Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 14 பிப்ரவரி, 2013

ஆதார் அடையாள அட்டையில் தவறான முகவரி, எங்கு திருத்துவது என தெரியாமல் மக்கள் குழப்பம்


திட்டக்குடி பகுதியில் அரசால் வழங்கப்பட்டு வரும் ஆதார் அடையாள அட்டையில் பெயர் குளறுபடியால் மாற்று அட்டை பெறுவது எப்படி என தெரியாமல் மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.

திட்டக்குடி பகுதியில் சில மாதங்களுக்கு முன் ஆதார் அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக்கப்பட்டது. இதில் பொதுமக்களின் போட்டோ, கைரேகை, கண்விழி ஆகியவைகளை புகைப்படம் எடுத்தனர். இதற்கான அடையாள அட்டை கடந்த சில தினங்களாக தபால் மூலம் பொது மக்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

 இந்த அட்டைகள் பலவற்றில், பயனாளியின் பெயர், தந்தை பெயர் மற்றும் முகவரி தவறுதலாக குறிப்பிட்டுள்ளதால், இந்த அடையாள அட்டையை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
திட்டக்குடி அடுத்த கூடலூர் கிராமத்தை சேர்ந்த அனந்தசயனம் மகன் தினேஷ், முதுகலை பொறியியல் பட்ட படிப்பு படித்து வரும் இவருக்கு தபாலில் வந்த ஆதார் அடையாள அட்டையில் தந்தை பெயர் ஒரு இடத்தில் சரியாகவும், மற்றொரு இடத்தில் தவறுதலாக ஜெயக்குமார் பாண்டுரங்கன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தவறுகளை திருத்தம் செய்ய, யாரை அணுக வேண்டும் எனத் தெரியாமல் குழப்பமடைந்துள்ள பொதுமக்கள், ஆதார் அடையாள அட்டையில் உள்ள தவறுகளை திருத்தம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் பாராட்டு


சுற்றுச்சூழல் சந்திப்பு நிகழ்ச்சியில், தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் பள்ளி மாணவர்களின் செயல்முறை விளக்கத்தை பார்வையிட்டு முதல்வர் ஷீலா தீட்சித் பாராட்டினார்.

தில்லி தல்கடோரா மைதானத்தில் இரு நாள் வருடாந்திர சுற்றுச்சூழல் சந்திப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

நிகழ்ச்சியை தொடங்கிவைத்த தில்லி முதல்வர் ஷீலா தீட்சித், பல்வேறு பள்ளி மாணவர்களின் சுற்றுச்சூழல் தொடர்பான செயல்விளக்க அரங்குகளைப் பார்வையிட்டார்.

தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் பூசா பள்ளியின் சார்பில் 15 மாணவர்கள் அமைத்திருந்த அரங்குக்குச் சென்ற முதல்வர், கழிவுப் பொருள்கள் மூலம் மாணவர்கள் உருவாக்கிய படைப்புகளை பார்வையிட்டார்.

அதில், சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கான பல்வேறு செயல்முறைகளை மாணவர்கள் வெளிப்படுத்தியிருந்தனர். அவர்களது முயற்சிக்கு ஷீலா தீட்சித் பாராட்டு தெரிவித்தார்.

தேவையற்ற பொருள்களில் இருந்து காளான் செய்யும் முறையை பார்வையாளர்களுக்கு மாணவர்கள் விளக்கினர். பள்ளியில் உற்பத்தி செய்யப்பட்ட பலவித காளான்களையும் காட்சிக்கு வைத்திருந்தனர்.

மூலிகைப் பயன்கள் பற்றியும், தரிசு நிலங்களை பசுமைப்படுத்துதல், பழைய காகிதங்ளை மறுசுழற்சி முறை மூலம் பயனுள்ள அட்டைகள் தயாரித்தல் ஆகியவை குறித்தும் விளக்கினர்.

குப்பைகளாக வீசப்படும் பொருள்களில் இருந்து சமையலறை உடைகள், வண்ண கைபேசி உறைகள், பரிசுப் பொருள்களை பேக் செய்யும் உறைகள் ஆகியவற்றையும் பார்வைக்கு வைத்திருந்தனர். கண்ணாடித் துண்டுகள், காகிதங்கள் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஓவியங்கள் ஆகியவற்றையும் பார்வைக்கு வைத்திருந்தனர்.

முன்னதாக, நிகழ்ச்சியில் பேசிய ஷீலா தீட்சித், ""தலைநகரை பசுமை நகரமாக உருவாக்குவதில் பள்ளிகளில் செயல்படும் சுற்றுச்சூழல் மன்றங்களின் பங்களிப்பு பாராட்டுகுரியது.

இம்மன்றங்களின் உதவியுடன் சுற்றுச்சூழல் குறித்த பல்வேறு விழிப்புணர்வுப் பிரசாரங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இது மேலும் தொடர வேண்டும்' என்று கூறினார்.

இந்தியாவில் மனித வளம் கிடைப்பதில் சிரமம்


இந்தியாவில் மனிதவளம் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக, பிடிசி இந்தியா நிறுவன தேசிய மேலாளர் ஜெப்ரி வில்மாட் தெரிவித்தார்.

 பெங்களூரில் செவ்வாய்க்கிழமை வாகன உதிரிப் பாகங்கள் மற்றும் மென்பொருள் கண்காட்சியைத் தொடக்கி வைத்த அவர், பின்னர் பேசியது:
 இந்தியாவில் பொறியியல் கல்வியைப் படிப்பதில் மாணவர்களுக்கு ஆர்வம் குறைந்து வருகிறது. கணினி தொடர்பான பட்டப்படிப்பு படித்துவிட்டு, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிக்குச் செல்வதை பெரும்பாலான மாணவர்கள் விரும்புகின்றனர். அதனால், பல்வேறு வாகனத் தயாரிப்பு தொழில்சாலைகளில் பல பணியிடங்கள் காலியாக உள்ளன.
 மனித வளம் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால், வாகனத் தொழில்சாலைகளை இந்தியாவில் தொடங்குவதைவிட சீனாவில் தொடங்குவதையே பெரும்பாலான முதலீட்டாளர்கள் விரும்புகின்றனர். எனவேதான் மாணவர்கள் பயனடையும் வகையில், பெங்களூரில் வாகன உதிரிப் பாகங்கள் மற்றும் அதற்கான மென்பொருள் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 கடந்த ஆண்டுகளில் மும்பை, சென்னையில் இந்தக் கண்காட்சிகள் நடைபெற்றன. புதன்கிழமை (பிப்.13) புணேவில் இந்தக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.