Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 4 ஆகஸ்ட், 2012

உலக வரலாற்றில் ஒரு பொற்கால ஆட்சி !

கலிஃபா உமர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது குடிமக்கள் நிலையை அறிவதற்காக நகர்வலம் செல்லும் வழக்கம் உடையவர்கள்.

அப்போது மதினா நகரெங்கும் பஞ்சம் நிலவி வந்தது. நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட அனனவருக்கும் கிடைத்திட வேண்டும் என்பதில் உமர் (ரலி) அவர்கள் மிகுந்த கவனம் செலுத்தினார்கள்.

ஒருநாள் இரவு நேரத்தில் கலிஃபா அவர்கள் தமது உதவியாளர் அஸ்லம் என்பாருடன் மதினாவின் புறநகர்ப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு குடிசையிலிருந்து விளக்கு வெளிச்சமும் குழந்தைகளின் அழுகுரலும் வரக் கண்டார்கள்.

கலிஃபா அவர்கள் அந்தக் குடிசையை நெருங்கிய போது, அங்கே ஒரு பெண்மணி அடுப்பில் ஒரு சட்டியில் ஏதோ சமைத்துக் கொண்டிருப்பதையும் அவருக்கருகில் அழுது கொண்டிருந்த குழந்தைகளையும் கண்டார்கள். கலிஃபா உமர் (ரலி) அவர்கள், அப்பெண்மணிக்கு சலாம் சொல்லி அவரது அனுமதி பெற்று அவருக்கருகில் சென்றார்கள்.

அந்தப் பெண்மணி உமர் (ரலி) அவர்களை பார்த்ததில்லை என்பதால் வந்திருப்பவர் கலிஃபா என்பதை அறியவில்லை.

உமர் (ரலி): “குழந்தைகள் ஏன் அழுது கொண்டிருக்கின்றன?”

பெண்மணி: “அவர்கள் பசியோடிருக்கின்றார்கள். அதனால்தான் அழுகிறார்கள்”
உமர் (ரலி): “அடுப்பில் என்ன இருக்கிறது?”

பெண்மணி: “அது வெறும் சுடுநீரும் சில கற்களும்தான். அவர்களின் பசியைப் போக்க நான் ஏதோ சமைத்துக் கொண்டிருக்கிறேன் என்ற எதிர்பார்ப்பிலேயே அவர்கள் தூங்கி விடுவார்கள். அதற்காகத்தான் இப்படிச் செய்து கொண்டிருக்கிறேன்.

. இந்தத் துன்பமான நேரத்தில் எங்களுக்கு ஒரு உதவியையும் செய்யாத கலிஃபா உமர் அவர்களுக்கும் எனக்குமிடையில் இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ்தான் ஒரு நல்ல தீர்ப்பை வழங்குவான்”.

அப்பெண்மணியின் இந்த வார்த்தைகளைக் கேட்டு பதறிப்போன கலிஃபா உமர் (ரலி) அவர்களின் கண்களில் நீர் வழிந்தோட, “அல்லாஹ் உம் மீது கிருபை செய்வானாக! உமது துன்பமான நிலைமையை உமர் எப்படி அறிவார்?” என்று வினவினார்.

“முஸ்லிம்களின் தலைவராக இருக்கும் உமர் எங்கள் நிலைமையை அறிந்திருக்க வேண்டாமா? என்றார் அந்தப் பெண்மணி.

கலிஃபா உமர் (ரலி) அவர்கள் விரைந்து நகருக்குத் திரும்பி உடனே பைத்துல் மாலுக்குச் சென்றார்கள். ஒரு சாக்குப்பையில் மாவு, நெய், பேரீத்தம் பழங்கள் போன்ற உணவுப் பொருட்களும் துணிமணிகளும் எடுத்து வைத்தார்கள். கொஞ்சம் பணமும் எடுத்துக் கொண்டார்கள். சாக்குப்பை நிரம்பியதும் தமது உதவியாளரை அழைத்து, அதைத் தூக்கி தமது முதுகில் வைக்கும்படி சொன்னார்கள்.

அவர்களின் உதவியாளர் அஸ்லம் பதறியவாறு, “இந்த மூட்டையை நானே தூக்கி வருகிறேனே அமீருல் முஃமினீன் அவர்களே!” என்றார். உமர் (ரலி) அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. “என்ன? நியாயத் தீர்ப்பு நாளன்று எனது சுமையை உம்மால் சுமக்க முடியுமா? மறுமையில் அந்தப் பெண்மணி பற்றி கேள்வி கேட்கப்படப் போவது நான்தானே? அதனால் இந்தச் சுமையையும் நானே சுமக்க வேண்டும்!”

அஸ்லம் மிகவும் தயங்கியபடி அந்த மூட்டையைத் தூக்கி கலிஃபா அவர்களின் முதுகின் மேல் வைத்தார். அதனைத் தூக்கிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக அப்பெண்மணியின் குடிசையை நோக்கி விரைந்தார்கள் உமர் (ரலி) அவர்கள். அஸ்லமும் அவர்களை பின்தொடர்ந்து சென்றார்.

குடிசையை அடைந்த உமர் (ரலி) அவர்கள் மூட்டையிலிருந்து மாவு, நெய், பேரீத்தம் பழங்களை எடுத்து அவற்றை பிசைந்து, அடுப்பிலிருந்த சட்டியிலிட்டு கிளறினார்கள். அருகிலிருந்த ஊதுகுழலை எடுத்து ஊதி அடுப்புத் தீயை தூண்டி எரியச் செய்தார்கள். அவர்களின் அடர்ந்த தாடிக்குள் புகை படிந்தது.

சிறிது நேரத்திற்குப் பிறகு உணவு தயாரானதும் கலிஃபா அவர்களே அந்த உணவை அப்பெண்மணிக்கும் அவரது குழந்தைகளுக்கும் பரிமாறினார்கள். மீதம் இருந்த உணவுப் பொருட்களை அவர்களின் அடுத்த வேளை உணவிற்காக வைத்துக் கொள்ளும்படி கொடுத்தார்கள். வயிறு நிரம்ப உண்ட குழந்தைகள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடத் தொடங்கினார்கள். அதைப் பார்த்த உமர் (ரலி) அவர்களின் முகமும் மலர்ந்தது.

உமர் (ரலி) அவர்கள் அப்பெண்மணியிடம் ‘அக்குடும்பத்தை பராமரிப்பவர் யாரும் இல்லையா’ என வினவினார்கள். அந்தக் குழந்தைகளின் தந்தை இறந்து விட்டதாகவும் அவர்களுக்கு ஆதரவளிக்க வேறு யாரும் இல்லை எனவும் அப்பெண்மணி தெரிவித்தார். வீட்டிலிருந்த உணவுப் பொருட்களெல்லாம் தீர்ந்துப் போய் மூன்று நாட்களாக பட்டினியாக இருந்த நிலையில் அறிமுகமில்லாத அந்த மனிதர் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்த அந்தப் பெண்மணி சொன்னார், “உங்களின் இந்த கருணைச் செயலுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!

உண்மையில் கலிஃபா பதவிக்கு உமரை விட நீங்களே மிகப் பொருத்தமானவர்”. அவருக்கு எதிரில் அமர்ந்திருப்பது கலிஃபா உமர் (ரலி) அவர்கள்தாம் என்பதை அம்மாது இன்னும் அறிந்து கொள்ளவில்லை!

உமர் (ரலி) அவர்களும் ‘தாம் இன்னார்’ என்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “நீர் கலிஃபாவை சந்திக்கும்போது அங்கே என்னை கண்டு கொள்வீர்” என்றார்கள்.

கொஞ்ச நேரம் அங்கேயே அமர்ந்திருந்து குழந்தைகள் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்த உமர் (ரலி) அவர்கள் அதன் பின்னர் மதினா திரும்பினார்கள். செல்லும் வழியில் தன் உதவியாளரிடம் சொன்னார்கள், “அஸ்லம், நான் ஏன் அங்கே அமர்ந்திருந்தேன் தெரியுமா? அக்குழந்தைகள் பசியால் அழுது கொண்டிருந்ததை பார்த்த நான் அவர்கள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடுவதையும் சிறிது நேரம் பார்க்க விரும்பினேன். அதனால்தான்.”

வீரத்திற்குப் பெயர் பெற்ற உமர் (ரலி) அவர்கள், கருணையுள்ளம் உடையவராகவும் குடிமக்கள் மேல் அக்கறை கொண்ட பொறுப்பான தேசத் தலைவராகவும் விளங்கினார்கள்.

