Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 18 அக்டோபர், 2012

சினிமா பாணியில் தொலைந்து போன கிராமம் ,20 ஆண்டுகளுக்குப் பிறகு நிஜத்தில் கண்டுபிடிக்கப்பட்டது


 சினிமா பாணியில் பொன்னேரி அருகே தொலைந்து போன ஒரு கிராமம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அனுப்பம்பட்டு ஊராட்சி வரைபடத்தில் இருந்த சின்னஞ்சிறு கிராமம். இதன் மொத்த பரப்பளவே 1 1/2 ஏக்கர்தான். கிராமத்தை சுற்றி அரண்போல் வயல்வெளியும், அனுப்பம்பட்டு ஏரியும் காட்சியளித்தது. நீரலைகள் ததும்ப பசுஞ்சோலைக்குள் ஒரு நந்தவனமாய் வேலப் பாக்கம் வியக்க வைத்தது. 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வந்தார்கள்.

விவசாயத்தையே நம்பி வாழ்ந்த அவர்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. வண்டிப்பாட்டையை சாலையாக பயன்படுத்தி வந்தார்கள். 20 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகள், துள்ளி விளையாடிய பூமி-சாதியை மறந்து பல இனத்தவர்கள் கூடி வாழ்ந்த அதிசய கிராமம் ஆக்கிரமிப்பாளர்களின் கண்களை உறுத்தியது. அதிகார வர்க்கத்தினர் விரட்டுயடித்ததால் ஊரை காலி செய்து அனைத்து குடும்பங்களும் வெளியேறியது.

வேலப்பாக்கம் கிராமமும் அந்த கிராமத்துக்கு செல்லும் 600 மீட்டர் நீளமும் 30 அடி அகலமும் கொண்ட வண்டிபாட்டையும் தனியார் சிலரது சொத்துக்களாக மாறியது. வேலப்பாக்கம் என்ற கிராமமே இருந்த சுவடு தெரியாமல் அழிக்கப்பட்டது. ஆனால் வருவாய்த்துறை பதிவேடுகளில் மட்டும் அழிக்க முடியாத எழுத்துக்களாய் வேலப்பாக்கம் இருந்தது. இங்கு வாழ்ந்த மக்கள் என்ன ஆனார்கள்? எங்கு சென்றார்கள்? என்ற எந்த விபரமும் பதிவேடுகளில் இல்லை.

இந்த நிலையில் மகாத் மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை செயல்படுத்த திருவள்ளூர் கலெக்டர் ஆசிஷ்சாட்டர்ஜி அதிகாரிகளுக்கு உத்தர விட்டார். எங்கெங்கு அரசு நிலங்கள் உள்ளது என்பதை கண்டறிந்து பணிகளை நிறைவேற்ற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். மீஞ்சூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரி லதா, ஊராட்சி தலைவர் (பொறுப்பு) சுந்தரராஜன் மூலம் நிலங்கள் கண்டறியப்பட்டு மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டது.

ஆக்கிரமிப்பாளர்களின் எதிர்ப்பையும் மீறி பதிவேடு கள் மூலம் வேலப்பாக்கம் கிராமம் இருந்த தகவல்களை திரட்டி அதிகாரிகள் நிலத்தை மீட்டனர். தொலைந்து போன வேலப்பாக்கம் மீட்கப் பட்டதையடுத்து அந்த பகுதியில் மீண்டும் 50 குடும்பங்களை குடியமர்த்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

வேலப்பாக்கம் என்ற பெயர் பலகையுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் அந்த பகுதிக்கு சாலைப்பணிகள் நடந்து வருகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட கிராமம் மீண்டும் உயிர்பெற்று எழுந்துள்ளதை அந்த பகுதி மக்கள் அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் பார்க்கிறார்கள்.