்ளிகளில், அடிப்படை வசதிகள் சரிவர நிறைவேற்றப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.

தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, உள்பட, 13 மாநிலங்களில் செயல்படும் 750 பள்ளிகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 75 சதவீத பள்ளிகளில் டேபிள், சேர், பெஞ்ச் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. 41 சதவீத பள்ளிகளில் உள்ள மாணவர்கள், பள்ளி கட்டடங்கள் இல்லாமல் திறந்தவெளியில் படிக்கின்றனர். 11 சதவீத பள்ளிகளில், டாய்லெட் வசதி இல்லை. 34 சதவீத பள்ளிகளில் டாய்லெட்கள் இருந்தும் பயன்படுத்த முடியாமல் உள்ளன.

இரண்டில் ஒரு பங்கு பள்ளிகளில் டாய்லெட் அருகே தண்ணீர் இல்லை. வட மாநிலங்களில் உள்ள 70 சதவீத பள்ளிகளில், டாய்லெட் அருகே தண்ணீர் வசதி இல்லை. பாதிக்கும் மேற்பட்ட பள்ளிகளில், டாய்லெட் பயன்படுத்திய பிறகு கையை சுத்தம் செய்ய சோப்புகள் இல்லை என்று இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மேலும் 80 சதவீத பள்ளிகளில், டாய்லெட் சுத்தம் செய்ய ஊழியர்கள் இல்லை. இதனால் மாணவர்கள் சுத்தம் செய்ய வற்புறுத்தப்படுகின்றனர். 44 சதவீத பள்ளிகளில் மின்வசதி இல்லை. குறிப்பாக கிழக்கு பகுதியில் உள்ள 74 சதவீத பள்ளிகளில் மின்வசதி இல்லை. இந்தியாவில் உள்ள பள்ளிகளின் தற்போதைய நிலை குறித்த இந்த ஆய்வு, அதிர்ச்சி அடைய வைக்கிறது.

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

மத்தியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி‌யே ஆட்சி அமைக்கும் :சரத் பவார்

வரும் 2014-ம் ஆண்டு நடைபெற உள்ள ‌லோக்சபா ‌தேர்தலில் ஆறு மாநிலங்களை சேர்ந்த மாநில கட்சிகளே பிரதமரை தேர்வு செய்யும் என மத்திய விவசாயத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் தேர்வில் மாநில கட்சிகள்:
‌தற்போதைய சூழ்நிலையில் தேர்தலுக்கு முன்பாக பிரதமர் வேட்பாளர் என நரேந்திர மோடியை அடையாளம் காட்டினாலும் தேர்தல் முடிந்த பின்னர் ஆறு மாநிலங்களை சேர்ந்த மாநில கட்சிகள் மட்டுமே பிரதமரை தேர்வு செய்யும். மேற்குவங்க மாநிலத்தை சேர்‌ந்த திரிணமுல் காங்கிரஸ், உ.பி., மாநிலத்தை சேர்ந்த சமஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, ஒடிசா மாநிலத்தின் பிஜூ ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தமிழகத்‌தை சேர்ந்த அ.தி.மு.க, ஆகிய ஆறு கட்சிகளே பிரதமர‌ை தீர்மானிக்கும் கட்சிகளாக அமையும்.
மேற்கண்ட கட்சிகள் ஆட்சி அமைக்‌க முடியாவிட்டாலும் அக்கட்சிகளின் துணையின்றி பிரதமர் தேர்வு நடைபெற சாத்தியம் இல்லை எனவும், தேர்தலுக்கு முன்னர் மம்தா , நவீன், முலாயம்சிங், மாயாவதி, நிதிஷ் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் முக்கிய காரணியாக விளங்குவர் என தெரிவித்தார்.

பிரதமர் பதவிக்கு இன்னார்தான் தகுதி என்று தேர்தல் வருவதற்கு நீண்ட காலம் முன்னதாகவே அறிவித்தால், அந்த நபருக்கும் கட்சிக்கும் தேவையற்ற பிரச்னைகள் உருவாகும். தற்போது, நரேந்திர மோடிக்கும் பா.ஜ.,வுக்கும் இந்த நிலைதான் ஏற்பட்டுள்ளது என்று கூறிய பவார், ராகுல் குறித்து கூறுகையில், அவருடைய திறமை குறித்து எனக்கு தனிப்பட்ட முறையில் எதுவும் தெரியாது; ஆனால் அவருடைய குடும்ப பின்னணி காரணமாக அவர் சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ளது என்றார்.

வரும் தேர்தலில் தன்னுடைய தேசியவாத காங்கிரஸ் கட்சி தொடர்ந்து காங்கிரஸ் உடனான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் நீடிக்கும் எனவும், மீண்டும் காங்கிரஸ் கட்சி‌யே ஆட்சி அமைக்கும். வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட போவதில்லை; ஆனால் ராஜய்சபா எம்பி.,யாக வருவேன் எனவும் தெரிவித்தார்.

திறக்கபடாமல் முதல்வருக்காக காத்திருக்கும் 12 புதிய கல்லூரிகள்

முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைப்பதற்காக, தமிழகத்தில் புதியதாக துவக்கப்பட்ட, 12 அரசு கல்லூரிகள் காத்திருக்கின்றன. அவற்றில் சேர்ந்த மாணவர்கள், 37 நாட்களாக வகுப்புகளுக்கு செல்ல முடியாமல் காத்திருக்கின்றனர்.

முதல்வர் ஜெயலலிதா, கடந்த சட்டசபை தொடரில், விதி எண் 110 ன் கீழ், "தமிழகத்தில், சிவகாசி, கோவில்பட்டி, முதுகுளத்தூர், திருவாடானை, கடலாடி, குமாரபாளையம், காங்கேயம், பேராவூரணி, ஓசூர், உத்தரமேரூர், காரிமங்கலம், கரம்பகுடி ஆகிய, 12 ஊர்களில், புதிதாக அரசு கலைக் கல்லூரிகள் துவக்கப்படும்" என அறிவித்தார். அதைத் தொடர்ந்து, புதிய கல்லூரிகள் கட்டுவதற்கான நிதி, ஒதுக்கீடும் செய்யப்பட்டன. தற்காலிகமாக, வாடகை கட்டங்கள், அரசு பள்ளி கட்டங்களில், கல்லூரிகள் துவக்கப்பட்டு, மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியானது.

சிவகாசி, கோவில்பட்டி, கடலாடி, திருவாடனை, முதுகுளத்தூர் ஆகிய 5 கல்லூரிகளுக்கு, முதல்வர்கள், 15 பேராசிரியர்கள், 17 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. மற்ற 7 கல்லூரிகளுக்கும், மாற்றுப்பணியாக பிற கல்லூரிகளில் இருந்து பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

ஒவ்வொரு இளங்கலை பிரிவிற்கும், 60 பேர் வீதம், ஜூலை 19 முதல், மாணவர் சேர்க்கை நடந்தது. குறைந்த கல்வி கட்டணம் என்பதால், ஒவ்வொரு கல்லூரிகளிலும், 250க்கு மேற்பட்ட மாணவர்கள்,சேர்ந்துள்ள நிலையில், இதுவரை வகுப்புகள் துவக்கப்படவில்லை. இதுகுறித்து விசாரிக்கையில், "புதிய அரசு கல்லூரி வகுப்புகளை, முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலம், துவக்கி வைக்க உள்ளார். அதற்காக, கல்லூரிகள் காத்திருக்கின்றன" என பேராசிரியர்கள் கூறுகின்றனர்.

அரசு கல்லூரிகளில் சேர்ந்து, 37 நாட்களாகியும், வகுப்புகள் துவங்காததால், கல்லூரி எப்போது துவங்கும் என,மாணவர்கள் தினமும் கல்லூரி வந்து கேட்டு செல்கின்றனர். "விரைவில் அறிவிப்பு வெளியாகும்" என கல்லூரி நிர்வாத்தினர், கூறி அனுப்புகின்றனர்.

"தாமதமாக வகுப்புகள் துவக்கினால், படிப்பதில் சிரமம் ஏற்பட்டு, பருவத் தேர்வுகளை எழுதுவதிலும், சிக்கல் ஏற்படும்" என மாணவர்கள் கலக்கத்தில் உள்ளனர். மாணவர்களின் நலன் கருதி, உடனே வகுப்புகள் துவக்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சனி, 24 ஆகஸ்ட், 2013

முஸ்லிம் லீக்கின் கோரிக்கையை ஏற்று , இஸ்லாத்தின் கோட்பாட்டிற்காக போட்ட உத்தரவை வாபஸ் பெற்றார் எம்ஜிஆர் --- பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன்

திருவள்ளூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மாவட்ட அனைத்து ஜமாஅத் ஒருங்கிணைப்பு கமிட்டி மற்றும் மாவட்ட உலமா பெருமக்கள் இணைந்து நடத்திய இஸ்லா மிய திருமண சட்ட விளக்க கருத்தரங்கம் ஆகஸ்டு 23ம் தேதி வெள்ளி மாலை பொன்னேரி மரியம் மதீனா பள்ளிவாசலில் நடை பெற்றது.

பொன்னேரி வட்டார ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலானா ஹாஸ் மிஸ்பாஹி தலைமையில் நடைபெற்ற இந்நிகழச்சியில்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் சிறப்புரையாற்றி னார்.

அப்போது அவர் பேசுகையில் குறிப்பிட்டதாவது,

இந்தியாவிலுள்ள முஸ்லிம் களாகிய நமக்கு இந்திய அரசியல் சாசனத்தின் குறிப் பிடப்பட்டுள்ளபடி நமக்குள்ள தனியார் சட்டமாகிய ஷரீயத் சட்டப்படி நடப்பதற்கு எல்லா உரிமைகளும் இருக்கிறது.

ஆனால் எல்லோருக்கும் ஒரே வகையான பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற பிரச்சாரம் ஓயாமல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இந்த பிரச்சாரத் தால் தம்முடைய சமுதாயத்தில் உள்ளவர்கள் கூட குழப்பம் அடைந்து வருகிறார்கள்.

"இஷ்டத்திற்கு தலாக் சொல்கிறார்கள், பெண்கள் அடிமை படுத்தப்பட்டு கிள்ளு கீரைகளாக நடத்தப்படு கிறார்கள். முஸ்லிம்களிடையே ஆனாதிக்கம் மேலோங்கி நிற்கிறது" என ஊடகங்கள் வாயிலாக எழுதியும் பேசியும் வருவதால் சமுதாயத்தில் உள்ளவர்களுக்கு இந்த குழப்பம் ஏற்படுகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் முஸ்லிம்களாகிய நாம் முஸ்லிம்களாகத்தான் இருக்க வேண்டுமானால் ஷரீஅத் சட்டத்தை பின்பற்றித்தான் வாழ வேண்டும். நமக்கென்று உள்ள தனித்தன்மையை பாது காத்தால்ஒழிய நாம் முஸ்லிம் களாக வாழ முடியாது.

பள்ளிவாசல், கபரஸ்தான், தர்கா, வஃக்பு சொத்துக்கள் திருமண முறை, தலாக் விவகாரங்கள், சொத்து பாகப்பிரிவினை போன்ற விஷயங்களில் நம்முடைய தனித்தன்மைகளை நாம் புரிந்து வாழ வேண்டும். அப்படி வாழ வில்லை என்பதற்காகத்தான் ஷரீஅத்தை சீர்குலைத்துவிட லாம் என சிலர் கனவு காண்கிறார்கள்.

கபரஸ்தானில் ஏன் அடக்கம் செய்ய வேண்டும் இறந்தவர் களை எரியூட்ட வேண்டியது தானே என அன்றைக்கு கேட்டார்கள். இன்று பொது சிவில் சட்டத்தை கேட்கிறார் கள்.

பள்ளிவாசல் ஒலிபெருக்கி யில் பாங்கு சொல்ல தடை விதித் தார்கள்; இது எங்கள் உரிமை தடை கூடாது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலியுறுத்தியது திரும்பப் பெற்றார்கள்.

எம்.ஜி.ஆர். அவர்கள் முதல்வராக இருந்த போது பள்ளிவாசல் வழியே மேள தாளம் அடிப்பதற்கு அனுமதித்து உத்தரவு போட்ட போது தொழுகை நடத்தும் நேரங்களை கேட்டார்கள். எல்லா நேரமும் தொழுகை நேரம்தான் சூரிய உதயம், உச்சம்,அஸ்தமனம் ஆகியவற்றில் சில நிமிடங்களை தவிர என விளக்கம் சொன்னோம் உத்தரவை திரும்பப் பெற்றார்கள்.

பதர் சயீத் வழக்கு
இப்போது முன்னாள் எம்.எல்.ஏ. பதர் சயீத் நீதி மன்றத்திற்கு சென்றிருக்கிறார். அவர் நீதிமன்றத்திற்கு சென்றதின் மூலம் நமக்கு கிடைத்திருக்கும் நன்மை என்ன வென்றால், இஸ்லாமிய மார்க்கத்தில் முஸ்லிம்கள் எப்படி இருக்கிறோம், எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு வழிகாட்டியாக அமைந் திருக்கிறது.

இஸ்லாமிய திருமண சட்டம் என்றால் என்ன? அதன் சிறப்பு என்ன? என்பதை சமுதாயம் விளங்கி கொள்வதற்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இஸ்லாமிய திருண சட்டம் 1500 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்டிருக்கிறது . ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்யும்போது வக்கீல், வலி,இரண்டு சாட்சிகள் வேண் டும் இல்லையேல் திருணம் செல்லாது. எனவே இஸ்லாமிய திருமணங்களின் சிறப்பை நாமும் தெரிந்து கொண்டு குழப்பம் செய்பவர்களுக்கும் சொல்ல வேண்டும்.

தலாக்கிற்கு சட்டம் உள்ள ஒரே மதம் இஸ்லாம்
அதே போன்று தலாக் விஷயமும் இன்று விவகார மாக்கப்படுகிறது. உலகிலேயே தாலக்கிற்கு சட்டம் கொடுத் திருக்கின்ற மார்க்கம் இஸ்லாம் ஒன்றுதான். முஸ்லிம்கள் இடத்தில் தலாக் விஷயத்தில் தவறான அணுகுமுறைகள் பின்பற்றப்படுவதால் குழப்பம் ஏற்பட்டு விடுகிறது. தலாக் சொன்னால் இறைவனின் சன்னிதானமே ஆடும்.

தலாக் பற்றிய விளக்கங்கள் முத்தலாக் என்றால் என்ன?தாலக் வாய்ப்பை பயன்படுத்துவது எப்படி? இவைகள் எல்லாம் சமுதாயம் விளங்கிக்கொள்ள வேண்டிய விஷயங்கள். இந்த விளக்கங்கள் குர்ஆன், ஹதீஸ், இஜ்மா, கியாஸ், இமாம்கள் வகுத்தளித்த சட்டங்கள், ஃபிக்ஹு, மஸாயில்கள் ஆகிய வற்றின் மூலம் பெறலாம். அதை விளக்கி சொல்வது உலமாக் களால் மட்டும்தான் முடியும்.

ஒரு உண்மையைச் சொல்ல வேண்டுமானால் நாம் இஸ்லாத்தை பாதுகாக்க வில்லை. இஸ்லாம் நம்மை பாதுகாக்கிறது. அந்த மார்க்கத்தை முழுமையாக பின்பற்றி நடக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

திருமண கட்டாய பதிவு
இன்று திருமணத்தை பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் என்பது சட்டமாக்கப்பட்டுள்ளது. திருமணங்களை காலம் காலமாக நாம் ஜமாஅத்தில் பதிவு செய்கிறோம்.

திருமணம் கட்டாய பதிவுச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது இந்த பதிவு செய்யும் முறையில் சில மாற்றங்கள் செய்து, சென்ற ஆட்சியின் போது இஸ்லாமிய ஷரீஅத்தும் விட்டு போகாமல் அரசின் சட்டத்திற்கும் பாதகம் வராமல் இரண்டையும் ஒன்றாக இணைக்கும் வகையில் இஸ்லாமிய திருமணங்களை பதிவு செய்ய தனிப்படிவம் உருவாக்கினோம்.

அந்த படிவத்தில் நம் தப்தரில் என்ன உள்ளதோ அது அத்தனையும் சொல்லப்பட்டிருக் கிறது. அந்த படிவத்தை சார் பதிவாளர் அலுவலகத்தில் கொண்டுபோய் கொடுத்தால் உரிய கட்டணத்தை பெற்றுக் கொண்டு சார்பதிவாளர் பதிவு செய்வதற்கு கடமை பட்டவர்.

ஆனால் இன்று பல இடங்களில் இப்படி நடப்பது இல்லை என்ற புகார்கள் வருகின்றன. நாம் இன்றைய அரசில் வாதாடி பெற்ற உரிமையை இந்த அரசியலும் நிலை நாட்ட வேண்டும் என்பதற்காகத்தான் நாடு தழுவிய இந்த கருத்தரங்குகள். மஹல்லா ஜமாஅத் இந்த கருத்தரங்கின் முக்கிய அம்சம் என்ன வென்றால் பள்ளிவாசலை மையமாகக் கொண்ட மஹல்லா ஜமாஅத்துதான் முஸ்லிம் சமுதாயத்தின் இயற்கையான அமைப்பு. மஹல்லாஜமாஅத் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். பள்ளிவாசல் இஸ் லாமிய மார்க்க ஒழுங்குகளின் படி செயல்பட வேண்டும் இதற்கு யாரும் இடையூறு செய்யக் கூடாது.

மார்க்க விஷயம் என்று வருகிற போது சங்கைக்குரிய உலமாக்களின் பேச்சை ஏன்,எதற்கு என்று கேட்காமல் பின்பற்ற வேண்டும். உலமாக் கள் இல்லை என்றால் இஸ்லாம் இல்லை. அதனால்தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தெளி வாக சொல்கிறது மார்க்க விஷ யத்தில் உலமாக்களின் பேச்சை கேட்டு செயல்படுங்கள் என்று.

இன்று போட்டி மஹல்லாஹ், போட்டி ஜமாஅத், போட்டி பள்ளிவாசல், தனி கபரஸ்தான், அமைப்பின் பெயரால் தனி தப்தர் என்று செய்துகொண்டே போய் மூன்று பெருநாள், நான்கு பெருநாள் என்று குழப்பம் ஏற்பட்டு கொண்டே இருக் கிறது. இதை முறைப்படுத்த வேண்டிய கட்டாயம் சமு தாயத்திற்கு உண்டு. அதை வலியுறுத்துவதுதான் இந்த கருத்தரங்கின் முக்கிய நோக்கம்.

காஜி,ஙாயிப் காஜி
காஜி சட்டப்படி ஒவ்வொரு பள்ளிவாசல் இமாமும் அந்த மஹல்லாவின் காஜிதான். அதற்கு பெயர் ஙாயிப் காஜி. தலைமை காஜி, மாவட்ட காஜி செய்யும் காரியத்தைத்தான் ஙாயிப் காஜி செய்வார்.

தமிழ்நாட்டில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மஹல்லா ஜமாஅத்துக்கள் இருக்கின்றன. அந்த பள்ளிவாசல்களின் திருமண தப்தர் பாதுகாக்கப்படுகிறது.

திருமண கட்டாய பதிவு சட்டத்தின் படி இஸ்லாமிய திருமணங்களுக்காக வடி வமைக்கப்பட்டுள்ள மாதிரி படிவத்தின் அடிப்படையில் பள்ளிவாசல் திருமண பதிவேடுகள் தயாரிக்கப்பட வேண்டும். ஒரு திரு மணத்திற்கு 4 படிவங்கள் ஒன்று மணமகன் வீட்டிற்கும், மற் றொன்று மணமகள் வீட்டிற்கும், இன் னொன்று சார்பதிவாளர் அலுவ லகத்தில் பதிவு செய்வதற்கும் கொடுக்க வேண்டும். மற்றொன்று அந்த மஹல்லாவில் பத்திரமாக இருக்கும். இந்த ஒழுங்குமுறைப்படி ஒவ்வொரு மஹல்லாவும் செய்யுமேயானால் திருமண பதிவில் பிரச்சனையே இருக் காது.

ஷரீஅத் பஞ்சாயத்து
ஒவ்வொரு மஹல்லா ஜமாஅத்திலும் பைத்துல்மால் இருக்க வேண்டும், ஷரீஅத் பஞ்சாயத் இருக்க வேண்டும். ஷரீஅத் கோர்ட் என்ற சொல்லை பயன்படுத்தாமல் ஷரீஅத் பஞ்சாயத் என்றே சொல்ல வேண்டும்.

பள்ளியின் இமாம், தலைவர், செயலாளர், விவகாரம் பேசி தீர்வு காணும் ஆற்றலுடைய மேலும் இருவர் உள்ளிட்ட ஐவருக்கு குறையாமல் அந்த பஞ்சாயத்து செயல்படலாம்.

குடும்ப பிரச்சினைகளில் இந்த பஞ்சாயத்தே முறைப்படி பேசி தீர்த்து வைக்கலாம் அல்லது மனமுறிவு வழங்கலாம். இந்தத் தீர்ப்பு நீதிமன்றங்களில் கூட ஏற்றுக்கொள்ளப்படும். இதற்காக கடந்த ஆட்சிக்காலத்தில் காஜி சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர முயற்சி மேற் கொண்டோம் ஆனால் சிலர் காஜி நியமனமே தேவையில்லை எனக் கூறியதால் எங்கள் முயற்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது. காஜி என்றால் என்ன என்று சரியாக விளங்கிக்கொள்ளாத தின் விளைவே இது. பள்ளிவாசல் இமாம் அல்லது கதீப்தான் அந்த மஹல்லாஹ் வின் காஜி. மாவட்டத்திற்கு ஒரு காஜி. பெருநாள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை அறிவிக்க ஒரு தலைமை காஜி. இதை புரிந்து கொண்டால் எந்த குழப்பமும் இல்லை.

இதுபோன்ற விஷயங்களில் நாம் இத்தகைய கருத்தரங்குகளை நடத்தி மக்களிடையே ஒரு தெளிவை ஏற்படுத்தி நல்ல முடிவு காண்போம். எந்த சூழ்நிலையிலும் மஹல்லாஹ் ஜமாஅத் சீர்குலைய சமுதாயம் ஒரு போதும் இடமளிக்கக் கூடாது. சுண்டைக்காய் கட்சி, புடலங் காய் அமைப்பு,வெண்டைக்காய் இயக்கம், என்றெல்லாம் தலையெடுத்து மஹல்லாஹ் ஜமாஅத் ஒற்றுமையை சீர் குலைக்க வருவார்களேயானால் அவர்களை அடையாளம் கண்டு ஒதுக்கி சமூக ஒற்றுமையைக் காப்பது நம் கடமை.

இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசினார்.

மத்திய அரசு சிறுபான்மையினருக்காக உருவாக்கும் 5 பல்கலைக்கழங்களில் ஒன்றை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும்: எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி கோரிக்கை

சிறுபான்மையின சமுகத் தின் கல்வி மேம்பாட்டின் அவசியம் குறித்து ஆய்வு செய்த மத்திய அரசு சிறுபான்மை யினருக்கென பிரத்யேகமாக நாடு முழுவதும் பல்கலைக் கழகங்கள் தோற்றுவிக்கப்பட வேண்டும் என்றும், அதன் முதற்கட்டமாக ஐந்து பல்கலைக் கழங்களை ஐந்து வெவ்வேறு மாநிலங்களில் உருவாக்க வேண்டும் என்றும் முடிவு செய்தது.

இந்த முன்னோடி திட்டத் தின் பயன்பாட்டை ஆய்ந்து, பெருமளவிலாக பல்கலைக் கழகங்கள் தோற்றுவிக்கப்படும் என மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கே. ரஹ்மான்கான் வெளியிட்ட அரசு பூர்வாங்க அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

வேலூர் தொகுதியில் அமைக்க எம். அப்துல் ரஹ்மான்கோரிக்கை:

இன்று (24.08.2013) நாடாளுமன்ற கூட்டத்தின் போது பகல் 12 மணிக்கு 377வது விதியின் கீழ் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் இது தொடர்பாக கோரிக்கை வைத் தார்.

மத்திய அரசு சிறுபான்மை யினருக்காக ஐந்து பல்கலைக் கழகங்கள் உருவாக்குவது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. அந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றை தமிழ்நாட்டிற்காக ஒதுக்க வேண்டும் என நான் வேண்டுகோள் வைக்கிறேன்.

தமிழ்நாட்டிலுள்ள வேலூர் நாடாளுமன்ற தொகுதி சிறு பான்மை சமூக மக்கள் அதி களவில் வாழும் தொகுதி 5 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு பான்மையினர் இங்கு சமூக பொருளாதார கல்வித் துறை யில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கும் காரணத் தால் இந்த பல்கலைக்கழகம் வேலூர் தொகுதியில் நிறுவப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

வேலூர் தொகுதியில் கூலித் தொழிலாளர்கள், அன்றாடம் காட்சிகள், பீடி மற்றும் தோல் பதனிடம் தொழிலாளர்கள் அதிகம் வாழ்கின்றனர். தொடக்கப்பள்ளி நிலையில் இருந்து உயர் கல்வி நிலைக்கு செல்வதற்கு அவர்களின் பொருளாதார இயலாமையே ஒட்டு மொத்த சிறுபான்மை சமுதாயத்தையும் பின்னுக்கு கொண்டு செல்கின்ற காரணத்தால் பள்ளி படிப்பை நிறைய பேர் பாதியிலிலேயே நிறுத்தி விடும் அவல நிலை இருந்து வருகிறது.

இந்திய அரசியல் சட்டத்தின் 15 மற்றும் 16 விதிகளின்படி சமூக பொருளாதார பின்னடை வில் இருக்கும் சிறுபான்மை சமூகம் நிறைந்திருக்கும் தொகுதி யாக வேலூர் தொகுதி யை மத்திய அரசு கணக்கில் எடுத்து பல்கலைக்கழகத்தை அங்கே நிறுவுவதற்குரிய பூர்வாங்க பணியை தொடங்க நான் வலியுறுத்துகிறேன்.

இந்த பல்கலைக்கழகம் அமைக்கப்படும் விதிமுறை அனைத்திற்கும் வேலூர் தொகுதி தகுதி உடையதாக இருக்கின்ற காரணத்தால் என் வேண்டுகோளை ஏற்று மிக விரைவாக மத்திய சிறுபான்மை நலத்துறை பல்கலைக்கழக அறிவிப்பை வெளியிட வேண் டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு எம்.அப்துல் ரஹ்மான் பேசினார்.

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

வெளிநாட்டு கல்விக்கு எப்போது விண்ணப்பிக்க வேண்டும்?

இந்திய மாணவர்கள் அதிகம் செல்லக்கூடிய, சில முக்கிய நாடுகளில், எந்தெந்த காலகட்டங்களில், விண்ணப்பம், விசா செயல்பாடுகள் மற்றும் வகுப்புகள் தொடங்குகின்றன என்பதன் சுருக்கமான விபரங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.
அமெரிக்கா
12 முதல் 18 மாதங்களுக்கு முன்னதாகவே விண்ணப்ப செயல்பாடு தொடங்கி விடுகிறது. ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில், விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்.
பிப்ரவரி இறுதியில், விண்ணப்ப படிவத்தை சமர்ப்பித்துவிட வேண்டும்.
மார்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடைபட்ட காலகட்டத்தில், நீங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளீர்களா அல்லது நிராகரிக்கப்பட்டுள்ளீர்களா என்பதை குறிப்பிட்ட பல்கலைக்கழகம் அறிவிக்கும்.
விசா சுழற்சி: I - 20 ன் தொடக்கத் தேதியிலிருந்து 120 நாளுக்குள் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். I - 20 ன் தொடக்கத் தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் பயணத்தை தொடங்கலாம்.
வகுப்புகள் தொடக்கம் - செப்டம்பர் அல்லது அக்டோபரில் வகுப்புகள் தொடங்கும்.
பிரிட்டன்
படிப்பில் சேர்வதற்கு முந்தைய ஆண்டின் அக்டோபரில் விண்ணப்ப செயல்பாடு தொடங்கும்.
பொதுவாக மார்ச் மாதத்திலேயே விண்ணப்ப செயல்பாடு முடிந்துவிட்டாலும், வெளிநாட்டு மாணவர்களுக்கு ஜுன் வரை நீட்டிப்பு வழங்கப்படும்.
விசா சுழற்சி - செமஸ்டர் துவங்குவதற்கு 3 மாதங்கள் முன்னதாகவே விசாவிற்கு விண்ணப்பிப்பது சிறந்தது.
செப்டம்பர் அல்லது அக்டோபரில் வகுப்புகள் தொடங்கும்.
ஆஸ்திரேலியா
பிப்ரவரியில் தொடங்கும் விண்ணப்ப செயல்பாடு, டிசம்பரில் முடிவடையும்.
நவம்பர் தொடங்கி, ஜனவரி மாதத்திற்குள், நீங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளீர்களா அல்லது இல்லையா என்பதை கல்வி நிறுவனங்கள் அறிவித்துவிடும்.
விசா செயல்பாடு அக்டோபரில் துவங்கி, டிசம்பர் அல்லது ஜனவரியில் முடிந்துவிடும்.
பொதுவாக, பிப்ரவரியில் வகுப்புகள் தொடங்கினாலும், பல்கலையைப் பொறுத்து, வேறுபாடு இருக்கலாம். மேலும், சில பல்கலைகள், செப்டம்பர் மாதத்தில், இடை சேர்க்கையையும்(mid term intake) நடத்துகின்றன.
ஜப்பான்
படிப்பு தொடங்குவதற்கு 7 அல்லது 8 மாதங்களுக்கு முன்னதாகவே விண்ணப்ப செயல்பாடு தொடங்கி விடுகிறது.
செமஸ்டர் தொடங்குவதற்கு ஏறக்குறைய 4 மாதங்களுக்கு முன்னதாகவே விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
ஜனவரி, ஏப்ரல், ஜுலை மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களில் வகுப்புகள் தொடங்குகின்றன.
பிரான்ஸ்
பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் விண்ணப்ப செயல்பாடு தொடங்குகிறது.
ஜுன் மாதத்திற்கு முன்னதாக, விண்ணப்ப செயல்பாட்டை முடித்துவிட வேண்டும்.
செமஸ்டர் தொடங்குவதற்கு 3 மாதங்கள் முன்னதாகவே, விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
செப்டம்பர் மாதம் வகுப்புகள் தொடங்கும்.
ரஷ்யா
செப்டம்பர் மாதம் வகுப்புகள் தொடங்கும்.
முதல் செமஸ்டர் - செப்டம்பர் முதல் ஜனவரி வரை
இரண்டாம் செமஸ்டர் - பிப்ரவரி முதல் ஜுன் வரை.
ஜெர்மனி
கோடைகால செமஸ்டருக்கு, ஜனவரி 15ம் தேதிக்குள்ளும், குளிர்கால செமஸ்டராக இருந்தால், ஜுலை 15ம் தேதிக்குள்ளும் விண்ணப்ப செயல்பாடுகள் முடிந்துவிடும்.
விமானம் ஏறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்னதாகவே, விசாவிற்கு விண்ணப்பித்துவிட வேண்டும்.
குளிர்கால செமஸ்டர் அக்டோபர் மாதத்திலும், கோடைகால செமஸ்டர் ஏப்ரல் மாதத்திலும் தொடங்குகின்றன.
சிங்கப்பூர்
மார்ச் மாதத்திலேயே விண்ணப்ப செயல்பாடுகள் முடிந்துவிடுகின்றன.
குறைந்தபட்சம் 2 மாதங்களுக்கு முன்னதாக விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், 6 மாதங்களுக்கு முன்பாக விண்ணப்பிக்கக் கூடாது.
ஆகஸ்ட் மாதம் வகுப்புகள் தொடங்கும்.
கனடா
மாணவர் சேர்க்கைக்கு முன்னதாக, 15 முதல் 18 மாதங்களுக்கு முன்பாகவே, விண்ணப்ப செயல்பாடுகள் தொடங்கி விடுகின்றன.
செமஸ்டர் தொடங்குவதற்கு 2 மாதங்கள் முன்னதாகவே விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
செப்டம்பரில் வகுப்புகள் தொடங்குகின்றன. மேலும், குளிர்கால வகுப்புகள், அவ்வப்போது, இரண்டாக பிரிக்கப்படுகின்றன. அதாவது, செப்டம்பர் முதல் டிசம்பர் வரை ஒன்றும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை ஒன்றுமாக நடைபெறுகிறது.
அயர்லாந்து
வகுப்புகள் தொடங்குவதற்கு 4 மாதங்கள் முன்னதாகவே, விண்ணப்ப செயல்பாடுகளை முடித்துவிட வேண்டும்.
புறப்படுவதற்கு 8 முதல் 10 வாரங்களுக்கு முன்னதாகவே விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
செப்டம்பர் மாதம் வகுப்புகள் தொடங்குகின்றன. சில சமயங்களில் பிப்ரவரி மாதமும் தொடங்கும்.
நியூசிலாந்து
வகுப்புகள் தொடங்குவதற்கு 4 மாதங்கள் முன்னதாவே, விண்ணப்ப செயல்பாடுகளை முடித்துவிட வேண்டும்.
படிப்பு தொடங்குவதற்கு 8 முதல் 10 மாதங்களுக்கு முன்னதாகவே, விசாவிற்கு விண்ணப்பித்தல் நன்று.
செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் வகுப்புகள் தொடங்குகின்றன.

முஸ்லிம் லீகின் கோரிக்கையை ஏற்று ஹாஜிகளை நியமித்தது அதிமுக அரசு ; சமுதாய பிரச்சினைகளை அமைச்சர் அப்துல் ரஹீமும் ,வக்ப்வாரிய தலைவரும் முதல்வருக்கு எடுத்துசொல்ல வேண்டும் :பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன்

மதுரை மாநகர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துணைத் தலைவரும், ஜீவா நகர் முஸ்லிம் ஜமாஅத் தலைவருமா கிய ஹாஜி ஏ. செய்யது புதல்வர் எஸ். அப்துல் ரஜாக், பி.இ. மணமகனுக்கும், கமுதி எம். உம்முசல்மா பர்வீன், பி.ஏ., மணமகளுக்கும் சென்னை எஸ்.ஐ.இ.டி. பெவிலியன் மஹால் அரங்கத்தில் திருமணம் நடை பெற்றது.

இத் திருமண விழாவில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஆவடி அப்துல் ரஹீம், தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர் தமிழ்மகன் உசேன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம் மது அபூபக்கர், மாநிலச் செயலா ளர் காயல் மகபூப், சுதந்திர தொழிலாளர் யூனியன் பொதுச் செயலாளர் கே.எம். நிஜாமுதீன், மாநில துணைச் செயலாளர் ஆப்பனூர் ஜபருல்லாஹ், மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் மவ்லவி பி.கே.என். அப்துல் காதர் ஆலிம், செயலாளர் ஏ. இக்பால் பாஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அ.இ.அ.தி.மு.க. சிறு பான்மை நலப்பிரிவு தலைவர் ஹாஜி கவிஞர் வீரை கறீம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மணமக்களை வாழ்த்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் உரையாற்றினார்.

அப்போது அவர் குறிப்பிட்ட தாவது-

மதுரை மாநகர் மாவட்டத் தின் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் துணைத் தலைவரான அருமைச் சகோதரர் ஏ. செய்யது அவர்கள், மதுரை ஜீவா நகர் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் ஜமாஅத்தினுடைய தலைவராக இருந்து அதனுடைய வளர்ச் சிக்கு திறம்பட பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

தமிழகத்தில் ஏறத்தாழ 65 லட்சம் முஸ்லிம்கள் வாழ்கிறார் கள். இவர்கள் மஹல்லா ஜமா அத் அமைப்புகளுக்கு கட்டுப் பட்டவர்கள். மார்க்க விஷயங் களில் உலமா பெருமக்களின் வழிகாட்டுதல்களை இந்த சமுதாயம் ஏற்றுக் கொண்டு மஹல்லா ஜமாஅத்துக்கு கட்டுப் பட்டு நடக்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து வலியுறுத்தி வரு கிறது. போட்டி ஜமாஅத், போட்டி பள்ளிவாசல் போன்றவைகள் ஜமாஅத் கட்டுப்பாட்டிற்கு மாற்ற மான செயல்பாடுகள் சமுதாயத் திற்கு அவப் பெயரையும், தலை குனிவையும் ஏற்படுத்தும்.

இஸ்லாமிய மார்க்கம் என்பது மனித சமுதாயத்தை நெறிப்படுத்தும் வாழ்க்கை நெறி. இம்மைக்கும், மறுமைக் கும் வழிகாட்டக்கூடியது திருக் குர்ஆனும், திருநபியின் வழி முறையுமேயாகும். இதனை விளக்குவதற்கு உலமாக்க ளுக்கே தகுதியுண்டு.

பள்ளிவாசலை மையமாக கொண்ட மஹல்லா ஜமாஅத் அரசியலுக்கு அப்பாற்பட்ட அமைப்பு. உண்மையான, இயற்கையான அமைப்பு இதுதான். இதற்கு கட்டுப்பட்டு எல்லா முஸ்லிம்களும் தங்களு டைய வாழ்க்கையை அமைத் துக் கொள்ள வேண்டும். இந்த நாட்டில் வாழக்கூடிய முஸ்லிம் களில் 95 சதவீதத்தினருக்கு மேற்பட்டோர் மஹல்லா ஜமாஅத்திற்கு கட்டுப்பட்டு வாழ்வதில் உறுதி கொண்டவர் கள்.

ஆனால், இந்த கட்டுப் பாட்டை தகர்த்து தாங்கள் விரும்புவதைப் போல் வாழ்வதற் கும் சிலர் தலைப்படுகின்றனர். மஹல்லா ஜமாஅத் நிர்வாகம், காஜிகள், ஙாயிப் காஜிகள் என்ற பள்ளிவாசல் இமாம்கள் சமுதாயத்தை வழிநடத்தக் கூடியவர் கள். ஆனால், இந்த வழிகாட்டு தல் வேண்டாம் என இன்று சிலர் சொல்ல தலைப்பட்டிருக்கி றார்கள்.

காஜிகள் நியமனம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் அன்வர் ராஜா அவர்கள் அமைச்சராக இருந்த போது, காஜிகள் நியமிக்கப்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை வைத்தது. அதை முதல்வரு டைய கவனத்திற்கு அமைச்சர் கொண்டு சென்றார். 7, 8 மாவட்டங்களுக்கு காஜிகள் நியமிக்கப்பட்டனர். காஜிகள் நியமனத்தை தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா அம்மை யார் அவர்கள் தொடங்கி வைத்தார்கள் என்பதை நான் இங்கே நன்றியோடு நினைவு படுத்த விரும்புகிறேன்.

அடுத்து வந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் மாண்புமிகு கலைஞர் அவர்களி டம் காலியாக உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் காஜிகள் நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அதை கலைஞர் அவர்கள் ஏற்று செயல் படுத்தினார்கள்.

திருமணங்களை நடத்தி வைப்பது, வாழ்வியல் தொடர் பான பிரச்சினைகளை தீர்த்து வைப்பது, சான்று வழங்குவது போன்ற பணிகளை தலைமை காஜி, மாவட்ட காஜிகள், ஙாயிப் காஜிகள் என்ற பள்ளிவாசல் இமாம்கள் செய்து வருகின்ற னர்.

ஆனால், இது கூடாது எனச் சொல்லி, அதற்காக நீதிமன்றத் தின் வாசலையும் சில பேர் தட்டிக்கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற பிரச்சினைகளில் சமுதாயத்தின் நிலைபாட்டை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு இங்கே வந்திருக் கக்கூடிய மாண்புமிகு அமைச்சர் அப்துல் ரஹீம் அவர்களும், வஃக்பு வாரியத்தினுடைய தலைவர் தமிழ்மகன்உசேன் அவர்களும் எடுத்துச் சொல்ல வேண்டுமென அன்போடு நான் கேட்டுக் கொள்கிறேன்.

நாங்கள் எந்த கூட்டணியில் இருந்தாலும் நல்லது செய்தால் பாராட்டுவோம் - விமர்சிக்க வேண்டிய விஷயங்களை கண்ணியத்தோடு விமர்சிப் போம். எடுத்துச்சொல்ல வேண் டிய சமுதாய காரியங்களை தயக்கமின்றி கோரிக்கையாக வைப்போம்.

மணிச்சுடர் நாளிதழ்
இந்த மேடையில் மணிச்சுடர் நாளிதழ் உங்கள் கரங்களில் தரப்பட்டிருக்கிறது. அது தமிழக முஸ்லிம் சமுதாயத்தின் ஒரே நாளிதழ். அதில் தமிழக அரசின் செய்திகள் ஏராளமான இடம் பெறுகின்றன. அரசு எங்க ளுக்கு விளம்பரம் தருவதில்லை. அதற்காக அரசாங்கத்தின் செய்திகளை நாங்கள் புறக் கணிக்கப்பதும் இல்லை. சமுதாயம் சம்பந்தப்பட்ட பல் வேறு கோரிக்கைகள் அர சாங்கத்தின் கவனத்திற்காக இந்த நாளிதழில் இடம் பெறு கின்றன. அப்படிப்பட்ட செய்தி களை மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காண்பதற்கு முயற்சிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இந்த மணமக்களை வாழ்த்துவதற்காக நாம் இங்கே வருகை தந்திருக்கிறோம். அவர்களுடைய வாழ்விற்கும் - வளத்திற்கும் எல்லாம் வல்ல இறைவனிடம் மனமுருகி பிரார்த்திப்போம். ஏனெனில், பிரார்த்தனை தான் இறைவ னுடைய சந்நிதானத்தின் கதவு களை தட்டும். இந்த மணமக்களுக்காக நாம் பிரார்த்திப்போம் இவ்வாறு  பேராசிரியர்  கே.எம். காதர் மொகிதீன் குறிப்பிட்டார்.

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

பரிதாபமாக அடங்கிப்போன இரு அரசியல் பிரபலங்கள்

அரசியலில் நீண்ட காலம் ஆவேசமாக பணியாற்றி, இப்போது அடங்கிப் போனவர்களில் இருவர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி, 67 மற்றும் சமதா கட்சியின் முன்னாள் தலைவர், ஜார்ஜ் பெர்னாண்டஸ், 83, குறிப்பிடத்தக்கவர்கள்.

பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி, மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். அரசியலே உயிர் மூச்சாகக் கருதி வாழ்ந்தவர். அதற்காகவே, திருமணம் செய்து கொள்ளாமல், காலத்தைக் கடத்தியவர், 49 வயதில், இப்போதைய மத்திய அமைச்சர் தீபாவை திருமணம் செய்து கொண்டார்.கடந்த, 2011ம் ஆண்டு அவர் படுக்கையில் படுக்கும் வரை தீவிரமாக செயலாற்றியவர். மேற்கு வங்கத்தின், ராய்கஞ்ச் லோக்சபா தொகுதியிலிருந்து தொடர்ந்து, ஐந்து முறை, எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், ராஜிவ் பிரதமராக இருந்த போது, இணை அமைச்சராக இருந்தவர்.

பல ஆண்டு காலம், இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்தார்; மன்மோகன் சிங்கின், முதலாவது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்தவர். காங்கிரசை ஆதரித்து பேசுவதில் முன்னணியானவர்.திடீரென ஏற்பட்ட பயங்கரமான பக்கவாத நோயால், படுத்த படுக்கையாகி, உயிருள்ள சடலமாக, தன் மனைவியின் வீட்டில் படுத்துக் கிடக்கிறார். அவரின், இதயம் மட்டும் இயங்குகிறது; உடல் உறுப்புகள் எதுவும் செயலாற்றவில்லை.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, அறையை விட்டு வெளியே வர முடியாமல், ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் அவரை, எழுப்பப் போவது யாருமில்லை. ஏனெனில், டில்லி, "எய்ம்ஸ்' மற்றும் அப்பல்லோ மருத்துவர்கள் கைவிரித்து விட்டனர்; ஜெர்மனியின் டசல்டர்ப் நகரின் டாக்டர்களும், அவரை குணப்படுத்த முடியாது என, தெரிவித்து விட்டதால், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக முடங்கிக் கிடக்கிறார்.

அது போலவே, 20 வயதில் துவங்கிய போராட்டத்தை, 80 வயது வரை நடத்திய ஜார்ஜ் பெர்னாண்டசும், வினோத உடல்நலக்குறைவால், மூன்றாண்டு காலமாக முடங்கிக் கிடக்கிறார். கிறிஸ்தவ பாதிரியாராக வர வேண்டியவர், அரசியல்வாதியாக மாறி, இந்திரா, ராஜிவ் போன்றவர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர். அரசியலில் சிங்கமாக உலா வந்தவர், இப்போது, தன் முன்னாள் மனைவி லைலா கபீர் வீட்டில், சுயநினைவு இல்லாமல் சுருண்டு கிடக்கிறார்.

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

ஏழு பிறவி எடுத்தாலும் டெல்லி செங்கோட்டையில் மோடி கொடியேற்ற முடியாது:சிவானந்த் திவாரி

ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் சிவானந்த் திவாரி கூறியதாவது:-

ஆர்.எஸ்.எஸ். போலவே மக்களிடையே வெறுப்பையும் மததுவேஷத்தையும் உருவாக்க மோடி முயற்சிக்கிறார்.

நேற்றைய சுதந்திர தின பேச்சில் சர்தார் வல்லபாய் பட்டேல், லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரை அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இவர்கள் எல்லாம் மோடி வந்த வழியில் வந்தவர்களல்ல. அவர்கள் அனைவருமே காங்கிரஸ்காரர்கள்.

காந்தியின் படுகொலையை பற்றி மோடிக்கு நினைவிருக்குமா? என்பது எனக்கு தெரியாது.

ஆர்.எஸ்.எஸ். கடைபிடித்த மததுவேஷமும் பிறமத வெறுப்புணர்வும்தான் காந்தி படுகொலைக்கு காரணம் என குரு கோல்வார்கருக்கு கடிதம் எழுதிய சர்தார் வல்லபாய் பட்டேல், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தையும் தடை செய்தார்.

இதே போன்ற வெறுப்புணர்வைதான் மோடியும் தற்போது ஏற்படுத்தி வருகிறார்.

மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல், லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோர் வாழ்ந்த நாட்டில் மத அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்தி பிரதமராக துடிக்கும் மோடியின் கனவு ஒருபோதும் பலிக்காது.

ஏழு பிறவி எடுத்தாலும் டெல்லி செங்கோட்டையில் மோடியால் சுதந்திர கொடியை ஏற்ற முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

சமுதாயத்திற்காக சதா உழைத்த சகாப்தம் கடையநல்லூர் கரீம் அண்ணன் .....! ---- புலவர் அ.ஹிலால் முஸ்தபா

ஒரு பச்சைத் துண்டு மடிந்து தோளில் தொங்கிக் கொண்டிருக்கும். தலையில் ஒரு தொப்பி. சற்று தடித்த மூக்குக் கண்ணாடி. கொஞ்சம் நீண்ட பருத்த ஹேண்ட் பேக் இடது பக்க அக்குலுக்குள் அடங்கி இருக்கும். சட்டை, கைலி. சட்டைப் பை உப்பிசமாக புடைத்து இருக்கும். வலது கையில் ஒரு கைக் கடிகாரம்.சற்று பெரிய வட்டத்தில் பதிந்து இருக்கும். ஒரு பக்கம் கொஞ்சமாக சாய்ந்த நிலையில் நடை. இப்படி ஒரு மனிதரை அந்தக் காலத்தில் நெல்லை மாவட்டத்தில் எங்கேயாவது கண்டால், “கரீம் அண்ணே அல்லது கரீம் வாப்பா” என்று அழைத்து தைரியமாக அஸ்ஸலாமு அலைக்கும் சொல்லலாம்.

உடனடியாக கனத்த சாரீரத்தில் “வ அலைக்கும் ஸலாம்” என்ற பதில் நம் காதுகளில் வந்து ரீங்காரமிடும்.

இவர்தான் கரீம் அண்ணன். கரீம் வாப்பா.
வெ.கா.உ.அப்துர் ரஹ்மான் சாஹிபின் தயாரிப்பு இவர்.

நானெல்லாம் பிள்ளைப் பிராயத்திலிருந்து கொஞ்சம் எம்பிக் குதித்து, இளமைப் பருவத்துக்குள்ளே ,மீசையாக பூனை முடி முளைத்திருந்த தருணத்திலிருந்து ,கரீம் அண்ணனை இப்படித் தான் பார்த்து இருக்கிறேன்.

இந்தப் பருவத்தில் அவரைப் பார்க்கும் பொழுதும் ஐம்பது வயது போல இருக்கும். அதற்குப் பின் எந்தப் பருவத்தில் பார்க்கும் போதும் ஐம்பது வயது போலவே தோன்றும். கரீம் அண்ணன் நடமாட முடியாமல் வீட்டில் இருந்த தருணத்தில்தான் ஒரு வயோதிகர் அமர்ந்து இருக்கிறார் என்று எங்களுக்கு தோன்றியது.

அப்போதும் , “ஸலாம் அலைக்கும் வா வாப்பா” என்ற அழைப்பின் ஓசை அதே பழைய கனத்த சாரீரத்தில் வந்து தழுவும்.

கரீம் அண்ணனுக்கு ஒன்று மட்டும் எல்லாவற்றையும் விட அதிகம் உரிமையாக இருந்தது. அதுதான் உழைப்பு.

கரீம் அண்ணன் அநேகமாக இவ்வுலக வாழ்க்கையை நீத்த பருவத்தில், தொண்ணூற்று மூன்று அல்லது தொண்ணூற்று நான்கு வயது இருக்கலாம்.

சென்னை மெரீனா கடற்கரையில் , உழைப்பாளர் சிலை இருக்கிறது. இது சிற்பிகளின் கற்பனைப் பிறப்பு. ஆனால், உழைப்பின் எதார்த்த சின்னமாக அன்று முஸ்லிம் லீகர்களின் மத்தியில் நடமாடிய மனிதர் எங்கள் கரீம் அண்ணன்.

கரீம் அண்ணன். நெல்லை மாவட்டத்தின் சந்து பொந்து, இண்டு இடுக்கு, பட்டி தொட்டி, எங்கெங்கும் அலைந்து திரிந்து சமூகப் பணியாற்றிய சாதனை வடிவம்.

நெல்லை மாவட்டத்தின் முஸ்லிம் லீகின் முதல் தலைவர் எங்கள் தாதா மு.ந.அப்துர் ரஹ்மான் சாஹிபோடும், செயலராக இருந்தவர். அடுத்து தலைவரான என் சிறிய தந்தையார், பொதிகைக் கவிஞர் முன்னாள் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தென்காசி நகர சபையின் முதல் தலைவர் அ.ஷாஹுல் ஹமீது சாஹிப் அவர்களுடனும் செயலாளராக பணியாற்றியவர்.என்னுடைய தந்தையார் A.K.ரிஃபாய் சாஹிப் அவர்களுடனும் செயலாளராகப் பணிபுரிந்து இருக்கிறார். இப்படி நீண்டதொரு, நிரந்திர மாவாட்ட செயலாளர் போல செயலாற்றிய சிறப்பு, நெல்லை மாவட்டத்தில் கடையநல்லூர் கரீம் அண்ணனுக்குத் தான் உண்டு.

காயிதே மில்லத், மாநிலத் தலைவர் திருச்சி ஜானி பாய் M.L.C., சிராஜுல் மில்லத் சமது சாஹிப் உள்ளிட்ட தலைவர்களின் மாநில செயற்குழுவில், அசைக்க முடியாத இடம் பிடித்து இருந்தவர் கரீம் அண்ணன்.

தென்னிந்திய இஷாஅத்துல் இஸ்லாம் சபையின் செயலாளர், தெற்குப்பட்டி நூருல் இஸ்லாம் கல்வி நிலையத்தின் தாளாளர் , நெல்லை முஸ்லிம் அனாதை நிலையத்தின் நிரந்திர செயற்குழு உறுப்பினர். இப்படி பலதரப்பட்ட சமூக பணிகளில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்ட பொறுப்பாளர் கரீம் அண்ணன்.

சமூகத்துக்கென்று ஒரு அர்ப்பணிப்பை வாழ்க்கையாக்கிக் கொண்டிருந்த அவரை நையாண்டி செய்த நபர்களும் ,இந்த சமூகத்தில் உண்டு.

தென்காசி மரைக்காயர் பள்ளி வாசல் தெரு. இது எங்களின் பூர்வீக தெரு. இந்தத் தெருவில் ஜங்க்ஷன் மாதிரி ஒரு முக்கு (சந்தி) இருக்கும். அங்கே சாயங்காலம் மாலை வேளைகளில் சிலர் ,நின்று கொண்டோ , சாக்கடை பாலத்தின் சுற்றுத் திண்டில் அமர்ந்துக் கொண்டோ பேசிக் கொண்டிருப்போம் .

அப்படி நானும் ஒரு நாள் நின்று பேசிக் கொண்டிருந்தேன். அந்த முக்கின் மேற்கில் நேரெதிரில் எங்கள் பள்ளிவாசல் இருக்கும்.

அந்தப் பள்ளிவாசல் வலது பக்க சந்து வழியாக , பஜாரில் இருந்து வருபவர் எங்கள் தெருவுக்குள் நுழைவார்கள்.

அப்படி, கரீம் அண்ணன் ஒரு நாள் அஸர் தொழுகைக்கு முன்னே, அவர்களின் அந்தத் தோற்றப் பொலிவோடு அசைந்த நடையில் எங்கள் தெருவுக்குள் வருகிறார்கள். அவர்கள் வருவது , சின்ன வாப்பா ஷாஹுல் ஹமீது சாஹிபை பார்க்கத்தான்.

நாங்கள் நின்று பேசிக் கொண்டிருக்கும் முக்கை ஒட்டி உள்ள பெரிய வீடு , முஸ்தபா சாஹிபுக்கு உரியது. இவர் தாசில்தாராகப் பணிபுரிந்தவர். சென்னை கிரசன்ட் பொறியியல் கல்லூரியின் டைரக்டர்களில் ஒருவராக இருந்த இன்ஜினியர் பீர் முஹம்மது சாஹிபின் மூத்த அண்ணன். நெல்லை முஸ்லிம் அனாதை நிலையத்தின் செயலாளர். எனக்கு சுற்றி வளைத்து பெரிய வாப்பாமுறை. நெருக்கமாக சொன்னால் , என் தம்பியின் (ஷாஹுல் ஹமீது சாஹிப் மகன்) மனைவியின் தந்தையார்.

இவர் ,அவர் இல்லத்தை விட்டு இறங்கி ,தொழுவதற்கு பள்ளிவாசல் நோக்கி வருகிறார். எதிரே சற்று தூரத்தில் கரீம் அண்ணன் வருவதைப் பார்க்கிறார்.

நான் முக்கில் நிற்பதை கவனித்து விட்டு, என்னிடம்

“ஏய் ஹிலால், எதுக்க என்னடேய் பச்சைத் துண்டு வருது” என சொன்னார்.

அவர் சொன்னதின் பின்னால்தான் நான் எதிரெ பார்த்தேன். கரீம் அண்ணன் வந்துக் கொண்டிருந்தார்.

அந்த உழைப்பின் அடையாளம் லீகின் அசைத்து பார்க்க முடியாத ஒரு தூண், முஸ்தபா சாஹிபுக்கு நையாண்டித் தனமாக ,”பச்சைத் துண்டாக“ தெரிகிறார். அதுவும் என்னிடமே அதைச் சொல்லுகிறார்.

“வாப்பா கொஞ்சம் நில்லுங்கள், எதிரே வருவது பச்சைத் துண்டு என்றால், அந்தப் பச்சைத் துண்டு யாரைப் பார்க்க வருகிறது தெரியுமா? இதோ மூணாவது வீட்டில் இருக்கும் “பச்சைச் சட்டையைத்” தான் பார்க்க வருகிறார். (பச்சை சட்டை – அ.ஷாஹுல் ஹமீது சாஹிப்)”

கரீம் அண்ணன் பச்சைத் துண்டென்றால் உங்கள் தம்பி , ஷாஹுல் ஹமீது சாஹிப் பச்சைச் சட்டை என்பது உண்மையாகும். இனிமேல் ஷாஹுல் ஹமீது சாஹிபை பச்சைச் சட்டை என்று சொல்லும் தைரியம் உங்களுக்கு இருந்தால், கரீம் அண்ணனை பச்சைத் துண்டு என்று நீங்கள் சொல்லுங்கள்” என்று கடுமையாக நான் சாடிவிட்டேன்.

இந்த நிகழ்வு நடந்த அரைமணி நேரத்துக்குள் எங்கள் ஷாஹுல் வாப்பா வீட்டிற்குள் செய்தி போய் விட்டது. ஷாஹுல் வாப்பா என்னை கூப்பிட்டு அனுப்பினார்கள்.

“நாங்கள் கேள்விப் பட்டது சரி தானா?” என்று கேட்டார்கள்.
“நூறு சதவிகிதம் சரிதான்” என்றேன்.
“ரொம்பச் சரியா சொல்லி இருக்கிற” என ஷாஹுல் வாப்பா சொன்னார்கள்.

கரீம் அண்ணன் வருத்தப்பட்டார்கள்.

“ஹிலால் , அவர் கிட்ட போய் இப்படி நீ பேசி இருக்க வேண்டாம். பேசுறவன் பேசிட்டு போறான். பச்சைத் துண்டுன்னு தான சொன்னார். அது நம்ம கொடி தானே, ஆனால் அவர் எதையும் மறக்க மாட்டார். உனக்கு ஏதாவது இடைஞ்சல் பின்னால் தருவார்.” என அக்கறையோடு கரீம் அண்ணன் வருத்தப் பட்டார்.

அவர் சொன்னது மாதிரிப் பின்னர், எனக்கு சில நிழந்தது. அது இங்கே தேவை இல்லை.

சமூகத்தின் , சேவைகளை நினைத்து பூரிப்பு அடைகிற ஒரு திருக்கூட்டம் இருப்பது போல , சேவையை நையாண்டித் தனம் செய்யும் சின்னக் கூட்டமும் இருக்கத் தானே செய்கிறது.

கரீம் அண்ணன் உறுதியில், கொள்கைப் பிடிப்பில் , செயல் புரியும் வீரியத்தில் எவருக்கும் சளைத்தவர் அல்லர்.

நெல்லையில் முஸ்லிம் அனாதை நிலையத்தில் கல்வி மாநாடு , சமூக இணக்க மாநாடு என்ற இருபெரும் மாநாடு ,ஒரே மாநாடாக இரு தினங்களில் நடந்தன.

முதல் நாள் மாநாட்டிற்கு A.K. ரிஃபாய் சாஹிப் தலைமை தாங்கினார். சிறப்பு சொற்பொழிவு ஆற்ற யூனியன் முஸ்லிம் லீகின் அகில இந்திய தலைவர் சுலைமான் சேட் சாஹிப் M.P வந்திருந்தார். தமிழ் மாநிலத் தலைவர் , சமது சாஹிப் M.P வந்திருந்தார்.

ஆனால் , முஸ்லிம் அனாதை நிலையத்தார், முஸ்லிம் லீகர்களை வரவேற்பதில் ,சற்று கவனக்குறைவாக நடந்துக் கொண்டார்கள். அதாவது, MOC மைதானத்தில் ஒரு மரத்தடிக்கு கீழே தலைவர் சுலைமான் சேட்டுக்கும், தலைவர் சமது சாஹிபுக்கும் இரு சேர்களை போட்டு அமர வைத்திருந்தனர். இது லீகர்கள் மனதைப் புண்படுத்தி விட்டது.

மாவட்டத் தலைவர், அ.ஷாஹுல் ஹமீது சாஹிப், செயளாலர் மேலப்பாளயம் சட்ட மன்ற உறுப்பினர் சாச்சா கோதர்மைதீன் சாஹிப் போன்றோர்களுக்கு மிக எரிச்சலைத் தந்து விட்டது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டாம் என தலைவர்களிடம் முறையிட்டனர். கரீம் அண்ணன் கிட்ட தட்ட வானத்துக்கும் , பூமிக்கும் குதிக்க ஆரம்பித்து விட்டார்.

இறுதியாக தலைவர் சுலைமான் சேட் மட்டும் மாநாட்டில் பேசுவது என்றும் , மற்ற தலைவர்கள் அனைவரும் தென்காசிக்கு சென்று அப்போதுதான் உருவாகி இருந்த ரஹ்மத் நகரில் சென்று முஸ்லிம் லீக் கூட்டமாக நடத்திக் கொள்ளுவது என முடிவெடுத்து ,சுலைமான் சேட் பேசியவுடன் , அவரையும் அழைத்துக் கொண்டு லீக் தலைவர்கள் தென்காசிக்கு புறப்பட்டு விட்டனர்.

அடுத்து அதே மேடையில் கவியரங்கம். பேராசிரியர் மர்ஹூம் கா.அப்துர் கபூர் சாஹிப் தலைமையில் கவியரங்கம் நடக்க இருக்கிறது. இது அண்ணலாரைப் பற்றிய மீலாது கவியரங்கம்.

இதில் நானும் கலந்து கொள்கிறென். ஆனால் லீகர்கள் யாரும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டாம் என்று முடிவு எடுத்து தென்காசிக்கு செல்கின்றனர்.

சமது சாஹிப் என்னைத் தனியே அழைத்து,

“கவியரங்கத்தில் நீங்கள் கலந்துக் கொள்ளுங்கள், ஒரு லீகன் என்ன செய்ய வேண்டுமோ அதை கவியரங்கத்தில் செய்துக் கொள்ளுங்கள்.” என சொல்லி சென்று விட்டார்.

இது கரீம் அண்ணனுக்கு தெரியாது. நான் கரீம் அண்ணனிடம் தென்காசிக்கு வரவில்லை. கவியரங்கத்தில் கலந்து கொள்ள போகிறேன் என்று சொன்னேன்.

கரீம் அண்ணன் விழிகள், அந்த பருத்த கண்ணாடியையும் தாண்டி என்னை வந்து குத்தின.

“நீ கலந்து கொண்டால், கட்சி ரீதியாக நடவடிக்கை எடுப்பேன்” என்று கடுமையாக கூறி விட்டு சென்று விட்டார்.

கவியரங்கம் நடந்தது. நான் கவிதை படித்து முடித்த உடன், கூட்டத்தில், பெரிய கலகலப்பு . அதே நேரத்தில் ஆதரவு ஆரவாரம்.

தலைமை தாங்கிய பேராசிரியர், கபூர் சாஹிபுக்கு அதிர்ச்சியும் மனவருத்தமும். என்னுடைய சின்ன வாப்பா முஸ்லிம் அனாதை நிலையத் தலைவர் ஜமால் முஹம்மது சாஹிப் , மிகுந்த கோபம் அடைந்தார். இதனால் , அவர்களும் நானும் , கிட்டதட்ட பதினாறு ஆண்டுகள் பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்தோம்.

கவியரங்கத்தில் நடந்தவை மறுநாள் கரீம் அண்ணனுக்கு தெரிந்து விட்டது. அதற்கு அடுத்த நாள், குற்றாலம் பயணியர் விடுதி இல்லத்தில் சமது சாஹிபிடம் நடந்தவைகளை சொல்லிக் கொண்டிருந்தேன்.

கரீம் அண்ணன் அப்பொழுது அங்கு வந்தார். என்னை கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டார்.

“நம் தலைவர்களை அவமதிப்பவர்களை நாம் அவமதிக்கத்தான் வேண்டும்” என்றார்.

அந்தப் பசுமையை, இதைப் பதியும் பொழுதும் என்னால் உணர முடிகிறது.

கரீம் அண்ணன் லீக் கொள்கையில் எப்பொழுதும் உறுதியாக இருக்கக் கூடியவர்.

சின்ன வாப்பா ஷாஹுல் ஹமீது சாஹிப், கரீம் அண்ணன் இரட்டையர் போல ஒருவருக்கொருவர் வைத்திருந்த நம்பிக்கையும் தோழைமையும் பிரிவில்லாதது. “விடுதல் அறியா விருப்பு” என்று தமிழில் ஒரு சொல் உண்டு. இதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தனர்.

ஒரு கட்டத்தில் , மாநில முஸ்லிம் லீக், ஷாஹுல் ஹமீது சாஹிப் அவர்களை இயக்கத்தை விட்டு ஆறாண்டுகள் விலக்கி வைத்தது. இந்த விலக்கல் செயற்குழுவிலும், கரீம் அண்ணன் கலந்து கொண்டிருந்தார்.

அந்த நிமிடத்தில் இருந்து , ஷாஹுல் ஹமீது சாஹிபை ஆறாண்டுகள் கரீம் அண்ணன் பார்க்கவும் இல்லை. அவர்களிடம் பேசவும் இல்லை. எந்தத் தனிப் பகையும் கிடையாது. இயக்கம் விலக்கியதை தனக்கும் விலக்கலுக்குரிய சட்ட விதியாக ஏற்றுக் கொண்டார் கரீம் அண்ணன்.

இன்னும் ஒரு நிகழ்வு சொல்லித் தான் ஆக வேண்டும்.

சென்னை வாலாஜா பள்ளிவாசலில் , காயிதே மில்லத் அடக்கத் தலம் இருக்கிறது. இந்தப் பள்ளிவாயில் சுற்றி உள்ள இடங்கள் ஆற்காடு நவாப் குடும்பத்தினர்களுக்குரியது.

அங்கே ஆற்காட்டு நவாப் குடும்பத்தினர்கள் மட்டுமே அடக்கம் செய்ய அனுமதி பெற்றவர்கள். காயிதே மில்லத் மட்டுமே அங்கே அடக்கமாகி இருக்கும் அன்னியர்.

காயிதே மில்லத்துடைய அடக்கத் தலம் எது என்றே கண்டறியாதபடி நாய்களும் பிற உயிரனங்களும் அங்கு நடமாடிக் கொண்டிருந்தன. அங்கே ஜியாரத் செய்ய சென்ற முஸ்லிம் அனாதை நிலையத் தலைவர் ஜமால் முஹம்மது சாஹிப் இந்த நிலைக் கண்டு ரொம்ப வேதனைப் பட்டார்.

சில லீக் தலைவர்களிடம் காயிதே மில்லத் மறைவிடத்தை வெளித் தெரிகிற மாதிரி உயர்த்திக் கட்ட கோரிக்கை வைத்தார்.

அந்த இடம் , ஆற்காட்டு நவாப் குடும்பத்தினர்களுக்கு உரியது. அங்கே நாம் எதுவும் கட்ட முடியாது என்ற பதில்தான் லீகர்களிடம் இருந்து வந்தது.

ஜமால் முஹம்மது சாஹிப் உடனடியாக ஒரு தனிக் குழு அமைத்து, ஆற்காட்டு இளவரசரைச் சென்று சந்தித்து, அனுமதிப் பெற்று அந்தக் குழுவினரின் செலவில் , உயர்த்திக்கட்டி அடையாளப் படுத்திக் காட்டினார்.

அந்த கபறில்தான், அத்தனை அரசியல் கட்சி காரர்களும் முஸ்லிம் லீகர்கள் உட்பட ஜூன் 5 அன்று , ஒவ்வொரு ஆண்டும் சென்று , துஆவும் மரியாதையும் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தக் காலகட்டத்தில் லீகர்களுக்கும் , முஸ்லிம் அனாதை நிலையத்தினர்களுக்கும் கொஞ்சம் மனமுரண்கள் இருந்தன.

கரீம் அண்ணன் அவர்கள், ஜமால் முஹம்மது சாஹிப் அவர்களை சந்தித்து, தன் மனம் நிறைய வாழ்த்து சொன்ன முதல் முஸ்லிம் லீகராக இருந்தார்.

கரீம் அண்ணன் கண்ணோட்டத்தில், காயிதெ மில்லத், முஸ்லிம் லீக், சமூகப் பணி, சதா உழைப்பு இவை மட்டுமே இறுதி வரை அவரிடம் நேர்கோட்டில் இருந்தன.

புதன், 14 ஆகஸ்ட், 2013

மீண்டும் மலர்கிறது குர்ஆனியப் புரட்சி! - பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன்

மாண்பு தரும் நோன்பு நிறைவடைந்து, ஆறு நோன்பும் முடிவடைகிறது.

நோன்பு மாதமாகிய ரமளான் முழுவதிலும் பெற்ற மன அமைதியும், நிறைவும், உடல் சுகமும், உள்ளத்தில் பொங்கிய இன்பமும் அடுத்த ரமளான் வரும் காலந்தொட்டு தொடர வேண்டும் என்று ஆசிப்போம்.

தமிழகத்தில் பழக்கத்தில் உள்ள நோன்புக் கஞ்சி, இப்பொதெல்லாம் அரபு நாடுகளிலும், கடல் கடந்த பூமிகளிலும் சிலாகித்துப் பேசப்படுகிறது. நோன்பு காலத்து உணவில் மிகமிகச் சிறந்ததாக நோன்புக் கஞ்சி பெயர் பெற்றிருக்கிறது.

ஒவ்வொரு மஸ்ஜிதிலும் நோன்புக் கஞ்சி காய்ச்சப்படுவதும், மாலை நான்கு மணி அளவிலிருந்து அதை நோன்பாளிகளின் வீடுகளுக்கும், பிற சமுதாய மக்கள் கேட்டு வரும் போது அவர்களுக்கும் விநியோகம் செய்யப்படுவதும் உலகத்தில் வேறெங்கும் காணாத காட்சி என்றால் அது மிகையல்ல.

நோன்புக் கஞ்சிக்கு அரசாங்கமே சலுகை விலையில் குருணை அரிசி வழங்குவது தமிழகத்தில்தான். இதுபோன்ற தொரு நடைமுறை இந்தியாவில் வேறெங்கும் இருப்பதாகவோ, உலகில் எந்தவொரு நாட்டிலும் உள்ளதாகவோ, நாமறிந்தவரை தெரியவில்லை. இப்படியொரு நல்ல பாரம்பரியத்தைத் தமிழகத்தில் தோற்றுவித்தது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தான் என்பதையும், அதை ஆரம்பி வைத்தது தி.மு.க. ஆட்சிதான் என்பதையும் நினைத்துப் பார்க்கும் போது நமக்கு ஒரு பெருமை தான்.

கடந்த 11-ஆம் தேதி தஞ்சை நகரில் அதன் மாவட்டத் தலைவர் பி.எஸ். ஹமீது ஹாஜியார் குடும்பத் திருமண விழாவிற்குச் சென்றிருந்தோம். திருச்சி புறநகர் மாவட்டத் தலைவர் வி.எம். பாரூக், மாவட்டச் செயலாளர் கே.எம்.கே. ஹபீபுர் ரஹ்மான், மாநில துணைச் செயலாளர் ஜி.எம். ஹாஷிம், தஞ்சை மாவட்டச் செயலாளர் லயன் வழுத்தூர் பஷீர் அஹமது, மாவட்ட துணைச் செயலாளர் ஜெய்னுல் ஆபிதீன் மற்றும் பல சகோதரர்கள் தஞ்சாவூர் ஆற்றங்கரை பள்ளிவாசலுக்கு சென்றிருந்தோம்.

மஸ்ஜிது நஃபில் தொழுதுவிட்டு வெளியே வந்தபோது நோன்புக் கஞ்சி தேக்ஷா அடுப்பில் ஏற்றப்பட்டிருந்தது. மஸ்ஜிது மோதினாரும், நோன்புக்கஞ்சி காய்ச்சுபவரும் அங்கிருந்தனர். ரமளான் நோன்பு முடிந்து பெருநாளும் கொண்டாடி முடிந்து விட்டதே என்று கூறி, தேக்ஷாவில் என்ன வேகிறது? என்று கேட்டோம்.

மோதினார் கூறினார்: ஆறு நோன்பு திறப்பாளிகள் சற்றொப்ப 60/ 70 பேர் வருவார்கள். அவர்களுக்கான நோன்புக்கஞ்சி என்றார். ஆறு நோன்பு நோற்பது என்பதே ஒரு காலத்தில் அபூர்வமாக இருந்தது. வயது முதிர்ந்தவர்கள் ரமளான் நோன்புடன் ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்பார்கள். குறிப்பாக, பெண்கள் இதில் அதிகம் நோன்பு இருப்பார்கள்.

ஷவ்வால் மாதத்திற்கு முஸ்லிம் பெண்கள் சூட்டியுள்ள அழகிய பெயர் `ஆறு நோன்புப்பிறை’ என்பதுதானே. ஆறு நோன்பு திறப்பதற்கு மஸ்ஜிதில் நோன்புக் கஞ்சி ஏற்பாடு என்பது இப்பொழுதுதான் தெரிந்தோம். வேறு எங்கெங்கெல்லாம் இப் பழக்கம் இருக்கிறதோ தெரியவில்லை.

இந்த ஆண்டு ரமளானில் முக்கியமான நிகழ்வு எங்களுடைய கவனத்தையும் ஈர்த்தது. அதுதான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சென்னை எழும்பூர் இம்பீரியல் ஹோட்டலில் நடந்த இஃப்தார். அதற்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர் களும், தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும் வந்திருந்தனர். இஃப்தார் நிகழ்ச்சிக்கு பிற அரசியல் கட்சியினரை - குறிப்பாக தி.மு.க. தலைவரை அழைக்கும் மரபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தான் முதன் முதலில் துவக்கியது. அது சில ஆண்டுகளாக தொடராமல் இருந்தது. இந்த ஆண்டு அந்த மரபை புதுப்பித்தோம். டாக்டர் கலைஞரும் வந்தார் - பங்கேற்றார் - பெருமகிழ்ச்சி கொண்டார். இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வரலாறு சாதனை - அது செய்துள்ள தியாகம் - சமுதாயத்திற்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெற்றுக் கொடுத்த நன்மைகள் பற்றியெல்லாம் விரிவாக பேசி இறுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பற்றி முஸ்லிம் சமுதாயம் ஆய்வுசெய்து ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

கலைஞர் - தளபதி பங்கேற்ற இஃப்தார் நிகழ்ச்சி தமிழக அரசியலில் பல அதிர்வலைகளை உருவாக்கி விட்டது. எல்லா அரசியல் கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு இஃப்தார் நிகழ்ச்சிகளை நடத்தும் நிலை வந்தது. எது நடந்தாலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி - அதில் கலைஞர் பங்கேற்று ஆற்றிய உரை எல்லாவற்றையும் மிஞ்சி நிற்கும் நிகழ்வாகவே அமைந்து விட்டது. சூரிய ஒளிக்கு முன் அகல் விளக்குகளின் வெளிச்சம் எடுபடாது என்பது உண்மைதானே.

வந்துபோன ரமளான் மாதத்தில் பல புதிய அம்சங்கள் ஆங்காங்கே தோன்றியிருந்தன. மஸ்ஜிதுகளில் தராவீஹ் தொழுகைக்குப் பிறகு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலத்தில் மார்க்க அறிஞர்களின் சிறப்பான சொற்பொழிவுகள் நிகழ்ந்துள் ளன.

சென்னை விருதுநகர் ஹோட்டலில் ஸஹர் உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு 30 நாட்களும் பல்லாயிரக்கணக்கானவர் களுக்கு விலையில்லா - விலை மதிப்புள்ள உணவு வழங்கப்பட் டுள்ளது. அதன் முதல்வர் இப்றாஹீம் அவர்கள் இறைப் பொருத் தம் வேண்டி பல காலமாக இதனை செய்து வருகிறார். அதைப் பின்பற்றி இந்த ஆண்டு நோன்பின் கடைசி பத்து நாட்கள் பல பள்ளிவாசல்களிலும், திருமண மண்டபங்களிலும் இலவச ஸஹர் ஏற்பாடு நடந்துள்ளது.

சென்னையில் கட்டடத் தொழிலில் ஈடுபட்டு உழைத்து வரும் உ.பி., அஸ்ஸாம், பீகார் மாநிலங்களைச் சேர்ந்த வாலிப முஸ்லிம்கள் இந்த வசதியை அதிகம் பயன்படுத்தியுள்ளனர்.

வருங்காலங்களில் மஸ்ஜிதுகளில் நோன்பு திறப்பதற்கு எப்படி எவ்வித கட்டணமும் இல்லாமல் ஏற்பாடு செய்யப்படுகிறதோ அதைப் போன்று ஸஹர் உணவுக்கும் ஏற்பாடு செய்வது கட்டாய மாகலாம்.

முன்பெல்லாம் ஊரில் பல மஸ்ஜிதுகள் இருந்தாலும் ஏதோ ஒரு பள்ளிவாசலில் ஓரிருவர்தான் `இஃதிகாப்’ என்னும் அந்த கடைசி பத்து நாள் துறவு வாழ்வை மேற்கொள்வர். ஊருக்கு ஒருவராவது இருக்க வேண்டும் என்று உணர்ந்து அதை நிறைவேற்றி வந்தனர். ஆனால், இப்பொழுது பள்ளிகள் தோறும் இஃதிகாப் இருப்போர் பெருகியிருக்கின்றனர்.

எல்லா பள்ளிவாசல்களிலும் திரைகள் அலங்கரித்தன. அப்படி யிருந்தவர்கள் பலர் இளைஞர்களாக இருந்தனர் என்பது குறிப் பிடத்தக்க செய்தியாகும்.

சென்னையில் குர்ஆன் பாடப் போதனைகள் பல மஸ்ஜிது களில் நடக்கின்றன. அரபி மொழியை அறிந்து கொள்ளும் வகையிலும், குர்ஆன் வசனங்களை ஓதியும் படித்தும், அவற்றின் அருத்தத்தைத் தெரிந்து கொள்ளும் வகையிலும் இந்த குர்ஆன் பாட போதனை நடக்கிறது. குர்ஆன் ஷரீபை ஓதும்போதே அதனுடைய பொருளையும் புரிந்து கொள்ளும் நிலை ஏற்பட்டால் அதைவிட ஓர் அற்புத வாழ்க்கை வேறு இருக்க முடியாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆன் ஷரீப் `வஹி’ மூலம் வந்தது. அதனை ஸஹாபா தோழர்களுக்கு ஓதி காட்டினார்கள். நபி தோழர்கள் தங்கள் தாய் மொழியான அரபியில் வந்த குர்ஆனை ஓதியும், படித்தும் அதன் பொருளை தெரிந்து கொள்ளும் நிலைமை ஏற்பட்டதால் அவர்களின் வாழ்வில் மிகப் பெரும் மாற்றம் - புரட்சி - எழுச்சி ஏற்பட்டது.

உலக வரலாற்றில் திருக்குர்ஆன் செய்த புரட்சியைப் போல் வேறு எந்த காலத்திலும், வேறு எந்த புரட்சியும் நடக்கவில்லை என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

அந்த குர்ஆனிய புரட்சி இடைப்பட்ட காலத்தில் தொடராமல் ஒரு தொய்வு ஏற்பட்டது. எதனால் என்றால், குர்ஆனை அருத்தம் தெரிந்து ஒதாமலும், உணராமலும் இருந்து விட்டதுதான்.

இப்போது அந்த மதீனா காலத்து வரலாறு மலரத் துவங்கியி ருக்கிறது. குர்ஆனியப் புரட்சி மீண்டும் மக்கள் மத்தியில் ஏற்படும் காலம் கனிந்து வருகிறது என்று சொல்ல வேண்டும்.

சுருங்கச் சொன்னால், சென்றுள்ள ரமளான் மாதம் - அதில் நோற்ற நோன்பு - அதன் சீரிய அம்சங்கள் யாவும் புதியதொரு புரட்சிக்கு வித்தாகி இருக்கிறது.

குர்ஆனியப் புரட்சி தொடர்ந்தால் குவலயத்தில் அமைதி - சாந்தி - சமாதானம் - நல்லிணக்கம் - நல்வாழ்வு நிறையும்! போர் இல்லாத உலகப் புரட்சி தோன்றும் என்பதில் ஐயம் ஏது?

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

111 ஆண்டுகளாக சென்னையில் இயங்கி வந்த உர்தூ ஆசிரியர் பயிற்சி பள்ளி மூடப்பட்டது :தொடர்ந்து நடத்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடவடிக்கை

சென்னையில் 111 ஆண்டு காலமாக இயங்கி வந்த தமிழகத்தின் ஒரேயொரு உர்தூ ஆசிரியர் பயிற்சி நிறுவனமான உர்தூ ஆசிரியர் பயிற்சி பள்ளி மூடப்பட்டது முஸ்லிம்களி டையே மிகப் பெரும் அதிர்ச்சி யலைகளை ஏற்படுத்தியுள் ளது. இப்பயிற்சிப் பள்ளியை திறந்து மீண்டும் தொடர்ந்து நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரி யர் கே.எம். காதர் மொகி தீன் வேண்டுகோள் விடுத் துள்ளார்.

இதுவிஷயத்தில் மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சகத்தின் மூலம் உரிய பரிகாரம் காண இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவரும், மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சருமான இ. அஹமது சாஹிப், காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. ஆகியோர் இன்று காலை புதுடெல்லியில் ஆலோசனை நடத்தினர். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1902-ம் ஆண்டு சென்னை அண்ணாசாலை தாஹிர் சாஹிப் தெருவில் உர்தூ ஆசிரியர் பயிற்சி பள்ளி துவக்கப்பட்டது. தமிழ்நாட்டி லேயே ஆண்களுக்கான ஒரே யொரு உர்தூ ஆசிரியர் பயிற்சிப் பள்ளியாக இந் நிறுவனம் மட்டுமே செயல்பட்டு வந்தது.

ஆண்டுக்கு 40 மாணவர் கள் பயிற்சி பெற்று வெளியேறி வந்த நிலையில் கடந்த 10 வருட காலமாக இதன் முக்கியத்துவம் படிப் படியாக குறைக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக இப் பயிற்சிப் பள்ளிக்கான உர்தூ மொழி, கணிதம், அறிவியல், மனோதத்து வம், ஆங்கிலம், சமூக அறிவியல் உள்ளிட்ட 7 விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே இருந்தன. கடந்த 5 ஆண்டுகளில் ஒரு பணியிடம் கூட நிரப்பப்பட வில்லை.

இதைவிட மிகப் பெரிய கொடுமை என்னவெனில், உர்தூ மொழியே தெரியாத தெலுங்கு ஆசிரியர் இப் பயிற்சிப் பள்ளிக்கு முதல்வராக நியமிக்கப்பட்டார். பயிற்சியளிப் பதற்கு உரிய விரிவுரையாளர் கள் இல்லாததால் இப்பள்ளியில் மாணவர்கள் சேர தயக்கம் காட்டினர். தமிழக அரசின் முழு நிதியுதவியில் நடத்தப்பட்ட இப் பயிற்சிப் பள்ளியை மூட முடிவெ டுத்த அரசு அதிகாரிகள் கடந்த இரண்டு வருட காலமாக திட்டமிட்டு காய் நகர்த்தினர். முதல் கட்டமாக, ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் விட்டதோடு, அடுத்த கட்ட நடவடிக்கையாக இப் பயிற்சிப் பள்ளியில் சேர விண்ணப்பித் திருந்த 12 மாணவர்களின் விண்ணப்பங்களையும் ஏதேதோ காரணங்களை சொல்லி நிராகரித்தனர். இது மட்டுமின்றி பயனின்றி கிடக் கும் இந்த இடத்தை தங்கள் வசம் ஒப்படைக்குமாறு பெற் றோர் - ஆசிரியர் சங்கத்தின் மனு ஒன்றையும் அவர்கள் பெற்றனர்.

இவ்வளவையும் செய்து விட்டு உர்தூ ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் மாணவர்கள் சேரவில்லை என காரணம் காட்டி ஆசிரியர் பயிற்சி நிறுவன இயக்குநர் கண்ணப்பன் உத்தரவின்பேரில் இப் பள்ளி மூடப்பட்டது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடவடிக்கை
இச் செய்தி குறித்து உர்தூ டீச்சர்ஸ் அசோசியேஷன் மாநில அமைப்பாளர் ஒசூர் ஹபீபுர் ரஹ்மான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில துணைச் செயலாளர் வாணியம் பாடி நரி முஹம்மது நயீம் ஆகியோர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையகத் தின் கவனத்துக்கு கொண்டு வந்த னர்.

தலைமையின் அறிவுறுத்த லுக்கிணங்க மாநிலச் செயலா ளரும், மணிச்சுடர் செய்தியாசிரி யருமான காயல் மகபூப், செய்தி யாளர் மகபூப் ஷரீப் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

சென்னை பல்கலைக்கழக விரிவுரையாளர் டாக்டர் அமா னுல்லாஹ், தமிழ்நாடு உர்தூ ஸ்கூல் டீச்சர்ஸ் அசோசியே ஷன் பொதுச் செயலாளர் செஞ்சி ஏ. அப்துல் அஜீஸ் மற்றும் அப் பயிற்சி நிறுவனத் தில் பணியாற்றிய முன்னாள் பணியாளர்கள் சுற்று வட்டார பொதுமக்களிடையே தகவல் களை திரட்டினர்.

இப்பயிற்சி பள்ளி மூடப் பட்டது சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்திற்கும், மொழிவழி சிறுபான்மையின ருக்கும் செய் யப்பட்ட மாபெரும் துரோகம் என பொது மக்கள் கருத்து தெரி வித்தனர்.

பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன் கோரிக்கை 
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாள ரும், தமிழ்நாடு மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ``தமிழ்நாட்டில் உர்தூ மொழி பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டு வருவது முஸ்லிம்களை வேதனைப்படுத்தி வரும் நிலையில் அதன் ஆசிரியர் பயிற்சி நிறுவனமே மூடப்பட் டுள்ளது என்பது பேரிடியாக விழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, விழுப் புரம், ஈரோடு, திருச்சி, கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங் களில் உர்தூ மொழி பள்ளிக் கூடங்கள் 350-க்கும் மேல் உள்ளன. சுமார் 15 ஆயிரத் திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆனால், இந்த பள்ளிக்கூடங்களில் 150 ஆசிரியர் பணியிடங்கள் காலி யாக உள்ளன.

அரசின் நிதியுதவியில் நடத்தப்பட்ட பள்ளிகள் எல்லாம் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வரும் நிலையில் தனியார் நிர்வாகத்தின் மூலம் நடத்தப் படும் சுமார் 50 பள்ளிகளே சிறப்பாக செயல்படுகின்றன. இப் பள்ளிகளுக்கான ஆசிரியர் பணியிடங்கள் உர்தூ ஆசிரியர் பயிற்சி பள்ளியில் பயின்றவர்கள் மூலமே நிரப்பப் பட வேண்டும். ஆனால் அது மூடப்படுவது அனைத்து உர்தூ பள்ளி களையும் மூடுவதற்கான முன் னோட்ட நடவடிக்கையாகும்.

எனவே, தமிழக அரசு மதம் மற்றும் மொழிவழி சிறுபான்மை யினரின் உணர்வுகளை புரிந்து கொண்டு மூடப்பட்ட உர்தூ ஆசிரியர் பயிற்சிப் பள்ளியை மீண்டும் திறந்து தொடர்ந்து நடத்த ஆவன செய்ய வேண் டும்.

இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் விடுத்துள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இ.அஹமதுடன் அப்துல் ரஹ்மான் எம்.பி. சந்திப்பு 
இதனிடையே, இன்று காலை புதுடெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை இணைய மைச்சரும், தேசியத் தலைவரு மான இ.அஹமது சாஹிபை தமிழ்நாடு வக்ஃபு வாரிய உறுப் பினர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. சந்தித்து இதுபற்றி எடுத்துக் கூறினார். உர்தூ மொழி வளர்ச்சிக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் குறைந்த பட்ச செயல் திட்டத்தில் பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் உர்தூ மொழி வளர்ச்சிக்கு 500 கோடி ரூபாய் ஒதுக்குமாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் இ.அஹமது கோரிக்கை வைத்து அது மத்திய அரசால் ஏற்கப்பட்டுள் ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நூறு ஆண்டுகளுக்கு மேல் நடந்து வரும் ஒரு பயிற்சிப் பள்ளியை மூடுவது என்பது ஏற்க முடியாதது. எனவே, மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச் சகத்தின் மூலம் தமிழக அரசுக்கு உரிய வேண்டுகோள் விடுக்க இந்த சந்திப்பின் போது முடிவெடுக்கப்பட்டது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளரும், மத்திய மதரஸா மேம்பாட்டு வாரிய உறுப்பினரு மான கே.ஏ.எம்.முஹம்மது அபூ பக்கர், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பல்லம் ராஜுவுக்கு அனுப்பி யுள்ள அவசர செய்தியில் இதுவிஷயத்தில் தலையிட்டு உர்தூ பயிற்சி பள்ளி தமிழ்நாட் டில் தொடர்ந்து செயல்பட கேட்டுக் கொண்டுள்ளார்.

மாணவிகள் அச்சம் 
ஆண்களுக்கான உர்தூ ஆசிரியர் பயிற்சிப் பள்ளி மூடப்பட்டு விட்ட நிலையில் தமிழ்நாட்டில் பெண்களுக்காக நடத்தப்படும் சென்னை ராயப்பேட்டை ஹோப்பாட் வளா கத்தில் உள்ள உர்தூ ஆசிரியர் பயிற்சிப் பள்ளியும் மூடப்பட்டு விடும் என்ற அச்சம் அங்கு பயின்று வரும் மாணவிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழ் மற்றும் உர்தூ மொழியி லான மாணவிகளுக்கு ஒன் றாக பயிற்சியளிக்கப்படுவ தால் இப்பள்ளி காப்பாற்றப் பட்டு வருகிறது என்பது குறிப் பிடத்தக்கது.

தமிழக அரசு கல்வி உதவித் தொகை அறிவிப்பு

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பி.சி./எம்.பி.சி./டி.என்.சி. மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

உதவித் தொகைக்கான விண்ணப்பப் படிவங்களை மாணவர்கள், அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமர்பிக்க வேண்டும்.

http://www.tn.gov.in/announcements/announce_view/38917 இணையதளத்தில் விபரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் உள்ளன...

திங்கள், 12 ஆகஸ்ட், 2013

நெல்லை தந்த சமுதாய துருவ நட்சத்திரங்கள்! ---- புலவர் அ.ஹிலால் முஸ்தபா

1947 க்கு பின்னர் தமிழகத்தில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் கிளைகள் அதாவது பிரைமரிகள் பரவலாகப் பெருகி வந்தன என்றாலும் இந்தப் பரவல் சாதாரணமாக நடந்து விடவில்லை.

இந்தப் பரவலுக்கு பலதரப்பட்ட மனிதச் செம்மல்களின் தியாக வரலாறு , சரித்திர மேனியில் தழும்புகளாகக் கிடக்கின்றன. இந்தத் தழும்புகள் ஆறிப் போன புண் என அலட்சியப் படுத்தக் கூடிய ஒன்று அல்ல. மீண்டும் மீண்டும் நினைவு கூரத்தக்க மாட்சிமை கொண்டவை.

 இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் தமிழக ஆளுமையை அந்தக் காலகட்டத்தில் மூன்று மாவட்டங்கள்தாம் முன்னெடுத்து சென்றன. அவற்றில் முதன்மையானது நெல்லை மாவட்டம் , அடுத்து தஞ்சை மாவட்டம், அதைத் தொட்டு வேலூர் மாவட்டம்.

தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களில் பிரைமரிகள் தவழத் தொடங்கி இருந்தன. மேற்சொன்ன மூன்று மாவட்டங்களில் முஸ்லிம் லீக் இளமை கம்பீரத்தோடு எழுந்து நின்றது.

நெல்லை மாவட்டம், இன்று நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களாகப் பிரிந்து இருக்கின்றன. அன்றைய நெல்லை மாவட்டம் இணைந்திருந்த பெரிய ஒரே மாவட்டம் ஆகும்.

மாவட்டத்தினுடைய லீக் தலைவர் எங்கள் தாதா மு.ந.அப்துர் ரஹ்மான் சாஹிப்.

மு.ந. அப்துர் ரஹ்மான் அவர்கள் ஏற்கனவே இஷா அத்துல் இஸ்லாம் என்ற ஒரு சமூக அமைப்பையும் உருவாக்கி அதன் தலைமையினையும் ஏற்று இருந்தார்கள்.

மு.ந. அப்துர் ரஹ்மான் அவர்கள் ஏற்கனவே இஷா அதுல் இஸ்லாம் என்ற ஒரு சமூக அமைப்பையும் உருவாக்கி அதன் தலைமையினையும் ஏற்று இருந்தார்கள்.

நெல்லை மாவட்டத்தினுடைய செயலாளர் என்று நினைவு படுத்தி பார்க்கும் போது முதன்முதலில் நினைவுவெளியில் வெ.கா.உ. அப்துர் ரஹ்மான் சாஹிப்தான் பளீரென்று முன் வந்து நிற்பார்கள்.

மாவட்டத் தலைவர். அதே நேரத்தில் ,மாநில முதல் துணைத் தலைவர். மு.ந.அப்துர் ரஹ்மான் சாஹிப். மாவட்டத்தினுடைய செயலாளர் கடையநல்லூரை சேர்ந்த வெ.கா.உ.அப்துர் ரஹ்மான் சாஹிப் . இந்த இரு அப்துர் ரஹ்மான் சாஹிப்களும் ஆற்றிய சமூகப் பணிகளை மறந்து விட்டால் அது சமுதாயத்தின் குற்றம் நிறைந்த பாபமாகி விடும்.

தலைவர் மு.ந.அ அவர்கள் வடிவத்தில் குள்ளமானவர்கள். தேக ஆரோக்கியத்தில் வலிமையானவர்கள். வயோதிகம் அவரைத் தொட்டிருந்த போது கூட சிந்தனை ஆற்றலிலும் தேக வலிமையிலும் அவர்களை ஒத்த வயோதிகர்கள் வேறு எவரும் அரிதாக வேண்டுமானால் இருக்கலாம்.

கடையநல்லூர் வெ.கா.உ.அ அவர்கள் நெடு நீண்ட வடிவம் கொண்டவர்கள். உயரத்திற்கேற்ற பருமன் சார்ந்திருந்தவர். நல்ல நிறம். முகத்தில் நாடியிலே அந்த தாடியின் அழகை இன்று நினைத்தாலும் ரசிக்கக் கூடியதாக இருக்கிறது.கருத்த , உயர்ந்த வட்ட வடிவ தொப்பி ,அது துருக்கி தொப்பி போல் இருக்கும் ஆனால் தொப்பியில் குஞ்சம் இருக்காது.

மாவட்டத் தலைவரும் , செயலாளரும் கடைபிடித்த ஒற்றுமைக்கு இன்று கூட ஒரு எடுத்துக் காட்டை காட்டி விட முடியாது.

வெ.கா.உ.அ அவர்கள் பள்ளிப் படிப்பு அதிகம் இல்லாதவர். ஆனாலும் அவரின் பேச்சாற்றல் மாஸ்டர் டிகிரி படித்தவர்களையும் நிலை குலைய செய்து விடும். தனக்குச் சாதகமாக எடுத்து வைக்கும் உதாரணங்கள் இன்னொருவரால் தடுத்தோ, மறுத்தோ பேச முடியாமல் அவரைத் திக்பிரமை அடைய வைக்கும்.

செயலாளர் வெ.கா.உ.அ. அவர்கள், தலைவர் மு.ந.அ அவர்களிடம் கொண்டிருந்த மதிப்பும் மரியாதையும் வார்த்தைகளைக் கொண்டு வடிவமைத்து காட்டி விட முடியாது. இஷா அத்துல் இஸ்லாம் சபைக்கும் இந்த இருவருமேதாம் தலைவர் ,செயலாளர்.

இந்த இருபெரும் தலைவர்கள் மீதும் காயிதே மில்லத் மேன்மையான மதிப்புகள் வைத்து இருந்தார்கள்.

மாவட்டம் எங்கும் இளைஞர்களைப் போல முதிய தலைவரும், முதுமையைத் தொட்டுக் கொண்டிருந்த செயலாளரும் சதா பயணப் பட்டு உழைத்து கொண்டே இருந்தார்கள்.

மாவட்டத் தலைவர் மு.ந.அ அவர்கள் அதிகப் படியான ஆன்மீகப் பிடிப்பு உள்ளவர்கள். இறை அச்சம் மட்டுமே அவர்களின் அச்சத்திற்குரிய பெரும் ஆற்றல் கொண்டது. வேறு எவற்றைப் பற்றியும் அச்சம் துளியும் இல்லாதவர்கள்.

தலைவர் மு.ந.அ அவர்கள் தன் வாழ்நாளில் இறுதி வரை ,அலோபதி மருத்துவத்தை ஏற்று கொள்ளாமல் இருந்தார்கள்.அவர்களின் கிட்டத்தட்ட் எழுபதாவது வயதில் காட்ராக்ட் ஆபரேஷன் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது

ஆனாலும் தன் உடம்பில் எந்த வித இன்ஜக்ஷனும் போடாமல் பண்ண வேண்டும் என அடம் பிடித்தார்கள்.அதுவரை தன் வாழ்நாளில் இன்ஜெக்ஷன் போட்டதே இல்லை அவர்கள்.

தலைவர் மு.ந.அ அவர்கள் முடிவெடுத்து விட்டால், அதை மாற்றக் கூடிய ஆற்றல் உள்ளவர்கள் ஒன்றிரண்டு பேர்கள்தாம்.

காட்ராக்ட் ஆபரேஷ னை செய்ய வற்புறுத்தவும் ,இந்த ஒருமுறை இன்ஜெக்க்ஷனை ஏற்றுக் கொள்ள அனுமதிக்கவும் செய்ய சென்னையிலிருந்து காயிதே மில்லத் அவர்கள் நெல்லைக்கு வந்தார்கள்.

தலைவர் மு.ந.அ விடம் காயிதே மில்லத் சொன்னவுடனே எந்த மறுப்பும் சொல்லாமல் ,

"அப்படியென்றால், பிரதர் (இப்படித் தான் இருவரும் ஒருவரை ஒருவர் அழைத்துக் கொள்வர்) சரி "

என்று உடனே சம்மதித்து விட்டார்கள்.

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் கண் புரை அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது. அதற்குப் பின் கண்ணாடி போட்டுக் கொண்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் ,ஹிந்து பத்திரிகைகளை வரிவிடாமல் படிக்கத் தொடங்கினார்கள்.

இந்த அறுவை சிகிச்சை மதுரையில் நடக்கும் தினத்தில் , காயிதே மில்லத் தலைமையில் முஸ்லிம் லீக் பொதுக் குழு கூடியது. அந்த பொதுக் குழுவில் காயிதே மில்லத் அவர்கள் தலைவர் மு.ந.அ அவர்கள் கண் அறுவை சிகிசைக்காககவும் , அவர்களின் உடல் நல ஆரோக்கியத்திற்காகவும் பிரார்த்தனை செய்ய பொதுக்குழுவை கேட்டுக் கொண்டார்கள்.

அப்போது அந்த பொதுக்குழுவில் காயிதே மில்லத் அவர்கள் பயன்படுத்திய சொற்பிரயோகத்தை இங்கு பதிவு செய்கிறேன் .

"தென்காசி பெரிய முதலாளி ,பிரதர் மு.ந.அ அவர்கள் நம் காலத்தில் நம் கண்முன் நடமாடிக் கொண்டிருக்கும் ஒலியுல்லாஹ் என இறைவன் கருணையினால் நான் அறிந்திருப்பதை சொல்லுகிறேன்." எனப் பதிவு செய்தார்கள்.

மு.ந.அ அவர்களின் ஆன்மீகப் பயணத்தை வேறொரு சந்தர்ப்பத்தில் பேசிக் கொள்ளலாம். இங்கே அவர்களின் அரசியல்,சமூகப் பணிகளை தொடர்ந்து பேசலாம்.

இந்திய விடுதலைக்கு முன் , மு.ந.அ அவர்களின் தம்பி மு.ந.முஹம்மது சாஹிப், இவ்விருவரின் வயோதிகத் தாயார், இன்னும் ஒரு சில பணியாளர்கள் ஹஜ்ஜுக்கு செல்ல ஏற்பாடாகியது.

இந்தக் காலகட்டத்தில் நெல்லை விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள ஒரு பகுதியில் ,முஸ்லிம் ஜமாஅத்தினர் ஒருவருக்கொருவர் இடையே கருத்து முரண்பட்டு தாக்கிக் கொண்டார்கள்.

முஸ்லிம்களுக்கு இடையே ஒரு சின்ன கலவரம் உண்டாகிவிட்டது.மு.ந.அ அவர்கள் அங்கே சமாதானப் படுத்த புறப்பட்டு சென்று விட்டார்கள்.

தாயாருடனும் ,தம்பியுடனும், பிற பணியாளருடனும் ஹஜ்ஜுக்கு புறப்பட வேண்டிய நாள் வந்து விட்டது. நெல்லையிலிருந்து சென்னை சென்று, சென்னையிலிருந்து பம்பாய் போய் கப்பலில்தான் ஹஜ்ஜுக்கு செல்ல வேண்டும்.

அந்த நேரத்தில் ஹஜ்ஜை கடைசிக் கடமை எனக் கருதியதை விட, அது ஒரு கடைசிப் பயணம் என்றே அனைவரும் கருதிக் கொள்வார்கள். பயணம் அவ்வளவு இடைஞ்சலாக, சிரமமாக இருக்கும்.

மு.ந.அ அவர்கள், தாயாரிடம்
“நீங்கள் அனைவரும் புறப்படுவது போல புறப்பட்டு சென்று விடுங்கள். அங்கே போய் துஆ செய்யுங்கள். பின் ஒருமுறை எனக்கு ஹஜ்ஜைக் கடமையாக்க இறைவனிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.
ஹஜ்ஜா? சமுதாயப் பிளவிற்கு தீர்வா? என்ற நிலை ஏற்பட்டால் என் கடமை சமுதாயப் பிளவைத் தீர்ப்பதில்தான் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்”
என தாயாரிடம் பரிவுடன் பேசி அவர்களை ஹஜ்ஜுக்கு அனுப்பி விட்டார்கள்.

விடுதலைக்கு பின் 1962 அல்லது 1963 ஆம் ஆண்டுகளாக இருக்கலாம். மு.ந.அ அவர்களின் தம்பி , மு.ந.முஹம்மது சாஹிப் அவர்கள், அவருடைய மகனார் ஜமால் முஹம்மது சாஹிப் அவர்கள் , ஜமால் முஹம்மது சாஹிபின் மனைவியார், மு.ந.அ அவர்களின் ஒரே மகளார் காதர் ஹைருன்னிஷா பேகம் அவர்கள் , இவர்களுக்கு சமையல் பொறுப்பை செய்துக் கொடுக்க பணியாளர், வடகரை சமர்த்தன் அவர்கள் ஹஜ்ஜுக்கு புறப்பட்டனர். அப்போதும் மு.ந.அ அவர்களையும் சேர்த்தே டிக்கெட் தயார் செய்யப் பட்டது.

அந்த நேரத்திலும் அல்லாஹ் நாட்டம் வேறு விதமாக இருந்திருக்கிறது. நெல்லை மாவட்டம் பத்தமடைக்கு பக்கத்தில் ஒரு ஜமாஅத்தார், இரு பிரிவாக மோதிக் கொண்டு நீதிமன்றத்திற்கு சென்று விட்டனர். நீதிமன்றம் வழக்கை ஏற்றுக் கொண்டு பள்ளிவாசலை மூடி விட்டது. தொழுகைப் பள்ளி மூடப்பட்டது அறிந்தவுடன் ,மு.ந.அ. அவர்கள் அங்கே சென்று விட்டார்கள்.
ஜமாஅத்தார்களை அழைத்து பேசிப் பார்த்தார்கள். அவர்கள் உடன்படுவதாக தெரியவில்லை. மறுநாள் சஹர் நேரத்தில் சஹரை முடித்துக் கொண்டு , நோன்பு வைத்து, மூடப்பட்ட பள்ளிவாயிலின் படிக்கட்டில் போய் அமர்ந்து விட்டார்கள்.

ஊர் ஜமாத்தார் கூடினர்.அவர்களைப் பார்த்து
"நீங்கள் சமாதானமாகி பள்ளி வாசலைத் திறக்க நீதிமன்றத்தில் அனுமதிப் பெற்று மீண்டும் தொழுகையை இங்கே நிறைவேற்ற முயற்சி எடுக்கும் வரையில் நான் இந்தப் பள்ளிவாசல் படிக்கட்டில் அமர்ந்து நோன்பு இருப்பேன்"
என்று கூறிவிட்டார்கள்.

மு.ந.அ. அவர்களின் பிடிவாதம் ஊரறிந்த ஒன்று. ஒன்றிரண்டு நாட்களிலே ஜமாஅத் ஒன்றிணைந்து வழக்கை வாபஸ் வாங்க முயற்சித்தனர். இந்த முறையும் மு.ந.அ அவர்கள் ஹஜ்ஜுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. அந்த குடும்பத்தில் மீதமுள்ளவர்கள் ஹஜ்ஜு செய்தனர். மு.ந.அ அவர்கள் ஹஜ்ஜை நிறைவேற்ற முடியவில்லை.

இதற்கு பின் ஹஜ்ஜு செய்ய மு.ந.அ அவர்கள் நினைத்தார்கள் என்று கூட துணிந்து சொல்லிவிட முடியாது. ஆனால் அவர்கள் ஹஜ்ஜு செய்யவே இல்லை.

இந்த இடத்தில இன்னொரு தகவலும் சொல்லுகிறேன். தன்னுடைய சொந்த சம்பாத்தியத்தில் பல கோடிகளை சம்பாதித்து (இந்திய விடுதலைக்கு முன்பே) தன் சம்பாத்தியத்தில் 75 சதவிகிதத்தை சமூக நலனுக்காகவும் , கல்விப் பணிக்காகவும் வாரி வழங்கிய செய்யது C.அப்துல் ஹக்கீம் சாஹிப் அவர்கள் தன வாழ்நாளில் , ஹஜ்ஜு செய்ய புறப்பட்டு ஆம்பூரில் இருந்து சென்னை வந்தார்கள்.

ஆனால் சென்னையில் கடுமையான நோய் வாய்ப்பட்டு இறைவனடி சேர்ந்தார்கள்.

C.அப்துல் ஹக்கீம் பெயரில் திருவல்லிக்கேணி ஹைரோட்டில் அவர் நிறுவிய மேல்நிலைப் பள்ளி இயங்கிக் கொண்டிருக்கிறது. மண்ணடி அங்கப்ப நாயக்கன் தெருவில் C.அப்துல் ஹக்கீம் ஹிந்து முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி ,இன்றும் தன் கல்விப் பணி யை ஆற்றிக்கொண்டிருக்கிறது. ஆம்பூரில் கல்வி நிலையம், சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு எதிர் புறத்தில் பயணிகள் தாங்கும் முஸாபர்கானா உருவாகப் பங்களிப்பு என சமூகப் பணியாற்றிய வள்ளல் C.அப்துல் ஹக்கீம் சாஹிப் அவர்களுக்கும் ,எல்லோரையும் போல ஹஜ் ஜை ஏனோ நிறைவேற்ற முடியாமல் ஆகிவிட்டது.

ரகசியம் இறைவனுக் கே சொந்தமானது.

தலைவர் மு.ந.அ அவர்களும் ,செயலாளர் வெ.கா.உ.அ அவர்களும் பலப்பல எதிர்ப்புகள் ,அச்சுறுத்தல்கள் போன்ற இவைகளை துரும்பு அளவு கூட சட்டை செய்யாமல் சமூகப் பணி ஆற்றியவர்கள்.

நெல்லை மாவட்டத்தில் வாழக் கூடிய வீரம் செறிந்த ஒரு சமூகம் என குறிக்கப்படும் அந்த சமூகத்தவர்கள் ,இவ்விருவரையும் ஒன்றிற்கும் மேற்பட்ட முறை கொல்லுவதற்கான கொலை முயற்சியை மேற்கொண்டார்கள். அப்போதும் தளர்ந்து விடாமல் அந்த சமூகத்தவர்கள் வாழுகின்ற பகுதிக்கே சென்று இயக்க ,சமூக பணிகளைச் செய்யும் துணிச்சல் பெற்று இருந்தார்கள்.

ஒருமுறை சென்னை எழும்பூர் ரயில்வே நிலையத்தில் இருந்து நெல்லைக்கு ,நெல்லை எக்ஸ்ப்ரஸில் பயணம் புறப்பட்டார்கள் இந்த இருவரும். அப்போது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் எல்லாம் கிடையாது.

ரயில் நிலையத்தில் ரயில் கோச்சில் உள்ள இருக்கையில் வெ.கா.உ.அ அவர்கள் அமர்ந்து இருந்தார்கள். பிளாட்பாரத்தில் மு.ந.அ. அவர்களும் இயக்கத் தொண்டர்களும் நின்று இருந்தனர்.

மு.ந.அ அவர்கள் தன் பக்கத்தில் நின்றிருந்த மகன் A.K.ரிபாயிடம் மணி கேட்டார்கள் .அவர் மணி சொன்னார்.அது மக்ரிப் நேரம். உடனே “மேற்கு எது?” என்று மு.ந.அ கேட்டார்கள்.

திசை காட்டியவுடன் தோளில் இருந்த துண்டை பிளட்பரத்தில் விரித்து தொழுகையை ஆரம்பித்து விட்டார்கள். இனி அவர்களை தடுக்க முடியாது. நெல்லை எக்ஸ்பிரஸ் சரியாக புறப்படும் நேரம் அது. நெல்லை எக்ஸ்பிரஸ் புறப்பட்டும் விட்டது.

வண்டிக்குள் வெ.கா.உ.அ. அவர்கள். பிளாட்பாரத்தில் மு.ந.அ. அவர்கள். வண்டி எழும்பூரைத் தாண்டி சேத்துப்பட்டுடைய ரயில்வே கேட் (பச்சையப்பன் கல்லூரி மாணவர் விடுதி) அருகில் திடீரென்று நின்றுவிட்டது.

பிளாட்பாரத்தில் மு.ந.அ வின் தொழுகை நடந்து கொண்டிருக்கிறது.

திடீரென்று நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் பின்னோக்கி நகர்ந்து வருகிறது. ஏற்கனவே புறப்பட்ட பிளாட்பாரத்திற்கு உள்புகுந்து நிற்கிறது. ரயில்வே துறையினர் ஏதோ காரணம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் மு.ந.அ வின் மக்ரிப் தொழுகை அவருடைய பிரார்த்தனையோடு நிறைவு பெற்று அதிலிருந்து எழுந்து நிற்கிறார்கள்.

முதலில் வெ.கா.உ.அ அமர்ந்திருந்த கோச் எந்த இடத்தில நின்றதோ அதே இடத்தில நிற்கிறது.

மு.ந.அ. அவர்கள் நிதானமாக உரிய கோச்சில் ஏறி இருக்கையில் அமருகிறார்கள். நெல்லை எக்ஸ்பிரஸ் மீண்டும் ஓசை எழுப்பி புறப்படுகிறது. மு.ந.அ அவர்களை திரும்ப வந்து ஏற்றி செல்வதற்கே வந்தது போல் ,அவர்கள் இருக்கையில் அமர்ந்தவுடன் வண்டி புறப்பட்டு சென்றது. இந்த நிகழ்வு எதுவும் மு.ந.அ அவர்களுக்குத் தெரியாது என்று நாங்கள் கருதிக் கொண்டோம்.

வெ.கா.உ.அ. அவர்கள் வண்டிக்குள்ளே மு.ந.அ அவர்களிடம் இந்தச் செய்தியை சொன்னார்களாம்.அதற்கு மு.ந.அ அவர்கள் ,எந்தச் சலனமும் இல்லாமல் ,

"அல்லாஹ் பெரியவன்" என்று கூறி வழக்கம் போல ஓதுதலை தொடங்கி விட்டார்களாம். இந்த நிகழ்வை வெ.கா.உ.அ அவர்கள் பின்னர் அடிக்கடி சொல்லிக் காட்டுவார்கள்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இப்படி ஒரு சம்பவம் ,இந்த நிகழ்வுக்கு முன் நடந்ததே இல்லையாம். இதற்கு பின் இன்று வரை நிகழ்ந்திருக்கிறதா? என்பது இறைவனுக்கே வெளிச்சம்.

இது நடந்திருக்குமா? என்ற கேள்விக்கு ஒரே பதில்தான். நடந்தது நடந்தது நடந்தது.

சனி, 10 ஆகஸ்ட், 2013

தலைமையின் நம்பிக்கைக்கு பாத்திரமான தொண்டன் -------- புலவர் அ.ஹிலால் முஸ்தபா

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் தலைமையகம் 8,மரைக்காயர் லெப்பை தெரு,சென்னை-1

இந்த கட்டிடம் சமுதாயத்தின் இயக்கத் தோழர்கள் அனைவருக்கும் உரிமை நிரம்பிய உணர்வோடு கலந்த அற்புத வரலாறு கொண்டது.

முகம்மது இஸ்மாயில் என்கின்ற வணிகர் குடும்பத்திற்கு உரிமையான கட்டிடம் இது.இந்த முஹம்மது இஸ்மாயில் குடும்பம் உருதை தாய்மொழியாக கொண்ட குடும்பம்.இந்த குடும்பத்தினர் செய்து வந்த வணிகம் ஏனோ தெரியவில்லை பலத்த வீழ்ச்சிக்கு உள்ளாகி விட்டது.கடன் தலைக்கு மேல் கடந்து பரவியது.

மாற்று வழியாக வங்கியில் வீட்டை அடகு வைத்து தொழில் நடத்தினர்.அதிலும் சேதமானது.வட்டி கட்ட முடியாத நிலையில் வீடு கடனில் மூழ்கி விட்டது.மூன்று மாடிகள் கொண்ட பிரம்மாண்ட வீடு அது.வங்கி இறுதியில் வீட்டை ஏலத்திற்கு விட்டது.

முஸ்லிம் லீக் மாநில மாநாடு போட்டு ஒரு தொகையை கை இருப்பில் வைத்திருந்தது. இந்த இல்லத்தை ஏலத்திற்கு எடுத்தது.காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்கள் பெயரில் தான் இந்த வீடு உரிமையாக்கப் பட்டது.


 வங்கியில் இருந்து ஏலத்திற்கு எடுத்த வீட்டை கையகப் படுத்த முஸ்லிம் லீகின் சார்பாக காயல் பட்டினம் பி.ஏ .காக்கா, A .K .ரிபாய் சாஹிப் ,இஸ்மாயில் கனி சாஹிப் ,இளையனன்குடி P .N .I .அபுதாலிப் சாஹிப் ,காயல் ஹம்ஸா மற்றும் இன்னும் சிலர் அங்கே சென்றனர்.

சட்ட விதிப் படி அந்த கட்டிடத்தில் உள்ள எந்த பொருளும் முந்தைய உரிமையாளருக்கு சொந்தம் ஆகாது.அங்குள்ள எந்தப் பொருளையும் அவர்கள் எடுத்து செல்லக் கூடாது.

ஆனால் காயிதே மில்லத் இப்படி சொல்லி அனுப்பி இருந்தார்கள் ,
"அங்கே வாழ்ந்து தாழ்ந்து போனவர்கள் இருக்கிறார்கள்.அவர்களின் மன வேதனைகளை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.அவர்கள் மனம் நம்முடைய எந்தச் செய்கையாலும் புண்பட்டு விடக் கூடாது.
அந்த வீட்டிலிருந்து ,எந்த எந்த பொருள்களை அவர்கள் எடுத்துச் செல்ல நாடுகிறார்களோ ,அவற்றை எல்லாம் அவர்களை எடுத்து செல்ல ,முழுவதுமாக அனுமதித்து விடுங்கள்"
என்று காயிதே மில்லத் சொல்லி இருந்தார்கள்.

அதன் படி இஸ்மாயில் பாய் குடும்பம் எடுத்துச் செல்ல நாடிய அனைத்தையும் எடுத்து செல்ல அனுமதித்தனர் லீக் குழுமத்தினர்.


 8,மரைக்காயர் லெப்பை தெரு வீட்டுக்குள் உரிமைக் குரல் பத்திரிகை அலுவலகமும் யூனியன் முஸ்லிம் லீகின் தலைமை அலுவலகமும் ஒரு சேர செயல் பட்டன.

தமிழக மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் லீகர்களுக்கு மரைக்காயர் லெப்பை தெரு கட்டிடம் அடைக்கலம் தரும் அன்னை வீடானது.

எல்லா நேரங்களிலும் அங்கே கலகலப்பு இருந்தது.தன்னை அறியாமல் ஒரு முழு உரிமையோடு அங்கே இருந்த அனைவரும் நடமாடி திரிந்தார்கள்.

மாலை வேளைகளில் சென்னையில் இருக்கும் காலங்களில் எல்லாம் ,காயிதே மில்லத் அவர்கள் அங்கே வந்து விடுவார்கள்.
ஒரு அறிவார்ந்த திருக்கூட்டம் குழுமி இருக்கும்.இந்திய அரசியலில் இருந்து உலக அரசியல் வரை அங்கே அலசப்படும்.

காயிதே மில்லத் , பி.ஏ .காக்கா,சென்னை மாவட்ட தலைவர் ஹக்கீம் முஹம்மத் இஸ்மாயில் சாஹிப் (மியாகான் சாஹிபின் மாமனார்), அப்துஸ்ஸமத் சாஹிப்,ஏ .கே.ரிபாய் சாஹிப்,மதுரை மாவட்ட செயலாளர் ஷரிப் சாஹிப் M .P .,பி.என்.ஐ.அபுதாலிப் சாஹிப் , இப்படி சிறப்புக்கு உரியவர்கள் எல்லாம் இருந்து தினம் தினம் விவாதித்துக் கொண்டிருப்பார்கள்.

இங்கே ஒரு நபரை கட்டாயம் சொல்லி ஆக வேண்டும்.

இஸ்மாயில் கனி அண்ணன். லிப்டன் தேயிலைக் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார்.அந்த நேரம் போக மீதி நேரங்களில் முஸ்லிம் லீக் தலைமை நிலைய அலுவல்களிலேயே காலம் கழித்தார்.

காயிதே மில்லத்திற்கு , இஸ்மாயில் கனி சாஹிபை விட தமிழகத்தில் நம்பிக்கையான ஒரு முஸ்லிம் லீகர் எவருமே கிடையாது.இப்படி துணிந்து சொல்லி விடலாம். இஸ்மாயில் கனி ,மிக நேர்மையானவர். ஆழமான நம்பிக்கையானவர். ஏற்றுக் கொள்ளக் கூடிய பொறுப்புகளில், தீவிரமான ஈடுபாடுக் கொள்ளக் கூடியவர்.

முஸ்லிம் லீக், உரிமைக் குரல் அலுவலகமான 8,மரைக்காயர் லெப்பை தெரு கட்டிடத்திலுள்ள அனைத்து கதவுகளுக்கும் ,அலமாரிகளுக்கும் இரு சாவிகள் உண்டு.ஒரு சாவி தலைமை நிலைய பொறுப்பாளரிடம் இருக்கும்,மற்றொரு சாவி இஸ்மாயில் கனி அவர்களிடம் இருக்கும். இது காயிதே மில்லத் செய்து இருந்த ஏற்பாடு.

இஸ்மாயில் கனி நல்ல கவிஞரும் கூட.அந்த கட்டிடதொடு இவர் கொண்டிருந்த உறவின் அளவு இன்னொருவர் எவரும் பெற்று இருக்கவில்லை.

ஆனால் , காயிதே மில்லதினுடைய மறைவுக்கு பின்னால் ,சில பல காரணங்களினால் இஸ்மாயில் கனி அவர்கள் , அந்த கட்டிடத்திற்கு வருவதை குறைத்துக் கொண்டார்.இது மிகவும் கசப்பான செய்தி.

தலைமையகத்தை சார்ந்திருந்த அனைவரினுடைய நெஞ்சிலும் இந்த வலி இருந்தது.ஆனாலும் விரும்பத் தகாத இது நிகழ்ந்து விட்டது.

காயிதே மில்லதினுடைய இளவல், கே.டி.எம்.அஹமது இப்ராகிம் சாஹிப் மாநிலத்தினுடைய பொது செயலாளராக இருந்தார்கள்.அவர்களிடம் தான் மற்றொரு சாவி இருந்தது.

காயிதே மில்லத் வாழ் காலத்திலே கே.டி .எம்.அஹமது இப்ராகிம் சாஹிப் காலமாகி விட்டார்கள்.

கே.டி .எம்.பற்றி இன்னொரு இடத்தில விரிவாக சொல்லி ஆக வேண்டும்.

கே.டி .எம் மறைவுக்கு பின்னால் ,தமிழ் மாநிலத்தினுடைய பொதுச் செயலாளராக ஏ .கே.ரிபாய் சாஹிப் தேர்ந்தெடுக்கப் பட்டார் .

ஒரு நாள் தலைமை நிலையத்திற்கு, இஸ்மாயில் கனி அண்ணன் அவர்கள் வந்தார்கள்.தன்னிடம் காயிதே மில்லத் ஒப்படைத்து இருந்த அத்தனை சாவிகளையும் ஏ.கே.ரிபாய் சாஹிபிடம் ஒப்படைத்தார்.அதனோடு ஒரு லெட்டெர் பேடு தாளையும் ரிபாய் சாஹிபிடம் கொடுத்தார்.அந்த லெட்டெர் பேடின் தாள் காயிதே மில்லத் அவர்களின் M .P .லெட்டெர் பேடின் தாள்.

அந்த லெட்டெர் பேட் தாளின் கீழே காயிதே மில்லத் அவர்களின் கை ஒப்பம் இருந்தது.தேதிக் குறிக்கப் படவில்லை. இப்படி ஒரு வெற்றுத் தாளில் காயிதே மில்லத் இந்த உலகில் வேறு எவரிடமும் கையெழுத்து இட்டு கொடுத்ததே இல்லை.

இதை பார்த்த ஏ .கே.ரிபாய் சாஹிப் அதிர்ந்து போனார்.ஏனென்றால் இந்த தகவல் எவருக்குமே தெரியாது.

இஸ்மாயில் கனி சொன்னார். "தேவைப் படும் பொழுது எந்த அலுவல் காரணத்திற்காகவும் ,இந்த லெட்டெர் பேடை பூர்த்தி செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.இது பரம ரகசியமாகவே இருக்கட்டும்” என்று காயிதே மில்லத் ஒரு சந்தர்பத்தில் சொல்லித் தந்ததாக சொன்னார்.

ஏ .கே.ரிபாய் சாஹிப் அந்த லெட்டெர் பேடு தாள்களை இஸ்மாயில் கனி அவர்களிடமே திரும்ப கொடுத்து விட்டு ,"வாப்பா உங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையின் அடையாளச் சின்னம் இது.இதை பிரேம் போட்டு நீங்களே பாதுகாத்து வாருங்கள்.இது உங்கள் குடும்பத்தின் பொக்கிஷம்" என இஸ்மாயில் கனியிடம் ,ஏ .கே ரிபாய் சொன்னார்.

அந்த காயிதே மில்லத் கையெழுத்திட்ட வெற்றுத் தாள் இஸ்மாயில் கனி அண்ணன் குடும்பத்திடம் தான் இன்றும் இருக்க வேண்டும்.

ஒருநாள் ,அப்துல் வஹாப் M .A .PTh அவர்கள் இஸ்மாயில் கனி இல்லத்திற்கு மனைவியோடு திடீரென்று வந்தார்.இஸ்மாயில் கனி இதை எதிர் பார்க்கவில்லை . அப்துல் வஹாப் துணைவியார் கையில் தாம்பூலம் இருந்தது.அதில் சில பேரீத்தம் பழங்களும் ,வாழைப் பழங்களும் வைத்து இஸ்மாயில் கனி குடும்பத்தாரிடம் தரப் பட்டது.

"என் மூத்த மகனுக்கு உங்கள் மூத்த மகளை மணமுடிக்க பெண் கேட்டு வந்திருக்கிறோம்' என அப்துல் வஹாப் சாஹிப் கூறினார்கள். வேறு எந்த கொடுக்கல் வாங்கலும் நமக்குள் தேவை இல்லை என்று மேலும் சொன்னார்கள்.

இஸ்மாயில் கனி அண்ணன் சிரமத்தில் இருந்த காலகட்டம் அது.அப்துல் வஹாப் சாஹிபின் மகன் உயர்ந்த அரசுப் பதவியில்,நிறைந்த சம்பளத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார்.

இஸ்மாயில் கனி அண்ணனுடைய நேர்மைக்கும்,நம்பிக்கைக்கும் இறைவனே வழங்கிய அருட்கொடை அது. இஸ்மாயில் கனி அண்ணன் இன்று இல்லை.

முஸ்லிம் லீகினுடைய மரைக்காயர் லெப்பை தெரு தலைமையகத்தில் ,இன்றும் என்றும் எவர் நடமாடித் திரிந்தாலும்,இஸ்மாயில் கனி அண்ணன் அவர்கள் ஹக்கில் துஆ செய்ய கடமை பட்டிருக்கிறார்கள்.

இன்று தலைமை நிலையத்தில் மேனேஜராக இருக்கக் கூடிய மீரா சாஹிபுக்கு ,தொழில் கற்று கொடுத்த குரு இஸ்மாயில் கனி அண்ணன்.

இந்திய இஸ்லாமிய சமுதாயத்தின் மானம் காத்த இரு மன்ஸில்களும் இரு பெரும் தலைவர்களும் --- புலவர் அ.ஹிலால் முஸ்தபா

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் வரலாற்றில் இரண்டு மன்ஸில்களை தவிர்த்து விடவே முடியாது. அதாவது இந்த இரு மன்ஸில்களில் தான் லீக் என்னும் பிரம்மாண்டமான மரம் வேர் பாவி கிளை விட்டு ,விழுது பாய்ச்சி ,செழித்தெழுந்து நின்றது .

ஒன்று கே.டி.எம். அஹமது இப்ராஹீம் மன்ஸில்,மற்றது தயா மன்ஸில்.

கே .டி .எம். மன்ஸில், வட சென்னை மண்ணடியில் ஹார்பருக்கு எதிரே வங்கக் கடலின் காற்றுத் தழுவி கிடக்கும் மரைக்காயர் லெப்பைத் தெரு எட்டாம் எண்ணில் இருந்த முஸ்லிம் லீகின் தலைமை நிலையம்.

கே .டி .எம். மன்ஸிலின் மூன்றாவது மாடியில் நின்று ,கிழக்கு திசை நோக்கிப் பார்த்தால், பரந்து விரிந்து கிடக்கும் வங்கக் கடல் காட்சி தரும். ஆங்காங்கே சில கப்பல்கள் மிதந்து கொண்டிருக்கும். கே .டி .எம். மன்ஸிலின் முதல் தளத்தில் இந்திய முஸ்லிம்களின் அரசியல் சமுத்திரம் கண்ணுக்கு தெரியாது ஆனாலும் அங்கே தான் சம்பவங்கள் விரிந்து கிடக்கும்.

இன்னொரு மன்ஸிலான தயா மன்ஸில் தென் சென்னை அன்றைய கடைக்கோடியான குரோம்பேட்டையில் ஒரு தெருவுக்குள் அமைதியாக இருந்தது. ஆனால் கடலின் ஆழத்தை விட ஆழமான சம்பவங்களை மறைத்துக் கொண்டு நிம்மதியாக இருந்தது. இந்த மன்ஸில் மாட மாளிகையோ, கூட கோபுரமோ அல்ல.

ஒரு சுமாரான இடத்தின் மத்தியில் தஞ்சை மாவட்ட கை வினைஞர்களால் உருவாக்கப் பட்டிருந்த ஒரு குடிசையும் ,அதனை ஒட்டி வலது பக்கம் இரண்டு சிறு அறைகள், இடது பக்கம் ஒரு அறை ,நடுவே ஒரு குட்டி முற்றம். அந்த முற்றத்திற்கு பின்னே ஒரு சமையல் அறை,ஒரு குளியல் அறை.இது தான் தயா மன்சில் .

இந்த மன்ஸிலுக்கு வலப்பக்கம் மூன்றடி உயர சுற்று சுவர் , அதற்கு மேலே ஒரு சின்னக் குடில். அந்த குடிலுக்கு உள்ளே ஆறேழு நாற்காலிகள். அவற்றிலும் ஒன்றிரண்டு நாற்காலிகளுக்கு ஒரு கால் இருக்காது.அந்த காலுக்கு பதிலாக தனித்தனி செங்கற்கள் அடுக்கிச் செங்கல் கால்கள் நிற்கும். இந்தக் குடிலும் தயா மன்ஸிலின் ஒரு அங்கம் தான்.

இந்த மன்ஸில் ஒரு தனி மனிதருக்கு சொந்தமானது. அந்த மனிதர் கோடீஸ்வரரின் பரம்பரையை சார்ந்தவர் சமுதாய பணிக்காக தன் முழு சொத்தையும் கரைத்து விட்டவர். சென்னை ராஜதானியின் எதிர்க் கட்சி தலைவராக இருந்தவர். டெல்லி நாடாளுமன்றத்தில் பதினைந்து இருபது ஆண்டுகள் உறுப்பினராக இருந்தவர்.

இந்திய அரசியல் அமைப்பு சட்ட அமைப்புக் குழு உறுப்பினராக இருந்தவர்.இந்த தயா மன்ஸில் கூட அவரின் நெல்லையில் இருந்த பூர்வீக சொத்தை விற்று தன்னை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த தயா மன்ஸிலுக்குள் இந்தியாவின் ஆகப் பெரும் தலைவர்கள் எல்லாம் வந்து அமர்ந்து அவரைச் சந்தித்து அரசியில் பேசி சென்று இருக்கிறார்கள்.

பண்டிட் நேரு அமைச்சரவையில் கேபினட் அமைச்சர்களாக இருந்த பலர் வந்து அவரை இந்த மன்ஸிலில் சந்தித்து இருக்கிறார்கள். தமிழகத்தினுடைய முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் சில முறைகள் வந்து இந்த மன்ஸிலில் சந்தித்து சென்றிருக்கிறார்.மற்றும் அமைச்சர்கள் வந்து சந்தித்து இருக்கின்றனர். அடுத்து வந்த முதல் அமைச்சர் அறிஞர் அண்ணா, சில பல முறை வந்து சந்தித்து சென்றிருக்கிறார். அவரைத் தொடர்ந்து வந்த முதலமைச்சர் கருணாநிதி பல முறை இந்த மன்ஸிலில் வந்து சந்தித்து இருக்கிறார்.

மூதறிஞர் ராஜ கோபாலச்சாரி இதே மன்ஸிலில் அவரை வந்து சந்தித்து சென்று இருக்கிறார். இந்த பட்டியல் இன்னும் நீண்டு கொண்டே இருக்கும் இந்த தயா மன்சில் காரர் இவர்களில் எவர் வீட்டிற்கும் சென்று சந்தித்து அரசியல் பேசியது இல்லை என்ற சரித்திர உண்மையும் இவருக்கு சொந்தமானது.

அந்த இவர்தான் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் முஹமது இஸ்மாயில் சாஹிப். பெருமைக்குரிய அத்தனை இந்திய தலைவர்களும் இந்த மன்ஸிலில் உள்ள கால் ஒடிந்த செங்கல் அடுக்கிய நாற்காலியில் தான் அமர்ந்து பேசி சென்று இருக்கிறார்கள்.

இறைவன் எனக்கும்,எங்களுக்கும் பாக்கியம் வழங்கி அருளி இருக்கிறான். அனைத்து நன்றியும் அவனுக்கே. நானும் ,நாங்களும் அந்த தயா மன்ஸில் முற்றத்திலும் இல்லத்திற்குள்ளும் ஓடி விளையாடி இருக்கிறோம். அந்த கண்ணியத்திற்கு உரியவரின் மடியில் அமர்ந்து மகிழ்ந்து இருக்கிறோம்.

கே .டி .எம். அஹமது இப்ராஹிம் .இவர் காயிதே மில்லத்தின் தம்பி .எங்கள் பிள்ளைப் பருவத்தில் கே டி எம் என்று சொன்னால் எங்களுக்கு தெரியாது. 'வக்கீல் தாதா " என்றவர் தான் கே .டி .எம். என்று பின்னால் தெரிந்து கொண்டோம்.

இந்த கே .டி .எம். பெயர்தான் முஸ்லிம் லீக் தலைமையகத்திற்கு காயிதே மில்லத் காலத்திலே சூட்டப் பட்டது. காயிதே மில்லத் முஸ்லிம் லீகின் அகில இந்திய தலைவராகவும் ,சென்னை ராஜ்யத் தலைவராகவும் இருந்தார்கள். கே .டி .எம். சென்னை ராஜ்ய பொது செயலாளாராக இருந்தார். ((கே.டி.எம், ராஜ்ஜியம் என்பதை மாநிலம் என்று மொழி பெயர்த்ததை ஏற்றுக் கொள்ளவில்லை. கே.டி.எம் காலம் வரை சென்னை ராஜ்ஜியம் என்று தான் குறிக்கப்பட்டது. அதற்கு பின்தான் தமிழ் மாநிலம் என முஸ்லிம் லீக் தன்னை கூறிக் கொண்டது)

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் “பைலா” இவர்களால் தான் சரி பார்க்கப் பட்டு திருத்தப் பட்டு அமைய பெற்றது. காயிதே மில்லத் வாழ் காலத்திலேயே கே .டி .எம் காலமாகி விட்டார்கள். கே .டி .எம் மை அடுத்து அவரிடத்தில் என் தந்தையார் ஏ. கே. ரிபாய் சாஹிப் கிட்டத்தட்ட பதினேழு ஆண்டுகள் பொறுப்பு வகித்தார்.

கே .டி .எம் உடைய நேர்மையும் அழுத்தமும் சில இடங்களில் காயிதே மில்லத்தை விட ஒரு இன்ச் உயர்ந்து இருக்கும். இப்படிச் சொல்வதில் நிச்சயம் குற்றமில்லை .

காயிதே மில்லத் தன்னளவில் மகத்தான நேர்மைக்கு உரியவர்கள். அப்பழுக்கு அங்கே இருக்காது. ஆனால் அவர்களைச் சார்ந்தவர்களிடம் குறைபாடு இருக்கும். காயிதே மில்லத்திற்கும் இது தெரியும்.

சில பல அரசியல் காரணங்களுக்காக அதைக் கண்டு கொள்ள மாட்டார்கள். இது ஒருவகையான காம்ப்ரமைஸ் போல தான் தெரிகிறது.

கே .டி எம் இடம் இந்த கதையே கிடையாது இது மாதிரிநேரங்களில் கடுமையாகவே நடந்து கொள்வார்.

வக்கீல் தாதா (கே .டி எம்) முகம் எப்போதுமே இறுக்கமாகத்தான் இருக்கும். சிரிப்பு அவர்கள் இதழில் வந்ததாக எங்களுக்கு நினைவே கிடையாது.

ஒரு கடுமை முகம் முழுவதும் பதிந்து பரவி கிடக்கும். பற்றாக்குறைக்கு இரு காதுகளும் கேட்காது. வக்கீல் தாதா என்றவுடன் இந்த தோற்றம்தான் எங்களுக்கு நினைவிலிருக்கும்

நெல்லை பேட்டையில் இருந்து சென்னை தலைமையகத்திற்கு இயக்க சார்பாக கிளார்க் மீராசாவுக்கு கடிதம் எழுதுவார்கள். அந்த கடிதத்தில் தன் சொந்த அலுவலையும் எப்போதாவது செய்ய சொல்லி எழுதிருப்பார்கள். இப்படி அனுப்பிய கடிதங்களை எண்ணி சென்னை வந்தவுடன் ஒவ்வொரு கடிதத்திற்கும் இரண்டு அணா கணக்கிட்டு தலைமையகத்தில் செலுத்தி விடுவார்கள். மீராசா செய்த பணிக்காக அவருக்கும் பணம் தருவார்கள்.

கே .டி எம், பூரணமான ஜனநாயகவாதி . லீகினுடைய பொதுக் குழு தலைவர் தேர்தலை அறிவிக்கும் போது தானும் போட்டியிடுவார். வழி மொழிய யாரும் இல்லாததால் காயிதே மில்லத் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இதற்கு கே .டி எம் சொல்லும் காரணம் மிக முக்கியமானது. “ ஜன நாயகம் என்பதில் ‘ஏக மனதாக’ என்பது கொஞ்ச காலத்தில் தனி மனித வழிபாடாக மாறிவிடும் . முஸ்லிம் லீகின் சிறு தொண்டன் கூட தலைவர் பதவிக்கு போட்டியிடலாம் என்பதை உறுதி படுத்தத்தான் நான் போட்டி இடுகிறேன்." என்பார்கள்.

சில வேளைகளில் செயற்குழுவில் காயிதே மில்லத்தின் கருத்துக்கு உடன்பட மாட்டார்கள். அந்தக் கருத்தில் லீக் தன்மை குறைந்து வேறொரு இயக்கத்தின் தன்மை இருப்பதாக முடிவு செய்து விடுவார்கள்.

செயற்குழுவில் இதனை பகிரங்கமாகப் பேசுவார்.

"காயிதே மில்லத்தின் இந்த கருத்தில் காங்கிரஸ் தன்மை கலந்து இருக்கிறது. காயிதே மில்லத் பழைய காங்கிரஸ்காரர் என்பதை மறந்து விடக் கூடாது. என்னைப் போன்ற முழு லீகனுக்கு இதில் சம்மதம் இல்லை" என பகிரங்கமாக போட்டு உடைத்து விடுவார்.

செயற்குழு முடிந்தவுடன் காயிதே மில்லதும் கே. .டி.எம் மும் ஒன்றாக சேர்ந்து குரோம்பேட்டை தயா மன்ஸிலுக்கு செல்வார்கள்.

கே.டி.எம். சென்னை வந்தால்,தயா மன்ஸிலில் தான் தங்குவார்கள் .

இந்த கடுமையான மலைக்குள் கனிவான ஈரம் கசிவதும் உண்டு .அதற்கு ஓர் அடையாளம் இன்று தலைமை நிலைய மேனேஜராக இருக்கும் மீராசா தான்.

கே.டி.எம். சென்னை வரும்போது எல்லாம் கிழிசல் தைத்த சட்டை ஒன்றை போட்டுக் கொண்டு அலுவலகத்திற்கு வருவார் மீராசா. கே.டி.எம் இதை பார்த்து விட்டு , " மீராசா நமக்கு கஷ்டம் இருக்கலாம் ,அதற்காக கிழிந்த சட்டை போட்டுக் கொண்டு அலுவலகம் வரக் கூடாது ஏனென்றால் நீ லீகின் ஊழியன் .நீ இப்படி அலுவலகம் வருவது லீகிற்கு அவமானம்.நீ புது சட்டை வாங்கிக் கொள்” என்று பணம் கொடுப்பார்.

மீராசா புது சட்டை அணிந்து கொள்வார். ஆனாலும் அடுத்த முறை கே.டி.எம் சென்னை வரும்பொழுதும் மீராசா கிழிந்த சட்டையில் இருப்பார். கே.டி.எம் புது சட்டைக்கு பணம் தருவார்கள்.மீராசா புது சட்டைக்கு மாறிக் கொள்வார்,

கே.டி.எம். கண்காணிப்பில் தன்னை தயார் படுத்தி கொண்டவர்தான் இஸ்மாயில் கனி அண்ணன். இவரும் ஒரு முக்கால் கே.டி.எம் தான்.

இந்த கே.டி.எம் நினைவாகத் தான் தலைமை நிலையத்திற்கு கே.டி.எம் மன்ஸில் என பெயர் பொறிக்கப் பட்டது.

குட்டி குறிப்பு :-


நெல்லை சந்திப்பில் ஒடிக் கொண்டிருக்கும் தாமிரபரணி ஆற்றை ஒட்டி மேற்கில் ஒரு பள்ளிவாசல். இது நெல்லை சந்திப்பு பள்ளிவாசல். பள்ளிவாசலுக்கு மேற்கே ஆறேழு கட்டிடங்கள் தாண்டி பழைய பஞ்சாயத்து தொடக்க பள்ளிக்கூடம். அதை ஒட்டி ஒரு சின்ன சந்து ,சந்தைத் தொட்டு ஒரு கட்டிடம். இந்தக் கட்டிடம் 1957 நெல்லை மாவட்ட முஸ்லிம் லீக் மாநாட்டிற்கு பின் வசூலான மீதிப் பணத்தை வைத்து ,முஸ்லிம் லீக் தனகென்று ஒரு கட்டிடத்தை சொந்தத்திற்கு வாங்கியது. இந்த இடத்திற்கு கைலாசபுரம் என்று பெயர்

மாநில துணைத் தலைவராகவும்,மாவட்ட தலைவராகவும் இருந்த எங்களின் தாதா மு.ந. அப்துர் ரஹ்மான் சாஹிப் லீகிற்காக வாங்கிய முதல் கட்டிடம்.

இதில் ஒரு பகுதி சுமாரான வீடாக இருந்தது. இந்தப் பகுதியை ஜமாதுல் உலமா ஆசிரியர் மௌலானா மௌலவி அபுல் ஹசன் ஷாதலி ஹஸ்ரத் அவர்கள் குடும்பத்திற்கு வாடகைக்கு விட்டிருந்தனர்.ஷாதலி ஹஸ்ரத் பக்கத்தில் இருந்த பள்ளிவாசல் இமாமாக பணி புரிந்தார்கள்.

தென்காசி ஹஸ்ரத் அப்துல் காதர்(ஹாஜியார் தாதா ) முஸல்மான் பத்திரிகையின் ஆசிரியர். அகமதியா இயக்கத்திற்கு அந்த காலத்தில் தமிழில் வெளிவந்த முதல் எதிர்ப்பு சுன்னத்துல் ஜமாஅத் பத்திரிகை இது தான்.

இவர்கள் மகன் தான் ஷாதலி ஹஸ்ரத் அவர்கள். இந்தக் கட்டிடம் தான் தமிழகத்தில் முஸ்லிம் லீக் தனக்கென்று வாங்கிய முதன்முதலான கட்டிடம்.

இரண்டாவதாக வேலூர் சுண்ணாம்புக் கார தெருவில் மாவட்ட முஸ்லிம் லீக் தனக்கென்று ஒரு கட்டிடத்தை விலைக்கு வாங்கி மாவட்ட தலைமையகம் ஆக்கியது.

மூன்றாவதாகத்தான் மாநில முஸ்லிம் லீக் தனக்கென்று சென்னை மரைக்காயர் லெப்பை தெருவில் எட்டாம் எண் கட்டிடத்தை விலைக்கு வாங்கி மாநில தலைமையகமாக அறிவித்து கே.டி.எம் அஹமது இப்ராகிம் மன்ஸில் என்று பெயர் சூட்டிக் கொண்டது.