Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 8 மார்ச், 2013

சென்னை பல்கலைகழக தொலைதூர கல்வியில் பல லட்சம் மோசடி


சென்னை பல்கலையில், தொலைதூர கல்வி நிறுவனம் மூலம், இளங்கலை, முதுகலை மற்றும் பட்டய படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், கல்வி பயில்கின்றனர்.

கல்வியாண்டின் போது, நேர்முக வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தொலைதூர கல்வி மாணவர்களுக்கு, இதுவே, நேரடி வகுப்புகளாக அமைகின்றன. அறிவியல் துறையில், முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு, செய்முறை தேர்வுகளும் நடத்தப்படும்.

கல்லூரி பேராசிரியர்கள் அல்லது பல்கலைக்கழக துறை தலைவர்கள், நேரடி வகுப்பு மற்றும் செய்முறை தேர்வுகளுக்கு, ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுகின்றனர். நேரடி வகுப்புகள் மற்றும் செய்முறை தேர்வு, எழுத்துத் தேர்வு ஆகியவற்றை நடத்த, பல்கலைக்கழகம் முன்பணம் வழங்குகிறது.

இப்பணத்தைக் கொண்டு, தேர்வுகளை நடத்திய பின், அதற்குரிய கணக்குகளை, பல்கலைக் கழகத்தில், ஒருங்கிணைப்பாளர்கள் தாக்கல் செய்ய வேண்டும். இக்கணக்குகளை சரி பார்த்த பின், பல்கலையின் சிண்டிகேட் மற்றும் செனட் குழுக்கள் அனுமதி அளிக்கும். இதன் பின், இச்செலவுகள் ஏற்றுக் கொள்ளப்படும்.

கடந்த ஏப்ரல், 2011 மற்றும், மே 2012ல், தொலைதூர கல்வி நிறுவனங்கள் மூலம் நடந்த, முதுகலை அறிவியல் மாணவர்களுக்கான, நேர்முக வகுப்புகள் மற்றும் செய்முறை தேர்வுகளுக்கு, வேலூர், ஊரீஸ் கல்லூரி, டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, சென்னை பல்கலைக்கழக தாவரவியல், விலங்கியல் துறை உள்ளிட்டவை ஒருங்கிணைப்பாளர் பணியை மேற்கொண்டன.

இதற்காக, ஊரீஸ் கல்லூரிக்கு 2.52 லட்சம் ரூபாய், டி.ஜி.வைஷ்ணவ கல்லூரிக்கு,16.33 லட்சம் ரூபாய், சென்னை பல்கலைக்கழக தாவரவியல் துறைக்கு, 9 லட்ச ரூபாய், விலங்கியல் துறைக்கு, 16.33 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இதற்குரிய கணக்கு, 2012 மே 31ம் தேதி நடந்த, சிண்டிகேட் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

அப்போது, 34 லட்சத்து 33 ஆயிரத்து 500 ரூபாய் பெறப்பட்டதற்கு, 32. 25 லட்சம்ரூபாய்க்கு தான் கணக்கு காட்டப்பட்டது. மீதமுள்ள, 2.8 லட்சம் ரூபாய்க்கு, செலவின ஆதாரங்கள் கொடுக்கப்படவில்லை. ஆனால், 34 .33 லட்சம் ரூபாய்க்கு செலவின அனுமதியளித்து, சிண்டிகேட் மற்றும் செனட் குழுக்கள் அனுமதி அளித்து விட்டன.

இந்த, விதிமீறல் இதோடு நிற்காமல், இதை முன்னுதாரணமாகக் கொண்டு, தொலைதூர கல்வி வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடத்திய, மேலும் நான்கு மையங்களுக்கு சலுகை காட்டப்பட்டுள்ளது. இந்த நான்கு மையங்களுக்கு, வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடத்த, 26.50 லட்ச ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. இத்தொகையில், 7.3 லட்ச ரூபாய்க்கான, செலவினத்துக்கு ஆதாரங்கள் அளிக்கப்படவில்லை.

இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கூறியதாவது: சென்னை பல்கலைக்கழகம், தன்னாட்சி என்ற காரணத்தை வைத்து கொண்டு, இவ்வாறு எளிதில் அனுமதி வழங்கப்படுகிறது.

இதுவே, அரசு நிறுவனமாக இருந்தால், யார் இதற்கு பொறுப்பாளரோ, அவரின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது. முறைகேடாக, கணக்குகளுக்கு அனுமதி வாங்கும் போது, அவை கூட்ட விவாத பொருளில் இடம் பெறாமல், கடைசி நேரத்தில், டேபிள் ஐட்டமாக கொண்டு வரப்படுகிறது. இதனால், அங்குள்ளவர்களுக்கு, அது பற்றி முழு தகவல் தெரியாமலே, எளிதில் அனுமதி வழங்கப்பட்டு விடுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக