Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 28 ஜனவரி, 2013

இளைஞர்களே நாட்டின் பலம்: பிரதமர் மன்மோகன் சிங்

இளைஞர் சக்தியை சரியான வழியில் பயன்படுத்தினால், நாடு சந்திக்கும் பல்வேறு சவால்களை எளிதாக சமாளிக்கலாம் என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

 டில்லியில் என்.சி.சி., மாணவர்களிடையே பேசிய அவர், "இந்தியா இளைஞர்களின் தேசம். இளைஞர்களே நமது நாட்டின் மிகப்பெரிய பலம். முன்னெப்போதும் இல்லாத வகையில், இன்று இளைஞர்கள் தங்களது உரிமைகள் குறித்து நன்றாக அறிந்து வைத்துள்ளனர்.

இன்றைய இளைஞர்களிடையே, நாட்டை சீர்படுத்த வேண்டும் என ஆசை மிக அதிகமாக உள்ளது. இத்தகைய இளைஞர் சக்தியை நாம் முறையாக சரியான வழியில் பயன்படுத்தினால், நாடு இன்று சந்தித்து வரும் பல்வேறு பிரச்னைகளை, சவால்களை எளிதாக சமாளிக்கலாம்" என்று தெரிவித்தார்.

நேதாஜி விஷயத்தில் உண்மைகள் வெளிவரவில்லை


"நேதாஜி மாயமானது குறித்து, விசாரிப்பதற்காக, அமைக்கப்பட்ட குழுக்களுக்கு, மத்திய அரசிடமிருந்து, ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்காததால், இந்த விஷயத்தில், உண்மைகள் வெளிவரவில்லை,'' என, சுதந்திர போராட்ட வீரர், நேதாஜியின் மகள், அனிதா போஸ் கூறியுள்ளார்.இந்திய சுதந்திர போராட்ட வீரர், நேதாஜி சுபாஸ் சந்திர போஸ். நாட்டின் விடுதலைக்காக, இந்திய தேசிய ராணுவம் என்ற படைப் பிரிவை உருவாக்கியவர். 1945, ஆக., 18க்கு பின், நேதாஜியை பற்றிய தகவல் எதுவும் தெரியவில்லை.

விமான விபத்தில் இறந்து விட்டதாக, ஒரு தரப்பினர் தெரிவித்தனர். ஆனாலும், நேதாஜி எங்கு இருக்கிறார், அவரது நிலை என்ன என்ற விவரங்கள், மர்மமாகவே இருந்தன. இதையடுத்து, இது தொடர்பாக விசாரிப்பதற்காக, 1956, 1970 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில், விசாரணை கமிட்டிகள் அமைக்கப்பட்டன.முதல் இரண்டு விசாரணை கமிட்டிகளும், நேதாஜி, விமான விபத்தில் இறந்து விட்டதாக தெரிவித்தன. மூன்றாவது கமிட்டி, இதுதொடர்பாக, தைவானில் சென்று விசாரணை நடத்தியதாகவும், குறிப்பிட்ட நாளில், அப்படி ஒரு விமான விபத்து எதுவும் நிகழ வில்லை என்றும், தைவான் அரசு தெரிவித்துள்ளதாக கூறியிருந்தது.

இந்நிலையில், நேதாஜியின் மகள், அனிதா போஸ், கூறியுள்ளதாவது:நேதாஜி மாயமானது குறித்து, விசாரிப்பதற்காக, மூன்று விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த மூன்று விசாரணை குழுக்களுக்கும், அப்போது ஆட்சியில் இருந்த, மத்திய அரசுகளால், போதிய அளவில் ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்கவில்லை என்ற, முடிவுக்கு வர வேண்டியுள்ளது.
அரசின் ஆதரவு கிடைத்திருந்தால், நேதாஜி எங்கு சென்றார், அவருக்கு என்ன நேர்ந்தது என்பது பற்றிய, விவரங்கள் தெரிந்திருக்கும்.இவ்வாறு அனிதா போஸ் கூறினார்.

"மிஸ்டு கால்' அழைப்பு கொடுப்பதன் மூலம், 500 கோடி ரூபாய் அளவுக்கு, வர்த்தகம் நடக்கிறது


"மிஸ்டு கால்' என்ற வார்த்தையே பலருக்கு, வேம்பாக கசக்கும். அழைத்து பேசினால், காசு வீணாக போய்விடும் என நினைத்து, "மிஸ்ட் கால்' கொடுத்து, பேசும் சிக்கன நபர்கள் ஏராளமாக உள்ளனர். அத்தகைய நபர்களின் அழைப்புகளை ஏற்க, தயக்கம் காட்டுபவர்களும் உண்டு."மிஸ்டு கால்' கொடுப்பவர்களின் மனநிலையை மட்டுமே அடிப்படையாக வைத்து, இந்தியா மட்டுமின்றி, உலக நாடுகள் பலவற்றில், கோடிக்கணக்கில் வர்த்தகம் நடக்கிறது.இந்த புதிய முறை, 2011ம் ஆண்டில் தான் இந்தியாவில் பரவலானது. லோக்பால் மசோதா கோரி, சமூக ஆர்வலர், அன்னா ஹசாரே மேற்கொண்ட போராட்டங்களுக்கு ஆதரவாக, "மிஸ்டு கால்' கொடுக்குமாறு பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டனர்.

"மொபைல் போன்களில் முறையான அழைப்பு அளித்தால் பணம் செலவாகும்; "மிஸ்டு கால்' அழைப்புக்கு பணம் செலவாகாது' என்பதால், ஏராளமானோர், "மிஸ்டு கால்' கொடுத்தனர். 6 மாதங்களில், 2.5 கோடி பேர், அன்னா ஹசாரே போராட்டத்திற்கு, "மிஸ்டு கால்' மூலம் ஆதரவு அளித்தனர்.இதையடுத்து, பல முன்னணி நிறுவனங்களும், தங்கள் பொருட்களை விளம்பரபடுத்துவதற்கும், வாடிக்கையாளர்களின் கருத்தை அறியவும், "மிஸ்டு கால்' முறையை பின்பற்ற துவங்கி விட்டன.ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி வாடிக்கையாளர்கள், குறிப்பிட்ட எண்ணுக்கு, "மிஸ்டு கால்' கொடுத்தால், அவர்கள் கணக்கில் உள்ள பணம் விவரம், மொபைல் போனில் கிடைக்கும்.பெரிய பன்னாட்டு நிறுவனங்களான, எச்.யு.எல்., மைக்ரோ சாப்ட் போன்ற நிறுவனங்களும், "மிஸ்ட் கால்' மூலம் வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்கின்றன.

மராத்தி மொழி நாளிதழ் ஒன்று, தன் சந்தாதாரர்களுக்கு, மொபைல் போன் எண்ணை கொடுத்துள்ளது. அந்த எண்ணுக்கு, "மிஸ்ட் கால்' கொடுத்தால், மாத சந்தா விவரம், மொபைல் போனுக்கு வந்து விடும்.பிரபல சினிமா தியேட்டர் நிறுவனத்துக்கு, "மிஸ்டு கால்' கொடுத்தால், டிக்கெட் விவரம் தெரிய வருகிறது. விமான நிறுவனங்கள், மருந்து பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் என, 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், "மிஸ்ட் கால்' மூலம், வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு வருகின்றன.இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஒரு சில கோடி ரூபாய் அளவிற்கு இருந்த, "மிஸ்டு கால்' வர்த்தகம், இப்போது, 500 கோடி ரூபாயை தாண்டி விட்டதாக, புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

திட்ட மேலாண்மை துறை - உலகெங்கிலும் பணி வாய்ப்புகள்


ஒரு பிரமாண்டமான பாலத்தையோ அல்லது விமான நிலையத்தையோ அல்லது கட்டடத்தையோ பார்க்கையில், நமக்கு பிரமிப்பாக தோன்றுவது இயற்கையே. இதுபோன்ற கட்டுமானத் திட்டங்களை வெற்றிகரமாக செய்து முடிக்க, திறமையான திட்ட மேலாண்மையே காரணம்.

Project management எனப்படும் இந்த செயல்பாட்டில், ஆதி முதல் அந்தம் வரை திட்டமிடுதல் மட்டுமே இடம் பெறாது.

மாறாக, செயல்படுத்தும்போது எழும் பிரச்சினைகளை சமாளித்தல், குறிப்பிட்ட நேரத்திற்குள் மற்றும் திட்டமிட்ட செலவுக்குள் அந்த வேலையை நிறைவு செய்தல் உள்ளிட்ட அனைத்தையும் யோசித்து தயாராக வேண்டும். பல பெரிய திட்டங்களின் வெற்றிகளும், தோல்விகளும், மேற்கூறிய அம்சங்களை கையாள்வதிலும், தேவையான, கடைசிநேர மாற்றங்களை செய்வதிலும் அடங்கியுள்ளன.

ஒரு முழுநீள தொழில்
திட்ட மேலாண்மை என்பது ஒரு முழுமையான தொழில். இத்தொழிலில், சவால்கள், ஆச்சர்யம் மற்றும் அபரிமித சம்பளம் போன்றவை கிடைக்கின்றன. இத்துறை வல்லுநர்கள், ஐடி/ஐடிஇஎஸ், கட்டுமானம், பொறியியல், நிதி, சுகாதாரம், டெலிகாம், கன்சல்டன்சி மற்றும் உற்பத்தி தொழில்துறை உள்ளிட்ட பலவிதமான துறைகளுக்கு, திட்ட மேலாண்மை நிபுணர்களின் தேவை அதிகளவில் உள்ளது.

உலகெங்கிலும் திட்டமிடப்பட்டுள்ள ஏராளமான பணிகளுக்கு, 2013ம் ஆண்டு வாக்கில், மொத்தம் 60 லட்சம் திட்ட மேலாளர்கள் தேவைப்படுகிறார்கள். அதேசமயம், இவர்களை பணி நியமனம் செய்கையில், இவர்களின் தகுதிகள் மற்றும் திறமைகளும் சோதிக்கப்படுகின்றன.

வணிகப் பள்ளிகளில் கற்பிக்கப்படுதல்
நடைமுறையில், அனைத்து ஐஐஎம்.,களும், திட்ட மேலாண்மை தொடர்பாக, குறிப்பிட்ட வகையான பாடங்களை கற்பிக்கின்றன. பொதுவாக, எம்பிஏ பாடத்திட்டங்களில் இந்த Project Management பாடத்தின் அம்சங்கள் இடம்பெற்றாலும், ஒரு முழு நீள பாடமாக இது கற்பிக்கப்படுவதில்லை.

எனவே, Specialist courses மட்டுமே, இந்தக் குறையை தீர்ப்பனவாக உள்ளன. ஆனால், எம்பிஏ படிப்புகளில் இவை பரவலாக காணப்படுவதில்லை. மேலும், கட்டுமானம், பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளிலும், இப்பாடத்தின் அம்சங்கள் கலந்துள்ளன.

இத்தொழில் நிபுணர்களுக்கான தேவைகள்
தற்போது, சென்னை ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்கள், சிறந்த திட்ட மேலாளர்களை உருவாக்குவதற்கான அம்சங்களை, தனது கல்வித் திட்டத்தில் வைத்துள்ளன. சென்னை ஐஐடி வழங்கும் எம்பிஏ படிப்பில், திட்ட மேலாண்மையானது, மைய பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு, பலவிதமான விருப்பப் பாடங்களால்(electives) அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது, திட்ட மேலாளர்களுக்கான தேவைகள், உலகளவில் அதிகரித்துள்ளதால், அவற்றை ஈடுசெய்ய, மேலாண்மைப் பள்ளிகள், அத்துறை தொடர்பான படிப்புகள் வழங்குவதை உறுதிசெய்து, நிலைமையை சரிசெய்ய வேண்டியுள்ளது.

