Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 23 ஜூலை, 2012

மதுவை ஒழிக்க இந்திய அளவில் போராட்டங்களை நடத்த வேண்டும் : குமரி அனந்தன்

 மதுவை ஒழிக்க அனைவரும் ஒன்று திரண்டு போராட வேண்டும் என குமரி அனந்தன் ஞாயிற்றுக்கிழமை அழைப்பு விடுத்தார்.
 தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, தென்னிந்திய காந்திய கிராம நிர்மாண சேவா தளம் சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் பாளையங்கோட்டை ஜவஹர் திடலில் நடைபெற்றது.
 இந்த உண்ணாவிரதத்திற்கு தலைமை வகித்து, காந்தி பேரவையின் தலைவர் குமரி அனந்தன் பேசியதாவது: திமுக அரசு கொண்டு வந்த பல திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா ரத்து செய்துள்ளார். ஆனால், திமுகவால் கொண்டு வரப்பட்ட மதுவை ஒழிக்க முதல்வர் ஏன் முன்வரவில்லை. மதுவையும் ஒழிக்க முதல்வர் முன்வரவேண்டும்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். இதற்காக அவருக்கு துணை நிற்க காந்தியவாதிகளான நாங்கள் தயாராக இருக்கிறோம்.
 மது மனித குலத்துக்கு எதிரானது.


 திருக்குறளில் மதுவின் கொடுமையை வள்ளுவர் அழகாக கூறியுள்ளார். அதுபோல சிலப்பதிகாரம், கம்பராமாயணம் போன்ற தமிழ் இலக்கியங்களில் மதுவின் தீமை எடுத்துக் கூறப்பட்டுள்ளது.


 1920-ம் ஆண்டில் மகாத்மா காந்தி காங்கிரஸ் கட்சிக்கான நிறுவன திட்டங்களை கொடுத்தார். அதில் மதுவை ஒழிக்க வேண்டும் என தெளிவாகக் கூறியுள்ளார். தீண்டாமைக்கு அடுத்த தீமை மது என்று காந்தி சொன்னார். ஆனால், இன்று காங்கிரஸ் ஆளும் இடங்களில் கூட மது விற்பனை நடைபெறுகிறது.


 பெருந்தலைவர் காமராஜர் முதன் முதலில் கைது செய்யப்பட்டது மதுரையில் கள்ளுக்கடைக்கு எதிராக மறியல் செய்தபோது தான். எந்த மதத்திலும் மதுவுக்கு அனுமதி இல்லை. மது ஒழிப்பு என்பது ஒரு கட்சி சார்ந்த பிரச்னை இல்லை. மக்களுக்கு பயன்தரக்கூடிய விஷயம். மதுவை ஒழிக்க இந்திய அளவில் போராட்டங்களை நடத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
 மதுக்கடைகளை மூட வேண்டும் என முஸ்லிம் அமைப்புகள் கூறுகின்றன, பா.ம.க., போராட்டம் நடத்துகிறது. திருமாவளவன் போன்றோர் வலியுறுத்துகின்றனர். அனைவரும் ஒன்றிணைந்தால் மதுவை நிச்சயம் ஒழிக்க முடியும். எனவே, அனைவரும் ஒன்றுபட்டு மதுவை ஒழித்து காட்டுவோம், வெற்றி பெறுவோம் என்றார் குமரி அனந்தன்.