Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 22 மார்ச், 2013

ஏப்ரல் - 2, இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாபெரும் கோரிக்கை பேரணி ஏன் ?


* கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத தனி இடஓதுக்கீடு வழங்க மத்திய அரசை வலியுறுத்தியும்;

தமிழ்நாட்டில் 3.5ரூ இடஓதுக்கீட்டை உயர்த்தி தர தமிழக அரசை வலியுறுத்தியும் !

* இந்தியாவில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரியும் !

* நீண்ட கால சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தியும் !

2013 ஏப்ரல் 2 செவ்வாய்க்கிழமை அனைத்து மாவட்டத் தலைநகரங்களில்

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாபெரும் கோரிக்கை பேரணி நடைபெறும் .

முஸ்லிம்களுக்கு தனி இடஓதுக்கீடு : 
121 கோடி மக்கள் வாழும் நம் இந்தியத் திருநாட்டில் முஸ்லிம்கள் 13.4 சதவீதம் என அரசின் புள்ளிவிவரம் கூறுகிறது.

முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாத்தல், தனி இடஓதுக்கீடு என்பதை பிரதான நோக்கமாகக் கொண்டு 1906ல், முஸ்லிம் லீக் துவக்கப்பட்டு, அது வாதாடி போராடி பெற்றுத்தந்த சலுகைகள் அனைத்தும் 1947 ஆகஸ்ட் 15ல் இந்தியா சுதந்திரமடைந்த நாளிலிருந்து 45 நாட்களுக்குள் ரத்து செய்யப்பட்டன. இந்திய முஸ்லிம்களின் வாழ்வுரிமை கேள்விக்குறியாக்கப்பட்ட அந்த பதற்றமான காலகட்டத்தில்தான் 1948 மார்ச் 10 அன்று துணிச்சலான முடிவெடுத்து தலைமைப் பொறுப் பேற்று இந்திய யூனியன் முஸ்லிம் லீகை வழிநடத்தினார் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்.

முஸ்லிம்களுக்கான தனி இடஓதுக்கீட்டை வலியுறுத்தி 1948 நவம்பர் 8 அன்றும், பிற்பட்டோர் பட்டியலில் முஸ்லிம்களுக்கு இடமளிக்க வலியுறுத்தி அதே நவம்பர் 30ம் தேதியும் இந்திய அரசியல் நிர்ணய சபையில் அவர் செய்த வாதம் சமுதாயத்தால் என்றென்றும் நன்றியுடன் நினைவு கூறத்தக்கது. 1967 தேர்தலில் தி.மு.க- முஸ்லிம் லீக் கூட்டணி வெற்றி பெற்று அறிஞர் அண்ணா தமிழக முதல்வரானார். அவர் மறைவுக்குப்பின் கலைஞர் முதல்வரானதும் 1969 நவம்பர் 13ம் தேதி சட்டநாதன் தலைமையில் பிற்பட்டோர் நலக்குழுவை அமைத்தார். அக்குழுவின் பரிந்துரையில் தான் தமிழ்நாட்டில் 105 சாதி பிரிவுகள் பிற்பட்டவகுப்புகளாக அடையாளம் காணப்பட்டன. அதில் முஸ்லிம்களில் லெப்பை,மாப்பிள்ளை,தூதேகுலா என மூன்றும் பிற்பட்டவைகளாக குறிப்பிடப்பட்டன.

