Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 29 மே, 2013

திருநெல்வேலியில் பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் விரைவில் துவக்கம் குப்பை கிடங்கில் கலெக்டர் ஆய்வு

பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் விரைவில் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் துவக்கப்படுகிறது.

நெல்லை மாநகராட்சி ராமையன்பட்டியில் மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகிறது. இங்குள்ள குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்துக்கள் ஏற்பட்டு வருவதால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக கலெக்டர் சமயமூர்த்தியிடம், புகார் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ராமையன்பட்டி குப்பை கிடங்கை நேற்று நேரில் பார்வையிட்டு கலெக்டர் ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் கூறியதாவது:
குப்பை கிடங்கில் வருங்காலங்களில் இதுபோன்ற தீ எரிவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குப்பைகள் பகுதி, பகுதிகளாக பிரிக்கப்பட்டு கொட்ட நடவடிக்கை எடுக்கப்படும். குப்பை கொட்டும் பகுதிகளை சுற்றி தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்கள் பதிக்கப்படும். இதன் மூலம் திடீர் தீ விபத்துக்கள் தடுக்கப்படும்.

குப்பைகளில் வரும் கழிவுகள் பிரிக்கப்பட்டு பிளாஸ்டிக் கழிவுகள் தனியாக கொட்டப்படும். மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் உள்ளது. குப்பை கிடங்கில் பணியாற்றும் பணியாளர்கள் கவனத்துடன் பணியாற்றி தீ ஏற்படாத வகையில் தடுக்க வேண்டும்.இவ்வாறு கலெக்டர் கூறினார்.
இதில் மாநகராட்சி கமிஷனர் (பொறுப்பு) மோகன், பி.ஆர்.ஓ மாரியப்பன், தீயணைப்பு அலுவலர் பத்மகுமார், உதவி தீயணைப்பு அலுவுவலர் குமரேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் அணைகளில் தண்ணீர் தட்டுப்பாடால் விவசாயிகள் அவதி

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் அணைகள் அனைத்தும் வறண்டு காணப்பட்டு வரும் நிலையில் கார்சாகுபடி மேற்கொள்வதில் விவசாயிகள் பெரும் தயக்கம் காட்டி வருகின்றனர். பிசான சாகுபடியும் ஏமாற்றிவிட்ட நிலையில் கார் சாகுபடியும் பொய்த்துவிடுமோ என்ற ஏக்கத்தினால் விவசாயிகள் பெரும் ஆதங்கத்துடன் காணப்பட்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் கோடை மழை பொய்த்துவிட்ட நிலையில் வறட்சி மாவட்டமாக நெல்லை மாவட்டமும் அறிவிக்கப்பட்டது. இதனிடையில் கடையநல்லூர் தொகுதியை பொறுத்தவரை சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பிசான சாகுபடி நிலங்கள் போதுமான பருவமழையின்றி தரிசாக விடப்பட்டன. இத்தொகுதியில் உள்ள கருப்பாநதி, அடவிநயினார், குண்டாறு ஆகிய அணைகளுக்குட்பட்ட பாசன விவசாயிகள் பிசான சாகுபடியை போதுமான முறையில் மேற்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். அணைப்பகுதியை ஒட்டியுள்ள விவசாயிகள் கூட விளைந்த பயிரை அறுவடை செய்ய பெரும்பாடுபட்டனர்.

இதனிடையில் தற்போது இத்தொகுதியில் உள்ள கருப்பாநதி அணை முற்றிலுமாக வறண்டு வரும் ‹ழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அடவிநயினார் அணைக்கட்டின் நீர்மட்டமும் இதே நிலையில் தான் காணப்பட்டு வருகிறது. குண்டாறு அணைக்கட்டை பொறுத்தவரை கார்சாகு போதுமான தண்ணீர் இல்லாத நிலைதான் இருந்து வருகிறது. இதனால் கடையநல்லூர் பகுதியில் கார் சாகுபடி செய்ய விவசாயிகள் பெரும் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனை மேற்கொள்ள முதற்கட்ட பணியாக துவங்கவேண்டிய நாற்றுபாவும் பணிகள் கூட ஒரு சில இடங்களில்தான் காண முடிகிறது.

பருவழையும் கைகொடுக்காத நிலையில், கார் சாகுபடிக்கான மழையும் இல்லாததால் விவசாயிகள் பெரும் ஏக்கத்துடன் இருந்து வருகின்றனர்.

காது கேளாதவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்?

தமிழகத்தில், 1,000 குழந்தைகளில், ஆறு பேருக்கு செவித்திறன் குறைபாடு உள்ளது. இது, தேசிய அளவைவிட, மூன்று மடங்கு அதிகம் என, ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.

சென்னை, இ.என்.டி., ஆராய்ச்சி அறக்கட்டளை, 2003 முதல், 2012 வரை, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் செவித்திறன் குறைபாடு குறித்த பரிசோதனை முகாமை நடத்தியது. மொத்தம், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு, இப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் சராசரியாக, 1,000 குழந்தைகளில், ஆறு பேருக்கு, செவித்திறன் குறைபாடு உள்ளது கண்டறியப்பட்டு உள்ளது. ஆண், பெண் என, இருபாலின குழந்தைகளிலும், இந்த குறைபாடு சரிசமமாகவே உள்ளது. இது, தேசிய சராசரி அளவைவிட, மூன்று மடங்கும், சர்வதேச அளவைவிட, ஆறு மடங்கும் அதிகம் என, தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து, அறக்கட்டளை நிர்வாக இயக்குனர், மோகன் காமேஸ்வரன் கூறியதாவது: சென்னை, கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், 120க்கும் மேற்பட்ட, கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில், பரிசோதனை முகாம் நடத்தினோம்.

இதில், செவித்திறன் குறைபாடு கண்டறியப்பட்டோரில், மூன்றில், இரண்டு பங்கு குழந்தைகளின் பெற்றோர், சொந்தத்தில் திருமணம் செய்துக் கொண்டவர்கள் என்பது தெரியவந்தது.

குறைபிரசவம், குழந்தைகளுக்கு வரும் மஞ்சள் காமாலை, கருவில் மற்றும் குழந்தை பிறந்த பின் ஏற்படும் தொற்று போன்றவை, குழந்தைகளின் செவித்திறன் குறைபாடிற்கு காரணங்கள்.இளம் தலைமுறையினர், நெருங்கிய உறவுக்குள் திருமணம் செய்துக் கொள்வதை தவிர்ப்பது, இக்குறைபாட்டை வரும் முன் தடுக்க, பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகியவற்றால், காதுகேளாத குழந்தைகள் அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் மாறுவதை தடுக்கலாம். இவ்வாறு, மோகன் காமேஸ்வரன் கூறினார்.