Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

மயானமாக்கப்பட்ட உ.பி. மாநிலம் முசாபர்நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர் துடைப்போம் ! ---- பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன்

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் ஆகஸ்ட் கடைசி மற்றும் செப்டம்பர் முதல் வாரங்களில் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களில் 57 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பல நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந் துள்ளதாக அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

முசாபர்நகர் மற்றும் ஷாம்லி மாவட்டங்களில் உள்ள 94 கிராமங்களிலிருந்து 42 ஆயிரம் பேர் சொத்து சுகங்களையெல்லாம் விட்டு விட்டு இடம் பெயர்ந்துள்ளதாக அம் மாநில அரசே உச்சநீதி மன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த எண்ணிக்கைகள் பல மடங்கு அதிகம் என்பதே உண்மை.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைவரும், மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சருமான மாண்புமிகு இ.அஹமது சாஹிப் தலைமையிலான குழுவினர் இம் மாதம் 16, 17 தேதிகளில் கலவரம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு தாவ்லி, காண்ட்லா, ஷாம்லி, மத்ரஸா, ரஷிதியா உள்ளிட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து, ஆறுதல் கூறி ஆதரவு தெரிவித்து தைரியமூட்டியதோடு அம் மாவட்டங்களின் மாஜிஸ்திரேட்டுகளையும் நேரில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர். செப்டம்பர் 18ம் தேதி உ.பி. மாநில முதல்வர் அகிலேஷ் யாதவை சந்தித்து முஸ்லிம்களின் பாதிப்பு குறித்து முறையிட்டு உரிய நிவாரணம் வழங்கவும், சொந்த இடங்கள் திரும்பவும், பாதுகாப்பு அளிக்கவும், காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கவும், கலவரம் குறித்து விசாரணை நடத்தி உடனடி நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் குழுவினர் மனு அளித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து தலைநகர் லக்னோவில் செய்தியாளர் களிடம் பேசிய இ.அஹமது சாஹிப், """"50 முகாம்களில் 55 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. முசாபர்நகர் மாவட்டம் மயான பூமியாக மாறிவிட்டது. கலவரத்தில் உறவு களையும், உடமைகளையும் இழந்தவர்கள் நிர்க்கதியாக தவிக் கின்றனர். அவர்களுக்கு அரசு அறிவித்த எந்த உதவியும் இது வரை போய் சேரவில்லை"" என பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் சொந்த இருப்பிடங்களுக்கு திரும்பி நிம்மதியுடன் வாழ மத்திய -மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் வலியுறுத்தி வருகிறோம்.

அதேசமயம் இப்போதைய நம்முடைய கடமை வகுப்புவாதிகளின் கோரத் தாண்டவத்திற்கு இரையான முசாபர் நகர் மாவட்ட முஸ்லிம்களின் துயர் துடைக்க உடனடி முயற்சிகள் மேற்கொள்வதுதான்.

கடந்த ஆண்டு அஸ்ஸாம் மாநிலத்தில் போடோ தீவிரவாதிகளால் முஸ்லிம்கள் மிகப் பெரும் பாதிப்புகளுக்கு ஆளான போது, லட்சக்கணக்கில் தங்கியிருந்த அகதி முகாம்களுக்கு நேரில் சென்று அடிப்படை வசதிகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீகினர் செய்து கொடுத்ததோடு, அஸ்ஸாம் முஸ்லிம்கள் பின்தங்கி இருப்பதற்கு கல்வி அறிவு பெற இயலாமல் போனதே காரணம் என அறிந்து தாருல் ஹுதா பல்கலைக்கழகத்துடன் இணைந்து நிரந்தர கல்விக்கு பெரும் பங்களிப்பை செய்துதது.

அதே போன்று உத்திரபிரதேச கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து கொடுக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் களம் இறங்கியுள்ளது. இப்பணிக்கு தாராளமாக வாரி வழங்க வேண்டியது சமுதாயத்தின் கடமையாகும்.

இதற்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீகினர் முற்கூட்டியே அறிவிப்பு செய்து பள்ளிவாசல், மஹல்லா ஜமாஅத்துகள், மற்றும் வீடு வீடாக சென்று சிறுகச் சிறுக நிதி திரட்டி கீழ்காணும் முகவரிக்கு உடனடியாக அனுப்பி உதவிட வேண்டுகிறோம்.

இந்நிதியை, IUML RELIEF FUND State Bank of India Current Account No: 32476975149 Thousand Lights Branch Code No:3207 Chennai என்ற வங்கி கணக்கிலோ,

காயிதே மில்லத் மன்ஸில், 36, மரைக்காயர் லெப்பைத் தெரு, சென்னை -600 001 என்ற முகவரிக்கும் காசோலை/வரைவோலை/பணவிடையாகவோ அனுப்பி தர வேண்டுகிறோம்.

கலவரத்தில் பாதிக்கப்பட்டோரின் கண்ணீர் துடைக்க முன் வருவோம்; காவலன் அல்லாஹ்வின் பெரும் கருணை பெறுவோம்.

மாணவர்களுக்கு "ஸ்மார்ட் கார்டு" இறுதி கட்டத்தில் பணிகள்

 பள்ளி மாணவர்களுக்கு நிரந்தர அடையாள அட்டை வழங்குவதற்கான, இறுதி கட்ட பணியை விரைவில் முடிக்க, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு, தனியார் பள்ளிகளில் கடந்த ஆண்டு, "கல்வி தகவல் மேலாண்மை" முறையில், மாணவர்களின் விபரம் பதிவு செய்யப்பட்டது. "ஆன் லைன்" மூலம் பெயர், முகவரி உள்ளிட்ட 14 தகவல்கள் பதிவு செய்யப்பட்டன.

இதன்படி, 1 ம் வகுப்பில் இருந்து பிளஸ் 2 வரை, மாணவர்களுக்கு, நிரந்தர அடையாள எண் வழங்கப்படும். வேறு பள்ளிக்கு மாறினாலும், அடையாள எண்ணை காட்டி, தகவல்களை உறுதி செய்யலாம். இதற்காக, பதிவு செய்யப்பட்ட விபரங்களை, மீண்டும் சரி பார்த்து இறுதி செய்ய, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சேலம் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில், இப்பணிகள் நடக்கின்றன.

டி.டி., மருத்துவ கல்லூரி மாணவர்களை அரசுக் கல்லூரியில் சேர்க்க முடியாது

"டி.டி., மருத்துவக் கல்லூரி மாணவர்கள், அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்த்துக் கொள்ளும் அளவுக்கு பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் பெறவில்லை" என, மருத்துவத் துறை கூறியுள்ளது.

இதுகுறித்து, மருத்துவத் துறை துணை இயக்குனர், முடிசூட பெருமாள் கூறியதாவது: சர்ச்சைக்குரிய டி.டி., மருத்துவக் கல்லூரியில், 2010 - 11ல் சேர்க்கப்பட்ட மாணவர்கள், பிளஸ் 2 தேர்வில் போதிய மதிப்பெண் பெறவில்லை. மருத்துவக் கல்வியில் சேர 60 சதவீத மதிப்பெண் தேவை.

ஆனால், 2010 - 11ல் டி.டி., மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்ட 150 பேரில் 72 பேர் 50 சதவீதத்துக்கும் குறைவான மதிப்பெண் பெற்றுள்ளனர். 48, 49, 49.5 என்ற சதவீதத்தில் தான் இவர்களது மதிப்பெண் உள்ளது. மீதமுள்ள 78 பேரின் மதிப்பெண், அரசு மருத்துவக் கல்லூரி ரேங்க் பட்டியிலில் கடைசி இடத்தில் இருக்கிறது.

இந்நிலையில், இவர்களை அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்த்துக் கொள்ள முடியாது. இவர்களை, அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்த்தால், இவர்களுக்கு மேல் மதிப்பெண் பெற்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காதவர்களுக்கு அரசு பதில் சொல்ல வேண்டும்.

எனவே, டி.டி., மருத்துவக் கல்லூரி மாணவர்கள், வேறு படிப்புகளை தேர்வு கொள்வதே, அவர்களது எதிர்காலத்துக்கு நல்லது. இவ்வாறு, முடிசூட பெருமாள் கூறினார்.

கோவை வேளாண் பல்கலை மாணவர்களின் கண்டுபிடிப்புகள் ருவாண்டா நாட்டில் அறிமுகம்

தமிழ்நாடு வேளாண் பல்கலை கண்டுபிடிப்பான தானிய சேமிப்பில் ஏற்படும் பூச்சிகளை அகற்றும் உபகரணங்கள் ருவாண்டா நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

தானிய சேமிப்பின்போது ஏற்படும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, தமிழ்நாடு வேளாண் பல்கலையில் புதிய தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், குழாய் மற்றும் கூம்பு வடிவ பொறி, பயறு வண்டுகளை பிடிக்கும் பொறி, கிண்ணவடிவ பொறி, பூச்சிகளை தானாகவே அகற்றும் கருவி, பூச்சிகளின் முட்டைகளை அகற்றும் பொறி என பலவகை கருவிகள் உள்ளன.

சமீபத்தில் ருவாண்டா நாட்டிலிருந்து தமிழ்நாடு வேளாண் பல்கலையின் பூச்சியியல் துறை பட்டமேற்படிப்பு முடித்த மாணவர் அதனேஸ் தானிய சேமிப்பில் ஏற்படும் பூச்சிகளை, உபகரணங்கள் மற்றும் பொறிகளை கொண்டு கட்டுப்படுத்த ஆய்வு மேற்கொண்டார். படித்து முடித்து சொந்த நாட்டுக்கு செல்லும்போது தமிழ்நாடு வேளாண் பல்கலை தானிய சேமிப்பில் ஏற்படும் பூச்சிகளை கண்டறிய உதவும் உபகரண பெட்டிகளை விலைக்கு வாங்கிச் சென்றார்.

ருவாண்டா நாட்டு அரசின் வேளாண் துறையில் பணிபுரியும் இவர், 25 விவசாயிகளுக்கு இக்கருவிகள் குறித்து பயிற்சியளித்தார்; அவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவதாக தெரிவித்துள்ளார். பல்கலை கண்டுபிடிப்புகள் தொடர்பான விவரங்களை அவர்களுக்கு அளித்து பூச்சிகளை பாதுகாக்க அதனேஸ் பயிற்சியளித்து வருகிறார்.