Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 3 ஜனவரி, 2013

ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டு சாமியாருடன் கட்டாய உறவு: மனமுடைந்த பெண் தீக்குளித்து சாவு


மேற்கு வங்க மாநிலம் ஜபல்பூரி மாவட்டம் காமக்யாகுரி பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார். இவரது மனைவி ஸ்வப்னா(வயது 39). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஆனால் ஆண் குழந்தை இல்லாததை ஒரு குறையாகக் கருதி ஸ்வப்னாவை அவரது கணவன் மற்றும் அவரது உறவினர்கள் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

இந்த கொடுமையின் உச்சகட்டமாக, கடந்த டிசம்பர் மாதம் ஒரு சாமியாரை சுகுமார் அழைத்து வந்துள்ளார். பின்னர் அந்த சாமியாருடன், தன் மனைவியை கட்டாயப்படுத்தி உறவு வைக்கச் செய்துள்ளார். இவ்வாறு 3 நாட்கள் சாமியாரின் பிடியில் சிக்கிச் சீரழிந்த ஸ்வப்னா, கடந்த 17-ம் தேதி தீக்குளித்தார்.

பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரிடம் வாக்குமூலம் வாங்கக்கூட முடியவில்லை. அந்த அளவுக்கு உடல்நிலை மோசமடைந்தது. இந்நிலையில் அவர் 28-ம் தேதி இறந்தார். இறப்பதற்கு முன் அவர் தனக்கு நேர்ந்த கொடுமையை தன் தாயாரிடம் கூறி அழுதிருக்கிறார்.

இதுபற்றி ஸ்வப்னாவின் தாயார் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஸ்வப்னாவின் கணவர் சுகுமார், மாமனார் சுரேன், மாமியார் ஷோபா ராணி, மைத்துனி திரவுபதி ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஸ்வப்னாவின் சாவுக்கு மூல காரணமாக இருந்த சாமியார், அசாமில் இருந்து வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தேவையான ஆராய்ச்சி மாணவர்களை உருவாக்க முடியவில்லை: சென்னை ஐஐடி இயக்குநர்


மாணவர்களின் தொழில்நுட்ப திறனை வெளிக் கொண்டு வரும் வகையில், சென்னை, ஐ.ஐ.டி., ஆண்டுதோறும், "சாஸ்த்ரா" என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு, வரும் 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை, இந்நிகழ்ச்சி நடக்கிறது. இதில், ஒன்பது மாநிலங்களின், 250 கல்லூரிகளைச் சேர்ந்த, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

இதுகுறித்து, ஐ.ஐ.டி., இயக்குனர் பாஸ்கர ராமமூர்த்தி கூறியதாவது: மாணவர்களின் தொழிற்நுட்பதிறனை வெளிக் கொண்டு வர நடத்தப்படும் இந்நிகழ்ச்சி, பார்வையாளர்களாக பங்கேற்கும் மாணவர்களுக்கும் உத்வேகத்தை அளித்து, அவர்களின் சிந்திக்கும் திறனை வளர்க்கும். சென்னை ஐ.ஐ.டி., - பி.எச்டி.,க்கு, மிகுந்த முக்கியத்துவம் தருகிறது. இங்கு, பல்வேறு துறைச் சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ள அனைத்து வசதிகளும் உள்ளன. நான்கு மாணவர்களுக்கு ஒரு பேராசிரியர் வீதம், 1,800 மாணவர்கள், இங்கு, பி.எச்டி., படிக்கின்றனர்.

தேசிய அளவில் ஆண்டிற்கு, 10 ஆயிரம் பி.எச்டி., மாணவர்களை உருவாக்குவது இலக்காக உள்ளது. ஆனால் தற்போது, ஆண்டிற்கு, 2,000க்கும் குறைவானவர்களையே உருவாக்க முடிகிறது. 2020ம் ஆண்டிற்குள் எங்கள் இலக்கை அடைய முயல்வோம். முதல்முறையாக, இந்த ஆண்டு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான, "ஜூனியர் சாஸ்த்ரா" நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது.

இந்நிகழ்ச்சிகளையொட்டி, மயிலாப்பூர், ஆர்.கே. சாலையில் உள்ள, சிட்டி சென்டரில், இன்று மாலை, 5:00 மணிக்கு, சென்னை ஐ.ஐ.டி., மாணவர்கள் உருவாக்கிய, "மின்னணு விமானம்" பறக்கவிடப்படுகிறது. இவ்வாறு பாஸ்கர ராமமூர்த்தி கூறினார்.

தேவையான பேராசிரியர்கள் நியமிக்க கோரி புளியங்குடியில் மனோ கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்


திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடி அடுத்த டி.என்.புதுக்குடியில் மனோ கல்லூரி இயங்கி வருகிறது. கல்லூரியில் சுமார் 850க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர்.

