Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

வறட்சியின் கோரப்பிடியில் தென்மாவட்டங்கள் :3 மாவட்ட விவசாயிகள் உண்ணாவிரதம் போராட்ட எச்சரிக்கை


தமிழகத்தில் வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி மூன்று மாவட்ட விவசாயிகளை திரட்டி வரும் 6ந்தேதி கோவில்பட்டியில் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறுவதாக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் பருவமழை பொய்த்துப் போனதில் தென்மாவட்டங்கள் கடும் வறட்சிக்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் முற்றிலும் விவசாயம் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக விவசாயிகள் சங்கம் தெரிவிக்கிறது. மேலும் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணமாக ஏக்குருக்கு 25 ஆயிரம் இழப்பீடு வழங்கவும், போர்க்கால அடிப்படையில் நிலங்களில் ஏற்பட்டுள்ள வறட்சியின் அளவை ஆய்வு செய்து நிவாரணத்தொகை மதிப்பீட்டை முடிவு செய்யவும், பாதிக்கப்பட்ட விவசாய தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தலா 10 ஆயிரம் வழங்கவும் வலியுறுத்தியுள்ளனர்.

தவிர சொந்த நிலமில்லாத குத்தகை விவசாயிகள் பயன்பெறும் வகையில் கம்ப்யூட்டர் பட்டா இல்லாமல் விஏஓ வழங்கும் சாகுபடி அடங்கல் வைத்து நிவாரணம் வழங்கவும், மத்திய அரசின் சார்பில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை கணக்கெடுக்க தனிக்குழு நியமிக்கவும், அதற்கான வேண்டுகோள் தீர்மானத்தை வருகின்ற சட்டசபை கூட்டத்தொடரில் இயற்றவும், மத்திய அரசு திட்டத்தின் கீழ் இன்ஸ்சூரன்ஸ் செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விவசாய கூட்டுறவு கடன்கள், நாட்டுடமையாக்கப்பட்ட பாங்க் கடன்களை ரத்து செய்யவும், விவசாய குடும்ப அனைத்துதரப்பு மாணவ மாணவிகளின் கல்விக்கடன், கல்விக்கட்டணம் உள்பட அனைத்தையும் இந்தாண்டிற்கு தள்ளுபடி செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

இதுதவிர திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா வரகனூரைச் சேர்ந்த விவசாயி ஜெகநாதன் விவசாய கடன் பிரச்னையால் தற்கொலை செய்து கொண்டார். ஆகவே அவரது குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் மாவட்ட விவசாயிகளை திரட்டி வரும் 6ந்தேதி கோவில்பட்டி ஆர்டிஓ ஆபிஸ் முன்பு உண்ணாவிரத அறப்போராட்டம் நடத்தப்போவதாக தமிழக விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இப்போராட்டத்திற்கு சங்க மாநில தலைவர் டாக்டர் சிவசாமி தலைமை வகிப்பதாகவும், உண்ணாவிரத போராட்டத்தில் விவசாயிகள், விவசாய கூலிதொழிலாளர்கள் உள்பட பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர். இவ்வாறு தமிழக விவசாயிகள் சங்க தூத்துக்குடி மாவட்ட தலைவர் மாரிச்சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

செங்கோட்டை - நெல்லை கூடுதல் ரயில் இயக்க முஸ்லிம் மாணவர் பேரவை (MSF) வலியுறுத்தல்!


தென்காசி முஸ்லிம் மாணவர் பேரவை செயலாளர் செய்யது அலி பாதுஷா தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

செங்கோட்டை - நெல்லை பயணிகள் ரயில் தினசரி காலை, மாலை என இருமுறை இயக்கப்பட்டு வருகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன் மீட்டர்கேஜ் ரயில் இயங்கும் போது நெல்லை-கொல்லம், நெல்லை - செங்கோட்டை என கூடுதல் சேவை இருந்தது. இதனால் ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள் சிறிய வர்த்தகங்கள் பயனடைந்து வந்தனர்.தற்போது அகல பாதையில் ரயில் சேவை துவங்கியது முதல் அதிகமான மக்கள் பயணிப்பதால் ரயிலின் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்யும் நிலை உள்ளது. மேலும் அதிகமான பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளும் பயன்பெற்று வரும் இந்த வழித் தடத்தில் கூடுதலாக ஒரு ரயில் சேவை மிகவும் அவசியமான தாகவும், தேவையானதாகவும் இருக்கிறது.

