Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 1 மார்ச், 2013

காட்டு யானைகளால் தூக்கத்தை இழந்த கிராம மக்கள்


 தலைவாசல் அருகே, கிராம பகுதிக்குள் காட்டு யானைகள் கூட்டம் நுழைந்ததால், மக்கள் பீதியில் ஓட்டம் பிடித்தனர். எலந்தவாரி வனப்பகுதியில் உள்ள யானைகளை விரட்டுவது குறித்து, மாவட்ட கலெக்டர் தலைமையில், ஆலோசனை கூட்டம் நடந்தது. ஜவ்வாது மலை பகுதியில் இருந்து, உணவு தேடி வந்த, ஆறு காட்டு யானைகள், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டம் மேற்கு கல்வராயன் மலை வழியாக, கடந்த, 16ம் தேதி, சங்கராபுரம் கிராம வனப்பகுதிக்கு வந்தன. கடந்த இரு நாட்களுக்கு முன், இடைபடு காடுகள் வனப்பகுதி வழியாக, தகரை, கல்லாநத்தம், எலவடி உள்ளிட்ட, ஆறு கிராமங்களில் புகுந்த யானைகள், இரண்டு மாடுகள், ஆறு கன்று குட்டி, ஆடுகளை மிதித்து கொன்றன.

குடியிருப்பு வீடுகள், விவசாய நிலங்களில் பயிர் செய்திருந்த கரும்பு, வாழை, மரவள்ளி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்தன. இதனால், மக்கள் அச்சமடைந்து, பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். கடந்த, 27ம் தேதி, அதிகாலை, ஆறு யானைகளும், சேலம் - உளுந்தூர்பேட்டை நான்கு வழிச் சாலையில், சின்னசேலம் புறவழிச் சாலையில், "ஹாயாக' நடந்து சென்று, மீண்டும் திரும்பியதால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். மாலை, 7:00 மணியளவில், தலைவாசல் அருகே, புத்தூர், வரகூர் கரடு வழியாக, புத்தூர் கிராமத்துக்குள் யானைகள் புகுந்ததால், கிராம மக்கள், பீதியில் ஓட்டம் பிடித்தனர். வனத்துறையினர் மற்றும் போலீசார், யானைகளை விரட்டியதில், அதிகாலை, 2:30 மணியளவில், ரங்கநாதபுரம் சடையப்பா கோவில் வனப்பகுதிக்குள் யானைகள் சென்றன.
பின், எலந்தவாரி மலை கிராமம் அருகில் உள்ள, எலந்தை மரம், ஆலம் மரம் தோப்பில் சென்று, காட்டு யானைகள் ஓய்வு எடுக்கின்றன. போதுமான உணவு கிடைக்காததால், யானைகள், எலந்தவாரி சடைய கவுண்டன் காப்பு காட்டில், சத்தமிட்டபடி இருந்தன. இதனால், எலந்தவாரி கிராம மக்களை, பாதுகாப்பான இடங்களுக்கு, வனத்துறையினர் அனுப்பி வைத்தனர். இந்த யானைகளை, கல்வராயன் மலை, அரூர், திருவண்ணாமலை வழியாக, ஜவ்வாது மலைக்கு அனுப்புவது குறித்து, ஆத்தூர் மாவட்ட வன அலுவலகத்தில், சேலம் மாவட்ட கலெக்டர் தலைமையில், ஆலோசனை கூட்டம் நடந்தது.

மாவட்ட வனப்பாதுகாவலர் கணேசன், நிருபர்களிடம் கூறியதாவது: கர்நாடகா மாநிலத்தை வாழ்விடமாக கொண்ட, ஏழு காட்டு யானைகள், ஜவ்வாது மலையில், பல ஆண்டுகளாக இருந்தன. கடந்த ஆண்டு, ஏப்ரல், மே மாதம், 40 வயது கொண்ட பெண் யானை, ஆறு யானைகளை வழி நடத்தி வந்தது.

கர்ப்பமாக இருந்த, அந்த யானையும், குட்டியும் இறந்தது. அதனால், வழித்தடம் தெரியாமல், ஆறு யானைகளும் தவிக்கின்றன. கடந்த, 150 ஆண்டுகளுக்கு முன், கல்வராயன் மலையில், யானை உள்ளிட்ட வன விலங்குகளின் வாழ்விட பகுதியாக இருந்ததால், இந்த யானைகள் வந்துள்ளன.
சேலம், விழுப்புரம் மாவட்ட வனத்துறை இணைந்து, காட்டு யானைகளை, அதன் வாழ்விடமான தாணியப்பாடி, ஜவ்வாது மலைக்கு விரட்டும் பணிகள் மேற்கொள்ளும்படி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மலை அடிவார கிராமங்களில் உள்ள, குடியிருப்பு வீடுகளில், வெல்லம், கொள்ளு, உப்பு போன்றவைகள் வைக்க வேண்டாம். பட்டாசு, வெடி போட்டு தொந்தரவு செய்யாமல் இருந்தால், சேதம் ஏற்படாது. பயிர் சேதத்துக்கு, அரசு நிவாரண உதவி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக