Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 7 பிப்ரவரி, 2013

வறட்சியால் தென்காசி அருகே கால்நடைகளுக்கு தீவனமாகி வரும் நெற் பயிர்கள்


நெல்லை மாவட்டத்தின் மேற்கு பகுதியான பாவூர்சத்திரம், தென்காசி, ஆயிரப்பேரி, பழையக் குற்றாலம், குற்றாலம், ஐந்தருவி, இலஞ்சி, பாட்டப்பத்து, குன்னக்குடி, பண்பொழி, வடகரை, புளியரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயமே பிரதான தொழிலாக அங்கம் வகிக்கிறது.
இப்பகுதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியாக இருப்பதால் எப்போதும் நீர்வரத்து அதிகரித்து காணப்படும். மேலும் கார், பிசானம் என இருபோகம் நெல் பயிரும், அறுவடைக்கு பின் நிலக்கடலை, உளுந்து பயிர்களும் பயிரிடப்பட்டு மூன்று போகம் விளையும் விளை நிலங்களாக இருந்தன.

கடந்த ஆண்டுகளில் இப்பகுதியில் சுமார் 20 ஆயிரம் எக்டேர் நிலப்பரப்பில் நெல் பயிர் நடவு செய்யப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு 754.39 மி.மீ மழை பெய்துள்ளது. இது இயல்பான மழை அளவை விட 7 சதவீதம் குறைவானதாகும். கடந்த மாதம் இயல்பான மழையளவு 50.2 மி.மீ ஆகும். ஆனால் 2.மி.மீ மழையே பெய்துள்ளது. இது 96 சதவீதம் குறைவான மழையாகும்.

நடப்பாண்டில் தென்காசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 1500 எக்டேர் நிலப்பரப்பில் நெற்பயிர் நடவு செய்யப்பட்டது. ஆனால் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழையும் பொய்த்து விட்டதால் ஆறு, ஏரி, குளம், கிணறு போன்றவற்றில் தண்ணீரின்றி நெல் பயிர்களுக்கு உரிய முறையில் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் போனது.

இதனால் கழிவு நீரோடைகளிலிருந்து கால்வாய் மூலம் கழிவுநீர் தோண்டி விடப்பட்டு பயிர்களை காப்பாற்றும் முயற்சியிலும் ஈடுபட்டனர். அதுவும் பலனளிக்கவில்லை.
நெல் பயிர்கள் அறுவடை செய்ய இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் பங்குனி, சித்திரை அக்னி நட்சத்திரம் நாளில் வெயிலின் ஆதிக்கம் அதிகரிக்கும் நிலையில் போதிய தண்ணீரின்றி கடும் வறட்சியின் காரணமாக பல ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட நெல் பயிர்கள் கருகி தீவு போன்று காணப்படுகிறது.

கருகிய பயிர்களை கால்நடைகளுக்கு தீவனமாய் பயன்படுத்தும் நிலையில் விவசாய பணிகளுக்கு தண்ணீரின்றி விவசாயிகள் கண்ணீர் வடிக்கும் சூழ்நிலை நிலவிவருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக