Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 6 மார்ச், 2013

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றும் பணியில்லாமல் தாவரவியல் பட்டதாரிகள் தவிப்பு


தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) நடத்திய போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று ஓராண்டாகியும், இதுவரை பணி நியமனம் கிடைக்காமல், தாவரவியல் முதுகலை பட்டதாரிகள் தவிக்கின்றனர்.

தமிழ், இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் வரலாறு பாடங்களின் முதுகலை பட்டதாரிகளுக்கான போட்டி தேர்வை, 2012ம் ஆண்டு மே 27ல், டி.ஆர்.பி., நடத்தியது. ஜூலையில் முடிவுகள் வெளியிடப்பட்டன.

முதற்கட்டமாக ஜூலை 4ம், இரண்டாவது கட்டமாக அக்.,31ம் தேதியும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடந்து, தாவரவியல் பட்டதாரிகளை தவிர பிற பிரிவுகளை சேர்ந்த பட்டதாரிகளுக்கு நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன.

அப்போது விடுபட்ட பட்டதாரிகளுக்கு, நேற்று ஆன்லைன் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் பணியிடங்கள் ஒதுக்கி, நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. ஆனால், தாவரவியல் பட்டதாரிகளுக்கு அழைப்பு இல்லை.

பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் சிலர் கூறியதாவது: தாவரவியலில் 500 பட்டதாரிகள் தேர்ச்சி பெற்றுள்ளோம். எங்களுக்கு எப்போது பணி நியமன உத்தரவு வழங்கப்படும் என்று தெரியவில்லை, என்றனர்.

ஏகாதிபத்தியத்தின் சிம்மசொப்பனம் சாவேஸ் மறைவால் , வெனிசூலாவில் நுழைய துடிக்கும் ஒபாமா !


புற்று நோயால் பாதிக்கப்பட்ட வெனிசுலா அதிபரான ஹியூகோ சாவேஸ் (வயது 58), நேற்று மாலை 4.25 மணிக்கு அதிபர் மரணம் அடைந்ததாக துணை அதிபர் நிக்கோலஸ் மடுரோ அறிவித்தார். அமெரிக்க அதிபர் ஒபாமா வெனிசுலா அதிபர் ஹுகோ சாவேஸ் மரணமடைந்த செய்தி வெளியான சிலமணி நேரத்திலேயே அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில் அவர் கூறியதாவது:-

அதிபர் ஹுகோ சாவேஸின் மரணத்தினால் சவாலான நேரத்தை எதிர்நோக்கி இருக்கும் வெனிசுலா மக்களுக்கு அமெரிக்க முழு ஆதரவையும் கொடுக்கும். மேலும் அந்நாட்டுடன் ஆக்கப்பூர்வமான உறவை மேம்படுத்திக்கொள்ள  அமெரிக்கா விரும்புகிறது.

வெனிசுலா புதிய அத்தியாயத்தை தொடங்க இருக்கும் இந்நிலையில், வெனிசுலாவில் ஜனநாயக கொள்கைகளை ஊக்குவிக்கும், சட்டத்தின் வரைமுறைகளை நிலை நிறுத்தும், மனித உரிமைகளை மதிக்கும் புதிய கொள்கைகளை  உருவாக்குவதில் அமெரிக்க உறுதி ஏற்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வெனிசுலா அதிபர் புரட்சியாளர் சாவேஸ் காலமானார்


புற்றுநோயால் அவதியுற்ற வெனிசுலா அதிபர் ஹுவே சவேஸ் இன்று காலையில் காலமானார். தென்அமெரிக்க நாடான வெனிசுலா நாட்டின் அதிபராக கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார் சவேஸ் (58).ஏகாதிபத்திய நாடுகளின் சிம்மசொப்பனமாகவும் , வளரும் நாடுகளின் நண்பனாகவும் விளங்கினார்.  புற்றுநோய் தாக்கியதன் காரணமாக கடந்த 2011-ம் ஆண்டு ஜுன் மாதம் முதல் இதுவரை 4 முறை கியூபா சென்று சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் கடைசியாக சிகிச்சைக்காக கியூபா சென்று பின்னர் நாடு திரும்பிய நிலையில் கடந்த இரு நாட்களாக சவேசிற்கு மூச்சுதிணறல் ஏற்பட்டது. வெனிசுலாவில் உள்ள ஈர்னஸ்டோ கிராமத்தில் உள்ள தனது வீட்டில் தொடர் சிகிச்சை பெற்று வந்த போதிலும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார். சவேஸ் காலமானதை துணை அதிபர் நிக்கோலஸ் மௌர்டோ, அந்நாட்டு டி.வி. வாயிலாக நாட்டு மக்களுக்கு தெரிவித்தார்.

கடந்த 14ஆண்டுகளாக வெனிசுலா நாட்டை ஆண்டு வந்த சவேஸ் மறைவிற்கு தென்அமெரிக்க நாட்டு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

புரட்சியாளரான சவேஸ் கடந்த 1971-ம் ஆண்டு ராணுவ வீரராக வாழ்க்கையை துவக்கினார். ஐக்கிய சோஷியலிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்தார்.பின்னர் தனது திறமையால் வெனிசுலா அதிபராக கடந்த 1999-ம் ஆண்டு பொறுப்பேற்றார். சாகும் வரை அதிபராகவே சவேஸ் காலமானது அந்நாட்டு மக்களுக்கு பேரிழப்பாக அமைந்துவிட்டது.