Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 9 ஜூன், 2013

மாணவர்களிடம் வரவேற்பு இல்லாததால் பாலிடெக்னிக்கில் 25 படிப்புகள் நிறுத்தம்

தமிழகத்தில், 50 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளும், 450 சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளும் செயல்படுகின்றன. இதில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இக்கல்லூரிகளில், சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன்ஸ், வேதியியல், தோல், அச்சு, நெசவு உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட பாடங்களில், டிப்ளமோ, சான்றிதழ், முதுகலை டிப்ளமோ உள்ளிட்ட படிப்புகள் வழங்கப்படுகின்றன. பாலிடெக்னிக் கல்லூரிகளில், உடனடி வேலை வாய்ப்புளை பெற்று தரும், சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் சேர மட்டுமே, மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். தோல், அச்சு, நெசவு உள்ளிட்ட படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை, சொற்ப அளவிலேயே உள்ளது. பல பாலிடெக்னிக் கல்லூரிகளில், அறிவித்துள்ள இடங்களின் எண்ணிக்கைக்கு குறைவாகவே, விண்ணப்பங்கள் வந்துள்ளதாக துறையினர் தெரிவித்துள்ளனர்.

சான்றிதழ் படிப்பு, முதுகலை டிப்ளமோ படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும், ஆண்டுதோறும் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. டிப்ளமோ முடிக்கும் மாணவர்கள், மேற்படிப்பில், பொறியியல் படிப்பை தேர்ந்தெடுப்பதால், முதுகலை டிப்ளமோவில் சேர முன் வருவதில்லை. இப்படிப்பில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை, 1 சதவீதம் கூட இருப்பதில்லை என, கூறுகின்றனர். கடந்த, ஐந்து ஆண்டுகளாக, முதுகலை படிப்பில் சேர, மாணவர்களின் ஆர்வம் குறைந்ததையடுத்து, 22 பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள, வெல்டிங் டெக்னாலஜி, பேக்கரி மற்றும் சாக்லெட் தயாரிப்பு உள்ளிட்ட, 20 முதுகலை டிப்ளமோ பாடங்களை, அரசு நீக்கியுள்ளது. மேலும், இரண்டு டிப்ளமோ படிப்புகள், மூன்று சான்றிதழ் படிப்புகளும் நீக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே, கடந்தாண்டு, நகரமைப்பு, பவுண்டரி, அச்சு தயாரித்தல், "டிவி' தொழில்நுட்பம் உள்ளிட்ட, 16 படிப்புகளை அரசு கைவிட்டு உள்ளது.

இதுகுறித்து, துறை பேராசிரியர் ஒருவர் கூறியதாவது: பாலிடெக்னிக் கல்லூரிகளில், ஓராண்டு சான்றிதழ் படிப்புகளை படிக்க, மாணவர்கள் முன் வருவதில்லை. அதற்கு பதில், தொழிற்சாலையில் அதிகளவில் வேலைவாய்ப்புகளை அளிக்கும், ஐ.டி.ஐ., படிப்பில் சேரவே, ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், சான்றிதழ் படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை, குறைந்து வருகிறது. மூன்றாண்டு டிப்ளமோ முடிக்கும் மாணவர்கள், மேல்படிப்பில், பொறியியல் படிப்பை தேர்ந்தெடுக்கின்றனர். பல மாணவர்கள், தொலைதூர கல்வி வழியாகவும் பொறியியல் படிப்பை தொடருகின்றனர். இதனால், முதுகலை டிப்ளமோவில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை, சொற்ப அளவிலேயே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

சேது சமுத்திர திட்டத்தை முடக்க முயற்சி: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தி.மு.க. தலைவர் கலைஞரின் 90-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சென்னை புரசைவாக்கத்தில் நடந்தது. பகுதி செயலாளர் கோ.ஏகப்பன் தலைமை தாங்கினார்.

வடசென்னை மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 1990 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியபோது,’’அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் கலைஞர் கொண்டு வந்த திட்டங்களை முடக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. 150 ஆண்டு கனவு திட்டமான சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

அந்த விழாவில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட்டு செயலாளர் தா.பாண்டியன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் அப்போதைய செயலாளர் வரதராஜன், இந்திய யூனியன் மூஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன் உள்ளிட்ட தலைவர்களெல்லாம் கலந்து கொண்டு பேசினார்கள்.

ஆனால், இந்த திட்டத்தை நிறுத்த சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று அ.தி.மு.க. வழக்கு தொடர்ந்துள்ளது. இதை எதிர்த்து பேசாமல் வைகோ, ராமதாஸ் போன்ற தலைவர்களெல்லாம் மவுனமாக இருப்பது ஏன்?

கடந்த 2 ஆண்டு ஆட்சியில் சட்டமன்றம் முதல்வரின் புகழ்பாடும் அலுவலகமாக செயல்படுகிறது. கேள்வி நேரம் என்பது கேலி பேசும் நேரமாக மாறிவிட்டது. தி.மு.க. ஆட்சியைவிட அ.தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளை சம்பவங்கள் குறைந்து இருப்பதாக முதல்-அமைச்சர் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

ஆனால் போலீஸ் இணைய தளத்தில் பார்த்தால் கடந்த ஒரு ஆண்டில் கற்பழிப்பு, கொலை, கொள்ளை சம்பவங்கள் இரு மடங்காக அதிகரித்து இருப்பதாக புள்ளிவிவரம் சொல்கிறது. சமச்சீர் கல்வி தி¢ட்டத்தை தி.மு.க. கொண்டு வந்தது.

இதனால் இந்த ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் அதிகமாக வெற்றி பெற்றுள்ளார்கள். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு நன்மை செய்து வரும் ஓரே இயக்கம் தி.மு.க. தான்’’என்று தெரிவித்தார்.

குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீர்

கொட்டி தீர்த்த தென்மேற்கு பருவ மழையால் குற்றாலம் சீசன் களைகட்ட துவங்கியுள்ளது. அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் நேற்று மெயின் அருவில் 3 மணி நேரம் தடை விதிக்கப்பட்டது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் குற்றாலத்தில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்துவங்கியுள்ளது. கடந்த 3 தினங்களாக அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்து காணப்பட்டது. விடுமுறை காரணமாக அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து பெய்த மழை காரணமாக நேற்று அதிகாலை முதல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்தது. ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் ஆக்ரோஷமாக தண்ணீர் கொட்டியது.

மெயினருவியில் நேற்று அதிகாலை முதல் தண்ணீர் அதிகமாக வரத்துவங்கிய நிலையில், காலை 7 மணிக்கு தண்ணீர் ஆர்ச்சை தொட்டு விழுந்தது. மழையின் காரணமாக அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததை அடுத்து காலை 8 மணி முதல் 11 மணிவரை மெயினருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு மெயினருவியில் ஆர்ச்சை தொட்டு ஆர்ப்பரித்து தண்ணீர் விழுந்ததால் சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்த வண்ணம் இருந்தனர்.

மெயினருவி, ஐந்தருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் சுற்றுலா பயணிகள் புலியருவியை நோக்கி படையெடுக்க துவங்கினர். 3 மணி நேரத்திற்கு பின் தடை விலக்கி கொள்ளப்பட்ட நிலையில் சாரலும் சற்று குறைவாக காணப்பட்டது. இருந்தபோதிலும் குளுமையான ‹ழ்நிலையும், மெல்லிய சாரலும், இதமான காற்றும் வீசியது. குற்றால சீசன் தற்போது களைகட்ட துவங்கியுள்ள நிலையில் தொடர்ந்து அருவிகளுக்கு தண்ணீர் அதிகமாக வந்து கொண்டிருப்பதாலும், இன்று (9ம்தேதி) விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.