Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 26 செப்டம்பர், 2012

நெல்லையில் தகிக்கும் வெப்பம்;தவிக்கும் மக்கள்


திருநெல்வேலியில் கடந்த ஒரு வாரமாகவே வெயில் 100 டிகிரியைவிட அதிகமாக பதிவாகிவருகிறது. செவ்வாய்க்கிழமை தமிழகத்திலுள்ள பிறநகரங்களை காட்டிலும் அதிகமாக 103 டிகிரி வெயில் பாளையங்கோட்டையில் பதிவானது. தகிக்கும் இந்த வெப்பத்தால் மக்கள் அவதியுறுகிறார்கள்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்தே பகல் நேரத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்களில் கோடையிலும் தமிழகத்தின் மற்ற நகரங்களைப்போல் 100 டிகிரியையொட்டி வெப்பம் பதிவாகியிருந்தது. கோடைக்குப்பின்னரும் அதே வெப்பநிலை நீடித்து வருகிறது. தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டதால் காலநிலையில் மிகப்பெரும் அளவுக்கு மாற்றம் ஏற்படவில்லை. கடந்த மாதத்தில் வானில் மேகங்கள் திரள்வதும், சாரல் மழை பெய்வதுமாக ஓரிரு நாள்களில் காலநிலை இருந்தது. ஆனால், கடந்த 2 வாரமாகமே திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் வெயில் சுட்டெரித்தது.
பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த ஒருவாரமாக பதிவாகியுள்ள வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியே இருக்கிறது. கடந்த 18-ம் தேதி 103 டிகிரி வெப்பநிலை இருந்தது.

அதுபோல் செவ்வாய்க்கிழமையும் வெப்பநிலை 103 டிகிரியாக பதிவாகியிருக்கிறது. கடந்த கோடையில்கூட திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டையில் ஒருசில நாள்களை தவிர்த்து மற்ற நாள்களில் 100 டிகிரிக்குள் வெப்பநிலை இருந்தது. ஆனால், தற்போது தொடர்ந்து 100 டிகிரிக்குமேல் வெப்பநிலை பதிவாகி வருகிறது. வெயில் சுட்டெரிப்பதால் பகல் வேளைகளில் நகரில் மக்கள் நடமாட்டம் குறைந்திருக்கிறது. செவ்வாய்க்கிழமை பகலில் நகரில் அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகளும் அவதியுற்றனர். வீடுகளிலும் மக்கள் புழுங்கி தவிக்க நேரிட்டது. ஏற்கெனவே மின்தடையால் பகலில் மின்விசிறிகள் இயங்காமல் மக்களை மேலும் அவதிக்கு உள்ளாக்கியுள்ளது.

தமிழகத்திலேயே அதிகம்: பாளையங்கோட்டை பகுதியில் செவ்வாய்க்கிழமை 103 டிகிரி வெப்பம் பதிவாகியிருந்தது. இது தமிழகத்தின் மற்ற நகரங்களைவிட அதிகமாகும். வெயில் நகரம் என்றழைக்கப்படும் வேலூரில் 97 டிகிரி வெயில்தான் பதிவாகியிருந்தது.
கன்னியாகுமரியில் 90 டிகிரி, தூத்துக்குடியில் 93 டிகிரி வெயிலும் பதிவானது.
கோடையை மிஞ்சும் வெயில் சுட்டெரிப்பதால் திருநெல்வேலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் பிரச்னை தலைதூக்கியிருக்கிறது. பல்வேறு இடங்களில் பொது குடிநீர் குழாய்களில் தண்ணீருக்காக நூற்றுக்கணக்கான குடங்கள் வரிசையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. பொதுமக்களும் காலிகுடங்களுடன் வீதியில் இறங்கி போராட தொடங்கியிருக்கிறார்கள்.

கடந்த ஒரு வாரமாக பாளையங்கோட்டையில் பதிவான வெப்பநிலை (பாரன்கீட்):
செப்.18- 103 டிகிரி
செப்.19- 101 டிகிரி
செப்.20- 102 டிகிரி
செப்.21- 101 டிகிரி
செப்.22- 102 டிகிரி
செப்.24- 101 டிகிரி
செப்.25- 103 டிகிரி

திருநெல்வேலி மாவட்ட சிறுபான்மை பள்ளிகளுக்கு நிதி: விண்ணப்பிக்க வலியுறுத்தல்

சிறுபான்மை பள்ளிகளுக்கு அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சி நிதி உதவி பெற தகுதியான பள்ளிகள் விண்ணப்பிக்கலாம்.சிறுபான்மை கல்வி நிலையங்கள் மற்றும் பள்ளிகளுக்கு அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சிக்கு மத்திய அரசு நிதி உதவி வழங்கி வருகிறது.இத்திட்டத்தில் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள், கம்ப்யூட்டர் அறைகள், ஆய்வகம், நூலகம், கழிப்பிடம், குடிநீர் வசதி மற்றும் இதர அடிப்படை வசதிகளை மேம்படுத்த மத்திய அரசின் நிதி உதவி பெறுவதற்கு பல்வேறு நிபந்தனைகளை நிறைவு செய்ய வேண்டும்.


மத்திய அரசு திட்டத்தின் கீழ் முஸ்லிம், கிறிஸ்தர், சீக்கியர், பவுத்தர் ஆகிய சிறுபான்மை இனத்தவர்களால் நடத்தப்படும் பள்ளிகள் சார்பாக நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம். மாவட்டத்தில் சிறுபான்மை இனத்தவர் நடத்தப்படுகின்ற பள்ளிகளின் முழு அஞ்சல் முகவரி, அலுவலக டெலிபோன் எண், பள்ளி தாளாளர் செல்போன் என 3 பிரதிகள் அனுப்ப வேண்டும்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்க், சங்கம், டிரஸ்ட் மூலம் நடத்தப்படும் மத்திய, மாநில கல்வி நிறுவனங்கள் நிபந்தனைகளை நிறைவு செய்ததை உறுதி செய்து கருத்துருக்களை அனுப்ப வேண்டும். சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். மேலும் பள்ளிகள் தமிழ்நாடு சிறுபான்மை பள்ளிகள் விதிகள் 1977 விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் லாபத்தை நோக்கமாக கொண்டு செயல்பட கூடாது.
அரசால் மானியம் பெறும் பள்ளிகள் மானியம் சார்பான விபரங்களை ஆடிட்டர் மூலம் தணிக்கை செய்து சான்று பெறப்பட வேண்டும். செலவின மதிப்பீடு ஆடிட்டரால் தயார் செய்யப்பட்டு பொதுப்பணித் துறை நிர்வாக இன்ஜினியரால் மேலோப்பம் செய்யப்பட வேண்டும்.
பதிவு துறையின் கீழ் உள்ள சங்கம் பதிவு சட்டத்தின் கீழ் தன்னார்வ முகமைகள் 6 மற்றும் 7 சமர்ப்பிக்க வேண்டும். சிறுபான்மை நிறுவனங்கள் சிறுபான்மை அந்தஸ்து உறுதி செய்யப்பட்ட அரசாணை இணைத்து அனுப்ப வேண்டும்.

நெல்லை மாவட்டத்தில் சிறுபான்மை கல்வி நிலையங்கள், பள்ளிகள் இத்திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறுவதற்கு கருத்துருக்களை 4 பிரதிகளில் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் மூலமாக சமர்ப்பிக்க சிறுபான்மை பள்ளி தாளாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர் கிரேஸ் சுலோச்சனா ரத்னாவதி தெரிவித்தார்.