மின் வாரியத்தில் "ஹெல்பர்" பணியிடங்கள் :சீனியாரிட்டி பட்டியல் வெளியீடு


தமிழ்நாடு அரசு மின் வாரியத்தில் ஹெல்பர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு சீனியாரிட்டி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு மின் வாரியம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள ஹெல்பர் பணிக் காலியிடங்களுக்கு நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உத்தேச சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கப்பட்டு வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி பள்ளி இறுதி வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐயில் (என்.டி.சி) வயர்மேன் அல்து எலக்ட்ரீசியன் (ஐ.டி.ஐ வயர்மேன் அல்லது எலக்ட்ரீசியன்) படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு 1.7.2012 அன்று பொது வகுப்பினர் 30 வயதுக்குள்ளும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 32 வயதுக்குள்ளும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர் 35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை விட அதிக கல்வித் தகுதி கொண்ட பி.சி, எம்.பி.சி, எஸ்.சி, எஸ்.டி வகுப்பினருக்கு வயது வரம்பு கிடையாது.
சீனியாரிட்டியை பொறுத்தவரை முன்னுரிமையற்றவர்கள் பிரிவில் ஆதிதிராவிடர் பெண்கள் - 13.7.2012, ஆதிதிராவிடர் பொது - 6.12.2000, அருந்ததியினர் - 27.1.2012, பழங்குடியினர் பெண்கள் - 12.5.2012, பழங்குடியினர் பொது - 30.10.2008, மிகவும் பிற்பட்ட வகுப்பினர் பெண்கள் - 16.7.2012, மிகவும் பிற்பட்ட வகுப்பினர் பொது - 16.1.2001, பிற்பட்ட முஸ்லிம் வகுப்பினர் பெண்கள் - 18.5.2012, பிற்பட்ட முஸ்லிம் வகுப்பினர் பொது - 28.6.2005, பிற்பட்ட வகுப்பினர் பெண்கள் - 30.7.2012, பொது வகுப்பினர் பெண்கள் - 3.2.2012, பிற்பட்ட வகுப்பினர் மற்றும் அனைத்து பொது வகுப்பினர் - 26.12.2001 வரை பதிவு செய்துள்ளவர்கள் பரிந்துரைக்கப்படுகின்றனர்.
முன்னுரிமை சான்று பதிவு செய்துள்ளவர்கள் 30.7.2012 வரை பரிந்துரைக்கப்படுகின்றனர். இந்த சீனியாரிட்டிக்குள் ஐ.டி.ஐயில் (என்.டி.சி), வயர்மேன் அல்லது எலக்ட்ரீசியன் (ஐ.டி.ஐ என்.டி.சி) வயர்மேன் அல்லது எலக்ட்ரீசியன்) பதிவு செய்துள்ளவர்கள் தங்கள் பெயரை வெப்சைட்டில் பார்த்து கொள்ளலாம்.
உரிய கல்வித் தகுதி, வயது வரம்பு மற்றும் சீனியாரிட்டி இருந்தும் தங்கள் பெயர் இடம் பெறவில்லை என தெரிந்தால் அவர்கள் மட்டும் எதிர்வரும் 6ம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரிடம் நேரில் ஆஜராகி விண்ணப்பிக்கலாம்.
மேலும் ஐ.டி.ஐயில் வயர்மேன் அல்லது எலக்ட்ரீசியன் கல்வித் தகுதியை பதிவு செய்துள்ளவர்கள்  வேலைவாய்ப்பு அடையாள அட்டையை நகல் எடுத்து பரிசீலித்து கொள்ள வேண்டும் என்று திருநெல்வேலி
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் மகாலட்சுமி தெரிவித்தார்.

கோழிப்பண்ணை தொழிலுக்கு அரசின் தாராள உதவி


 புதிய கால்நடை மருந்தகங்கள், விவசாயிகள், சுயவிருப்பத்தில் கோழிப் பண்ணைகள், நாட்டுக் கோழிப்பண்ணைகள் அமைக்க, 28.35 கோடி ரூபாய் ஒதுக்கி முதல்வர் உத்தரவிட்டார். தென்மாவட்ட விவசாயிகளும், காஞ்சிபுரம் உட்பட வட மாவட்ட விவசாயிகளும் கோழிப்பண்ணை அமைக்க, இந்தத் திட்டம் உதவிடும்.

மருந்தகம்! இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில், கிராமப்புற மக்களின் நன்மைக்காக, அவர்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே, நடப்பாண்டில், 20 புதிய கால்நடை மருந்தகங்கள், ஆறு கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும். கோழி வளர்ப்புத் தொழிலை ஊக்குவிக்கும் வகையில், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய விழுப்புரம் மண்டலம் மற்றும் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சங்கரன் கோவில் மண்டலம் என, இரு புதிய கோழி பண்ணை தொகுப்பு மண்டலங்கள் உருவாக்கப் படுகின்றன.

இந்த மண்டலங்களில், ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், அவர்கள் சுயவிருப்பம் மற்றும் தகுதிக்கேற்ப, 1,000 முதல், 5,000 கறிக்கோழிகள் கொண்ட பண்ணைகள் அமைத்துக் கொள்ள வசதியாக, 20.31 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப் பட்டு உள்ளது. இந்த நிதியின் மூலம், ஒவ்வொரு மாவட்டத்திலும், 230 கோழிப் பண்ணைகள் அமைக்க திட்டமிடப் பட்டு உள்ளது.

நாட்டு கோழி :திண்டுக்கல், தர்மபுரி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருவள்ளூர், திருச்சி, வேலூர் ஆகிய 16 மாவட்டங்களில், நாட்டுக் கோழி வளர்ப்பை ஊக்கப்படுத்த, 2.4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம், ஒவ்வொரு மாவட்டத்திலும், குறைந்த பட்சம் 250 கோழிகள் கொண்ட, 35 பண்ணைகள் அமைக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டு உள்ளது.