Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 14 ஆகஸ்ட், 2013

மீண்டும் மலர்கிறது குர்ஆனியப் புரட்சி! - பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன்

மாண்பு தரும் நோன்பு நிறைவடைந்து, ஆறு நோன்பும் முடிவடைகிறது.

நோன்பு மாதமாகிய ரமளான் முழுவதிலும் பெற்ற மன அமைதியும், நிறைவும், உடல் சுகமும், உள்ளத்தில் பொங்கிய இன்பமும் அடுத்த ரமளான் வரும் காலந்தொட்டு தொடர வேண்டும் என்று ஆசிப்போம்.

தமிழகத்தில் பழக்கத்தில் உள்ள நோன்புக் கஞ்சி, இப்பொதெல்லாம் அரபு நாடுகளிலும், கடல் கடந்த பூமிகளிலும் சிலாகித்துப் பேசப்படுகிறது. நோன்பு காலத்து உணவில் மிகமிகச் சிறந்ததாக நோன்புக் கஞ்சி பெயர் பெற்றிருக்கிறது.

ஒவ்வொரு மஸ்ஜிதிலும் நோன்புக் கஞ்சி காய்ச்சப்படுவதும், மாலை நான்கு மணி அளவிலிருந்து அதை நோன்பாளிகளின் வீடுகளுக்கும், பிற சமுதாய மக்கள் கேட்டு வரும் போது அவர்களுக்கும் விநியோகம் செய்யப்படுவதும் உலகத்தில் வேறெங்கும் காணாத காட்சி என்றால் அது மிகையல்ல.

நோன்புக் கஞ்சிக்கு அரசாங்கமே சலுகை விலையில் குருணை அரிசி வழங்குவது தமிழகத்தில்தான். இதுபோன்ற தொரு நடைமுறை இந்தியாவில் வேறெங்கும் இருப்பதாகவோ, உலகில் எந்தவொரு நாட்டிலும் உள்ளதாகவோ, நாமறிந்தவரை தெரியவில்லை. இப்படியொரு நல்ல பாரம்பரியத்தைத் தமிழகத்தில் தோற்றுவித்தது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தான் என்பதையும், அதை ஆரம்பி வைத்தது தி.மு.க. ஆட்சிதான் என்பதையும் நினைத்துப் பார்க்கும் போது நமக்கு ஒரு பெருமை தான்.

கடந்த 11-ஆம் தேதி தஞ்சை நகரில் அதன் மாவட்டத் தலைவர் பி.எஸ். ஹமீது ஹாஜியார் குடும்பத் திருமண விழாவிற்குச் சென்றிருந்தோம். திருச்சி புறநகர் மாவட்டத் தலைவர் வி.எம். பாரூக், மாவட்டச் செயலாளர் கே.எம்.கே. ஹபீபுர் ரஹ்மான், மாநில துணைச் செயலாளர் ஜி.எம். ஹாஷிம், தஞ்சை மாவட்டச் செயலாளர் லயன் வழுத்தூர் பஷீர் அஹமது, மாவட்ட துணைச் செயலாளர் ஜெய்னுல் ஆபிதீன் மற்றும் பல சகோதரர்கள் தஞ்சாவூர் ஆற்றங்கரை பள்ளிவாசலுக்கு சென்றிருந்தோம்.

மஸ்ஜிது நஃபில் தொழுதுவிட்டு வெளியே வந்தபோது நோன்புக் கஞ்சி தேக்ஷா அடுப்பில் ஏற்றப்பட்டிருந்தது. மஸ்ஜிது மோதினாரும், நோன்புக்கஞ்சி காய்ச்சுபவரும் அங்கிருந்தனர். ரமளான் நோன்பு முடிந்து பெருநாளும் கொண்டாடி முடிந்து விட்டதே என்று கூறி, தேக்ஷாவில் என்ன வேகிறது? என்று கேட்டோம்.

மோதினார் கூறினார்: ஆறு நோன்பு திறப்பாளிகள் சற்றொப்ப 60/ 70 பேர் வருவார்கள். அவர்களுக்கான நோன்புக்கஞ்சி என்றார். ஆறு நோன்பு நோற்பது என்பதே ஒரு காலத்தில் அபூர்வமாக இருந்தது. வயது முதிர்ந்தவர்கள் ரமளான் நோன்புடன் ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்பார்கள். குறிப்பாக, பெண்கள் இதில் அதிகம் நோன்பு இருப்பார்கள்.

ஷவ்வால் மாதத்திற்கு முஸ்லிம் பெண்கள் சூட்டியுள்ள அழகிய பெயர் `ஆறு நோன்புப்பிறை’ என்பதுதானே. ஆறு நோன்பு திறப்பதற்கு மஸ்ஜிதில் நோன்புக் கஞ்சி ஏற்பாடு என்பது இப்பொழுதுதான் தெரிந்தோம். வேறு எங்கெங்கெல்லாம் இப் பழக்கம் இருக்கிறதோ தெரியவில்லை.

இந்த ஆண்டு ரமளானில் முக்கியமான நிகழ்வு எங்களுடைய கவனத்தையும் ஈர்த்தது. அதுதான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சென்னை எழும்பூர் இம்பீரியல் ஹோட்டலில் நடந்த இஃப்தார். அதற்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர் களும், தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும் வந்திருந்தனர். இஃப்தார் நிகழ்ச்சிக்கு பிற அரசியல் கட்சியினரை - குறிப்பாக தி.மு.க. தலைவரை அழைக்கும் மரபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தான் முதன் முதலில் துவக்கியது. அது சில ஆண்டுகளாக தொடராமல் இருந்தது. இந்த ஆண்டு அந்த மரபை புதுப்பித்தோம். டாக்டர் கலைஞரும் வந்தார் - பங்கேற்றார் - பெருமகிழ்ச்சி கொண்டார். இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வரலாறு சாதனை - அது செய்துள்ள தியாகம் - சமுதாயத்திற்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெற்றுக் கொடுத்த நன்மைகள் பற்றியெல்லாம் விரிவாக பேசி இறுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பற்றி முஸ்லிம் சமுதாயம் ஆய்வுசெய்து ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

கலைஞர் - தளபதி பங்கேற்ற இஃப்தார் நிகழ்ச்சி தமிழக அரசியலில் பல அதிர்வலைகளை உருவாக்கி விட்டது. எல்லா அரசியல் கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு இஃப்தார் நிகழ்ச்சிகளை நடத்தும் நிலை வந்தது. எது நடந்தாலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி - அதில் கலைஞர் பங்கேற்று ஆற்றிய உரை எல்லாவற்றையும் மிஞ்சி நிற்கும் நிகழ்வாகவே அமைந்து விட்டது. சூரிய ஒளிக்கு முன் அகல் விளக்குகளின் வெளிச்சம் எடுபடாது என்பது உண்மைதானே.

வந்துபோன ரமளான் மாதத்தில் பல புதிய அம்சங்கள் ஆங்காங்கே தோன்றியிருந்தன. மஸ்ஜிதுகளில் தராவீஹ் தொழுகைக்குப் பிறகு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலத்தில் மார்க்க அறிஞர்களின் சிறப்பான சொற்பொழிவுகள் நிகழ்ந்துள் ளன.

சென்னை விருதுநகர் ஹோட்டலில் ஸஹர் உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு 30 நாட்களும் பல்லாயிரக்கணக்கானவர் களுக்கு விலையில்லா - விலை மதிப்புள்ள உணவு வழங்கப்பட் டுள்ளது. அதன் முதல்வர் இப்றாஹீம் அவர்கள் இறைப் பொருத் தம் வேண்டி பல காலமாக இதனை செய்து வருகிறார். அதைப் பின்பற்றி இந்த ஆண்டு நோன்பின் கடைசி பத்து நாட்கள் பல பள்ளிவாசல்களிலும், திருமண மண்டபங்களிலும் இலவச ஸஹர் ஏற்பாடு நடந்துள்ளது.

சென்னையில் கட்டடத் தொழிலில் ஈடுபட்டு உழைத்து வரும் உ.பி., அஸ்ஸாம், பீகார் மாநிலங்களைச் சேர்ந்த வாலிப முஸ்லிம்கள் இந்த வசதியை அதிகம் பயன்படுத்தியுள்ளனர்.

வருங்காலங்களில் மஸ்ஜிதுகளில் நோன்பு திறப்பதற்கு எப்படி எவ்வித கட்டணமும் இல்லாமல் ஏற்பாடு செய்யப்படுகிறதோ அதைப் போன்று ஸஹர் உணவுக்கும் ஏற்பாடு செய்வது கட்டாய மாகலாம்.

முன்பெல்லாம் ஊரில் பல மஸ்ஜிதுகள் இருந்தாலும் ஏதோ ஒரு பள்ளிவாசலில் ஓரிருவர்தான் `இஃதிகாப்’ என்னும் அந்த கடைசி பத்து நாள் துறவு வாழ்வை மேற்கொள்வர். ஊருக்கு ஒருவராவது இருக்க வேண்டும் என்று உணர்ந்து அதை நிறைவேற்றி வந்தனர். ஆனால், இப்பொழுது பள்ளிகள் தோறும் இஃதிகாப் இருப்போர் பெருகியிருக்கின்றனர்.

எல்லா பள்ளிவாசல்களிலும் திரைகள் அலங்கரித்தன. அப்படி யிருந்தவர்கள் பலர் இளைஞர்களாக இருந்தனர் என்பது குறிப் பிடத்தக்க செய்தியாகும்.

சென்னையில் குர்ஆன் பாடப் போதனைகள் பல மஸ்ஜிது களில் நடக்கின்றன. அரபி மொழியை அறிந்து கொள்ளும் வகையிலும், குர்ஆன் வசனங்களை ஓதியும் படித்தும், அவற்றின் அருத்தத்தைத் தெரிந்து கொள்ளும் வகையிலும் இந்த குர்ஆன் பாட போதனை நடக்கிறது. குர்ஆன் ஷரீபை ஓதும்போதே அதனுடைய பொருளையும் புரிந்து கொள்ளும் நிலை ஏற்பட்டால் அதைவிட ஓர் அற்புத வாழ்க்கை வேறு இருக்க முடியாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆன் ஷரீப் `வஹி’ மூலம் வந்தது. அதனை ஸஹாபா தோழர்களுக்கு ஓதி காட்டினார்கள். நபி தோழர்கள் தங்கள் தாய் மொழியான அரபியில் வந்த குர்ஆனை ஓதியும், படித்தும் அதன் பொருளை தெரிந்து கொள்ளும் நிலைமை ஏற்பட்டதால் அவர்களின் வாழ்வில் மிகப் பெரும் மாற்றம் - புரட்சி - எழுச்சி ஏற்பட்டது.

உலக வரலாற்றில் திருக்குர்ஆன் செய்த புரட்சியைப் போல் வேறு எந்த காலத்திலும், வேறு எந்த புரட்சியும் நடக்கவில்லை என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

அந்த குர்ஆனிய புரட்சி இடைப்பட்ட காலத்தில் தொடராமல் ஒரு தொய்வு ஏற்பட்டது. எதனால் என்றால், குர்ஆனை அருத்தம் தெரிந்து ஒதாமலும், உணராமலும் இருந்து விட்டதுதான்.

இப்போது அந்த மதீனா காலத்து வரலாறு மலரத் துவங்கியி ருக்கிறது. குர்ஆனியப் புரட்சி மீண்டும் மக்கள் மத்தியில் ஏற்படும் காலம் கனிந்து வருகிறது என்று சொல்ல வேண்டும்.

சுருங்கச் சொன்னால், சென்றுள்ள ரமளான் மாதம் - அதில் நோற்ற நோன்பு - அதன் சீரிய அம்சங்கள் யாவும் புதியதொரு புரட்சிக்கு வித்தாகி இருக்கிறது.

குர்ஆனியப் புரட்சி தொடர்ந்தால் குவலயத்தில் அமைதி - சாந்தி - சமாதானம் - நல்லிணக்கம் - நல்வாழ்வு நிறையும்! போர் இல்லாத உலகப் புரட்சி தோன்றும் என்பதில் ஐயம் ஏது?