1971 ல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர்கள் வாதாடி உர்து பேசும் முஸ்லிம்களை பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்கச் செய்தனர். தமிழ், உர்தூ பேசுகின்ற மரைக்காயர், ராவுத்தரை உள்ளடக்கியது தான் ‘லெப்பை’ என்ற உத்தரவு 1977 ல் முஸ்லிம் லீகால் பெற்றுத் தரப்பட்டது. 1999 மார்ச் 9,10 இரு தினங்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொன்விழாவை யொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற மாபெரும் மாநாட்டில் சிராஜுல்மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத் அவர்கள் இட ஓதுக்கீட்டை வலியுறுத்தி உரத்து குரல் எழுப்ப, அந்த மேடையிலேயே கலைஞர், ‘உங்களுக்கு நான் ஒரு உறுதி மொழி தருகிறேன் ; முஸ்லிம்களுக்கு தனி இடஓதுக்கீடு சம்பந்தமாக நல்ல முடிவை அறிவிப்பேன்’ என உறுதியளித்தார். அந்த உறுதி மொழியின்படி 2007 செப்டம்பர் 13 அன்று முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத தனி ஒதுக்கீடு அளித்து ஆணைபிறப்பித்தார் கலைஞர். அந்த ஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்தி தர வேண்டும் என 2010 டிசம்பர் 11 அன்று சென்னை தாம்பரத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில் கோரிக்கை வைக்கப்பட்டது. தான் மீண்டும் முதல்வரானால் நிச்சயம் இதை பரிசீலிப்பேன் என அம்மாநாடு மேடையிலேயே அறிவித்தார் கலைஞர்.

அத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க வெற்றி பெற்று 2011 மே16ல் ஜெயலலிதா அம்மையார் முதல்வர் ஆனார். தேர்தல் பிரச்சார கூட்டங்களில் உரையாற்றிய அவர் தமிழ்நாட்டில் ‘தனது அரசு அமைந்தால் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு உயர்த்தி வழங்கப்படும்’ என உறுதியளித்தார்.

எனவே கல்வி - வேலைவாய்ப்பில் மிகவும் பின்தங்கியுள்ள முஸ்லிம்களை கைதூக்கிவிட தமிழ்நாட்டில் அமலில் உள்ள 3.5 சதவீத தனி இடஓதுக்கீட்டை தமிழ்நாடு அரசு உயர்த்தி வழங்க வேண்டியது அவசியமாகும்.

சச்சார், மிஸ்ரா ஆணையங்கள் : 
2004 ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று டாக்டர் மன்மோகன்சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைந்தது. சுதந்திர இந்திய வரலாற்றில் முதன் முறையாக மத்திய அரசில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம் பெற்றது. அதன் தேசிய தலைவர் இ.அஹமது சாகிப் வெளியுறவுத் துறை இணை அமைச்சரானார். இக்கூட்டணி அரசுக்கு குறைந்த பட்ச செயல் திட்டங்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சமர்ப்பித்தது. அவை ஏற்கப்பட்டு அதன்விளைவாக சச்சார், மிஸ்ரா ஆணையங்கள் அமைக்கப்பட்டன.

இந்திய முஸ்லிம்களின் சமூக பொருளாதார கல்வி நிலை குறித்த ஆய்வினை மேற்கொண்டு அறிக்கை தர நீதியரசர் ராஜேந்திர சச்சார் தலைமையில் 2005 மார்ச் 9 அன்று குழு அமைக்கப்பட்டு 2006 நவம்பர் 17ல் அறிக்கை பெறப்பட்டு நவம்பர் 30ல் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டது. இந்த அறிக்கையால் தான் இந்திய முஸ்லிம்களின் கல்வி பொருளாதார சமூகநிலை எவ்வளவு படுபாதாளத்தில் இருக்கிறது என்ற உண்மை வெளிச்சம் போட்டு காட்டப்பட்டது.

இதை போன்று மொழி மற்றும் மத சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம் நீதியரசர் ரங்கனாத் மிஸ்ரா தலைமையில் 2005 மார்ச் 15 அன்று அமைக்கப்பட்டது. இக்குழு தனது அறிக்கையை 2007 மே 22 அன்று பிரதமரிடம் சமர்ப்பித்தது.

அரசுப் பணிகளின் எல்லாமட்டங்களிலும் சிறுபான்மையினருக்கு 15ரூ இடஓதுக்கீடு அளிக்க வேண்டும், அதில் முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் மற்ற சிறுபான்மையினருக்கு 5 சதவீதம் பிரித்தளிக்கப்பட வேண்டும் என பரிந்துரைத்தது.

