Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

பாபநாசம் அணையில் படகு போக்குவரத்து தொடக்கம்: சுற்றுலா பயணிகள்–வியாபாரிகள் உற்சாகம்

புலிகள் சரணாயலயங்களில் சுற்றுலா செல்ல உச்ச நீதிமன்றம் 2012–ம் ஆண்டு ஜூலை 2–ந்தேதி தடை விதித்தது. இதனால் முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் உள்ள மணிமுத்தாறு, பாபநாசம் அகஸ்தியர் அருவி, காரையார் பாணதீர்த்த அருவி மற்றும் களக்காடு செங்கல்தேரி ஆகிய சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன.

புலிகள் சரணாலயத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. பின்பு தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் புதிய நெறி முறைகளை உருவாக்கியது. இதனைத்தொடர்ந்து நிபந்தனைகளுடன் புலிகள் சரணாலயங்களில் சுற்றுலா செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இதனைத்தொடர்ந்து உள்ளூர் ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் முதல் கூட்டம் 2012–ம் ஆண்டு டிசம்பர் 4–ந்தேதி நடைபெற்றது. அதில்பாபநாசம் அகஸ்தியர் அருவி மற்றும் மணிமுத்தாறு அருவிகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் பாபநாசம் அணையில் படகு போக்குவரத்து தொடங்க அனுமதி வழங்கப்படவில்லை.

அதற்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று படகுகளின் உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 2–ந்தேதி நடந்த உள்ளூர் ஆலோசனைக்குழு கூட்டத்தில் பாபநாசம் அணையில் படகு போக்குவரத்தை தொடங்க முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து அணையில் படகுகளை இயக்க தங்களை அனுமதிக்க வேண்டும் என்று மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு படகு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பாபநாசம் அணையில் படகு போக்குவரத்து தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதற்கிடையை பாபநாசம் அணையில் படகு உரிமை யாளர்கள் 15 படகுகளை இயக்கலாம் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து பாபநாசம் அணையில் படகு போக்குவரத்து இன்று தொடங்கியது.

பாபநாசம் அணையில் படகு போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதால் படகு உரிமையாளர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் அப்பகுதியில் கடை நடத்தி வரும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக