Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 8 மார்ச், 2013

சென்னை பல்கலைகழக தொலைதூர கல்வியில் பல லட்சம் மோசடி


சென்னை பல்கலையில், தொலைதூர கல்வி நிறுவனம் மூலம், இளங்கலை, முதுகலை மற்றும் பட்டய படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், கல்வி பயில்கின்றனர்.

கல்வியாண்டின் போது, நேர்முக வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தொலைதூர கல்வி மாணவர்களுக்கு, இதுவே, நேரடி வகுப்புகளாக அமைகின்றன. அறிவியல் துறையில், முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு, செய்முறை தேர்வுகளும் நடத்தப்படும்.

கல்லூரி பேராசிரியர்கள் அல்லது பல்கலைக்கழக துறை தலைவர்கள், நேரடி வகுப்பு மற்றும் செய்முறை தேர்வுகளுக்கு, ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுகின்றனர். நேரடி வகுப்புகள் மற்றும் செய்முறை தேர்வு, எழுத்துத் தேர்வு ஆகியவற்றை நடத்த, பல்கலைக்கழகம் முன்பணம் வழங்குகிறது.

இப்பணத்தைக் கொண்டு, தேர்வுகளை நடத்திய பின், அதற்குரிய கணக்குகளை, பல்கலைக் கழகத்தில், ஒருங்கிணைப்பாளர்கள் தாக்கல் செய்ய வேண்டும். இக்கணக்குகளை சரி பார்த்த பின், பல்கலையின் சிண்டிகேட் மற்றும் செனட் குழுக்கள் அனுமதி அளிக்கும். இதன் பின், இச்செலவுகள் ஏற்றுக் கொள்ளப்படும்.

கடந்த ஏப்ரல், 2011 மற்றும், மே 2012ல், தொலைதூர கல்வி நிறுவனங்கள் மூலம் நடந்த, முதுகலை அறிவியல் மாணவர்களுக்கான, நேர்முக வகுப்புகள் மற்றும் செய்முறை தேர்வுகளுக்கு, வேலூர், ஊரீஸ் கல்லூரி, டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, சென்னை பல்கலைக்கழக தாவரவியல், விலங்கியல் துறை உள்ளிட்டவை ஒருங்கிணைப்பாளர் பணியை மேற்கொண்டன.

இதற்காக, ஊரீஸ் கல்லூரிக்கு 2.52 லட்சம் ரூபாய், டி.ஜி.வைஷ்ணவ கல்லூரிக்கு,16.33 லட்சம் ரூபாய், சென்னை பல்கலைக்கழக தாவரவியல் துறைக்கு, 9 லட்ச ரூபாய், விலங்கியல் துறைக்கு, 16.33 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இதற்குரிய கணக்கு, 2012 மே 31ம் தேதி நடந்த, சிண்டிகேட் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

அப்போது, 34 லட்சத்து 33 ஆயிரத்து 500 ரூபாய் பெறப்பட்டதற்கு, 32. 25 லட்சம்ரூபாய்க்கு தான் கணக்கு காட்டப்பட்டது. மீதமுள்ள, 2.8 லட்சம் ரூபாய்க்கு, செலவின ஆதாரங்கள் கொடுக்கப்படவில்லை. ஆனால், 34 .33 லட்சம் ரூபாய்க்கு செலவின அனுமதியளித்து, சிண்டிகேட் மற்றும் செனட் குழுக்கள் அனுமதி அளித்து விட்டன.

இந்த, விதிமீறல் இதோடு நிற்காமல், இதை முன்னுதாரணமாகக் கொண்டு, தொலைதூர கல்வி வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடத்திய, மேலும் நான்கு மையங்களுக்கு சலுகை காட்டப்பட்டுள்ளது. இந்த நான்கு மையங்களுக்கு, வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடத்த, 26.50 லட்ச ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. இத்தொகையில், 7.3 லட்ச ரூபாய்க்கான, செலவினத்துக்கு ஆதாரங்கள் அளிக்கப்படவில்லை.

இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கூறியதாவது: சென்னை பல்கலைக்கழகம், தன்னாட்சி என்ற காரணத்தை வைத்து கொண்டு, இவ்வாறு எளிதில் அனுமதி வழங்கப்படுகிறது.

இதுவே, அரசு நிறுவனமாக இருந்தால், யார் இதற்கு பொறுப்பாளரோ, அவரின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது. முறைகேடாக, கணக்குகளுக்கு அனுமதி வாங்கும் போது, அவை கூட்ட விவாத பொருளில் இடம் பெறாமல், கடைசி நேரத்தில், டேபிள் ஐட்டமாக கொண்டு வரப்படுகிறது. இதனால், அங்குள்ளவர்களுக்கு, அது பற்றி முழு தகவல் தெரியாமலே, எளிதில் அனுமதி வழங்கப்பட்டு விடுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

நிரபராதிகளான முஸ்லிம் இளைஞர் களை சிறையில் அடைத்து வைத்திருப்பது மதசார்பின்மை ஜனநாயகத்திற்கு விரோதமானது :நாடாளுமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முழக்கம்


நாடாளுமன்ற மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயலாளர் இ.டி. முஹம்மது பஷீர் பேசிய தாவது,

குடியரசு தலைவர் உரையில் பாரா 30 மற்றும் 31-ல் சிறுபான்மையினர் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. சிறுபான்மையினருக்கு மத்திய அரசு கொஞ்சம் செய்திருக்கிறது என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

மத்திய அரசின் வரவு செலவு திட்டத்தில் சிறுபான்மை நலத் துறைக்கும், மவ்லானா அபுல் கலாம்ஆசாத் பவுண்டே ஷனுக்கும் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் சிறுபான்மையினருக்கான மிக முக்கியமான பிரச்சினை சரியாக கவனிக்கப்படவில்லை என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். ஏனென்றால், மத்திய அரசு சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு பிரச்சினையை மத்திய அரசு மறந்து விட்டது எனக் கூறிக்கொள்ள விரும்பு கிறேன்.

இட ஒதுக்கீடு தேசவிரோதம் அல்ல:
இங்கே பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மத அடிப் படையில் இட ஒதுக்கீடு செய்வது ஏதோ தேச விரோத செயல் என்பது போல் குறிப்பிட்டார்கள். சிறுபான்மை யினரை பொறுத்தவரை முக்கிய மான பிரச்சினை இடஒதுக்கிடு மட்டுமே. இதில் அரசு சிரத்தையுடன் நடந்துகொள்ளா விட்டால் அது மிகுந்த வருத்தத்திற்கு உரியது எனக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

பல்வேறு ஆணையங்கள் இட ஒதுக்கீட்டுக்காக எடுக்கப் பட வேண்டிய உறுதியான நடவடிக்கை குறித்து பரிந்துரைகள் செய்து விட்டன. ஆனால் சிறுபான்மையினர் இட ஒதுக்கீட்டிற்காக இந்த அரசு என்ன செய்திருக்கிறது? நான் அரசின் நேர்மையை சந்தேகிக்க வில்லை. இடஒதுக்கீடு பிரச் சினையில் அரசு மிக மெத்தன மாக செயல்படுகிறது இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தனது 2 - வது பதவி காலத்தை நிறைவு செய்திருக்கும் கட்டத்திலாவது சிறுபான்மை இடஒதுக்கீடு கொள்கையில் உறுதியான நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

அப்துல் நாசர் மதானிக்கு அநீதி:
மத்திய அரசு கொண்டு வரும் தீவிரவாத தடுப்பு சட்டத்தின் நோக்கம் என்ன? சட்ட விரோத நடவடிக்கைகளை தடுப்பதற்காகவே அது இருக்க வேண்டும். அப்படி என்றால் அது சரி ஆனால் அந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படு கிறது.

ஆயிரக்கணக்கான முஸ் லிம் இளைஞர்கள் சிறைச் சாலைகளில் அடைக்கப் பட்டிருப்பதை நாம் அறிவோம். இது குறித்து அரசு அக்கறை யோடு பரிசீலனை செய்ய வேண்டும். அந்த சட்டம் யாரை யும் கைது செய்து ஜெயிலில் அடைக்கும் உரிமையை காவல் துறைக்கு வழங்கி விடக் கூடாது.

எங்கள் பகுதியை சேர்ந்த ஒரு பிரமுகர் சிறையில் இருக்கிறார், அவர் பெயர் அப்துல் நாசர் மதானீ ,அவர் முஸ்லிம் அறிஞர். அவர்தமிழ் நாட்டில் 9 ஆண்டுகள் சிறை யில் அடைக்கப் பட்டிருந்தார் கடைசியில் எல்லா குற்றச்சாட்டு களிலிருந்தும் நிரபராதி என விடுவிக்கப் பட்டார்.

பிறகு அவர் கர்நாடக சிறையில் 2 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளார். அவர் ஒரு பயங்கரவாதி என்று முத்திரை குத்தப்பட்டுவிட்டது. அவரது வலது கண் பார்வை பாதிக்கப்பட்டுவிட்டது. அவர் பல்வேறு நோய்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள் ளார். அவருக்கு நீதி வழங்கப்பட வில்லை. அவருக்கு ஜாமீன் மறுக்கப்படுகிறது.

எனவே, இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசை கேட்டுக் கொள்கிறேன். இந்த மாதிரியான நடைமுறையை அனுமதிக்க கூடாது. இது மதசார்பின்மையின் அடிப்படை தத்துவத்திற்கு விரோதமானது. இவ்வாறு இ.டி.முஹம்மது பஷீர் குறிப்பிட்டார்.

சான்றிதழ்கள், ஓய்வூதியம் வழங்க இழுத்தடிக்கும் அதிகாரிகளுக்கு அபராதம்


பாஸ்போர்ட், ஓய்வூதியம், பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட, பொதுமக்களுக்கான சேவைகளை, குறித்த நேரத்தில் வழங்காமல், இழுத்தடிக்கும் அதிகாரிகளுக்கு, கடிவாளம் போடப்பட உள்ளது. சேவைகளை குறித்த நேரத்தில் வழங்காத அதிகாரிகளுக்கு, 50 ஆயிரம் ரூபாய் வரை, அபராதம் விதிக்கப்பட உள்ளது. இது தொடர்பான மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை, நேற்று ஒப்புதல் அளித்தது.

பாஸ்போர்ட் பெற வேண்டுமானால், பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு மாதக் கணக்கில் அலைய வேண்டும். தள்ளாத வயதில் ஓய்வூதியம் பெறச் செல்லும் பெரியவர்களுக்கு, குறித்த நேரத்தில், ஓய்வூதியம் வழங்கப்படுவது இல்லை. பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் பெறுவதற்கு, வருவாய் துறை அலுவலகத்துக்கு, நடையாய் நடந்தாலும், அதிகாரிகளின் மனக் கதவுகள், திறக்கவே திறக்காது. "இன்று போய் நாளை வா' என்ற, ரெடிமேட் பதிலை, உதட்டின் மீது தேக்கி வைத்தபடி, பொதுமக்களை விரக்தியின் உச்சத்துக்கு தள்ளுவது, அதிகாரிகளுக்கு கை வந்த கலை. பொதுமக்களால், காலம் காலமாக கூறப்பட்டு வந்த, இந்த குறைகளுக்கு, விரைவில் விடிவு பிறக்க உள்ளது. "பொதுமக்களுக்கான சேவையை குறித்த நேரத்தில் வழங்குவதை உறுதி செய்யும் வகையிலான மசோதாவை நிறைவேற்ற வேண்டும்' என, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

இதையடுத்து, மக்களுக்கான சேவைகள் மற்றும் பொருட்களை, குறித்த காலத்தில் வழங்கும் மற்றும் குறை தீர்க்கும் மசோதாவுக்கான வரைவை, மத்திய அரசு தயாரித்தது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மசோதாவில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: பாஸ்போர்ட், ஒய்வூதியம், பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் உள்ளிட்ட சேவைகளை, பொதுமக்களுக்கு குறித்த நேரத்தில் வழங்க வேண்டும். எந்தெந்த சேவைகளை, பொருட்களை, எவ்வளவு நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

பொதுமக்களுக்கு குறித்த நேரத்தில் சேவைகளை வழங்குவதற்கும், அவர்களின் குறைகளை கேட்பதற்கும், உதவி மையம், வாடிக்கையாளர் மையம், பொதுமக்கள் ஆதரவு மையம் போன்றவற்றை அமைக்க வேண்டும். மத்திய மற்றும் மாநில அளவில், பொதுமக்கள் குறைதீர்ப்பு கமிஷனை அமைக்க வேண்டும். இந்த கமிஷன்கள் மூலம், தங்களுக்கு சரியான நீதி கிடைக்கவில்லை என, பொதுமக்கள் கருதினால், கமிஷன் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, மத்தியில் செயல்படும் லோக்பால் அமைப்பு அல்லது மாநிலங்களில் செயல்படும் லோக்ஆயுக்தா அமைப்பு ஆகியவற்றில் முறையீடு செய்யலாம். மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் அனைத்து சேவைகளும், இந்த மசோதா வரம்பிற்குள் வரும். பொதுமக்களுக்கான சேவைகளை குறித்த நேரத்தில் வழங்காமல், தாமதிக்கும் அதிகாரிகளுக்கு, கடமையை செய்ய தவறியதற்காக, 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். இது போன்ற முக்கிய அம்சங்கள், இந்த மசோதாவில் இடம் பெற்றுள்ளன. மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து, இந்த மசோதா, விரைவில் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.