ஆனால் 2011 டிசம்பர் 22ல் மத்திய அரசு, முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள்,பார்ஸிகள் உள்ளடக்கிய சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத தனி ஓதுக்கீட்டை வழங்குவதாகவும், இந்த ஒதுக்கீடு பிற்படுத்த பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கிட்டிலிருந்து உள் ஒதுக்கீடாக வழங்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியிட்டது.

முஸ்லிம்களை ஓரளவு கூட திருப்தி படுத்தாத இந்த அறிவிப்பு கூட நிலைத்து நிற்கவில்லை. ஆந்திர உயர்நீதிமன்றம் 2012 மே 28ல் இதற்கு தடைவிதித்து தீர்ப்பளித்தது. இந்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. 1980 டிசம்பர் 31ல் தாக்கல் செய்யப்பட்ட மண்டலகுழு அறிக்கை நாட்டில் 3734 சாதிப்பிரிவுகளை பிற்பட்டவையாக கண்டு அதில் முஸ்லிம்களில் 82 சமூக பிரிவுகளை பட்டியலிட்டது இங்கே கவனிக்கத்தக்கது.

தேசிய சிறுபான்மை ஆணையம் இந்தியாவில் முஸ்லிம்கள் 13.4%,கிறிஸ்தவர்கள் 2.3% சீக்கியர்கள் 1.9%, பௌத்தர்கள் 0.8% பார்ஸிகள் 0.4% சிறுபான்மையினர்கள் என சுட்டிக் காட்டியுள்ளது.

இந்த நாட்டில் பெரும்பான்மையினராக (80.5%) வாழும் இந்துக்களுக்கு அடுத்து அதிகம் வாழ்பவர்கள் முஸ்லிம்களே! அதாவது சிறுபான்மையினரில் பெரும்பான்மை. ஆனால் இவர்கள் கல்வி - வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் மிக பின்தங்கியுள்ளனர்.

28 மாநிலங்களும் 7 யூனியன் பிரதேசங்களும் உள்ள இந்தியாவில் கேரளா, கர்நாடகா , ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய தென் மாநிலங்களிலும், வட இந்தியாவில் மணிப்பூரில் மட்டும் தான் இட ஒதுக்கீடு வழங்கப்படுகின்றன. எனவே இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இடஒதுக்கீடு அமல்படுத்த வழிகாட்டுவதோடு மிஸ்ரா ஆணைய பரிந்துரையை ஏற்று கல்வி வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத தனி இடஓதுக்கீடு வழங்க மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் : 
அனைத்து குற்றச்செயல்களுக்கும் காரணமாக இருக்கும் மது இன்று தாராளமயமாக்கப் பட்டுவிட்டது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் பட்டி தொட்டி, சந்து பொந்துகளெங்கும் தாறுமாறாக மதுக்கடைகள் திறக்கப்பட்டு அமோக விற்பனை நடைபெறுகிறது. ‘பார்’களில் மதுவிற்பனை கட்டுப்பாடின்றி நடைபெறுவதும், இரவு நேரங்களில் கூட திறந்திருப்பதும் பல ஒழுக்கக் கேடுகளுக்கு வழிவகுத்துவிட்ட தோடு, மாணவர்களும் இளைஞர்களும் சீரழிவதற்கு காரணமாக அமைந்துவிட்டன. பெண்களும் போதை பழக்கத்திற்கு அடிமையாகிவருவது இந்திய பண்பாட்டின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிட்டது. இந்த பேராபத்தை தடுப்பதும், விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வதும் இன்று அனைவர் மீதும் கடமையாக அமைந்து விட்டது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகை பொறுத்தவரை 1948 மார்ச் 10ல் அது துவக்கப்பட்ட அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்றே `` மதுவையும், மதுபான உற்பத்தியையும் தடைசெய்ய வேண்டு’’ மென்பது! அதற்கு முன்பே மதராஸ் மாகாண சட்டசபையில் எதிர்கட்சி தவைராக காயிதே மில்லத் இருந்தபோது 1947 மார்ச் 6 அன்று மதுவை அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி செய்த வாதம் பொன்னெழுத்துக்களால் பதிக்கப்படக் கூடியது. தமிழ்நாட்டில் மதுவிலக்கு ரத்து செய்யப் படுவதாக அறிவிக்கப்பட்ட போது 1971 மே 21 அன்று இ.யூ.முஸ்லிம் லீக் மாநில செயற்குழு நிறைவேற்றிய தீர்மானம், மதுவிலக்கு ரத்து மசோதா தாக்கலான போது இ.யூ.முஸ்லிம் லீக் கடும் எதிர்ப்பு தெரிவித்து சட்டப் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தது, அதை எதிர்த்து செய்யப்பட்ட தீவிர பிரச்சாரம், 1985 ஜுன் 5ல் மதுவிலக்கு திருத்த மசோதா தாக்கலான போது சிராஜுல்மில்லத் ஆ.கா.அ.அப்துஸ்ஸமத் சட்டப்பேரவையில் ஆற்றிய உரைஅனைத்துமே வரலாற்று ஆவணங்கள்.

