Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 9 ஜூன், 2013

மாணவர்களிடம் வரவேற்பு இல்லாததால் பாலிடெக்னிக்கில் 25 படிப்புகள் நிறுத்தம்

தமிழகத்தில், 50 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளும், 450 சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளும் செயல்படுகின்றன. இதில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இக்கல்லூரிகளில், சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன்ஸ், வேதியியல், தோல், அச்சு, நெசவு உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட பாடங்களில், டிப்ளமோ, சான்றிதழ், முதுகலை டிப்ளமோ உள்ளிட்ட படிப்புகள் வழங்கப்படுகின்றன. பாலிடெக்னிக் கல்லூரிகளில், உடனடி வேலை வாய்ப்புளை பெற்று தரும், சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் சேர மட்டுமே, மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். தோல், அச்சு, நெசவு உள்ளிட்ட படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை, சொற்ப அளவிலேயே உள்ளது. பல பாலிடெக்னிக் கல்லூரிகளில், அறிவித்துள்ள இடங்களின் எண்ணிக்கைக்கு குறைவாகவே, விண்ணப்பங்கள் வந்துள்ளதாக துறையினர் தெரிவித்துள்ளனர்.

சான்றிதழ் படிப்பு, முதுகலை டிப்ளமோ படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும், ஆண்டுதோறும் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. டிப்ளமோ முடிக்கும் மாணவர்கள், மேற்படிப்பில், பொறியியல் படிப்பை தேர்ந்தெடுப்பதால், முதுகலை டிப்ளமோவில் சேர முன் வருவதில்லை. இப்படிப்பில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை, 1 சதவீதம் கூட இருப்பதில்லை என, கூறுகின்றனர். கடந்த, ஐந்து ஆண்டுகளாக, முதுகலை படிப்பில் சேர, மாணவர்களின் ஆர்வம் குறைந்ததையடுத்து, 22 பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள, வெல்டிங் டெக்னாலஜி, பேக்கரி மற்றும் சாக்லெட் தயாரிப்பு உள்ளிட்ட, 20 முதுகலை டிப்ளமோ பாடங்களை, அரசு நீக்கியுள்ளது. மேலும், இரண்டு டிப்ளமோ படிப்புகள், மூன்று சான்றிதழ் படிப்புகளும் நீக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே, கடந்தாண்டு, நகரமைப்பு, பவுண்டரி, அச்சு தயாரித்தல், "டிவி' தொழில்நுட்பம் உள்ளிட்ட, 16 படிப்புகளை அரசு கைவிட்டு உள்ளது.

இதுகுறித்து, துறை பேராசிரியர் ஒருவர் கூறியதாவது: பாலிடெக்னிக் கல்லூரிகளில், ஓராண்டு சான்றிதழ் படிப்புகளை படிக்க, மாணவர்கள் முன் வருவதில்லை. அதற்கு பதில், தொழிற்சாலையில் அதிகளவில் வேலைவாய்ப்புகளை அளிக்கும், ஐ.டி.ஐ., படிப்பில் சேரவே, ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், சான்றிதழ் படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை, குறைந்து வருகிறது. மூன்றாண்டு டிப்ளமோ முடிக்கும் மாணவர்கள், மேல்படிப்பில், பொறியியல் படிப்பை தேர்ந்தெடுக்கின்றனர். பல மாணவர்கள், தொலைதூர கல்வி வழியாகவும் பொறியியல் படிப்பை தொடருகின்றனர். இதனால், முதுகலை டிப்ளமோவில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை, சொற்ப அளவிலேயே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக