Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 4 பிப்ரவரி, 2013

தமிழகத்தில் 50,000 "போலி' டாக்டர்கள்: IMA தேசிய தலைவர் அதிர்ச்சி தகவல்


"தமிழகத்தில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி டாக்டர்கள், மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதால், உயிரிழப்புகள், நோய் தாக்கம் கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது,'' என, அகில இந்திய மருத்துவ சங்க, தேசிய தலைவர் டாக்டர் விஜயகுமார் தெரிவித்தார்.

சேலம் மாவட்டம், ஆத்தூர், இந்திய மருத்துவ சங்க கிளை சார்பில், புதிய நிர்வாகிகள் தேர்வு, பெண் மருத்துவர்கள் சங்க செயல்விளக்க கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு முன், அகில இந்திய மருத்துவ சங்க, தேசிய தலைவர் டாக்டர் விஜயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த, மூன்றரை ஆண்டுக்கு முன், இந்திய மருத்துவ கழகத்தை, மத்திய அரசு கலைத்து விட்டு, ஏழு பேர் கொண்ட, தற்காலிக குழு அமைத்தது. இக்குழு, மத்திய அரசின் கைப்பாவையாக இருப்பதால், இந்திய மருத்துவ கழகத்தை, மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தி, பொதுநல வழக்கு தொடர உள்ளோம்.

மக்கள் நல விரோத கொள்கைகளை செயல்படுத்தி வரும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத், ராஜினாமா செய்ய செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கை காரணமாக, இறப்பு மற்றும் பிறப்பு சதவீதம் குறைந்து வருகிறது. டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்களால், டில்லி, சென்னை மற்றும் தென் தமிழக பகுதிகளில், அதிகளவில் பாதிப்பும், உயிர் பலியும் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், 50 ஆயிரம், "போலி' டாக்டர்கள் உள்ளனர், இவர்கள், மருத்துவ சிகிச்சை அளிப்பதால், உயிர் பலி, நோய் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு, தமிழகத்தில் மட்டும், 2,000 போலி டாக்டர்களை, போலீஸார் கைது செய்தனர். இவர்கள், நீதிமன்றத்தில், 500, 1,000 ரூபாய், அபராதம் கட்டி விட்டு, மீண்டும், மருத்துவ சிகிச்சை அளிக்கின்றனர்.

போலி டாக்டர்களை கட்டுப்படுத்த, மத்திய, மாநில அரசுகள், "போலி மருத்துவர்கள் ஒழிப்பு சட்டம்' கொண்டுவர வேண்டும். கிராமப்புறங்களில், டாக்டர்கள் பணி நியமனம் திட்டத்தை வரவேற்கிறோம். உலக சுகாதார நிறுவனத்துடன், அகில இந்திய மருத்துவ சங்கம் இணைந்து, காசநோய் ஒழிப்பு, குழந்தைகள் மற்றும் தாய் நலம், வயிற்றுப்போக்கு, புற்று நோய் தடுப்பு என, பல்வேறு மருத்துவ பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மருத்துவ சுகாதார பணிகளில், தமிழகம் முதலிடமும், கேரளா இரண்டாம் இடத்திலும் உள்ளது. கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில், நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டு, தனியார் மருத்துவமனைக்கு நிகராக சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

கீழ்நீராறு அணையிலிருந்து கேரளாவுக்கு தண்ணீர் திறப்பு

கீழ்நீராறு அணையிலிருந்து கேரளாவுக்கு கடந்த நான்கு மாதங்களில் ஒப்பந்தப்படி 764.16 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

பரம்பிக்குளம் பாசனத்திட்டத்தின் கீழ் வால்பாறை மலைப்பகுதியில் சோலையாறு அணை, மேல்நீராறு அணை,கீழ்நீராறு அணை, அப்பர்õழியாறு மற்றும் காடம்பாறை ஆகிய ஐந்து அணைகள் கட்டப்பட்டுள்ளன.

தமிழக கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள வால்பாறையில் கீழ் நீராறு அணையிலிருந்து, கேரளாவுக்கு ஆண்டு தோறும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் பிப்.1ம் தேதி வரை தண்ணீர் திறக்க வேண்டும் என்று அணை கட்டும் போது இருமாநில அதிகாரிகள் முன்னிலையில் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.இதனையடுத்து கீழ்நீராறு அணையிலிருந்து ஒரு மதகு வழியாக கேரளாவுக்கு 764.16 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

குற்றாலத்தில் இருந்து வறட்சியால் இடம் பெயறும் குரங்குகள்


தமிழகத்தில் இந்த ஆண்டு கடுமையான வறட்சி ஏற்பட்டு வருகிறது. டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி பெரும்பாலான மாவட்டங்களில் பிசான சாகுபடி பெருமளவில் பாதிக்கப்பட்டு விட்ட நிலையில் நடப்பாண்டு நெல் போதுமான விளைச்சல் ஏற்படாத சூழ்நிலை நிலவிவருகிறது. நட்ட பயிரை கூட காப்பாற்ற முடியாமல் தற்போது விவசாயிகள் பெரும் அவதிப்பட்டு வரும் நிலையில் தொடரும் வறட்சியால் சுற்றுலா ஸ்தலத்திற்கு பிரசித்திபெற்ற குற்றாலமும் பெரும் பாதிப்பை சந்திக்க கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக குற்றாலத்தில் போதுமான அளவில் மழையும், சாரலும் இல்லாததால் சீசன் கால தாமதமாக துவங்கி, முன் கூட்டியே முடிந்து விடுகிறது. குற்றால அருவிகளில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு காரணமாக சிற்றாற்றில் வரக்கூடிய தண்ணீர் வரத்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குளங்களுக்கு கால்வாய்கள் மூலம் தண்ணீர் சென்று வரக்கூடிய நிலையும் இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக குற்றாலத்தில் போதுமான மழையில்லாத காரணத்தினால் சிற்றாற்று கால்வாய்களுக்கு கூட தண்ணீர் போதுமான அளவில் வருவதில்லை.

இதனால் கடந்த சில வருடங்களாக சிற்றாற்று பாசன விவசாயிகளுக்கு சாகுபடியை முறையாக மேற்கொள்ள முடியாத நிலை தான் இருந்து வருகிறது.இந்நிலையில் தொடர்ந்து ஏற்பட்டு வந்த வறட்சியின் காரணமாக குற்றாலத்தில் அங்குமிங்கும் துள்ளிக் குதித்து நடமாடும் குரங்குகளுக்கும் தற்போது பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.காட்டுப் பகுதிகளிலும் தண்ணீர் இல்லாத நிலையில், குற்றாலத்தில் திரியும் குரங்குகளின் நிலை பரிதாபமாக காணப்படுகிறது.

பாறையையொட்டி கசிந்து விழும் அளவிற்கு மெயினருவியில் தண்ணீர் விழுகிறது. ஐந்தருவியிலோ பரவலாக தண்ணீர் விழும் நிலை கூட காணப்படவில்லை.இதன் காரணமாக காட்டுப் பகுதிகளில் உள்ள வன விலங்குகளின் நிலை பரிதாபமாக உள்ளது. குற்றாலத்தில் உள்ள குரங்குகள் தற்போது சுற்று வட்டாரத்தை சேர்ந்த பகுதிகளுக்கு சென்று வருவதுடன் அப்பகுதிகளில் விவசாய தோட்டங்களில் புகுந்து சேதப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.தொடரும் வறட்சி காரணமாக குற்றாலத்தில் இருந்து குரங்குகள் வெளியிடங்களுக்கு சென்று வரும் நிலையில் அதற்கு தேவையான குடிநீர் மற்றும் உணவுகளை வழங்கிட தமிழக அரசு தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் வன ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்ப்பார்ப்பாக அமைந்துள்ளது.

மாணவர்களுக்கு எட்டாத அரசின் இலவசங்கள்


அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, கல்வி ஆண்டு முடியும் தறுவாயில் கூட, புத்தகப் பை உட்பட, இலவச பொருட்கள் வழங்கப்படவில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

அரசு பள்ளி மாணவர்களிடம் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், பஸ் பாஸ், சீருடை, நோட்டுப் புத்தகம், காலணி உட்பட, 16 இலவச பொருட்கள் வழங்கப்படும் என, அரசு அறிவித்தது. ஆனால், 13 பொருட்களை மட்டுமே வழங்கி உள்ளனர்.

கல்வி ஆண்டு முடிய உள்ள நிலையில், ஆறு முதல், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, இலவச வடிவியல் பெட்டி - ஜியோமெட்ரி பாக்ஸ், ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை, மாணவர்களுக்கு காலணி, ஒன்று முதல், பிளஸ் 2 மாணவர்களுக்கு புத்தகப் பை வழங்கப்படவில்லை.

கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "கல்வி ஆண்டு முடிவதற்குள், எஞ்சிய இலவச பொருட்களை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அரசு உத்தரவுக்கு பின், விடுமுறை நாட்களில் கூட, மாணவர்களை அழைத்து கொடுத்து விடுவோம்" என்றார்.