இன்று ஒரு அரசு மக்களின் நலத்திட்டங்களுக்கு மதுவிற்பனை வருவாயை நம்பியிருப்பதும், பண்டிகை காலங்களில் ‘இத்தனை கோடி ரூபாய்களுக்கு’ மதுவிற்பனை செய்ய வேண்டுமென கட்டாயப் படுத்துவம், வயதுவித்தியாசமின்றி யார் வேண்டுமானாலும் மது வாங்கலாம் குடிக்கலாம் என்பதை கண்டு கொள்ளாமலிருப்பதும் அதிர்ச்சியைத் தருகின்றன. எனவே இளைய தலைமுறையை சீரழிப்பதோடு, குடும்பங்களை நடுத்தெருவிற்கு கொண்டுவரும் மதுவை அறவே ஒழிக்க நாடு முழுவதும் பூரணமதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். அதற்கு முன்னோடியாக நம் தமிழக்கத்தில் மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம்.

நீண்டகால சிறைவாசிகள் விடுதலை : இந்திய முஸ்லிம்களின் வாழ்க்கை தரம் குறித்து ஆய்வு செய்த நீதியரசர் ராஜேந்திர சச்சார் குழு, ‘முஸ்லிம்கள் தங்களின் அடையாளங்களைக் கொண்டே தனிமைப்படுத்தப் படுகிறார்கள்; அவர்கள் தேசவிரோதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும், பாகிஸ்தான் உளவாளிகளாகவும் சித்தரிக்கப் படுகிறார்கள்’ என தமது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டு அதற்கான ஆதாரங்களையும் பட்டியலிட்டது.

2012 ஜனவரி 15,16 ல் பெங்களூருவில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பிரிதிநிதிகள் மாநாட்டில் தலைமை உரையாற்றிய தேசிய தலைவர் இ.அஹமது சாகிப், இந்தியாவின் பல்வேறு மாநில சிறைகளில் எண்ணற்ற அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் பல்லாண்டுகாலமாக அடைக்கப்பட்டுள்ளனர். அம்மாநில முஸ்லிம்களின் மக்கள் தொகை விகிதாச்சாரத்திற்கு பல மடங்கு அதிகமாக இந்த சிறைவாசிகளின் எண்ணிக்கை உள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு தலையிட வேண்டும் என்ற அபாய அறிவிப்பை வெளியிட்டார்.

இது பற்றி ஆய்வு நடத்திய டாடாநிறுவன சமூகவியல் ஆய்வு குழு, எந்த குற்றப்பின்ணணியும் இல்லாத இவர்கள் அப்பாவிகள், வக்கீல் வைத்து வாதாக் கூட வசதியற்றவர்கள், 18 வயது முதல் 30 வயது வரையிலான முஸ்லிம் இளைஞர்களே இதில் அதிகம், பல மாநிலங்களின் காவல் துறை ஒருதலை பட்சமாக முஸ்லிம்களுக்கு விரோதமாக செயல்படுகிறது என பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டது.