ஆகவே பொதுமக்கள் நலன் கருதி கூடுதல் ரயில் விடவும், கீழப்புலியூர் ரயில் நிலையத்தில் போதுமான அடிப்படை வசதிகளான பயணிகள் நிழற்குடை, இருக்கை வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி நடை மேடை வசதி உட்பட அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.எனவே நெல்லை - செங்கோட்டை வழித் தடத்தில் கூடுதல் ரயில் இயக்கவும், அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.

நீலகிரியில் தொடரும் பனிப்பொழிவு: 812 ஹெக்டேரில் தேயிலை செடிகள் கருகல்


நீலகிரியில் பல ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தேயிலை சாகுபடி செய்யப்படுகிறது. தேயிலை தோட்டங்களில் பறிக்கப்படும் பசுந்தேயிலை, தொழிற்சாலைகள் மூலம் தேயிலை தூளாக உற்பத்தி செய்யப்பட்டு, குன்னூர் தேயிலை வர்த்தகர்கள் சங்க ஏல மையம் மற்றும் கூட்டுறவு தேயிலை ஏல மையத்தின் மூலம் வாரந்தோறும் விற்கப்படுகிறது. பொதுவாக, நீலகிரியில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நிலவும் பனிப்பொழிவால் தேயிலைச் செடிகள் பனியில் பாதிக்கப்பட்டு மகசூல் குறையும். இந்த பாதிப்பு, ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இயல்பு நிலைக்கு திரும்பும்.

இந்தாண்டு, நீலகிரியில் மாறுபட்ட காலநிலை நிலவுகிறது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் மட்டுமே நிலவும் பனியின் தாக்கம் இந்தாண்டு ஜனவரி மாதம் முடிந்த நிலையிலும் தொடர்வதால், தேயிலை வர்த்தக வருமானத்தில் அடி விழுந்துள்ளது.


நீலகிரியில் பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக உள்ளது. கிராமப்புறங்களில் 0, 1 டிகிரி வெப்பநிலை நிலவியதால் பல இடங்களில் உறைபனி விழுந்துள்ளது.
இதனால், ஏலத்திற்கு வரும் தேயிலைத் தூள் வரத்து குறைந்து கொண்டே வருகிறது.

குன்னூர் தேயிலை ஏல மையத்தில் ஜனவரி முதல் வாரம் நடந்த முதல் ஏலத்தில் 15.78 லட்சம் கிலோ விற்பனைக்கு வந்தது. இதில் 95 சதவீதம் விற்பனையான நிலையில், பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையேயான ஜனவரி இரண்டாம் வாரத்தில் ஏற்பட்ட பதட்டத்தால் ஏலங்களில் தேயிலை தேங்கியது.

இரண்டாவது ஏலத்தில் 19 லட்சமும், 3வது ஏலத்தில் 16.97 லட்சம் கிலோ தேயிலை தூள் விற்பனைக்கு வந்த நிலையில், இரண்டாம் வாரத்தில் 81 சதவீதமும், மூன்றாம் வாரம் 71 சதவீதமாக குறைந்தது. கடந்த மாத இறுதியில் நடந்த நான்காவது ஏலத்தில் 15.03 லட்சம் கிலோவாக தேயிலை தூள் வரத்து குறைந்தது.

