Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 54,870 பணியிடங்கள் காலியாக உள்ளது


தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 54 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளன. இதனால் பழுது பணிகளும், மின் இணைப்பு பணிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மின்வாரியத்தில் மொத்த மின் நுகர்வோர்கள் எண்ணிக்கை 2.10 கோடி. ஆண்டுதோறும் பல ஆயிரக்கணக்கான புதிய இணைப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது. களப்பிரிவு, கணக்கீட்டுப் பிரிவு, வருவாய் பிரிவு, தொழில்நுட்ப பிரிவு என மொத்த பிரிவுகளிலும் சேர்த்து 90 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆண்டுதோறும் 5 சதவீதம் பேர் ஓய்வு பெறுகிறார்கள்.

இதனால் புதிதாக மின் இணைப்பு பெற பல நாட்கள் காத்துக் கிடக்க வேண்டியிருக்கிறது. உதிரிப் பொருட்கள் பற்றாக்குறையால், மின்பராமரிப்பு பணிகளும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. மின்நிலையங்களில் அடிக்கடி பழுது ஏற்படுகிறது.  பழுதுகளை சரிசெய்ய அலுவலகங்களுக்கு போன் செய்தாலும், எந்த பதிலும் இல்லை.
புதிய மின் இணைப்புகள் தருவதன் மூலம் மட்டுமே, மின்வாரியத்துக்கு வருவாய் அதிகரிக்கப்படுகிறது. அதற்கான பணிகளை செய்பவர்கள்தான் களப்பிரிவு ஊழியர்கள். நுகர்வோர் விண்ணப்பித்த ஓரிரு நாட்களிலேயே மின் இணைப்பு தரப்பட வேண்டும். ஆனால், ஊழியர்கள் பற்றாக்குறையால் ஒரு மாதம் வரை காலதாமதம் ஏற்படுகிறது.


களப்பிரிவு ஊழியர்களில் ஒயர்மேன், உதவியாளர்கள், வணிக ஆய்வாளர், மின்பாதை ஆய்வாளர்கள், போர்மேன் என 42,724 பணியிடங்கள் காலியாக உள்ளன. உதவியாளர் பணியிடங்கள் மட்டும் 15,000 காலியாக உள்ளன. அலுவலர் மற்றும் எழுத்தர் பிரிவில் 12,146 பணியிடங்கள் காலியாக உள்ளன. மொத்தம் 54,870 பணியிடங்கள் காலியாக இருக்கிறது.

இது குறித்து மின்வாரிய சம்மேளன பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் கூறியதாவது: மின்வாரியத்தில் ஏற்பட்டுள்ள ஊழியர்கள் பற்றாக்குறையால், மின்இணைப்பு, மின்பராமரிப்பு, மின்கட்டண கணக்கீடு, பண வசூல், மின்தடை நீக்கம் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. புதிய மின்இணைப்பு கொடுக்கும் பணிகளும் தாமதமாகின்றன. அதிக பணி பளு காரணமாக, மின் ஊழியர்களின் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கிறது. எனவே மின் ஊழியர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. காலி பணியிடங்களை நிரப்ப கோரி மின்வாரிய நிர்வாகத்திடம் பல முறை கோரிக்கை மனு அளித்துள்ளோம். ஆனால், எவ்வித நடவடிக்கையும் இல்லை.

ஆயிரக்கணக்கான காலிப்பணியிடங்களுக்கு சில நூறு ஒப்பந்த ஊழியர்களை வைத்து கொண்டு மின்வாரிய பழுது பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், இது போதாது. இறுதியில் பாதிப்பது மக்கள் தான். தமிழக அரசு 4,000 பேரை நியமிக்க உத்தரவிட்டது. இது போதாது. பணிகளை விரைவாக முடிக்கவும், ஊழியர்கள் பாதுகாப்பாக பணியாற்றவும், மின்வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஏமாற்றி வந்த சாரல் மீண்டும் வந்ததால் குற்றாலத்தில் வெள்ளம்


குற்றாலத்தில் கடந்த ஒரு வார காலமாக சாரல் பெய்வதால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. இன்று காலை முதல் தென்காசி பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

மெயின் அருவியில் இன்று மதியம் முதல் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் கொட்டுகிறது. இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐந்தருவி உள்ளிட்ட மற்ற அருவிகளிலும் தண்ணீர் அதிக அளவில் விழுகிறது. அங்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.

பிரதமரின் உண்மையான கவலை


பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட்டுள்ள ஆசிரியர் தின சிறப்பு செய்தியில் கூறியிருப்பதாவது:-

கடந்த 8 ஆண்டுகளில் துவக்கப் பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்கை அதிகரித்துள்ளது. மேலும் பாலின இடைவெளியும் குறைந்திருக்கிறது. சமூகத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், எஸ்சி, எஸ்டி சிறுபான்மைகளினர் இடைவெளி குறைந்துள்ளது.

எனினும், ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்கான கல்வி மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. எனவே அதற்கேற்ப பள்ளிகளின் செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டும். மாணவர்களின் வருகையை கண்காணிக்க வெளிப்படையான நம்பகமான அமைப்பை உருவாக்க வேண்டும்.

2004-05 முதல் கல்விக்காக மத்திய அரசு அதிக நிதியை செலவு செய்து வருகிறது. கொள்கைகளை உருவாக்குதல், நிர்வாகம் மற்றும் மேலாண்மை ஆகியவற்றில் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.  

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.