Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 21 அக்டோபர், 2013

புதிய தொழில் படிப்பை முன்மொழிந்தது யு.ஜி.சி!

பிளம்பிங், கார்பென்டரி மற்றும் பிற திறன்கள் ஆகியவைத் தொடர்பான பயிற்சிகளை அளிக்க, தொழிற்கல்வி பிரிவில், ஒரு புதிய பட்டப்படிப்பை யு.ஜி.சி., முன்மொழிந்துள்ளது.

பள்ளி மேல்நிலைப் படிப்பை முடித்தப்பிறகு, பட்டப் படிப்பை மேற்கொள்ளாமல், பல்வேறு சூழல்களால் தொழில்துறை பணிகளுக்கு சென்றுவிட்ட நபர்களுக்காக இப்படிப்பு(B Voc) தொடங்கப்படுகிறது. இதன்மூலம் பிளம்பிங், கார்பென்டரி மற்றும் அதையொத்த பிற தொழிற்பிரிவுகளில் ஈடுபட்டுள்ள நபர்கள், எளிதில் பட்டதாரிகளாக மாறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

வரும் கல்வியாண்டு முதல், கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் போன்றவை இப்படிப்பை வழங்கலாம் என்று UGC தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படிப்பு, கிரெடிட் சிஸ்டம் அடிப்படையில் நடத்தப்படும் மற்றும் வருகைப்பதிவு விஷயத்தில் நெகிழ்வுத் தன்மையும் உண்டு. இதன்மூலம், தங்களின் பணிச்சூழல் காரணமாக, மாணவர்களால் தொடர்ச்சியாக வகுப்புகளில் கலந்துகொள்ள முடியாமல் போனாலும், அவர்களால் தேர்வெழுதி பட்டம் பெற முடியும்.

இப்படிப்பு(B Voc), 3 வருட பட்டப் படிப்பு என்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள், தங்களுடைய பகுதியின் சூழலுக்கு ஏற்ப பாடத்திட்டங்களை தாங்களே வடிவமைத்துக் கொள்ளலாம். () தவிர்த்து, துணைநிலைப் பாடங்கள் மற்றும் trades ஆகியவைகளுக்கு கிரெடிட்டுகள் வழங்கப்படும். அதேசமயம், ஒரு தொழில் திறனற்ற நபர், பட்டம் பெறுவதற்கு இந்தப் படிப்பு உதவுமா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கல்வியாளர்கள் என்ன கூறுகிறார்கள் என்றால், "நாட்டில் இருக்கும் கலை-அறிவியல் கல்லூரிகள், தங்களின் வழக்கமான படிப்புகளையே சிறப்பாக நடத்த முடியாத சூழல் நிலவுகையில், புதிதாக இன்னொரு படிப்பை நடத்துமாறு கூறுவது ஏற்கத்தக்கதல்ல. இதனால், மாணவர்கள்தான் பாதிக்கப்படுவார்கள். இப்படிப்பால், புதிய பயன் ஒன்றும் ஏற்படாது.

மேலும், பல கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக்குகளில், போதுமான ஆய்வக வசதிகள் மற்றும் ஆசிரியர்கள் இல்லை. எனவே, இப்போதைய தேவை என்னவெனில், இருக்கும் படிப்புகளுக்கு தேவையானதை செய்வதுதானே ஒழிய, புதிய படிப்புகள் அல்ல. ஆனால், இதையும் மீறி அந்தப் படிப்பை(B Voc) நடத்தியே ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால், அது தொழில்நுட்ப கல்லூரிகளிலேயே நடத்தப்படு வேண்டும். ஏனெனில், அங்குதான் அதற்கான அடிப்படை வசதிகள் உள்ளன" என்று தங்களின் ஆதங்கத்தை அவர்கள் முன்வைக்கிறார்கள்.

சென்னையில் விடிய விடிய மழை: வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள்

சென்னையில் நேற்றிரவும் இன்று காலையிலும் பெய்த இடைவிடாத மழை காரணமாக தாழ்வான பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதில் பல வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

வளசரவாக்கம் மண்டலம் 11–ல் மதுரவாயல் 144–வது வார்டு பகுதியில் உள்ள அபிராமி நகர், காமாட்சி நகர், ஜெயராம் நகரில் உள்ள வீடுகளில் வாசல் வரை மழைநீர் தேங்கி கிடக்கிறது.

இதேபோல் 145–வது வார்டான செல்லியம்மன் நகரிலும் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இங்கு மழைநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் கிடப்பதால் மழைநீர் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதேபோல் கொளத்தூர், பாடிக்குப்பம், பேசின் பிரிட்ஜ், ராம்நகர், குபேரன் நகர் பகுதிகளில் மழைநீர் வீடுகளை சூழ்ந்துள்ளது.

வியாசர்பாடி சி.கல்யாணபுரம், எம்.கே.பி.நகர், புரசைவாக்கம் நெடுஞ்சாலை, ஓட்டேரி, அயனாவரம், ஜாபான் ஆபிஸ் பகுதிகளிலும் மழை தண்ணீர் தேங்கி நிற்பதால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, நுங்கம்பாக்கம், வள்ளூவர் கோட்டம் மெயின் ரோட்டில் மழை நீருடன், சாக்கடை நீர் கலந்து ரோட்டில் ஓடுவதால் நடக்கவே அறுவெறுப்பாக உள்ளது.

வடபழனி பஸ் நிலையத்தில் மழைநீர் தேங்கி கிடப்பதால் பஸ் நிலையத்திற்கு வர முடியாமல் மக்கள் ரோட்டிலேயே நின்று பஸ் ஏறி சென்றனர்.

இதேபோல் கோயம்பேடு சிக்னல், ஓட்டேரி ஜங்ஷன், அபிராமி தியேட்டர் அருகேயும் மழைநீர் தேங்கி கிடக்கிறது.

அம்பத்தூர் எஸ்டேட் ரோட்டில் பள்ளம்– மேடு தெரியாத அளவுக்கு மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் லாரி சிக்கி நடுரோட்டில் கவிழ்ந்து கிடக்கிறது. இதனால் எஸ்டேட் பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.



பட்டறைவாக்கம், மேனாம்பேடு பகுதியில் மழைநீர் வடிகால் வசதி இல்லாததால் ரோட்டிலேயே மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் மக்கள் சகதியில் நடந்து வீட்டை விட்டு வெளியே வரும் அவல நிலை உள்ளது.

விருகம்பாக்கம் காளியம்மன் கோவில் தெரு, நடேசன் தெருக்களிலும் மழைநீர் வடியாததால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். ஒக்கியம் துரைப்பாக்கம் கிருஷ்ணா நகரில் மழைநீர் தேங்கியதால் கவுன்சிலர் எம்.எஸ்.பாஸ்கரன் ஜே.சி.பி. எந்திரத்தை வரவழைத்து மழைநீரை வடிய வைக்க முயற்சி மேற்கொண்டார்.

சேத்துப்பட்டு, கோடம்பாக்கம், மடிப்பாக்கம் பகுதிகளிலும் ஒருநாள் மழைக்கே ரோட்டுக்கு தண்ணீர் வந்ததால் மக்கள் கஷ்டப்பட்டு செல்ல முடிந்ததை பார்க்க முடிந்தது.