Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 28 பிப்ரவரி, 2013

ரயில்வே பட்ஜட் : மக்களின் எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும்


மதுரை ரயில்வே கோட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் எஸ். சந்திரமொய்லி :
தத்கல், முன்பதிவு, அதிவிரைவு ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டிருக்கிறது. கட்டண உயர்வு இல்லை என்று தெரிவித்துவிட்டு இவ்வாறு மறைமுகமாக 5 சதவிகித  கட்டணத்தை உயர்த்தியிருக்கிறார்கள். திருநெல்வேலி வழியாக நாகர்கோவில்-  பெங்களூர் இடையே தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை குறித்து கடந்த 15 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தோம். தற்போது அக் கோரிக்கை நிறைவேறியிருக்கிறது. இதுபோல் திருச்செந்தூர்- பழனி இடையே பயணிகள் ரயில் இயக்குவதும்,  கன்னியாகுமரி- புதுச்சேரி இடையே ரயில் இயக்குவதும் வரவேற்கத்தக்கது.

திருநெல்வேலி மாவட்ட தொழில் வர்த்தக சங்கத் தலைவர் குணசிங் செல்லத்துரை:
திருநெல்வேலி- தூத்துக்குடி இடையே நேரடி ரயில் சேவை குறித்து பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் பட்ஜெட்டில் அறிவிப்பு செய்யப்படவில்லை. இலங்கையில்  கடற்கரை வழித்தடத்தில் ரயில்பாதைகள் அதிகமுள்ளன. அதுபோல் தமிழகத்தில் கிழக்கு கடற்கரைப் பகுதிகளை இணைக்கும் ரயில் பாதை திட்டம் குறித்து பல ஆண்டுகளாகப் பேசப்பட்டு வருகிறது. ஆனால், அதற்கான அறிவிப்புகள் பட்ஜெட்டில்  இல்லை. திண்டுக்கல்- விழுப்புரம் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும்  திட்டம் குறித்து கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னரே ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கான நிதி ஒதுக்கீடு இந்த பட்ஜெட்டிலும்  செய்யப்படவில்லை. இது ஏமாற்றம் அளிக்கிறது.

திருநெல்வேலி- நாகர்கோவில் ரயில் பயணிகள் சங்கத் தலைவர் எம்.விர்ஜின் ராஜ்:
நாகர்கோவில்- திருநெல்வேலி இடையே பகல் நேரத்தில் ரயில்களை இயக்க வேண்டும் என்று நீண்ட நாள்களாக கோரிக்க விடுத்து வருகிறோம். இது தொடர்பாக அதிகாரிகளிடமும் மனுக்களை அளித்திருக்கிறோம். ஆனால் பட்ஜெட்டில் அது குறித்த  அறிவிப்புகள் இல்லை. திருநெல்வேலியிலிருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு, காலை 8.45 மணிக்கு பயணிகள் ரயில் சென்று சேருகிறது. பின்னர் மாலையில் 6.15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் இந்தப் பயணிகள் ரயில் இரவு 9 மணிக்கு  திருநெல்வேலியை அடைகிறது. பகல் நேரத்தில் இந்த ரயில் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. பகல் நேரத்தில் இந்த வழித்தடத்தில் ரயில்களை இயக்கினால் அது பயணிகளுக்கு மிகுந்த வசதியாக இருக்கும். மேலும் கட்டண உயர்வை அறிவித்திருக்கிறார்கள். ஆனால், ரயில்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த பட்ஜெட்டில் போதிய அறிவிப்புகள் செய்யப்படவில்லை. இதை திருப்திகரமான பட்ஜெட் என்று கூறுவதற்கில்லை என்றார் அவர்.

திருநெல்வேலி ரயில் நிலைய ஆலோசனை கமிட்டி உறுப்பினர் சோனா. வெங்கடாசலம்:
வணிகர்களின் நீண்டநாள் கோரிக்கையான நாகர்கோவில்- பெங்களூர் தினசரி ரயில்  அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. அறிவிப்புடன் நின்றுவிடாமல் இந்த ரயில் சேவையை விரைவாகத் தொடங்க வேண்டும். கட்டண உயர்வு இல்லாதது  வரவேற்கக்கூடியது. அதே நேரத்தில் தக்கல் கட்டண உயர்வு, அதிவிரைவு ரயில்  கட்டண உயர்வு, முன்பதிவு கட்டண உயர்வு உள்ளிட்டவற்றைக் குறைத்திருக்க வேண்டும்.

