Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

சிறுபான்மை மாணவர்களுக்கு கல்விஉதவி தொகை விண்ணப்பிக்கலாம்

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சிறுபான்மை மாணவர்கள் கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.தமிழகத்தில் வாழும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், சீக்கியர் புத்த மதம் மற்றும் பார்சி பிரிவை சேர்ந்த தொழில் மற்றும் தொழில் நுட்ப கல்வி படிக்கும் மாணவ, மாணவிகளின் கல்வி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவி தொகை திட்டத்தின் கீழ் 2013-14ம் ஆண்டிற்கு கல்வி உதவி தொகை பெறுவதற்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்களை பதிவதற்கு வரும் செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்குள்ளும், புதுப்பித்தலுக்கு வரும் டிசம்பர் மாதம் 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2,301 மாணவர்களுக்கு புதிய கல்வி உதவி தொகை மத்திய அரசால் வழங்கப்படுகிறது. கல்வி உதவி தொகை பெற மாணவ, மாணவிகள் கடந்த ஆண்டு பொது தேர்வில் குறைந்தபட்சம்50 சதவீத மார்க் பெற்றிருக்க வேண்டும். பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஆண்டு வருமானம் 2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்த மாணவர்கள் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து கையொப்பமிட்டு, மார்க் சான்று, வருமான சான்று நகல்களுடன் கல்வி கட்டணம் செலுத்திய ரசீது, இருப்பிட முகவரி, பாங்க் கணக்கு எண் ஆகிய ஆவணங்களை இணைத்து அவர்கள் படிக்கும் கல்வி நிலையங்களில் வரும் அக்டோபர் மாதம்10ம் தேதிக்குள் பதிவு செய்யவும், 20.1.2014க்குள் புதுப்பித்தலுக்கும் விண்ணப்பிக்க வேண்டும். கல்வி உதவி தொகை மாணவ, மாணவிகளின் பாங்க் கணக்கில் செலுத்தப்பட உள்ளதால் விண்ணப்பிக்கும் போது பாங்க் கணக்கு விபரங்களை தவறாது சமர்ப்பிக்க வேண்டும்.

மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்ட கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவ, மாணவிகள் செலுத்தும் முழு கல்வி கட்டணமும் திரும்ப வழங்கப்படும். பிற கல்வி நிறுவனங்களில் விடுதியில் தங்கி படிப்பதற்கு 30 ஆயிரம் மற்றும் விடுதியில் தங்காமல் படிப்பவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அதிகபட்சமாக கல்வி உதவி தொகை வழங்கப்படும்.கல்வி நிலையங்கள் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதியான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பரிந்துரை செய்ய வேண்டும். ""சிறுபான்மை நல ஆணையர், 81, அண்ணா சாலை, சென்னை - 2 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். இதுதொடர்பாக மேலும் விபரங்களுக்கு 044 - 28523544 என்ற டெலிபோனில் தெரிவிக்க வேண்டும் என்று கலெக்டர் சமயமூர்த்தி தெரிவித்தார்.

காலணி வடிவமைப்பு பயிற்சி: விண்ணப்பிக்க ஆகஸ்ட்14 கடைசிநாள்

சென்னை, கிண்டியில், மத்திய அரசின், மத்திய காலணி பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையம் சார்பில், காலணி வடிவமைப்பு சார்ந்த, நான்கு முதல் 12 வார, குறுகிய கால சான்றிதழ் பயிற்சிகளும், இரண்டு ஆண்டு டிப்ளமோ பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

இதுதவிர, "புட்வேர் டெக்னாலஜி"யில் முதுகலை டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பும் உள்ளது. சான்றிதழ் படிப்பில் சேர, 10ம் வகுப்பு, டிப்ளமோவில் சேர, பிளஸ் 2 படித்திருக்க வேண்டும். முதுகலை டிப்ளமோவில் சேர, ஏதேனும் ஒரு டிப்ளமோவும், முதுகலை பட்டப்படிப்பில் சேர, ஏதேனும் ஒரு பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.

இதுகுறித்து, மத்திய காலணி பயிற்சி மைய இயக்குனர், முரளி வெளியிட்ட அறிவிப்பு: காலணி வடிவமைப்பு பயிற்சி முடிக்கும் மாணவர்களுக்கு, உடனடி வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படுகிறது. இதில் சேர, www.cfti.com என்ற இணையதளத்தில், விண்ணப்பத்தைப் பெற்று, பூர்த்தி செய்து, ஆக.,14ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு, கட்டணம் இலவசம்; விடுதி வசதி உள்ளது. மேலும் விவரங்களுக்கு, "இயக்குனர், மத்திய காலணி பயிற்சி மையம், 65/1, ஜி.எஸ்.டி.சாலை, கிண்டி, சென்னை-32" என்ற முகவரியிலோ, 044-2250 1529, 94430 06257 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

பாபநாசம் அணையில் படகு போக்குவரத்து தொடக்கம்: சுற்றுலா பயணிகள்–வியாபாரிகள் உற்சாகம்

புலிகள் சரணாயலயங்களில் சுற்றுலா செல்ல உச்ச நீதிமன்றம் 2012–ம் ஆண்டு ஜூலை 2–ந்தேதி தடை விதித்தது. இதனால் முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் உள்ள மணிமுத்தாறு, பாபநாசம் அகஸ்தியர் அருவி, காரையார் பாணதீர்த்த அருவி மற்றும் களக்காடு செங்கல்தேரி ஆகிய சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன.

புலிகள் சரணாலயத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. பின்பு தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் புதிய நெறி முறைகளை உருவாக்கியது. இதனைத்தொடர்ந்து நிபந்தனைகளுடன் புலிகள் சரணாலயங்களில் சுற்றுலா செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இதனைத்தொடர்ந்து உள்ளூர் ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் முதல் கூட்டம் 2012–ம் ஆண்டு டிசம்பர் 4–ந்தேதி நடைபெற்றது. அதில்பாபநாசம் அகஸ்தியர் அருவி மற்றும் மணிமுத்தாறு அருவிகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் பாபநாசம் அணையில் படகு போக்குவரத்து தொடங்க அனுமதி வழங்கப்படவில்லை.

அதற்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று படகுகளின் உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 2–ந்தேதி நடந்த உள்ளூர் ஆலோசனைக்குழு கூட்டத்தில் பாபநாசம் அணையில் படகு போக்குவரத்தை தொடங்க முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து அணையில் படகுகளை இயக்க தங்களை அனுமதிக்க வேண்டும் என்று மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு படகு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பாபநாசம் அணையில் படகு போக்குவரத்து தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதற்கிடையை பாபநாசம் அணையில் படகு உரிமை யாளர்கள் 15 படகுகளை இயக்கலாம் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து பாபநாசம் அணையில் படகு போக்குவரத்து இன்று தொடங்கியது.

பாபநாசம் அணையில் படகு போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதால் படகு உரிமையாளர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் அப்பகுதியில் கடை நடத்தி வரும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.