Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 14 செப்டம்பர், 2013

தியாக சீலர், பன்னூல் ஆசிரியர் A .K .ரிபாயி (ரஹ்) - வரலாற்று சுருக்கம்

தென்காசி மேடை முதலாளி என்று தென் தமிழக மக்களால் அன்புடன் அழைக்கப் பட்டு வந்த குடும்பத்தின் பேரப்பிள்ளை அஹமது  கபீர் ரிபாய்.

மு.ந.அப்துல் ரஹ்மான் சாஹிப் , காயிதே மில்லத் இருவரும் சகலபாடிகள்.

 ஆடுதுறைப் பெருவணிகர் ஜமால் முஹம்மது சாஹிப். சென்னை ஜமாலியா அரபிக் கல்லூரி, இன்னுமுள்ள ஜமாலியா அறக்கட்டளைகளின் நிறுவனர். திருச்சி ஜமால் முஹம்மத் கல்லூரி இவர் பெயரிலேயே இயங்கி வருகிறது. இந்த ஜமால் முஹமது சாஹிபின் தம்பி ஜமால் அப்துல்லாஹ் சாஹிபின் மூத்த மகளார் ஜமால் பாத்திமாவை மு.ந. அப்துல் ரஹ்மான் சாஹிப் திருமணம் செய்திருந்தார். இரண்டாவது மகள் ஜமால் மரியமை, மு.ந.அ  அவர்களின் தம்பி மு.ந. முஹம்மது சாஹிப் நிக்காஹ் புரிந்து இருந்தார். அடுத்த மகள் ஜமால் ஹமீதாவை காயிதே மில்லத் முஹம்மத் இஸ்மாயில் சாஹிப் மணம் செய்திருந்தார். இந்த மூவரும் தமிழக முஸ்லிம்கள் வரலாற்றில் குறிக்கத்தக்கப் பெருமைக்குரியவர்கள். அல்ஹம்து லில்லாஹ்.

மு.ந.அ  - தென்னிந்திய இஷா அத்துல் இஸ்லாம் சபையின் நிறுவனத் தலைவர். இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ் மாநில துணைத் தலைவர்.

காயிதே மில்லத் மறைந்த உடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அகில இந்திய தற்காலிகத் தலைவராக சில மாதங்கள் இருந்தார். அதன் பின் கேரளத்து பாபக்கி தங்கள் அப்பொறுப்பை ஏற்றார்.

 காயிதே மில்லத் - இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் நிறுவனத் தலைவர்.

மு.ந.மு - திருநெல்வேலி முஸ்லிம் அனாதை நிலைய நிறுவனத் தலைவர்.

                     அண்ணலாரின் வாழ்க்கை வரலாற்றைத்  தமிழ் உரை நடையில் முதன்முதல் திருநபி சரித்திரம் என்ற பெயரில் எழுதி நூலாக  வெளியிட்டவர்.

மு.ந.அ வின் மூத்த மகனார் A.K. ரிபாய் சாஹிப். இரண்டாவது மகனார் தமிழகச்  சட்டமன்ற கடையநல்லூர் தொகுதி  முன்னாள் உறுப்பினர். ஷாகுல் ஹமீது சாஹிப் .

அடுத்து மகளார் காதர் ஹைருன்னிஷா பேகம்.

 மு.ந.அ  1952 இல் தமிழக சட்டமன்ற திருநெல்வேலி தொகுதி முஸ்லிம் லீக் உறுப்பினர்.

மு.ந.முஹம்மது சாஹிப் 1939 ஆம் ஆண்டு சென்னை ராஜதானியின் மேலவை உறுப்பினர்.

A.K.ரிபாய் சாஹிபின் சிறிய தந்தை மு.ந.மு. அவர்களின் மூத்த மகனார் ஜமால் முஹம்மது சாஹிப் - இவர், இவரின்  தந்தையார் மறைவிற்கு பின் முஸ்லிம் அனாதை நிலையத்தின் தலைவராக வாழ்நாள் முழுதும் இருந்து வந்தார்.

ஜமால் முஹம்மது சாஹிபின் துணைவியார் காதர்  ஹைருன்னிஷா பேகம். இவர் நெல்லை முஸ்லிம் சிறுமியர் கல்வி நிலையத்தின் நிறுவனத் தலைவியர். இவர் A.K.ரிபாய் சாஹிபின் தங்கை.

