Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 28 பிப்ரவரி, 2013

ரயில்வே பட்ஜட் : மக்களின் எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும்


மதுரை ரயில்வே கோட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் எஸ். சந்திரமொய்லி :
தத்கல், முன்பதிவு, அதிவிரைவு ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டிருக்கிறது. கட்டண உயர்வு இல்லை என்று தெரிவித்துவிட்டு இவ்வாறு மறைமுகமாக 5 சதவிகித  கட்டணத்தை உயர்த்தியிருக்கிறார்கள். திருநெல்வேலி வழியாக நாகர்கோவில்-  பெங்களூர் இடையே தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை குறித்து கடந்த 15 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தோம். தற்போது அக் கோரிக்கை நிறைவேறியிருக்கிறது. இதுபோல் திருச்செந்தூர்- பழனி இடையே பயணிகள் ரயில் இயக்குவதும்,  கன்னியாகுமரி- புதுச்சேரி இடையே ரயில் இயக்குவதும் வரவேற்கத்தக்கது.

திருநெல்வேலி மாவட்ட தொழில் வர்த்தக சங்கத் தலைவர் குணசிங் செல்லத்துரை:
திருநெல்வேலி- தூத்துக்குடி இடையே நேரடி ரயில் சேவை குறித்து பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் பட்ஜெட்டில் அறிவிப்பு செய்யப்படவில்லை. இலங்கையில்  கடற்கரை வழித்தடத்தில் ரயில்பாதைகள் அதிகமுள்ளன. அதுபோல் தமிழகத்தில் கிழக்கு கடற்கரைப் பகுதிகளை இணைக்கும் ரயில் பாதை திட்டம் குறித்து பல ஆண்டுகளாகப் பேசப்பட்டு வருகிறது. ஆனால், அதற்கான அறிவிப்புகள் பட்ஜெட்டில்  இல்லை. திண்டுக்கல்- விழுப்புரம் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும்  திட்டம் குறித்து கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னரே ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கான நிதி ஒதுக்கீடு இந்த பட்ஜெட்டிலும்  செய்யப்படவில்லை. இது ஏமாற்றம் அளிக்கிறது.

திருநெல்வேலி- நாகர்கோவில் ரயில் பயணிகள் சங்கத் தலைவர் எம்.விர்ஜின் ராஜ்:
நாகர்கோவில்- திருநெல்வேலி இடையே பகல் நேரத்தில் ரயில்களை இயக்க வேண்டும் என்று நீண்ட நாள்களாக கோரிக்க விடுத்து வருகிறோம். இது தொடர்பாக அதிகாரிகளிடமும் மனுக்களை அளித்திருக்கிறோம். ஆனால் பட்ஜெட்டில் அது குறித்த  அறிவிப்புகள் இல்லை. திருநெல்வேலியிலிருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு, காலை 8.45 மணிக்கு பயணிகள் ரயில் சென்று சேருகிறது. பின்னர் மாலையில் 6.15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் இந்தப் பயணிகள் ரயில் இரவு 9 மணிக்கு  திருநெல்வேலியை அடைகிறது. பகல் நேரத்தில் இந்த ரயில் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. பகல் நேரத்தில் இந்த வழித்தடத்தில் ரயில்களை இயக்கினால் அது பயணிகளுக்கு மிகுந்த வசதியாக இருக்கும். மேலும் கட்டண உயர்வை அறிவித்திருக்கிறார்கள். ஆனால், ரயில்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த பட்ஜெட்டில் போதிய அறிவிப்புகள் செய்யப்படவில்லை. இதை திருப்திகரமான பட்ஜெட் என்று கூறுவதற்கில்லை என்றார் அவர்.

திருநெல்வேலி ரயில் நிலைய ஆலோசனை கமிட்டி உறுப்பினர் சோனா. வெங்கடாசலம்:
வணிகர்களின் நீண்டநாள் கோரிக்கையான நாகர்கோவில்- பெங்களூர் தினசரி ரயில்  அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. அறிவிப்புடன் நின்றுவிடாமல் இந்த ரயில் சேவையை விரைவாகத் தொடங்க வேண்டும். கட்டண உயர்வு இல்லாதது  வரவேற்கக்கூடியது. அதே நேரத்தில் தக்கல் கட்டண உயர்வு, அதிவிரைவு ரயில்  கட்டண உயர்வு, முன்பதிவு கட்டண உயர்வு உள்ளிட்டவற்றைக் குறைத்திருக்க வேண்டும்.

திருநெல்வேலி மாவட்ட தொழில் வர்த்தக சங்க துணைத் தலைவர் ஜி.எஸ். ஜனார்த்தனன்:
கணினி மூலம் ஒரே நேரத்தில் நாடு முழுவதும் 2 ஆயிரம் பேர் மட்டுமே டிக்கெட் பெறமுடியும் என்ற நிலையை மாற்றி, ஒரே நேரத்தில் 7 ஆயிரம் பேர் டிக்கெட்  பெறும் வசதியை உருவாக்குவது வரவேற்கத்தக்கது. மேலும் ரயில்வே பட்ஜெட்டில் சூரிய மின்சக்தியைப் பயன்படுத்தும் திட்டம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக அறிவிக்கப்பட்ட ரயில்கள் எப்போது வரும் என்று தெரியவில்லை. இந்த ரயில்களை அடுத்த சில மாதங்களிலேயே இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக