Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 5 மார்ச், 2013

சிங்கப்பூரில் இந்தியர் உள்பட 70,000 வெளிநாட்டினர் வேலை இழக்கும் அபாயம்


சிங்கப்பூர் அரசு கொண்டுவந்துள்ள புதிய கொள்கை காரணமாக இந்தியர்கள் உள்ளிட்ட அனுபவம் குறைவான 70,000 வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து சிங்கப்பூர் பணியாளர் நலத் துறை அமைச்சகம் கூறுகையில், ""உள்நாட்டினருக்கு சம வாய்ப்பை வழங்கும் நோக்கத்திலும், "எஸ் பாஸ்' உரிமத்தின் அடிப்படையில் திறமையான வெளிநாட்டினரை பணியில் அமர்த்த வேண்டும் என்ற நோக்கத்திலும் அதிக கட்டுப்பாடுகளுடன் கூடிய புதிய கொள்கை கொண்டுவரப்பட்டுள்ளது'' என கூறப்பட்டுள்ளது.

மேலாளர் நிலையில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கு எஸ் பாஸ் உரிமம் வழங்கப்படுகிறது. இந்த உரிமம் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இறுதி நிலவரப்படி இந்த உரிமத்தின் கீழ் 1.42 லட்சம் பேர் பணியாற்றினர். இவர்களின் உரிமம் காலாவதி ஆக உள்ள நிலையில், புதிய கொள்கையின்படி, அனுபவம் குறைவான 70,000 பேரின் உரிமம் புதுப்பிக்கப்பட மாட்டாது என எனத் தெரிகிறது.

புதிய கொள்கையின்படி வரும் ஜூலை மாதம் முதல் அனுபவமுள்ள, மேலாளர் நிலையில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களை மட்டும் தக்க வைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது மாத ஊதியமாக 2,200 சிங்கப்பூர் டாலருக்கு (ரூ.97,500) மேல் சம்பளம் பெறுபவர்கள் மட்டுமே தொடர்ந்து அங்கேயே பணிபுரிய முடியும். மற்றவர்களின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

இந்தியாவில் 24,000 பாலியல் வழக்குகள் நிலுவையில் உள்ளது


உச்ச நீதிமன்றம், 21 உயர் நீதிமன்றங்களில் 24,127 பாலியல் பலாத்காரம், பாலியல் துன்புறத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இத்தகவலை மத்திய சட்டத்துறை அமைச்சர் அஸ்வினி குமார் மாநிலங்களவையில் திங்கள்கிழமை எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.

அதில் மேலும் கூறப்பட்டிருப்பது: மொத்தமுள்ள 24,127 பாலியல் வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தில் 335 பாலியல் வழக்குகளும், பல்வேறு மாநிலங்களில் உள்ள 21 உயர் நீதிமன்றங்களில் மீதமுள்ள பாலியல் வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

இதில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தின் அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் 8,215 வழக்குகள் உள்ளன. இதற்கு அடுத்த இடத்தை மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் பிடித்துள்ளன. சென்னை உயர் நீதிமன்றத்தில் 179 பாலியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மிகக் குறைந்த அளவாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்திலும், உத்தரகண்ட் உயர் நீதிமன்றத்திலும் முறையே 27, 26 என்ற எண்ணிக்கையில்  வழக்குகள் உள்ளன. சிக்கிம் உயர் நீதிமன்றத்தில் பாலியல் வழக்குகள் ஏதுமில்லை.

ஆக்கிரமிப்பில் உள்ள பல்கலைகழக நிலங்களை மீட்க தமிழக கவர்னர் உத்தரவு


"ஆக்கிரமிப்பில் உள்ள பல்கலை கழகங்களின் நிலங்களை, மாவட்ட கலெக்டர்கள் துணையுடன், உடனடியாக மீட்க, துணைவேந்தர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என, பல்கலைகளின் வேந்தரும், கவர்னருமான ரோசையா, கண்டிப்புடன் கூறினார்.

பல்கலைகளின் வேந்தராக, கவர்னர் உள்ளார். பெரும்பாலும், உயர்கல்வி செயல்பாடுகளை, சம்பந்தபட்ட உயர்கல்வி அமைச்சர் மற்றும் செயலர், உயர்கல்வி மன்ற துணைத்தலைவர் ஆகியோர், துணைவேந்தர்கள் கூட்டத்தை கூட்டி, அவ்வப்போது விவாதிப்பர். பல்கலை பட்டமளிப்பு விழாவில், வேந்தராக உள்ள கவர்னர் பங்கேற்பார். பல்கலைகளுக்கு, துணைவேந்தர்களை நியமிக்கும் பணியிலும், கவர்னர் ஈடுபடுகிறார்.