திருநெல்வேலி மாவட்ட தொழில் வர்த்தக சங்க துணைத் தலைவர் ஜி.எஸ். ஜனார்த்தனன்:
கணினி மூலம் ஒரே நேரத்தில் நாடு முழுவதும் 2 ஆயிரம் பேர் மட்டுமே டிக்கெட் பெறமுடியும் என்ற நிலையை மாற்றி, ஒரே நேரத்தில் 7 ஆயிரம் பேர் டிக்கெட்  பெறும் வசதியை உருவாக்குவது வரவேற்கத்தக்கது. மேலும் ரயில்வே பட்ஜெட்டில் சூரிய மின்சக்தியைப் பயன்படுத்தும் திட்டம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக அறிவிக்கப்பட்ட ரயில்கள் எப்போது வரும் என்று தெரியவில்லை. இந்த ரயில்களை அடுத்த சில மாதங்களிலேயே இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தியாவின் 82வது பொது நிதிநிலை அறிக்கை: சிறுபான்மையினர் நலனை மேம்படுத்த ரூ.3,511 கோடி ஒதுக்கீடு, பழங்குடினியினர் நலனுக்கு ரூ.24,598 கோடி ஒதுக்கீடு, தாழ்த்தப்பட்டோர் நல திட்டங்களுக்கு ரூ.41,561 கோடி ஒதுக்கீடு


 நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் பொது நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றினார்.

இந்தியாவின் 82வது பொது நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய சிதம்பரம், சர்வதேச பொருளாதார வளர்ச்சி சரிவு நிலையில் உள்ளது. இந்தியாவின் ஏற்றுமதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்திய பொருளாதாரத்தை வளர்ச்சியில் கொண்டு வருவதே மத்திய அரசின் தாரக மந்திரமாக உள்ளது. உயர்ந்த பொருளாதார வளர்ச்சியை அடைவது தற்போது கடினமான பணியாக உள்ளது என்று கூறினார்.

பட்ஜட் விவரங்கள் :
• மத்திய விற்பனை வரி இழப்பீடாக மாநில அரசுகளுக்கு ரூ.9 ஆயிரம் கோடி வழஙகப்படும்.

• எலக்ட்ரானிக்ஸ் சிப் உற்பத்தி நிறுவனங்களுக்கு சுங்க வரி விலக்கு.

• 2025ஆம் ஆண்டு இந்தியா ரூ.250 கோடி பொருளாதார நாடாக உருவாகும்.

• 2017ஆம் ஆண்டு இந்தியா உலகளவில் 7வது மிகப்பெரிய பொருளாதார நாடாக முன்னேறும்.

வேளாண் விவசாய நிலங்கள் விற்பனையில் வரி விலக்கு.

பயணிகள் எடுத்துச் செல்லும் தங்கத்துக்கு செலுத்த வேண்டிய வரிச் சலுகை ஆண்களுக்கு ரூ.50 ஆயிரமும், பெண்களுக்கு ரூ.1 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

ரூ.18,000 கோடிக்கு புதிய வரிகள்
• 800 சிசி திறனுக்கு மேல் உள்ள வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வரி அதிகரிப்பு

• வெளிநாடுகளில் இருந்து வாங்கப்படும் சொகுசு வாகனங்களுக்கான வரி விதிப்பு 75%ல் இருந்து 100% ஆக உயர்வு.

• திரைப்படத் துறைக்கு சேவை வரியில் இருந்து விலக்கு

• குளிர் சாதன வசதியுடன் கூடிய உணவகங்களுக்கு சேவை வரி

• நேரடி வரி விதிப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் மூலமாக ரூ.13,300 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்.

• மறைமுக வரி விதிப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் மூலமாக ரூ.4,700 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்.

• இதன் மூலம் ரூ.18,000 ஆயிரம் கோடிக்கு புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.

செல்போன் வரி உயர்வு
• ஆடம்பர வாகன இறக்குமதி வரி உயர்வு

• சிகரெட்டுகளுக்கு 18 சதவீதம் வரி உயர்வு

• கப்பல் கட்டும் தொழிலுக்கு உற்பத்தி வரி விலக்கு

• எஸ்யுவி வகை கார்களுக்கு உற்பத்தி வரி அதிகரிப்பு

• வெள்ளி உற்பத்திக்கு 4% உற்பத்தி வரி

• செல்போன்களுக்கான உற்பத்தி வரியில் மாற்றமில்லை.

• ரூ.2000க்கு கீழ் உள்ள செல்போன்களுக்கு வரியில் மாற்றமில்லை.

• ரூ.2 ஆயிரத்துக்கும் மேல் விலையுள்ள மொபைல்போன்களுக்கு 6% வரி

 • வருமான வரி உச்ச வரம்பு ரூ.2 லட்சமாகவே நீடிக்கிறது.

• ரூ.1 கோடி வருமானம் உள்ளவர்களுக்கு கூடுதல் வரியும், ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 10% கூடுதல் வரியும் விதிக்கப்படும்.

• வரி ஏய்வு தடுப்புச் சட்டம் ஏப்ரல் 2016 முதல் அமலுக்கு வரும்.

• விவசாயப் பொருட்களுக்கு பண்டக சாலையில் வைப்பதற்கான வரி விலக்கு

• இறக்குமதி செய்யப்பட்ட செட்-டாப் பாக்ஸ்களுக்கு வரி 5% முதல் 10% ஆக உயர்வு

• 50 லட்சத்துக்கு மேல் அசையா சொத்துக்கள் விற்பனையில் 1% வரி பிடித்தம்

• கலால், சுங்க வரிகளில் மாற்றமில்லை.

• தோல் தொழில் நிறுவன இயந்திரங்களுக்கு வரி குறைப்பு.

ரூ.5 லட்சம் வரை ஊதியம் பெறுவோருக்கு
• ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் பெறுபவர்களுக்கான 10% கூடுதல் வரி வசூல் ஒரு ஆண்டுக்கு மட்டுமே.

• பணக்காரர்கள் கூடுதலாக வரி செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இத்திட்டம்

• ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை ஊதியம் பெருவோரின் வரியில் ரூ.2000 வரை விலக்கு அளிக்கப்படும்.

• காப்பீட்டுக்கான மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை
• குழந்தைகளுக்கான தேசிய நல நிதி உருவாக்கப்படும்.

• உற்பத்தி நிறுவனங்களுக்கு உற்பத்தி ஊக்கத் தொகை 15 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

• வரிக் கொள்கையை மறு ஆய்வு செய்ய புதிய ஆணையம்.

• தனி நபர் வருமான வரி உச்ச வரம்பில் மாற்றமில்லை என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

• ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 10% கூடுதல் வரி

• வருவாய் பற்றாக்குறை வரும் நிதியாண்டில் 3.4-3.8 சதவீதம்.

• நேரடி வரிகளிலும் மாற்றமில்லை.

•  கல்விக்கான கூடுதல் வரி விதிப்பு தொடரும்.

பாதுகாப்புத் துறைக்கு ரூ.2.03 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

• அணுமின் சக்தி, அறிவியல் தொழில்நுட்பத் துறைக்கு கூடுதல் நிதி.

• இயற்கை எரிவாயு விலை நிர்ணயிப்பில் புதிய கொள்கை.

• எப்எம் ரேடியோ சேவைக்கு 839 உரிமங்கள் ஏலம் மூலம் வழங்கப்படும்.

•அஞ்சல் துறை நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.

• அஞ்சல் துறை திட்டத்துக்கு கூடுதலாக ரூ.530 கோடி ஒதுக்கீடு.

• கழிவு பொருட்களில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

• இடிஎப் திட்டங்களில் ஓய்வூதியை நிதியை முதலீடு செய்ய அனுமதி

• 10 லட்சம் மக்கள் வசதிக்கும் நகரங்களில் எல்ஐசி அலுவலகம்.

• வங்கிகள் தரும் விண்ணப்பங்களே எல்ஐசிக்கும் பொருந்தும்.

• செபிக்கு கூடுதல் அதிகாரம்.

• அனைத்து பொதுத்துறை வங்கிகளிலும் ஏடிஎம் வசதி. 2014ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அமைக்கப்படும்.

• நுண் கடன் திட்டங்களை விநியோகிக்க வங்கி தொடர்பாளர்களுக்கு அனுமதி

• பாறை எரிவாயு அகழ்வாய்வுக்கு புதிய கொள்கை.

• கல்விக்கும், வேலை வாய்ப்புக்கும் வரும் நிதியாண்டில் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

•. கல்வித் துறை மேம்பாட்டுக்கு ரூ.65,867 கோடி ஒதுக்கீடு.