2012 டிசம்பர் 2 அன்று கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் கூட்டத்தில், நீதிமன்ற விசாரணைக்கு கூட உட்படுத்தப் படாமல் ஆண்டுக் கணக்கில் சிறையில் முஸ்லிம் இளைஞர்களை அடைத்து வைத்திருப்பதில் மகாராஷ்டிரம், குஜராத், மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் முன்னிலை வகிக்கின்றன. இவர்கள் விடுவிக்கப்பட மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதோடு, இப்படி அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், அனைத்துக்கட்சி தலைவர்கள், சிறுபான்மை,மனித உரிமை ஆணையங்கள் என அனைவருக்கும் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும், 08-02-2013 அன்று அனுப்பியுள்ள தாக்கீதில், ‘ஒவ்வொரு மாநிலத்திலும் மாவட்ட நீதிபதி தலைமையில் குழு அமைத்து மூன்று மாதங்களுக்கொரு முறை ஆய்வு செய்து இந்த சிறைவாசிகளை விடுவிக்கவோ அல்லது சொந்த ஜமீனில் விடுதலை செய்யவோ நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவு இன்னமும் நடைமுறை படுத்தப்படாதது அநீதியாகும் . இது தேச அவமானமென இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் அண்மையில் ஆவேசமாக குறிப்பிட்டுள்ளனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை நீண்டகால விசாரணை சிறைவாசிகள் இல்லை. ஆனால் நீண்ட கால தண்டனை சிறைவாசிகளில் முஸ்லிம்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்படுகிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஆயுள் சிறைவாசிகள் அவ்வப்போது விடுவிக்கப்படுவது வழக்கம். எந்த ஒரு குற்றத்துக்கும் தண்டனை பெற்று சிறையிலிருப்பவர்களை மன்னிக்கவோ தண்டனையை குறைக்கவோ மாநில ஆளுனருக்கு இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 161 அதிகாரமளிக்கிறது. தமிழ்நாட்டில் முன்பு பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அம்மையார் பிறந்த நாட்களை யொட்டி சிறைவாசிகள் விடுவிக்கப்பட்டனர். அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி 7 ஆண்டு சிறைவாசம் கழித்த, அதிலும் 60 வயதானால் 5 ஆண்டு சிறைவாசம் கழித்த 1405 பேர் விடுவிக்கப்பட்டனர். ஆனால் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுவிக்கப்படவில்லை.

விசேச தினங்களில் விடுவிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள் என்று 20.7.1987 ல் 1762ம் எண் அரசாணை இருப்பதாக இதற்கு காரணம் சொல்லப்பட்டது. ஆனால் தமிழகத்தில் தூக்கு தண்டனை பெற்ற நக்ஸலைட் கைதிகளும், மேற்கண்ட அரசாணையில் குறிப்பிடப்பட்ட தகுதியற்றவர்களும் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மகாத்மா காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கோபால் விநாயக் கோட்சே விடுதலை கோரி தொடர்ந்த வழக்கில் 1964 ல் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், "ஆயுள் தண்டனை என்றால் ஆயுட்காலம் முழுவதும் சிறைதான்" என் விளக்கம் சொன்னது. ஆனால் 1965ம் ஆண்டிலேயே மராட்டிய அரசு அவரை விடுதலை செய்தது.

2012 டிசம்பர் 11 அன்று சென்னை தாம்பரம் ரயில்வே மைதானத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில் தலைமை உரையாற்றிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொகிதீன் அவர்கள், "முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யுங்கள், அவர்கள் நன்னடத்தைக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொறுப்பேற்றுக் கொள்ளும், நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்" என்றார். சட்டமும் நீதியும் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். எனவே நீண்டகால விசாரணை சிறைவாசிகளையும், 12 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்த தண்டனை சிறைவாசிகளையும் சாதி - மத வேறுபாடின்றி விடுதலை செய்ய வலியுறுத்துகிறோம்.

மேற்கண்ட முப்பெரும் கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 2013 ஏப்ரல் 2 செவ்வாய்கிழமை தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெறும் மாபெரும் கோரிக்கை பேரணிகளில் பங்கேற்க அலைகடலென அணிதிரண்டு வாரீர்

ஒன்றிணைத்து குரல் கொடுப்போம்!  உரிமைகளை வென்றெடுப்போம் !

-----காயல் மஹபூப்


73 கைதிகளை ஜாமீனில் விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு



ஜாமின் உத்தரவாதம் வழங்க யாரும் முன்வராததால் தமிழ்நாட்டில் உள்ள சிறையில் வாடும் 73 விசாரணை கைதிகளை விடுதலை செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


நீதிபதிகள் எலிப்பி தர்மாராவ், எம்.வேணுகோபால் அடங்கிய அமர்வு, தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இவ்வகையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணை கைதிகள் தொடர்பான விபரங்களை சேகரிக்கும்படி சட்ட உதவி குழுவினருக்கு உத்தரவிட்டது.

இதனையடுத்து, சட்ட உதவி குழுவினர் கொடுத்த தகவல்களின்படி, ஜாமின் வழங்கியும் உத்தரவாதம் அளிக்க யாரும் முன்வராததால் 272 விசாரணை கைதிகள் விடுதலை செய்யப்படாமல் சிறையில் உள்ளது தெரிய வந்தது. இவர்களைப் பற்றிய வழக்கு கோப்புகளை ஆய்வு செய்த நீதிபதிகள், வழக்குகளின் தன்மைக்கேற்ப, 73 கைதிகளை சொந்த ஜாமினில் விடுதலை செய்து உத்தரவிட்டனர்.

ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்யக்கோரி அரசு உதவிபெறும் பள்ளி நிர்வாகிகள் சங்கத்தினர் உண்ணாவிரதம்


தமிழ்நாடு அரசு அங்கீகாரம் பெற்ற நிதி உதவி பெறும் தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் ஜே.எல்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:–

ஆசிரியர் தகுதி தேர்வு
தமிழக அரசு ஆசிரியர் தகுதி தேர்வை நடத்தி ஆசிரியர்களை தேர்வு செய்து வருகிறது. கடந்த முறை நடந்த இந்த தேர்வில் குறைந்த அளவே ஆசிரியர்கள் தேர்வு பெற்றனர். அவர்கள், அரசு பள்ளிகளிலேயே பணியில் சேர்ந்து விடுகிறார்கள். இதனால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏராளமான காலிப்பணியிடங்கள் உள்ளன.

எனவே ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும், தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மொத்த பணிக்காலத்தை கணக்கில் எடுத்து தேர்வு நிலை, சிறப்பு நிலை வழங்க வேண்டும்.

உண்ணாவிரதம்
அரசு உதவி பெறும் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு தமிழ் ஆசிரியர், ஆங்கில ஆசிரியர், கைத்தொழில் ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் ஆகிய பணியிடங்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எங்கள் சங்கம் சார்பில் பாளையங்கோட்டை ஜவகர் மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் 5 மணி வரை உண்ணாவிரதம் நடக்கிறது.

இந்த உண்ணாவிரத்துக்கு முஸ்லிம் அனாதை நிலைய தலைவர் டி.இ.எஸ்.நெய்னா முகமது, மாநில தலைவர் ஆராவமுதன், மாவட்ட தலைவர் அசன் அபுபக்கர் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். மாநில உதவி பொதுச்செயலாளர் தாயப்பன் வரவேற்று பேசுகிறார்.

உண்ணாவிரதத்தை நெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டல பேராயர் ஜே.ஜே.கிறிஸ்துதாஸ் தொடங்கி வைக்கிறார். உண்ணாவிரதத்தில் முஸ்லிம் அனாதை நிலைய செயலாளர் செய்யது அகமது கபீர், பொருளாளர் முகமது ஷாபி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முன்னாள் பொதுசெயலாளர் போத்திலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, மாநில உதவி பொதுச்செயலாளர் பி.தாயப்பன், துணை தலைவர்கள் எம்.கணேசன், எஸ்.சண்முகநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

சிவில் சர்வீசஸ் தேர்வு முறையில் பழைய நிலையே நீடிக்கும் பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி நாராயணசாமி அறிவிப்பு


சிவில் சர்வீசஸ் மெயின் (முதன்மை) தேர்வில் 4 புதிய மாற்றங்களை இந்த ஆண்டு முதல் அமல்படுத்துவதாக மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் (யு.பி.எஸ்.சி.) கடந்த 5–ந்தேதி அறிவிக்கை வெளியிட்டது.

இதன்படி, சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வில் ஆங்கிலம் கட்டாயம் ஆக்கப்பட்டது. பிராந்திய மொழியில் மெயின் தேர்வை எழுத வேண்டுமானால், அந்த மொழி வழியில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

இரண்டாவதாக, பிராந்திய மொழி இலக்கியத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் மட்டுமே மெயின் தேர்வில் அந்த மொழி இலக்கியத்தை விருப்பப்பாடமாக எடுக்க முடியும்.

மூன்றாவதாக, குறிப்பிட்ட பிராந்திய மொழியில் தேர்வு எழுத குறைந்தபட்சம் 25 பேர் இல்லாவிட்டால், அந்த மொழியில் தேர்வு எழுத அனுமதி கிடையாது. அவர்கள் ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டுமே மெயின் தேர்வு எழுதியாக வேண்டும்.

நான்காவதாக, ஏதேனும் ஒரு இந்திய மொழியில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற விதிமுறை நீக்கப்பட்டு விட்டது. புதிதாக, கட்டுரை எழுதுதல், சுருக்கி எழுதுதல் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் கொண்ட 100 மதிப்பெண்களுக்கான ஆங்கிலத் தேர்வு கொண்டு வரப்பட்டது.

கடும் எதிர்ப்பு:
இந்த தேர்வு முறை மாற்றங்களுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்களும், வடஇந்திய தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாராளுமன்றத்தில் பெரும் அமளி ஏற்பட்டது.

இதையடுத்து, கடந்த 15–ந்தேதி, அந்த தேர்வு முறை மாற்றத்தை நிறுத்தி வைப்பதாக மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை மந்திரி வி.நாராயணசாமி பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

பிராந்திய மொழியில் எழுதலாம்:
இந்நிலையில், சிவில் சர்வீசஸ் தேர்வு முறையில் ஏற்கனவே இருந்த நிலையே நீடிக்கும் என்று மத்திய மந்திரி வி.நாராயணசாமி நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தார். இதுதொடர்பாக அவர் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–

சிவில் சர்வீசஸ் தேர்வு முறை மாற்றங்கள் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்த கவலைகளை மத்திய அரசு ஆய்வு செய்தது. அதன்படி, ஏற்கனவே இருந்ததுபோல், அரசியல் சட்டத்தின் 8–வது அட்டவணையில் உள்ள ஏதேனும் ஒரு பிராந்திய மொழியிலோ அல்லது ஆங்கிலத்திலோ மெயின் தேர்வை எழுதலாம்.

100 மதிப்பெண்களுடன் கூடிய ஆங்கில கட்டுரைத்தாள் நீக்கப்படுகிறது. இந்திய மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலத்தில் தலா 300 மதிப்பெண்கள் கொண்ட தாள்கள் மீண்டும் கொண்டுவரப்படுகிறது.

விருப்பப்பாட நிபந்தனை ரத்து:
இனிமேல், கட்டுரைத்தாள் 250 மதிப்பெண்கள் கொண்டதாக இருக்கும். அதை ஆங்கிலத்திலோ அல்லது தாங்கள் விரும்பிய வேறு மொழியிலோ எழுதலாம்.

இலக்கியத்தை விருப்பப் பாடமாக எடுக்க, அந்த மொழி இலக்கியத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனை ரத்து செய்யப்படுகிறது.

பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் தெரிவித்த கருத்துகள், பல்வேறு தரப்பினருடன் அரசு நடத்திய ஆலோசனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.