கல்லூரியில் பற்றாக்குறையாக உள்ள ஆங்கிலத்துறை மற்றும் கம்ப்யூட்டர் துறை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். கம்ப்யூட்டர் வழங்கவும், அலுவலக பணிக்கு போதிய அலுவலர்களை நியமிக்கவும், கல்லூரிக்கு நூலகம் அமைக்கவும், கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை நிறைவேற்றிதரக்கோரி பல்கலை.,க்கு புகார் தெரிவித்துள்ளனர்.

ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பல்கலை., மவுனம் சாதிக்கிறது.
இதனையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன் மாணவ,மாணவிகள் கல்லூரி யில் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பல்கலை., எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நேற்று காலை கல்லூரியில் வகுப்புகள் துவங்கியது.

மாணவ, மாணவிகள் மீண்டும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வாசுதேவநல்லூர் தொகுதி எம்.எல்ஏ., துரையப்பாவை சந்தித்து முறையிட முடிவு செய்தனர். இதனால் அவரை சந்திக்க கல்லூரியில் இருந்து புறப்பட்டனர். ஆனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.


இதுகுறித்து தகவல் அறிந்த அவர் மாணவர்கள் கோரிக்கைகள் குறித்து பல்கலை., அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசியதாக தெரிகிறது.விரைவில் ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்படுவர் என பல்கலை தரப்பிலிருந்து எம்.எல்.ஏ.விடம் உறுதியளிக்கப்பட்டதாக தெரிகிறது.

பின்னர் அவர் மாணவர்களிடம் பல்கலைக்கழகம் கூறிய தகவலை தெரிவித்தார்.நகராட்சி தலைவர் சங்கரபாண்டியனும் மாணவர்களை நேரில் சந்தித்து பல்கலை., பதிலை தெரிவித்தார்.

பல்கலை.,யின் பதிலால் சமாதானம் அடைந்த மாணவர்கள் கலைந்து சென்றனர். இதனால் காலையில் கல்லூரி பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்தில் இன்ஸ்பெக்டர்கள் கடையநல்லூர் சபாபதி, வாசுதேவநல்லூர் சண்முகவேல் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

திருநெல்வேலி போஸ்ட் ஆபீசில் சூரிய ஒளி லாந்தர் விளக்குகள் விற்பனை


திருநெல்வேலி போஸ்ட் ஆபீசில் சூரியஒளி லாந்தர் விளக்குகள் விற்பனை துவங்கியது.

நாடு முழுவதும் முக்கிய போஸ்ட் ஆபீஸ்களில் சூரியஒளி மூலம் சார்ஜ் செய்யப்படும் விளக்குகள் விற்பனை துவங்கியுள்ளது. இதற்காக சூரியஒளி சார்ஜர் விளக்குகள் தயாரிக்கும் கம்பெனியுடன் அஞ்சல்துறை ஒப்பந்தம் நிறைவேற்றியுள்ளது.

நெல்லை ஸ்ரீபுரம் போஸ்ட் ஆபீசில் டி-லைட் எஸ். 300, எஸ். 20 ரக சூரிய லாந்தர் சார்ஜர் விளக்குகள் விற்பனை நேற்று துவங்கியது. அஞ்சல்துறை கோட்ட கண்காணிப்பாளர் சாந்தக்குமார் முதல் விற்பனையை துவக்கி வைத்தார். உதவி கண்காணிப்பாளர் செல்வராஜ், தபால் அதிகாரி கடற்கரையாண்டி, வணிக அதிகாரி கனக சபாபதி கலந்து கொண்டனர்.

டி.லைட் எஸ். 300 சூரியலாந்தர் விளக்கை 8 மணி நேரம் சூரிய ஒளியில் சார்ஜ் செய்தால் 4 அடுக்கு முறையில் போதிய வெளிச்சம் தரும். இதன் மூலம் மொபைல் போனை சார்ஜ் செய்யலாம். எங்கும் எளிதாக எடுத்து செல்லாம். இதன் விலை ரூ. 1,699.

டி.லைட் எஸ். 20 சூரியலாந்தர் விளக்கு அரிக்கேன் விளக்கு மாடலில் வடிவமைக்கப்பட்டது. 8 மணி நேரம் சூரியஒளி சார்ஜ் செய்தால் 8 மணி நேரம் வெளிச்சம் தரும். 2 நிலை வெளிச்சம் தரும். 50 ஆயிரம் மணி நேர ஆயுள் கொண்டது. இதன் விலை ரூ. 549. இரு விளக்குகளும் அமெரிக்க வடிவமைப்பு கொண்டது. 2 ஆண்டு வாரண்டி உண்டு.

சூரியஒளி அறவே இல்லாத காலங்களில் செல்போன் சார்ஜர் மூலம் விளக்குகளை சார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த விளக்குகள் போஸ்ட்ஆபீஸ்களில் மட்டும் விற்பனை செய்யப்படும். விளக்குகளுக்கு தேவையான ஸ்பேர் பாகங்கள் போஸ்ட் ஆபீசில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என அஞ்சல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
விற்பனை துவங்கிய சிறிதுநேரத்தில் ஏராளமானோர் சூரியஒளி சார்ஜர் விளக்குகளை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.