Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 22 மார்ச், 2013

சிவில் சர்வீசஸ் தேர்வு முறையில் பழைய நிலையே நீடிக்கும் பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி நாராயணசாமி அறிவிப்பு


சிவில் சர்வீசஸ் மெயின் (முதன்மை) தேர்வில் 4 புதிய மாற்றங்களை இந்த ஆண்டு முதல் அமல்படுத்துவதாக மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் (யு.பி.எஸ்.சி.) கடந்த 5–ந்தேதி அறிவிக்கை வெளியிட்டது.

இதன்படி, சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வில் ஆங்கிலம் கட்டாயம் ஆக்கப்பட்டது. பிராந்திய மொழியில் மெயின் தேர்வை எழுத வேண்டுமானால், அந்த மொழி வழியில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

இரண்டாவதாக, பிராந்திய மொழி இலக்கியத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் மட்டுமே மெயின் தேர்வில் அந்த மொழி இலக்கியத்தை விருப்பப்பாடமாக எடுக்க முடியும்.

மூன்றாவதாக, குறிப்பிட்ட பிராந்திய மொழியில் தேர்வு எழுத குறைந்தபட்சம் 25 பேர் இல்லாவிட்டால், அந்த மொழியில் தேர்வு எழுத அனுமதி கிடையாது. அவர்கள் ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டுமே மெயின் தேர்வு எழுதியாக வேண்டும்.

நான்காவதாக, ஏதேனும் ஒரு இந்திய மொழியில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற விதிமுறை நீக்கப்பட்டு விட்டது. புதிதாக, கட்டுரை எழுதுதல், சுருக்கி எழுதுதல் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் கொண்ட 100 மதிப்பெண்களுக்கான ஆங்கிலத் தேர்வு கொண்டு வரப்பட்டது.

கடும் எதிர்ப்பு:
இந்த தேர்வு முறை மாற்றங்களுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்களும், வடஇந்திய தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாராளுமன்றத்தில் பெரும் அமளி ஏற்பட்டது.

இதையடுத்து, கடந்த 15–ந்தேதி, அந்த தேர்வு முறை மாற்றத்தை நிறுத்தி வைப்பதாக மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை மந்திரி வி.நாராயணசாமி பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

பிராந்திய மொழியில் எழுதலாம்:
இந்நிலையில், சிவில் சர்வீசஸ் தேர்வு முறையில் ஏற்கனவே இருந்த நிலையே நீடிக்கும் என்று மத்திய மந்திரி வி.நாராயணசாமி நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தார். இதுதொடர்பாக அவர் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–

சிவில் சர்வீசஸ் தேர்வு முறை மாற்றங்கள் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்த கவலைகளை மத்திய அரசு ஆய்வு செய்தது. அதன்படி, ஏற்கனவே இருந்ததுபோல், அரசியல் சட்டத்தின் 8–வது அட்டவணையில் உள்ள ஏதேனும் ஒரு பிராந்திய மொழியிலோ அல்லது ஆங்கிலத்திலோ மெயின் தேர்வை எழுதலாம்.

100 மதிப்பெண்களுடன் கூடிய ஆங்கில கட்டுரைத்தாள் நீக்கப்படுகிறது. இந்திய மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலத்தில் தலா 300 மதிப்பெண்கள் கொண்ட தாள்கள் மீண்டும் கொண்டுவரப்படுகிறது.

விருப்பப்பாட நிபந்தனை ரத்து:
இனிமேல், கட்டுரைத்தாள் 250 மதிப்பெண்கள் கொண்டதாக இருக்கும். அதை ஆங்கிலத்திலோ அல்லது தாங்கள் விரும்பிய வேறு மொழியிலோ எழுதலாம்.

இலக்கியத்தை விருப்பப் பாடமாக எடுக்க, அந்த மொழி இலக்கியத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனை ரத்து செய்யப்படுகிறது.

பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் தெரிவித்த கருத்துகள், பல்வேறு தரப்பினருடன் அரசு நடத்திய ஆலோசனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக