Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 13 மார்ச், 2013

டி.என்.பி.எஸ்.சி குரூப்–1, 2, 4 தேர்வுகளுக்கு புதிய பாடத்திட்டம்


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் குரூப்–1, குரூப்–1–ஏ, குரூப்–1–பி, குரூப்–2, குரூப்–4 உள்ளிட்ட தேர்வுகளுக்கும் இதர தொழில்நுட்ப தேர்வுகளுக்கும் பாடத்திட்டம் முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. அனைத்து தேர்வுகளிலும் பொது அறிவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள்.

அதிகப்படியான விண்ணப்பதாரர்கள் கலந்துகொள்ளும் குரூப்–4 தேர்வில் மொழிப்பாடத்தில் (தமிழ் அல்லது ஆங்கிலம்) கேள்விகளின் எண்ணிக்கை 100–லிருந்து 50 ஆக குறைக்கப்பட்டு இருக்கிறது. கூடுதலாக பொதுவிழிப்புணர்வு திறன் (ஆப்டிடியூட்) பகுதியை சேர்த்துள்ளனர். இதுவரை தனியாக நடத்தப்பட்டு வந்த மாவட்ட கல்வி அதிகாரி (டி.இ.ஓ.) தேர்வு மட்டும் குரூப்–1 தேர்வுடன் சேர்க்கப்பட்டு உள்ளது.

இணையதளத்தில் வெளியீடு
முன்பு அறிவிக்கப்பட்டபடி, நகராட்சி கமிஷனர் (கிரேடு–2), சார்–பதிவாளர் (கிரேடு–2), துணை வணிகவரி அதிகாரி, இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி ஆகிய பதவிகள் குரூப்–1 தேர்வுடன் சேர்க்கப்படவில்லை. எனவே, இந்த பதவிகள் முன்பு போல குரூப்–2 தேர்வில்தான் இடம்பெற்று இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குரூப்–2 தேர்வில் நேர்காணல் கொண்ட பதவிகளுக்கு மட்டும் முதல்நிலைத்தேர்வுடன் கூடுதலாக மெயின் தேர்வு (ஆப்ஜெக்டிவ் முறை) நடத்தப்படும்.

அனைத்து தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டமும் தேர்வுமுறையும் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் (www.tnpsc.gov.in)  இன்று இரவு வெளியிடப்பட்டது.

புதிய தலைவர்  பொறுப்பேற்பு
இதற்கிடையே, டி.என்.பி.எஸ்.சி. புதிய தலைவராக நியமிக்கப்பட்டு உள்ள ஏ.நவநீதகிருஷ்ணன் சென்னை பாரிமுனையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு பொறுப்பேற்கிறார். அவரிடம் தற்போதைய தலைவரான ஆர்.நட்ராஜ் பொறுப்புகளை ஒப்படைப்பார். இந்த நிகழ்ச்சியில், டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்கள் மற்றும் செயலாளர் மா.விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா, பணியாளர்கள் கலந்துகொள்கிறார்கள்.

மாட்டு சாணத்திலிருந்து வாசனை திரவியம்


இந்தோனேசியா நாட்டில் பள்ளிக்கூட மாணவ, மாணவிகளுக்கான அறிவியல் திறன் போட்டி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற நாலியட், ரியூதியா என்ற பெயருடைய 2 மாணவிகள் புதிய நறுமணம் வீசும் வாசனை திரவியம் (ஏர் பிரஷ்னெர்) ஒன்றை அறிமுகம் செய்து முதல் பரிசை தட்டிச் சென்றார்கள். இவர்கள் கண்டுபிடித்த இந்த வாசனை திரவியம் எதில் இருந்து தயாரித்தார்கள் என்பதை அறிந்தால் அதிர்ந்து போவீர்கள்.

 மாட்டு சாணத்தில் இருந்தே இதை தயாரித்திருக்கிறார்கள். அதாவது ஜாவா தீவிலுள்ள பண்ணையில் இருந்து மாட்டு சாணத்தை வரவழைத்தார்கள். அதை 3 நாட்களுக்கு ஊற வைத்து நீரை பிரித்து எடுக்கிறார்கள். பிறகு அதனுடன் தேங்காய் தண்ணீரை சேர்த்து கொதிக்கவிட்டு, ‘டிஸ்டில்’ முறையில் நீராக்கி மருத்துவ மூலிகை சேர்த்து இந்த நறுமணம் திரவியத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

இதில் ரசாயன பொருள் சேர்க்கப்படாததால் உடல்நலத்துக்கு நல்லது. தீங்கு எதுவும் ஏற்படுத்தாது என்று மாணவிகளும், அதை பரிசோதித்த விஞ்ஞானிகளும் தெரிவித்தனர். இந்த இரு மாணவிகளும் விரைவில் இஸ்தான்புல் நகரில் நடக்க இருக்கும் கண்காட்சியிலும் பங்கேற்க தேர்வாகி இருக்கிறார்கள்.

முதல் 5 இடங்களில் இந்திய விமான நிலையங்கள் :சர்வதேச ஏர்போர்ட்ஸ் கவுன்சில்


விமான பயணிகளுக்கு சிறந்த சேவை அளிப்பதில் தென் கிழக்கு ஆசிய நாடுகளின் விமான நிலையங்களில் இந்தியா மூன்று இடங்களை பிடித்துள்ளது. விமான பயணிகளின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் சிறப்பாக செயல்படுவது உட்பட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக பணி செய்வது குறித்து சர்வதேச விமான நிலைய சபை தெரிவித்துள்ளது.
சர்வதேச ஏர்போர்ட்ஸ் கவுன்சில் என்னும் தன்னாட்சி பெற்ற அமைப்பு நடத்திய கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆண்டு ஒன்றிற்கு சுமார் 40 மில்லியன் பயணிகளை கையாண்ட தென் கிழக்கு ஆசிய நாடுகளில் தென் கொரியா தலைநகர் சியோலில் உள்ளஇஞ்சியோன் விமான நிலையம் முதலிடத்தையும், டில்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் இரண்டாம் இடத்திலும் ,மும்பை சத்ரபதி சிவாஜி சர்வ தேச விமான நிலையம் மூன்றாமிடத்தை பிடித்துள்ளது.

மேலும் 15 மில்லியன் மக்களை கையாண்ட வகையில் ஜப்பானின் நகோயா விமான நிலையம் முதலிடத்திலும்,ஆந்திர மாநிலத்தில் உள்ள ராஜிவ் காந்தி விமான நிலையம் இரண்டாமிடத்தை பிடித்துள்ளது

ஆசிய-பசிபிக் நாடுகளின் வரிசையில் தென் கொரியா தலைநகர் சியோலில் உள்ளஇஞ்சியோன் விமான நிலையம் முதலிடத்தையும், சிங்கப்பூரின் சாங்காய் விமான நிலையம் இரண்டாம் இடத்தையும், சீன தலைநகர் பீஜிங் விமானநிலையம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது. நான்காமிடத்தை தலைநகர் புதுடில்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் பிடித்துள்ளது. ஐந்தாமிடத்தை ஆந்திர மாநிலத்தில் உள்ள ராஜிவ் காந்தி விமான நிலையம் பிடித்துள்ளது.