Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 29 ஆகஸ்ட், 2013

பள்ளி மூடப்பட்டதால் சம்பளமின்றித் தவித்த ஆசிரியருக்கு நிலுவை சம்பளம் முழுவதையும் வழங்கிட உயர் நீதிமன்றம் உத்தரவு

பணியாற்றிய பள்ளி மூடப்பட்டதால் வேறு பள்ளியில் பணி அமர்த்தப்படாமலும், சம்பளம் கிடைக்காமலும் தவித்த ஆசிரியருக்கு நிலுவை சம்பளம் முழுவதையும் வழங்கிட வேண்டும் என்று உத்தரவிட்டதன் மூலம் சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு உதவிக் கரம் நீட்டியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், கீழ்ஆசாரிப்பள்ளம் செயின்ட் மேரீஸ் தொடக்கப் பள்ளியில் 1.8.2005 அன்று சூசை மகேஷ் என்பவர் இடைநிலை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அந்தப் பள்ளி மூடப்பட்டதால், செண்பகராமன்புட்டன்துறையில் செயின்ட் ஆண்டனிஸ் பள்ளியில் அவரை மறு பணியமர்த்துமாறு 9.3.2013 அன்று கன்னியாகுமரி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார். எனினும் பள்ளியில் காலியிடம் இல்லை எனக் கூறி அவரை அங்கு பணியமர்த்த பள்ளி நிர்வாகம் மறுத்து விட்டது.

இதனையடுத்து திருநெல்வேலி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருக்கு கன்னியாகுமரி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஒரு கடிதம் எழுதினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் எந்தப் பள்ளியிலும் சூசை மகேஷ் மறு பணியமர்த்தப்படாததால், அவரை திருநெல்வேலி மாவட்டத்தில் ஏதேனும் ஒரு பள்ளியில் பணியமர்த்தலாம் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சூசை மகேஷ் ஒரு மனுவை தாக்கல் செய்தார். பள்ளி மூடப்பட்ட 2012 ஆகஸ்ட் மாதம் முதல் எனக்கு சம்பளம் வழங்கப்படாததால் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன்.

ஆகவே நிலுவையில் உள்ள ஊதியம் முழுவதையும் எனக்கு வழங்கிடவும், கன்னியாகுமரி மாவட்டத்திலேயே ஏதேனும் ஒரு பள்ளியில் என்னை மறுபணியமர்த்திடவும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் சூசை மகேஷ் கோரியிருந்தார்.

இந்த மனு மீது நீதிபதி டி.ஹரிபரந்தாமன் விசாரணை மேற்கொண்டார். 2012 ஆகஸ்ட்முதல் மனுதாருக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை ஊதியம் முழுவதையும் கல்வித் துறையினர் வழங்கிட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலும் ஏதேனும் ஒரு பள்ளியில் அவர் மறுபணியமர்த்தப்படும்வரை மாதந்தோறும் அவருக்கான ஊதியத்தை தவறாமல் வழங்கிட வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

உயிரி தகவல் தொழில்நுட்பவியல் படிப்பு


ஹைதராபாத், ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இக்கல்வியாண்டில் முழுநேர டிப்ளமோ படிப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 வழங்கப்படும் படிப்புகள்: முதுகலை பட்டயப் படிப்பில் (கம்ப்யூட்டர் புரோக்ராமிங், பயாலாஜிக்கல் டேட்டாபேஸ், பயோ - கெமிஸ்ட்ரி) உள்ளிட்ட படிப்புகள் வழங்கப்படுகின்றன.

கல்வித்தகுதி: இப்படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் பொறியியல், மருத்துவம், கணினி உள்ளிட்ட படிப்புகளில் 50 சதவீத மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பிக்கும் மாணவர்கள் ரூ.100க்கான வரைவோலை வழங்கி படிவங்களை பெற்றுக் கொள்ளலாம். தபால் மூலம் பெற ரூ.150 கட்டணம் செலுத்த வேண்டும்.

தேர்வு முறை: மாணவர்கள் இளைநிலையில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். நுழைவுத்தேர்வு கிடையாது.

செப்டம்பர் 22 விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் விண்ணப்பிக்க தவறியவர்கள் ரூ.100 அபராத தொகை செலுத்தி  விண்ணப்பிக்கலாம்.