வழக்கத்திற்கு மாறாக இந்தாண்டு நகர்புறங்களில் கூட பனியின் தாக்கத்தை அதிகமாக உணர முடிந்தது. பனியால் நீலகிரியில் 812 ஹெக்டர் பரப்பளவிலான தேயிலை தோட்டங்கள் கருகியுள்ளன; கருகிய தேயிலை தோட்டங்களில் மீண்டும் பசுந்தேயிலை தழைத்து வளர மூன்று மாதங்கள் பிடிக்கும், இதனால் வர்த்தக இழப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2வது பசுமை புரட்சி : சோனியாவின் நம்பிக்கை


"நாட்டில், இரண்டாவது பசுமைப் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பது, நம் கனவு. கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டம், இரண்டாவது பசுமை புரட்சியை ஏற்படுத்துவதில், முக்கிய பங்கு வகிக்கும்,'' என, காங்., தலைவர் சோனியா பேசினார். மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி அளிப்பு திட்டம் தொடர்பான, மாநாடு, டில்லியில் நேற்று நடந்தது. இதில், காங்., தலைவரும், தேசிய ஆலோசனை கவுன்சில் தலைவருமான, சோனியா பேசியதாவது: கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை, தீவிரமாக நடைமுறைப்படுத்துவதன் மூலம், நாட்டின் விவசாய உற்பத்தியை, பல மடங்கு அதிகரிக்க முடியும். இந்த திட்டத்தை, இதுவரை, முழு அளவில், நாம் பயன்படுத்தவில்லை. இந்த திட்டத்தால், நீர்ப்பாசன வசதிகளை ஏற்படுத்துவது, விளை நிலங்களை உருவாக்குவது உள்ளிட்ட, பல்வேறு பயன்களை அடைய முடியும். விவசாயத்தில், நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்துவதன் மூலமும், விவசாய உற்பத்தியை பெருக்க முடியும்.

நாட்டில், இரண்டாவது பசுமைப் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பது, நம் கனவு. இந்த கனவை நிறைவேற்றுவதற்கு, கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டம், முக்கிய பங்கு வகிக்கும். அதிகமான விவசாயிகளை, இந்த திட்டத்தில் ஈடுபட வைப்பதன் மூலம், இந்த இலக்கை, நாம் எட்ட முடியும். இந்த திட்டத்தை நடைமுறைப் படுத்துவதில், பல்வேறு சவால்களும், இடையூறுகளும் உள்ளன. இந்த திட்டத்தின் நிதி, தவறாக பயன்படுத்தப் படுவதாகவும், இதில், ஊழல் நடப்பதாகவும், புகார்கள் வருகின்றன. இதற்கு, முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். நவீன தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்துவதன் மூலம், இந்த பிரச்னையை சமாளிக்க முடியும். திட்டத்தின் செயல்பாடுகளை, உரிய கால இடைவெளியில், தணிக்கை செய்ய வேண்டும். திட்டத்தில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு, அவர்களின் பெயர்களை பதிவு செய்த, 15 நாட்களுக்குள் வேலை வழங்க வேண்டும். அவர்களுக்கான கூலி, குறித்த நேரத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு சோனியா பேசினார். இந்த விழாவில், பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது: கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம், மக்களுக்கு நேரடியான நிதி வசதி கிடைப்பதோடு, மறைமுகமாகவும், பல நன்மைகள் கிடைக்கும். மக்களுக்கு இடையே நிகழும் ஏற்றத் தாழ்வுகளை குறைக்கவும், இந்த திட்டம், பெரிய அளவில் உதவும். வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களில், இந்த திட்டத்தின் கீழ், வங்கி கணக்குகளை, மக்கள் துவங்கினால், நேரடி மானிய திட்டத்தை, சிறப்பாக செயல்படுத்த முடியும். மக்களுக்கு பயன் அளிக்கும், இதுபோன்ற பல திட்டங்களை, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, செயல்படுத்தி வருகிறது. கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டப் பட்டியலில், மேலும், 30 பணிகள், புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக, விவசாயத்தின் மூலமாக, வேலை வாய்ப்பை உருவாக்கும் பணிகள், இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இவ்வாறு, பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.