பெண்களுக்கு என  தனி வங்கி
• பெண்களுக்கென முதல் தனி வங்கி. அந்த வங்கியில் முதற் கட்டமாக ரூ.1000 கோடி முதலீடு

வரும் அக்டோபர் மாதத்துக்குள் பெண்களுக்கான தனி வங்கி துவக்கப்படும்.

• ஊரக தேசிய வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு

• உணவுப் பாதுகாப்புத் திட்ட மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

• உணவுப் பாதுகாப்புத் திட்டத்துக்கு கூடுதலாக ரூ.1000 கோடி ஒதுக்கீடு.

• குடிநீரை சுத்தப்படுத்தும் திட்டத்துக்கு ரூ.1,400 கோடி ஒதுக்கீடு.

இந்தியாவில் நிலக்கரி இறக்குமதி அதிகரிப்பு
நிலக்கரி இறக்குமதி செய்வது இந்தியாவில் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக அமைச்சர் கூறுகிறார்.

• நிலக்கரி இறக்குமரி கவலை அளித்து வருகிறது.

• ஜவுளித் துறைக்கு ரூ.2400 கோடி ஒதுக்கீடு.

• ஜவுளி மேம்பாட்டுத் துறைக்கு ரூ.1.51 லட்சம் கோடி ஒதுக்கீடு

• ராஞ்சியில் இந்திய உயிரி தொழில்நுட்ப மையம்.

• தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்துக்கு ரூ.33,000 கோடி ஒதுக்கீடு.

• பொது வங்கிகளுக்கு ரூ.14,000 கோடி ஒதுக்கீடு

தூத்துக்குடியில் புதிய துறைமுகம்
தூத்துக்குடியில் புதிய துறைமுகம் உருவாக்கப்படும் என்று சிதம்பரம் அறிவித்துள்ளார்.

• குஜராத், மகாராஷ்டிராவில் இரு தொழில் நகரங்கள் அமைக்கப்படும்.

• ரூ.1650 கோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒதுக்கப்படும்.

• பயோடெக்னாலஜி கூடங்கள் சட்டீஸ்கரில் அமைக்கப்படும்.

• 6 மருத்துவக் கல்லூரிகள் துவங்க ரூ.1650 கோடி ஒதுக்கீடு

• ரூ.25 லட்சம் வரையிலான வீட்டுக்கடனுக்கு ஒரு லட்சம் வரிச் சலுகை

• தூத்துக்குடியில் புதிய துறைமுகம். துறைமுக விரிவாக்கத்திற்கு ரூ.7500 கோடி ஒதுக்கீடு

• விலைவாசி உயர்வுக்கு ஏற்ப லாபம் தரும் கடன் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

இந்தியாவில் கல்வித் துறைக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

• வரும் ஆண்டில் கல்விக்காக ரூ.65,867 கோடி ஒதுக்குடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதியை விட 17% அதிகமாகும்.

• பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்துக்கு ரூ.13,215 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

• அனைவருக்கும் கல்வி திட்டத்தை திறம்பட செயல்படுத்த ரூ.27,258 கோடி ஒதுக்கீடு.

சித்தா, ஆயுர்வேதத்துக்கு ரூ.1,069 கோடி ஒதுக்கீடு

தேசிய சுகாதார இயக்கத்தில் ஆயுர்வேதம், சித்தாவை செயல்படுத்த ரூ.1,069 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

• சுகாதாரத் துறைக்கு ரூ.37,330 கோடி ஒதுக்கீடு.

• ஊரகப் பகுதிகளின் மேம்பாட்டுக்கு ரூ.80,200 கோடி ஒதுக்கீடு.

• குறுகிய கால பயிர் கடன்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் தொடரும்.

•  இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிப்பது முக்கிய குறிக்கோளாக எடுத்து செயல்படுத்தப்படும்.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கவும், குழந்தைகள் நலனுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று ப. சிதம்பரம் அறிவித்துள்ளார்.

• மனித வள மேம்பாடுக்காக ரூ.65,867 கோடி ஒதுக்கீடு.

சிறுபான்மையினர் நலனை மேம்படுத்த ரூ.3,511 கோடி ஒதுக்கீடு

•. பழங்குடினியினர் நலனுக்கு ரூ.24,598 கோடி ஒதுக்கீடு.

• தாழ்த்தப்பட்டோர் நல திட்டங்களுக்கு ரூ.41,561 கோடி ஒதுக்கீடு

•. குழந்தைகள் நலனை மேம்படுத்த ரூ.97,134 கோடி ஒதுக்கீடு

தாழ்த்தப்பட்டோர் நலனுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வேறு பணிகளுக்குப் பயன்படுத்தக் கூடாது.