தி.மு.க. வின் கூட்டணியோடு முஸ்லிம் லீக் 1962 இல் தேர்தலை விடுதலைக்குப் பின் முதன்முதல் சந்தித்தது. இதில் நெல்லை சட்டமன்ற தொகுதியில் காயிதே மில்லத்தின் தம்பி K.T.M.அஹமது இப்ராஹிம் சாஹிப் முஸ்லிம் லீக் வேட்பாளராகப் போட்டியிட்டார்.

தென்காசி தொகுதிக்கு முஸ்லிம் லீக் வேட்பாளராக  A.K.ரிபாய் சாஹிப் போட்டியிட்டார். வட சென்னை மக்களவைத் தேர்தலில் முஸ்லிம் லீக் வேட்பாளராக A.K.A.அப்துல் ஸமது சாஹிப்   போட்டியிட்டார். நாகப்பட்டணம் சட்டமன்றத் தொகுதியில் முஸ்லிம் லீக் வேட்பாளராக கவிஞர் திலகம் சாரண பாஸ்கரனார் போட்டியிட்டார். இன்னும் மூவரும் இந்தத் தேர்தலில் போட்டியிட்டனர். இவர்கள் அனைவருமே வெற்றி வாய்ப்பை இழந்தார்கள்.

1966 ஆம் ஆண்டு வாக்கில் தமிழ் மாநிலத்தின் மாநில செயலாளராக முஸ்லிம் லீகின் தொடக்கக் காலத்திலிருந்து பதவி வகித்து வந்த K.T.M. அஹமது  இப்ராகிம் சாஹிப் மறைந்தார்கள். அதைத் தொடர்ந்து தமிழ் மாநில முஸ்லிம் லீகின் மாநில செயலாளராக 1979 வரை A.K. ரிபாய் சாஹிப் பதவி வகித்து வந்தார்.

1972 தமிழ் நாடு சட்டமன்றத்தின் உறுப்பினர்களால் டெல்லி நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப் படும் உறுப்பினர்களில் முஸ்லிம்  லீக் சார்பில் A.K.ரிபாய் சாஹிப்  தேர்ந்தெடுக்கப் பட்டார். அந்த நேரத்தில் உடன் தேர்ந்தெடுக்கப் பட்ட உறுப்பினர்களில் அதிகமாக வாக்குகளைப்  பெற்று வெற்றிப் பெற்றவர் A.K.ரிபாய் சாஹிப்.

1979 க்கு பின்னர் தந்தையார் நிறுவனத் தலைவராக இருந்து வந்த தென் இந்திய இஷா அத்துல் இஸ்லாம் சபையின் தலைவராகவும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில முதல் துணைத் தலைவராகவும் தன் வாழ்நாள் முழுவதும் பொறுப்பு வகித்து வந்தார்.

1998-ம் ஆண்டு  தன் மூத்த மகனார் A. நத்ஹர் பாவா ஜலால் மற்றும் அவர் தம் துணைவியார் Dr. ஹிப்பத் பாத்திமா உடன் ஹஜ் கடமை நிறைவேற்றச் சென்றார் A.K.ரிபாய் சாஹிப். மதினத்தில் கடமைகளை நிறைவேற்றி விட்டு மக்கத்தில் இருந்த காலத்தில் மார்ச் 21-ல் மக்ரிப் தொழுகையை நிறைவேற்றி வந்து அமர்ந்த நிலையில் அவரே தன் கபன் துணியை மேலே போர்த்திக் கொண்ட நிலையில் இறை நாட்டப்படி இறைவனளவில் சேர்ந்தார்.        

அவரின் ஜனாஸா கஅபாவில் பஜ்ர் தொழுகை முடிந்த பின்னர் பல்லாயிரக்கணக்கானவர்கள் ஜனாஸா தொழுகையில் பங்கு பெற மக்கா- "ஜன்னத்துல் மாலா " மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

A.K.ரிபாய் சாஹிபின் துணைவியார் ஆமினா அம்மையார்.

இவர்களின் வாரிசுகள் :

1. A. நத்ஹர் பாவா ஜலால். M .Sc . (Agri )
(தமிழகத் தோட்டக் கலைத்துறை முன்னாள் இணை இயக்குனர்.)
2. A. அப்துல் ரஹ்மான் பாரூக். B.Sc
3. A. முஹம்மது சாஹிப் பிலால்
4. அ. ஹிலால் முஸ்தபா
5. A. முஹம்மது இஸ்மாயில் ரபீக் (Auditor)