Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 21 ஜூன், 2013

என்னை கொலை செய்ய கம்யூனிஸ்டுகள் சதி : மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள, ஊராட்சி தேர்தலையொட்டி, வடக்கு, 24 பர்கானா மாவட்டத்தில் பிரசாரம் செய்த மம்தா பானர்ஜி, கூட்டத்தில் பேசியதாவது:கடந்த சில தினங்களுக்கு முன், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பலியான பெண்ணுக்கு ஆதரவு தெரிவிக்க சென்றிருந்தேன். அப்போது, என்னை, மாவோயிஸ்டுகளின் உதவியுடன் அங்கேயே தீர்த்துக் கட்ட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திட்டமிட்டிருந்தனர். இது, எனக்கு உளவுப்பிரிவினர் அளித்த தகவல். இதற்கெல்லாம் நான் பயந்துவிட மாட்டேன். என்னை அழித்துவிட்டு ஆட்சிக்கு வர வேண்டும் என்ற, கம்யூனிஸ்டுகளின் கனவு ஒருபோதும் பலிக்காது.

கம்யூனிஸ்டுகள் மட்டுமின்றி, காங்கிரஸ், பாரதிய ஜனதா போன்ற கட்சிகளும் ஒன்று சேர்ந்து, என் அரசக்கு எதிரான வேலையில் ஈடுபட்டு வருகின்றன. என்னுடன், இந்த மண்ணின் மக்கள் இருக்கும் வரை, என் தலைமுடியைக் கூட யாராலும் தொட முடியாது.

நான் எந்த தவறும் செய்ததில்லை. சாவதற்கு நான் பயப்படவில்லை. இங்கு நடக்கும் கற்பழிப்புகள், கொலைகள் போன்றவற்றிலிருந்து ஆதாயம் தேடும் அரசியல் கட்சிகளிடம், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு, மம்தா பானர்ஜி கூறினார்.

பார்வையற்றோருக்கான சிறப்பு பள்ளிகளை மூட முயற்சியா?

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, பல்வேறு மாவட்டங்களில் உள்ள, 10க்கும் மேற்பட்ட சிறப்பு பள்ளிகளை மூடுவதற்கான, ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருவதாக, பல்வேறு மாற்றுத் திறனாளிகள் நல அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன.

மாற்றுத் திறனாளி நலத்துறை மூலம் தமிழகம் முழுவதும் பல்வேறு பிரிவுகளில், சிறப்பு வகுப்புகள் நடந்து வருகின்றன. குறிப்பாக, 20 பார்வையற்றோர் மற்றும் காதுகேளாதோர் குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், 10க்கும் மேற்பட்ட சிறப்பு பள்ளிகளை மூடுவதற்கான, ஆயத்த பணிகளில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக, சென்னை, பூந்தமல்லியில் உள்ள பார்வையற்றோர் மேல்நிலை பள்ளியில், நடந்த கலந்தாய்வில், பார்வையற்ற மாணவர்களின் பார்வைத் திறனை பரிசோதிக்கவும், அதன் அடிப்படையில் முழுமையாக பார்வையற்றவர்களைத் தவிர, மிக மிகக் குறைவாக பார்வை தெரிந்தால் கூட சேர்க்கை மறுக்க, பல்வேறு முயற்சிகள் நடந்து வருவதாகவும், குற்றம்சாட்டி வருகின்றன.

இதுகுறித்து, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் உரிமை பாதுகாப்போர் நலச் சங்க செயலர், நம்புராஜன் கூறியதாவது: சென்னை, பூந்தமல்லியில், பார்வையற்றோருக்கு, புக் பைண்டிங், டிரில்லிங், பைலிங் போன்ற பயிற்சிகளும், காதுகேளாதோருக்கு, பிட்டர், டர்னர், வெல்டிங் உள்ளிட்ட, ஐ.டி.ஐ., பயிற்சிகளும், உடல் ஊனமுற்றோருக்கு பல விதமான பணிகளை அளிக்க, மாற்றுத் திறனாளி நலத்துறை, பார்வையற்றோர் தொழிற்பயிற்சி மையத்தை நடத்தி வருகிறது.

இதில், புக் பைண்டிங் பயிற்சியைத் தவிர மற்ற பயிற்சிகளை ஏற்கனவே, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை நிறுத்தி விட்டது. இந்த ஆண்டு இதற்கான பயிற்சியையும் நிறுத்தி, திட்டத்தையே முடக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே, தமிழகத்தில் உள்ள, மொத்த மாற்றுத் திறனாளி குழந்தைகளின் விகிதாசார அடிப்படையில் பார்த்தால், தற்போது இயக்கப்படும் சிறப்புப் பள்ளிகளின் எண்ணிக்கை மிகக் குறைவானதாகும்.

குறிப்பாக, கிராமப்புற, எளிய, அறியாமையில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு கல்வி கிடைக்க, மாற்றுத் திறனாளி நலத்துறை எந்த உருப்படியான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், இருக்கும் ஒரு சில பள்ளிகளையும் மூட முயற்சிக்கும் பட்சத்தில், அது மாற்றுத் திறனாளிகளுக்கு எதிராகவே அமையும். எனவே, இப்பிரச்னையில் முதல்வர் உடனடியாக தலையிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர்வதற்கு மாணவர்கள் தயக்கம் :20 ஆயிரம் இடங்களுக்கு 4,500 விண்ணப்பம்


இரண்டு ஆண்டு ஆசிரியர் பயிற்சி பட்டய படிப்பில், அரசு ஒதுக்கீட்டின் கீழ், 20 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில், வெறும், 4,500 பேர் மட்டும், விண்ணப்பித்துள்ளனர்.

தமிழகத்தில், 550 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல்படுகின்றன. அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், அரசு ஒதுக்கீட்டின் கீழ், 20 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்த இடங்கள், கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.

நடப்பு கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கைக்காக, மே, 27 முதல், கடந்த, 12ம் தேதி வரை, மாநிலம் முழுவதும், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. கடைசி நாள் வரை, 5,000 விண்ணப்பங்கள் விற்பனை ஆனபோதும், 4,500 விண்ணப்பங்கள் மட்டுமே, பூர்த்தி செய்த நிலையில், திரும்ப பெறப்பட்டன.

விண்ணப்பித்த அனைவருக்கும், இடம் உறுதி என்ற நிலை உள்ளது. எனினும், 4,500 பேரும், கலந்தாய்வுக்கு வருவார்களா என்பது தான், ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் துறைக்கு, சந்தேகமாக உள்ளது. 10 சதவீதம் முதல், 20 சதவீதம் வரை, "ஆப்சென்ட்&' ஆவதற்கு வாய்ப்பு உள்ளது.

எனவே, 3,000 மாணவர்கள், ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்தாலே, பெரிய சாதனையாக இருக்கும் என, துறை வட்டாரங்கள் கருதுகின்றன. குறைந்த மாணவர்கள் விண்ணப்பித்திருப்பதால், அனைவருக்கும், "ஆன்-லைன்" மூலம் கலந்தாய்வை நடத்த, இயக்குனரகம் திட்டமிட்டுள்ளது.

விண்ணப்பித்த மாணவ, மாணவியரை, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு வரவழைத்து, கலந்தாய்வை நடத்தி, சேர்க்கை உத்தரவை வழங்க, இயக்குனரகம் முடிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு வரை, திருச்சியில், கலந்தாய்வு நடந்தது. அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களும், திருச்சிக்கு சென்று வந்தனர். தற்போது, முதல் முறையாக, "ஆன்-லைன்" மூலம், கலந்தாய்வு நடக்க இருப்பதால், மாணவர்கள், தங்கள் மாவட்ட தலைநகரில் உள்ள, சி.இ.ஓ., அலுவலகத்திற்கு சென்றால் போதும். கலந்தாய்வு குறித்த அறிவிப்பை, ஆசிரியர் பயிற்சி இயக்குனரகம், ஓரிரு நாளில் வெளியிட உள்ளது.

ஆசிரியர் பட்டய பயிற்சி படிப்பவர்கள், ஐந்தாம் வகுப்பு வரையான பள்ளிகளில், ஆரம்ப பள்ளி ஆசிரியராக பணியாற்றலாம். ஆரம்ப பள்ளி ஆசிரியர் பணி இடங்கள், மிகவும் குறைவாகவே உள்ளது. இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதி, தேர்ச்சி பெற வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது.

அப்படியே, தேர்ச்சி பெற்றாலும், மாநில அளவில், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் தான், வேலை கிடைக்கும். இதுபோன்ற சிக்கல்கள் காரணமாக, ஆசிரியர் பயிற்சி படிப்பை, மாணவர்கள், ஒதுக்கியுள்ளனர்.