• இந்தியாவின் உணவு பொருள் பணவீக்கம் கவலை அளிப்பதாக உள்ளது.

•வெளிநாட்டில் இருந்து வரும் முதலீடுகள் வரவேற்கப்படுகின்றன. சர்வதேச பொருளாதார வளர்ச்சி பாதிப்பால், 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு பொருளாதார வளர்ச்சி மந்தநிலையில் உள்ளது.

•பொருளாதாரம் தொடர்ந்து சவாலானப் பணியாகவே உள்ளது. 11வது ஐந்தாண்டு திட்டத்தில் 8 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளோம்.

•இந்தியாவை விட சீனா மற்றும் இந்தோனேசிய நாடுகள் வளர்ச்சிப் பாதையில் செல்கின்றன.

• 2012-13ஆம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 5.5 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

பிளஸ்–2 தேர்வு வெள்ளிக்கிழமை தொடங்குகிறது 8½ லட்சம் மாணவ–மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்: சிறுபான்மை மொழிகளிலும் வினாத்தாள்கள்


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்–2 பொதுத்தேர்வு நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. தனித்தேர்வர்கள் உள்பட மொத்தம் 8½ லட்சம் மாணவ–மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். தேர்வில் காப்பி அடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

8½ லட்சம் பேர்
பிளஸ்–2 தேர்வு  (வெள்ளிக்கிழமை) தொடங்கி 27–ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 5,769 மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 4 ஆயிரத்து 535 மாணவ–மாணவிகள் எழுதுகிறார்கள். இவர்களில் 3 லட்சத்து 73 ஆயிரத்து 788 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 30 ஆயிரத்து 746 பேர் மாணவிகள். அதாவது மாணவர்களை விட 56 ஆயிரத்து 958 மாணவிகள் கூடுதலாக தேர்வில் கலந்துகொள்கிறார்கள். இதற்காக 2020 தேர்வு மையங்களாக அமைக்கப்பட்டு உள்ளன.

சென்னை மாநகரில் 406 பள்ளிகளில் இருந்து 51 ஆயிரத்து 531 பேர் 140 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். இவர்களில் மாணவர்கள் 23 ஆயிரத்து 717 பேர். மாணவிகள் 27 ஆயிரத்து 814 பேர் ஆவர். புதுச்சேரியில் 30 தேர்வு மையங்களில் 6 ஆயிரத்து 919 மாணவிகள் உள்பட 12 ஆயிரத்து 611 பேர் தேர்வில் பங்கேற்கின்றனர். பள்ளி மாணவர்களைத்தவிர, தனித்தேர்வர்களாக 48 ஆயிரத்து 786 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.

மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை
கற்றல் குறைபாடு (டிஸ்லெக்சியா), பார்வை இழந்தோர், காது கேளாதோர், வாய் பேச இயலாதோர் உள்பட இதர மாற்றுத்திறனாளிகளுக்கான சொல்வதை எழுதுபவர் ஆகியோருக்கு தேர்வில் சிறப்பு சலுகை அளிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு தேர்வுக்கு கூடுதலாக 1 மணி நேரம் வழங்கப்படும். மேலும் ஒரு மொழிப்பாடம் கிடையாது.

தேர்வுக்கான வினாத்தாள் கட்டு காப்பு மையங்கள் பாதுகாப்பான இடங்களில் அமைந்துள்ளதா? என்பதை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்து அமைக்கப்பட்டு இருக்கின்றன. வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வினாத்தாள் காப்பு மையங்களிலும் கூடுதல் கண்காணிப்புக்கு இரவு காவலர்கள் பணியாற்றுவார்கள். ஆய்வு அதிகாரிகள் அடிக்கடி மையங்களுக்கு சென்று கண்காணிப்பார்கள்.

மின்வெட்டை சமாளிக்க ஜெனரேட்டர் வசதி
தேர்வு மையங்களில் தடையற்ற மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. எனினும் முன்னேற்பாடாக ஜெனரேட்டர் வசதி செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள். தேர்வு மையங்களில் குடிநீர், கழிப்பிட வசதிகள் நல்ல முறையில் செய்யவும் பள்ளிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் தலைமையில் மாவட்ட தேர்வுக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவில் போலீஸ் எஸ்.பி., மாவட்ட வருவாய் அதிகாரி, சப்–கலெக்டர், ஆர்.டி.ஓ., ஆகியோர் இடம்பெற்றிருப்பார்கள். தேர்வுக்குழுவினர் தேர்வு மையங்களை பார்வையிட்டு முறைகேடுகள், எதுவும் நடைபெறா வண்ணம் கண்காணிப்பார்கள்.

பறக்கும் படைகள்
பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர்களும் மாவட்டங்களில் தேர்வு நாட்களில் கண்காணிப்பு குழுக்களுடன் தேர்வு மையங்களை மேற்பார்வையிடுவார்கள். தேர்வு மையங்களை பார்வையிட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்வார்கள். ஒருசில மையங்களில் கண்காணிப்புக்குழுவினர் தேர்வு தொடங்கி முடியும் வரை அங்கேயே தங்கி தேர்வு பணிகளை பார்வையிடுவார்கள்.

தொழிற்படிப்பு சேர்க்கைக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல் ஆகிய 6 பாடங்களுக்கான தேர்வுகள் மார்ச் 11, 14, 18, 21 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன. அந்த தேர்வுகளின்போது, அனைத்து தேர்வு மையங்களிலும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த வேறு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் முதன்மை கண்காணிப்பாளர்களாக இருந்து தேர்வை நடத்துவார்கள். மேலும் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் சிறப்பு பார்வையாளர்களாக தேர்வு மையங்களை பார்வையிடுவார்கள்.

காப்பி அடித்தால் கடும் நடவடிக்கை
எக்காரணம் கொண்டும் தேர்வு நேரத்தின்போது அந்த பள்ளியைச்சேர்ந்த தாளாளர்களோ, ஆசிரியர்களோ, பணியாளர்களோ தேர்வு நடக்கும் வளாகத்தில் இருக்கக்கூடாது. தேர்வின்போது காப்பி அடித்தல், பிட் அடித்தல், தேர்வு அதிகாரிகளிடம் முறைகேடாக நடந்தகொள்ளல், விடைத்தாள் மாற்றல் செய்தல், ஆள்மாறாட்டம் செய்வது ஆகிய செயல்பாடுகள் ஒழுங்கீனமாக கருதப்பட்டு, அத்தகை செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு விதிமுறைகளின்படி உரிய தண்டனை வழங்கப்படும்.

ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்குவிக்கவோ பள்ளி நிர்வாகம் முயன்றால் பள்ளி தேர்வு மையம் ரத்துசெய்யவும், பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் பள்ளிக்கல்வி இயக்குனர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். ஆள்மாறாட்டத்தை தவிர்க்கும் பொருட்டு தேர்வர்களின் போட்டோக்கள் பெயர் பட்டியலிலும், தேர்வுக்கூட நுழைவுச்சீட்டிலும் அச்சிடப்பட்டு உள்ளது.

சிறுபான்மை மொழிகளில் வினாத்தாள்
தமிழ்வழியில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு 5 லட்சத்து 59 ஆயிரத்து 964 மாணவ–மாணவிகள் தமிழ்வழியில் தேர்வு எழுதுகிறார்கள். தேர்வில் பகுதி–3–ல் அனைத்து பாடங்களுக்கான வினாத்தாள்களையும் தமிழ்வழியோடு ஆங்கிலவழி வினாக்களும் ஒரே வினாத்தாளில் இடம்பெறும் வண்ணம் இருமொழி வடிவில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

இயற்பியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், கணிதம், வரலாறு, வணிகவியல், பொருளாதாரம், கணக்கியல் ஆகிய பாடங்களுக்கு சிறுபான்மை மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது ஆகிய மொழிகளிலும் வினாத்தாள் வழங்கப்படும். அந்த வினாத்தாள்களில் ஆங்கிலவழியிலும் வினாக்கள் இடம்பெற்றிருக்கும்.

40 கைதிகள்
ஜெயில் கைதிகளும் கல்வியில் ஏற்றம் கண்டிடும் வகையில் ஜெயிலிலே கடந்த சில ஆண்டுகளாக தேர்வு மையம் அமைக்கப்பட்டு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு பிளஸ்–2 தேர்வுக்கு சென்னை புழல் ஜெயிலில் தேர்வு மையம் ஏற்படுத்தப்பட்டு அங்கு 40 கைதிகள் தேர்வு எழுதுகிறார்கள்.

இவ்வாறு வசுந்தராதேவி கூறி உள்ளார்.