தகுதி சான்றிதழ்
ப்ராஜெக்ட் பயிற்சி பெறுநர்களுக்கு, அனைத்து வகையான கல்வி மற்றும் திறன் நிலைகளில், ஒரு விரிவான நிலையிலான சான்றிதழை, திட்ட மேலாண்மை கல்வி நிறுவனம் வழங்குகிறது. தற்போது 6 Credential -களை தன்னகத்தே கொண்டிருக்கும் இந்தப் படிப்பு, ஒருவரின் தொழில்ரீதியான அர்ப்பணிப்பு மற்றும் நிபுணத்துவத்தையும் சோதிக்கிறது.

ப்ராஜெக்ட் மேலாளர்களால் மேம்படுத்தப்பட்டு, உங்களின் செயல்பாட்டு திறனின் சிறப்பை, PMI சான்றிதழ் உறுதி செய்கிறது. இந்த செயல்பாடானது, ப்ராஜெக்ட் மேனேஜ்மென்ட் ப்ரொபஷனல்(PMP) மூலமாக விவரிக்கப்படுகிறது. மேலும், தர மேலாண்மை அமைப்புகளுக்காக, ISO 9001:2000 நிலையில், PMP பதிவு செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச அங்கீகாரம்
PMI Certification, சர்வதேச அளவில் அங்கீகாரமும், மதிப்பும் பெற்றவையாக உள்ளன மற்றும் முறைமைகள், தர நிலைகள் மற்றும் தொழிற்கூடங்கள் ஆகியவற்றுக்கு இடையில், மாற்றத்தக்க வகையில் உள்ளன. இதன்மூலம், திறமையை அளவிடுவதில், இதுவொரு நம்பத்தகுந்த அம்சமாக உள்ளது.

திட்ட மேலாளர்களுக்கான தேவைகள்
இன்றைய உலகின் மொத்த உற்பத்தில் 5ல் 1 பங்கு, அதாவது, 12 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள், திட்டங்களுக்காக செலவிடப்படுகின்றன. எனவே, இத்துறைக்கு, திறன்வாய்ந்த நபர்கள் தேவைப்படுகிறார்கள்.

நாளுக்கு நாள், திட்டப்பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் பெருகி வருவதாலும், அத்துறையிலுள்ள பலபேர் ஓய்வுபெற்று செல்வதாலும், இத்துறைக்கு தேவையான மனிதவளம் அதிகரித்து வருகிறது.

வேலைவாய்ப்பை அதிகரித்தல்
இத்துறையில் வாய்ப்புகள் அதிகரித்துவரும் அதேநேரத்தில், PMI Certification என்பது, உங்களின் தயார்நிலையை மேலும் உறுதிபடுத்துகிறது. மருத்துவம், தொலைதொடர்வு, நிதி, ஐடி மற்றும் கட்டுமானம் ஆகிய பல்வேறான துறைகளில், ஏற்கனவே, PMI Credential பெற்ற 4 லட்சத்து 66 ஆயிரம் பேர் உள்ளனர். இத்துறையில், நுழைய, உங்களுக்கான நேரமிது.

ஏனெனில், காலிப்பணியிடங்கள் மிக அதிகமாக உள்ளன. திட்ட மேலாண்மை திறனைக் கொண்டிருந்து, திட்ட மேலாளர் பணியை நீங்கள் விரும்பவில்லை என்றாலும், நெரிசல் மிகுந்த வேலைவாய்ப்பு சந்தையில், உங்களுக்கு விருப்பமான பணிகளை பெற முடியும் என்பதை மறக்க வேண்டாம்.