தமிழக வரலாற்றில், முதல் முறையாக, கவர்னர் ரோசையா, நேற்று அனைத்து பல்கலைகளின் இணைவேந்தர்களாக இருக்கும் அமைச்சர்கள், சம்பந்தபட்ட துறை முதன்மை செயலர்கள் மற்றும் பல்கலைகளின் துணைவேந்தர்கள் அடங்கிய கூட்டு கூட்டத்தை, ராஜ்பவனில், நேற்று கூட்டினார்.

இதில், பல்வேறு பல்கலைகளின் இணைவேந்தர்களாக இருக்கும் அமைச்சர்கள், துறை செயலர்கள் மற்றும் துணைவேந்தர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில், கவர்னர் ரோசையா பேசியதாவது:

தமிழ்நாடு ஆசிரியர் பல்கலை, திருவள்ளுவர் பல்கலை ஆகியவை, அதற்கான சட்டங்கள் எதுவும் இன்றி, இயங்கி வருகின்றன. ஒவ்வொரு பல்கலைக்கும், அதற்கென தனி சட்டங்களை உருவாக்கி, அமல்படுத்த வேண்டும். ஆனால், இந்த இரு பல்கலைகளும், சட்டங்கள் இல்லாமல் இயங்கி வருகின்றன.

இந்த பல்கலைகளுடன், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை மற்றும் விளையாட்டு பல்கலை ஆகிய நான்கு பல்கலைகளுக்கும், "12பி" அந்தஸ்து இல்லை. பல்கலைகளின் அடிப்படை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்து, பல்கலைக்கழக மானியக்குழு, இந்த 12-பி அங்கீகாரத்தை வழங்குகிறது.

இந்த அங்கீகாரத்தை பெற்றால் தான், மானியக்குழு மற்றும் இதர அமைப்புகளின், நிதி உதவிகளை பெற முடியும். பல்கலைகளுக்கு சொந்தமாக, மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில், அதிக நிலங்கள் உள்ளன. இந்த நிலங்கள் எல்லாம், ஆக்கிரமிப்பாளர்களிடம் உள்ளன.

வரும் காலங்களில், பல்கலைகளின் நிர்வாகத்தை விரிவு செய்ய வேண்டும் எனில், என்ன செய்வீர்கள்? எனவே, ஆக்கிரமிப்பில் உள்ள பல்கலைகளின் நிலங்கள் அனைத்தையும் மீட்பதற்கு, துணைவேந்தர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட கலெக்டர்களை அணுகி, அவர்கள் உதவியுடன், ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க வேண்டும்.

மாவட்ட அளவில், ராகிங் தடுப்புக் குழு உள்ளது. இந்த குழுவின் அறிக்கைகள், முறையாக எனக்கு வருவது இல்லை. இந்த குழுக்கள் என்ன செய்கின்றன என்று தெரியவில்லை. வரும், 2025ல், உயர்கல்வியில் மாணவர் சேர்க்கையை, 25 சதவீதமாக உயர்த்த வேண்டும் என, தமிழக முதல்வர் கூறியுள்ளார்.

இதனை எட்ட வேண்டும் எனில், உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டும். சிறந்த பாடத்திட்டங்களை வகுத்து, தொழிற்துறைக்கு தேவையான மாணவர்களை, உயர்கல்வியின் மூலம் உருவாக்க வேண்டும். இதை எதையுமே நீங்கள் செய்யவில்லை எனில், இலக்கை எட்ட முடியாது. இவ்வாறு கவர்னர் ரோசையா பேசினார்.

கூட்டத்தில், அமைச்சர்கள் முனுசாமி, பழனியப்பன், தாமோதரன், சின்னையா, ஜெயபால், வைகைச் செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு, தங்கள் துறை சார்ந்து இயங்கும் பல்கலைகளின் செயல்பாடுகள் குறித்தும், திட்டங்கள் குறித்தும் பேசினர்.

சூரிய சக்தியில் இயங்கும் "பம்ப்"


டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு, சூரிய சக்தியில் இயங்கும், "பம்ப்'களை, தமிழக அரசு வழங்க உள்ளது. இதற்காக, 530, "சோலார் பி.வி., பம்ப்'களை கொள்முதல் செய்ய, தமிழக எரிசக்தி மேம்பாட்டு முகமை, ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.

தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழைகள் பொய்த்ததாலும், காவிரியில் உரிய நீர் கிடைக்காததாலும், நிலத்தடி நீரை நம்பியே, தமிழக விவசாயிகள் உள்ளனர். ஆனால், தொடரும் மின்வெட்டால், பல மாவட்டங்களில், மின் மோட்டார்களை இயக்க முடியாததால், குடிநீர்த் தேவையைக் கூட நிறைவேற்ற முடியாத நெருக்கடி நிலவுகிறது. தமிழக அரசு மின்வெட்டை சீர்செய்ய, பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே, உடனடி நிவாரணமாக, சூரிய சக்தியில் இயங்கும், பம்ப்களை, டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு வழங்க, தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, டெல்டா மாவட்டங்களில், தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு, சோலார் பி.வி., பம்புகள் வழங்கப்பட உள்ளன.